குஜராத் தலித் எழுச்சி- கடிதம்

zctfpkuuzr-1468956640

அன்பின் ஜெ..

 

”நானறிந்தவரை பாரதிய ஜனதாவிலேயே இந்தக் குறுங்குழுக்களின் வெறுப்பரசியலை நிராகரிப்பவர்கள்தான் அதிகம். ஆனால் இவர்களை ‘அடித்தளம்’ என அவர்களில் பலர் எண்ணுகிறார்கள். தேர்தலரசியலில் இவர்களை நம்பியே செயல்படவேண்டுமென நம்புகிறார்கள்”

நீங்கள் பலர் என நினைக்கிறீர்கள். எனக்கு அது அனைவரும் எனத் தோன்றுகிறது

 

ஆனால், பாஜாபா சமீப காலத்தில் இரண்டு  பெரும் தவறுகளைச் செய்ததாகத் தோன்றுகிறது. முதலாவதாக, தாதரில் செயல்ப்பட்டு வந்த அம்பேத்கர் பவனை இடித்தது. அதன் பின், மும்பையில் தன்னெழுச்சியாக எழுந்த மக்களின் எதிர்க்குரல், பெரும்பாலான ஊடகங்களில் வரவில்லை எனினும், அரசுக்கு அதன் செய்தி சென்றடைந்தது. முதல்வர்  சட்டசபையில், செய்தது தவறு என மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

 

இரண்டாவது குஜராத்தில் நடந்த சம்பவம். அதன் பின்னரான அம்மக்களின் எதிர்ப்புக் கூட்டங்கள்.

 

இவையிரண்டுமே, அளவில் மிகப் பெரிய கூட்டங்களல்ல. ஆனால், சமீபத்தில் பாஜாபாவுக்கான வாக்கு வங்கியாகச் செயல்படத் துவங்கிய மக்களின் எதிர்ப்பு. இன்று செயல்படாவிட்டால்,  அது குஜ்ராத் தேர்தலிலேயே பிரதிபலிக்கும் வாய்ப்புகள் உள்ளதால் இன்று கண்டிக்கப்பட்டிருக்கிறது என்பது எனது கணிப்பு.

 

தேர்தலில், வாக்குவங்கி அரசியல் என்னும் வகையில், பிரதமரின் எதிர்வினை வந்திருக்கிறது. அது பிரச்சினையில்லை. ஆனால், எனக்கு, அவரின் இன்னொரு வாக்கியம் தான் பிரச்சினையாகத் தோன்றுகிறது. பசுவைக் காக்கவேண்டுமெனில், அவற்றைப் ப்ளாஸ்டிக் உண்ணாமல் காக்க வேண்டும். அதுதான் உண்மையான பசுபக்தி என்கிறார்.

 

எனக்கு இந்த பசுபக்தியின் அடிப்படைதான் கொஞ்சம்கூட லாஜிக் இல்லாமல் இடிக்கிறது.

 

உங்கள் பழைய கட்டுரையில், இந்தப் பசு மாமிச அரசியலைப் பேசியிருந்தீர்கள். அடிப்படையில், பசு ஒரு பொருளாதார சக்தியாக இருந்த காலத்தில் துவங்கிய இந்தப் பக்தி, இன்றைய நிதர்சனத்துக்கு எதிராக இருக்கிறது. பசு வதை, இந்திய அரசியல் சட்டத்தில் இடம் பெரும் அள்வுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்?  இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் கூட, வேளாண்மைக்கு மிக முக்கியமான தேவையாக இருந்தன காளைகளும் பசுவும்.  அரசியல் சட்டமும், பால் தரும், ஏர் இழுக்கும் மாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனச் சொல்கிறது. ஆனால், அதற்கு முந்தய வரியில், அரசு, வேளாண்மையையும், கால்நடைப் பராமரிப்பையும் அறிவியல் பூர்வமான வழியில் நவீனப்படுத்த வேண்டும் என்னும் அடிப்படையைச் சொல்கிறது.

 

ஆனால், வெண்மைப் புரட்சியின் அடிப்படையை நோக்கினால், பசுவை விட எருமைகள் தான் இந்தப் பால்புரட்சிக்கு அதிகம் பங்களித்திருக்கின்றன.  ஒரு நகைமுரணாக, இன்று பசுபக்தி பொங்கி வழியும் மராத்தியம் துவங்கி, வட இந்திய மாநிலங்களில்தாம் எருமைகளின் பங்களிப்பு அதிகம். பசும்பாலை விட எருமைப்பால் ஆரோக்கியமானது என இந்திய பால் அறிவியல் மையங்கள் சொல்கின்றன.   எனில், பசுபக்தி லாஜிக்கில், எருமைகள்தாம் காப்பாற்றப்பட வேண்டும்.

 

வேளாண்மையின் இன்றைய சூழலில், மாடுகள் பாலுக்காக மட்டுமே வைத்துக் கொள்ளப்படுகின்றன. பாலுக்காக, மேம்படுத்தப்படும் இனங்களின் காளைகளுக்குத் திமில் கிடையாது. இருந்தாலும், அவற்றை வைத்துப் பராமரிப்பதை விட, வருடம் 3-4 முறை ட்ராக்டர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்வது பொருளாதார ரீதியாக சரியான வழி.

 

எனில், இந்தப் பசுமாடுகளுக்குப் பிறக்கும் காளைக்கன்றுகளை என்ன செய்வது?  வயதாகி இறக்கும் பசுக்களை என்ன செய்வது? 120 கோடி மக்கள் தொகையில், இன்று இறந்த உடலை எரிக்கவே இடமும் நேரமும் இல்லை. மாடுகளை என்ன செய்வது.

 

கோமியமும், சாணியும் இந்து பக்திமான்களுக்கு எப்படி முக்கியமோ, அதை விட முக்கியம், இந்தப் பசுக்களை வளர்ப்பது, பராமரிப்பது மற்றும் வயதான காலத்தில், அதை எப்படி ஒரு பொருளாதார ரீதியான லாபமாக மாற்றுவது என்னும் பிரச்சினை. அதைப் பொருளாதார ரீதியாக லாபமாகப் பார்க்கும் வழியே sustainable ஆன வழி. ஆனால், அவற்றைக் கொல்ல விட மாட்டோம் என, ஒரு அறிவியலுக்கு / நிதர்சன வாழ்க்கைக்கு எதிரான ஒரு போக்கை இன்றைய அரசியல் தலைமை ஊக்குவிக்கிறது.

 

வருடம் ஒரு முறை பசுவையும் எருமையையும் கடவுளாக வணங்கும் உழவன் தான், அதே பசுவை, கொல்லவும் அனுப்புகிறான்.பசுவும் எருமையும், மாமிசமாகவும், எலும்பு மஜ்ஜையாகவும் (காப்ஸ்யூல் மாத்திரையின் காப்ஸ்யூல்கள் எலும்பு மஜ்ஜையினால் செய்யப்பட்டவை), தோலாகவும் மாறி ஒரு சூழியல் ரீதியாக மிகக் குறைந்த பாதிப்பில் பங்கெடுக்கின்றன.

 

இதையும் தாண்டி, மாடுகளைக் கொலையில் இருந்து காப்பாற்ற வேண்டுமெனில், செய்யக்கூடிய வழி ஒன்றுள்ளது. மாடுகளை வேளாண்மைக்காக வளர்ப்பதைத் தடை செய்து விடலாம். இன்று கோவிலில் யானை வைத்திருப்பது போன்ற ஒரு அறிவியக்கமாக அதை மாற்றிவிடலாம். அங்கும் ஒரு சிறு பிரச்சினை உள்ளது – அந்த விலங்கு வயதாகி மரித்தால் என்ன செய்வது.. அதற்கும் மின்மயானங்களை ஏற்படுத்த வேண்டியதுதான்.

 

பிரச்சினை, இந்த உதிரிக்குழுக்களில்லை. நவீனப்படுத்தப் படாத, பழமை வாத சிந்தனையும் அரசியல் தலைமையும் தான். உங்கள் பாஷையில் ஸ்ருதி Vs ஸ்மிருதி.

 

பாலா

 

 

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 22
அடுத்த கட்டுரைஇசையின் கவிதை- ஏ.வி.மணிகண்டன்