தஞ்சை தரிசனம் – 7

கடைசிநாள் , அக்டோபர் 22. முந்தையநாள் மாலையிலேயே குடந்தைநகர் ஆதிகும்பேஸ்வரர் கோயிலை சென்று பார்த்தோம். தமிழகத்தின் கோயில்நகரங்கள் இரண்டுதான். ஒன்று காஞ்சி இன்னொன்று குடந்தை. இரு நகரங்களிலும் சுற்றுகாக முந்நூறுக்கும் மேல் கோயில்கள் உள்ளன. கும்பகோணத்தில் மிக முக்கியமான கோயில்கள் நான்கு. கும்பேஸ்வரர், சாரங்கபாணி, சக்ரபாணி,ராமசாமி கோயில்கள். புராதனமானது கும்பேஸ்வரர் கோயில்

சாரங்கபாணி கோயில்

கும்பேஸ்வரர் தமிழில் அமுதேசுவரர் என்றும் குழகர் என்றும் அழைக்கப்படுகிறார். தாயார் மங்களாம்பிகை. கும்பேஸ்வரர் கோயில் லிங்கம் மிகப்புராதனமானது. சிவலிங்கங்களில் பழைமையானவை ஆண்குறி போலவே இருக்கும். நுனியில் கோணலுடன். பிற்கால லிங்கங்களே சரியான உருளைத்தூண் வடிவில் அமைந்திருக்கின்றன. கொடுங்கோளூர் திருவஞ்சிக்குளத்தில் வெளியே செண்பக மரத்தடியில் உள்ள லிங்கம் அப்படிப்பட்டது. அது மிக தொன்மையானது என கண்டறியப்பட்டுள்ளது

கும்பேஸ்வரர் சிவலிங்கம் பாணம் கீழே பருத்து முடி சற்று சிறுத்து சாய்ந்திருப்பதும் போல் உள்ளது. அமுதத்தால் ஆன லிங்கம் என்கிறார்கள். வெண்மணல் [அப்பு] இலிங்கம் என்பதும் உண்டு. எப்போதும் தங்கக் கவசம் சார்த்தி வைத்திருக்கிறார்கள். நகருக்கு நடுவே உள்ள பெரும் கோயில் இது. கோயில்மலிந்த நகராதனால் பெருபலானாவர்களின் கண்களில் கோயில்கள் படுவதே இல்லை. மக்கள் இக்கோயிலை ஒரு பொதுவழியாகவே பயன்படுத்துகிறார்கள். சோழர்காலத்து பேராலயங்களின் முழுமையும் பிரம்மாண்டமும் கூடிய கோயில் இது.

காலையில் சாரங்கபாணி கோயிலைச் சென்று பார்த்தோம். சோழர் காலத்துக்கோயில்களில் சிற்ப நுட்பம் மிக்க முதன்மைக் கோயில்களில் ஒன்று இது. நான் 1986ல் அங்கே வந்தபோது மணல்வீச்சு முறையில் சிற்பங்கள் மழுங்கடிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. இன்று பழைய காலத்தில் சிற்பிகள் சிற்பங்களில் கொண்டுவந்த சரும வழுவழுப்பு இல்லாமலாகிவிட்டிருக்கிறது. ஆனாலும் இக்கோயில் முக்கியமான ஒரு கலை அனுபவம்

சாரங்கபாணி கோயில்

கருவறை தேர் அமைப்பில் இருக்கிறது. தேரின் இருபுறங்களிலும் உத்தராயண, தட்சிணாயன வாசல்கள் உள்ளன. தேர் சக்கரம் பிரம்மாண்டமாக கொனார்க் சூரியர் கோயிலையும் தாராசுரத்தையும் நினைவூட்டுவதாக உள்ளது. சுற்றுப்புற சுவர்களின் சிலைகளும் நுட்பமாக வடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள கோபுரங்களில் மூன்றாவது பெரிய கோபுரம் இங்குள்ளது. [ ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் 236 அடி. ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் 165 அடி] பதினொன்று நிலைகளையுடைய இந்தக்கோபுரம் 150 அடி உயரம் கொண்டது.

கோலாகலனாக பெருமாள் கோயில்கொண்டிருக்கும் கோயில்களின் கோபுரங்களில் லீலைச்சிற்பங்கள் எனப்படும் பாலியல்சிலைகள் இருக்கும். இக்கோயில் கலவி சிற்பங்கள் அழகானவை. நளினமான நெளிவுகளும் பாவனைகளும் கொண்டவை. இவற்றுக்கு அபத்தமான பல விளக்கங்களை வரலாலறியா பெரிசுகள் அளிக்கின்றன. உலகமெங்கும் வேளாண்மைச்சமூகங்களில் எங்கும் விருஷ்டி சடங்குகள் அல்லது வளச்சடங்குகள் முக்கியமானவையாக இருந்துள்ளன. இவை மதத்தால் உருவாக்கப்படுவன அல்ல. பழங்குடி வாழ்க்கையில் இருந்து மதத்தால் உள்ளிழுக்கப்பட்டு தத்துவ- குறியீட்டு அர்த்தங்கள் அளிக்கப்பட்டு நீடிப்பவை.

சாரங்கபாணிகோயில் சிற்பங்கள்

பண்டைய மனம் குழந்தைப்பிறப்பிலும் செடிகள் முளைத்து பயன்தருதலிலும் ஒரேவகையான முடிவிலா மர்மத்தையே உணர்ந்தது. இரண்டையுமே இறைவெளிப்பாடுகளாக எண்ணியது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்தன. ஒன்று இன்னொன்றுக்கான குறியீடாக ஆவதை நாம் சங்ககாலப்பாடல்களிலேயே காணலாம். இயற்கையின் வளம் என்பது அதன் காதல்நிலையே என்று உருவகிக்கப்பட்டது. ஆகவே விளைச்சலுக்கான வேண்டுதலையும் குழந்தைப்பேறுக்கான பாலியல் சடங்குகளையும் ஒன்றாகவே செய்ய ஆரம்பித்தார்கள். இன்றும்கூட வடகிழக்கு மாநிலங்களில் இத்தகைய சடங்குகள் உள்ளன. மேற்குமலைகளில் சில பழங்குடிகளும் இச்சடங்குகளைச் செய்கிறார்கள். விஷ்ணுபுரம் நாவலில் இத்தகைய ஒரு சடங்கின் சித்திரம் வரும்.

இச்சடங்குகள் மதத்தில் நுழைந்த போது அவை உன்னதமாக்கம் பெற்றன. [sublimation] மத உருவாக்கத்தில் அது முக்கியமான ஒரு அம்சம். காமம் என்பது இயற்கையின் பெரும் காதல்நிலையின், வளத்தின் சின்னமாக கருதப்பட்டது. அச்சிலைகள் மங்கலமானவையாக, பஞ்சம் அகற்றக்கூடியவையாக கருதப்பட்டன. விருஷ்டி என்றால் வளம்பெருகுதல் என்று பொருள். இச்சிலைகளும் விருஷ்டிசிலைகள் என்று சொல்லப்பட்டன.

சாரங்கபாணி கோயில்

சக்ரபாணி கோயில் எளிமையானது. கருவரை தொன்மையானது. நாயக்கர் காலகட்டத்துச் சுதை மண்டபம் ஒன்று இங்கே உள்ளது. இஸ்லாமியக்கட்டிடக்கலைச்சாயல் கொண்டது அது. ராமசாமிகோயில் தொன்மையான கோயில் கட்டிட அமைப்பு சோழர்பாணியைச்சேர்ந்ததே. ஆனால் இதன் முகமண்டபம் தஞ்சையின் மாபெரும் கலைக்கூடங்களில் ஒன்று. கருங்கல்லில் செதுக்கப்பட்ட அற்புதமான சிற்பங்கள் செறிந்த தூண்களை பகல் முழுக்க பார்த்தோம்.

கருங்கற்சிலைகள் எளிதில் அரிப்பதில்லை. ஆகவே சிலைகள் பலநூறாண்டுகளுக்குப் பின்னரும் மெருகு குலையாமல் உள்ளன. இங்குள்ள நடனமாதரின் சிலைகளில் உள்ள நகைகளின் அதிநுணுக்கமான சித்தரிப்பு மலைக்கச்செய்கிறது. கையில் கோலேந்தி அரங்குக்கு நுழையும் தலைக்கோலியின் மிடுக்கும் நளினமும் கொண்ட சிலைக்கு முன் காலமிழந்து நின்றுவிட்டேன். ஒவ்வொரு சிலையும் ஒரு பெரும் கலைச்சாதனை என்றே சொல்லவேண்டும். அதிகம் அறியப்படாது சாலையோரமாக நின்றுகொண்டிருக்கிறது இந்த மண்டபம்

சாலை பல அடி உயரத்தில் இருப்பதனால் சேற்றுநீர் இந்த மண்டபத்தில் நுழைந்து மழைக்காலத்தில் எங்கும் ஈரம் ஊறிவிடுவதாகவும் நெடுங்காலமாக அப்படி உள்ளதாகவும் சொன்னார்கள். அதற்காக எவராவது திருப்பணி செய்ய ஆரம்பித்தால் இந்த கலைப்போக்கிஷங்கள்மேல் சாயம் பூசி அழித்து விடுவார்கள். நுண்ணுணர்வுகொண்ட எவெரேனும் வரும்வரை இப்படியே இருப்பதுதான் முறை என்று நினைத்துக்கொண்டேன்

மதிய உணவுக்குப்பின்னர் மாயவரம் வழியாக பூம்புகார் சென்றோம். இன்றைய புகார் காவேரி கழிமுகத்தில் செயற்கையாக தமிழக அரசால் உருவாக்கப்பட்ட ஒரு கடற்கரை. உடைந்த கோரமான சிமிட்டிச் சிற்பங்கள் கொண்ட ஒரு பாழடைந்த பூங்காவும் தாங்கவே முடியாத சில ஆபாசமான கான்கிரீட் கட்டுமானங்களும் கொண்ட இடம் இது. அதன் பக்கவாட்டில் சென்றால் காவேரியின் கழிமுகத்தைக் காணலாம்.

காவேரிகழிமுகத்தில்

நீரோட்டம் குறைந்த நதிகள் கடலில் நேராக கலப்பதில்லை. அவற்றின் கழிமுகத்தில் பெரிய மணல் திட்டுகள் உருவாகி அவை தேங்கும். மணல்மீது ஏறி கொஞ்சம் நீர் கடலை அடையும். காவேரியில் கடலுக்குச் செல்லும் நீர் மிகக்கொஞ்சம். அது மணலில் ஊறியே கடலுக்குள் செல்வதனால் காவேரி கடலில் இணைவதையே காணமுடியவில்லை. வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. சேற்றுவாசனை நிறைந்த அழிமுகத்தில் ஏதோ ஒரு குடும்பம் இறுதிச்சடங்குகளைச் செய்துகொண்டிருந்தது

காவேரியின் அழிமுகம் பெருமை மறந்து வெற்றும் வம்புகளில் நிலைமறந்து அழியும் நம் பண்பாட்டின் இன்றைய நிலையை சுட்டுவதுபோல் இருந்தது. மாலைக்குள் சுவாமிமலை திரும்பினோம். நண்பர்கள் அப்படியே சென்னைக்கு. நான் திருச்சி வரை காரில் வந்து கன்யாகுமரி எக்ஸ்பிரஸை பிடித்தேன்

[முற்றும்]

முந்தைய கட்டுரைசோர்வு,ஒருகடிதம்
அடுத்த கட்டுரைஇயற்கை உணவு ஒரு கடிதம்