கபாலியின் யதார்த்தம்

1

 

கபாலி படத்தை சிங்கப்பூரில் ஒரு வணிகவளாகத்தின் திரையரங்கில் பார்த்தேன். படம் பார்க்கும் எண்ணம் இருக்கவில்லை. ஆனால் நண்பர் சுகா ‘கபாலி ரஜினிக்கு முக்கியமான படம், பாத்திடுங்க மோகன்’ என ஒரு செய்தி அனுப்பியிருந்தார். அவர் கமல்ஹாசனின் நெருக்கமான நண்பர். நுண்ணிய திரைரசனை கொண்டவர். ஆகவே பார்க்கமுடிவுசெய்தேன்.

கபாலி அலை அப்போது ஓரளவு ஓய்ந்துவிட்டது. அரங்கில் முக்கால்வாசித்தான் கூட்டம். சிங்கையில் நான்கு அரங்குகளில் ஓடுகிறது, கட்டணம் குறைக்கப்படவில்லை என்றார்கள். குறைத்தபின் மீண்டும் ஒருவேகம் எடுக்கலாம்.சிங்கையைப் பொறுத்தவரை ஒரு பெரிய வெற்றிப்படம்தான்.

கபாலியைப்பற்றிச் சுருக்கமாக. ஒரு ரஜினிபடம் ஒருவகை கூட்டுக்களியாட்டத்திற்குரியது. ஆகவே ஒருநாள் கிரிக்கெட்டின் கடைசி ஒரு மணி நேரம் போல அது இருக்கவேண்டும். அவரது ரசிகர்களில் பலர் சிறுவர்கள். அவர்களுக்குப் புரியவேண்டும். குடும்பமாக பார்க்க வருபவர்களுக்குத் தேவையான நகைச்சுவை வேண்டும். இவை ஏதும் இல்லை. ஆகவே வழக்கமான ரஜினி ரசிகர்கள் ஏமாற்றமடைவது இயல்பு. ஆனால் பெண்களைக்கவரும் மெல்லுணர்வுகள் உண்டு. அதுதான் இப்போது படத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச்செல்கிறது.

இன்னொன்று, இதன் கதைக்களம். வணிகப்படத்தில் வில்லன், மையக்கருத்து இரண்டுமே பெருவாரியான மக்கள் எளிதாக தங்கள் வாழ்க்கையில் அடையாளம் கண்டுகொள்வதாக இருக்கவேண்டும். கபாலியில் அது இல்லை. மலேசியாவின் பிரச்சினை தமிழ்மக்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.

கடைசியாக, திரைக்கதை ஒரு வணிக சினிமாவுக்குரிய ஒழுங்குடன் இல்லை. பல பின்னோக்கிச் செல்லும் கதைகள் தனித்தனியாக ஒரே உரையாடலில் வருகின்றன. மலேசியாவின் கூலிகளின் வாழ்க்கைப்பிரச்சினை மிக எளிதாக ஒரு பின்னோக்குக்காட்சியில் வந்துசெல்கிறது.இரண்டாம் பகுதியில் கையைவெட்டிக் கொண்டுவைத்தபின் அது எப்படி நடந்தது என்று காட்டுவது போல பல கதைகள் பின்னால் சென்று காட்டப்படுகின்றன. அது படத்தின் ஓட்டத்திற்கு ஊறுவிளைவிக்கிறது.

அத்துடன் உச்சகட்டம் வழக்கமான அடிதடி. உணர்வுரீதியான ஓர் உச்சம் யோசிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு பெரும் கதாநாயகப்படத்திற்குரிய கட்டாயங்கள் பல உண்டு என்றும் புரிகிறது.

ஆனால் எனக்குப்படம்  பிடித்திருந்தது. ஒன்று, ரஜினி மிக இயல்பாக, மிக அடக்கமாக, மிகநுட்பமாக நடித்திருக்கிறார். பலகாட்சிகளில் அவரிடமிருந்த அந்த உள்வாங்கிய தோரணையும் அதற்குள் அவர் அளிக்கும் உணர்ச்சிகளும் வியக்கச் செய்தன. உள்ளே ஏதேதோ துயரங்களும் இழப்புகளும் ஓட வெளியே அவர் சிரிப்பும் நக்கலுமாக பேசும் காட்சிகளில் ‘நடிகன்!’ என மனம் வியந்தது.

இரண்டு, படத்தின் காட்சிமொழி மிக முதிர்ச்சியானது. பல காட்சிகளில் வெறும் காட்சிவழியாகவே மலேசியாவின் மாறிவரும் காலங்களும் பண்பாடும் பதிவாகியிருக்கின்றன. ஒவ்வொரு நுட்பமாக தொட்டுச் சொல்லமுடியும். உச்சகட்டக் காட்சிகளில் கொலாலம்பூரின் ஒளிவெள்ளம் மிக்க வான்காட்சிகளும் அந்தப்பூசல்கள் அந்நகரின் ‘தலைக்குமேல்’ தேவர்களின் போர்போல நிகழ்வதாகப் பிரமை எழுப்பின.

கபாலி கலைப்படம் அல்ல. அரசியல்படமும் அல்ல. அது அறிவித்துக்கொண்டபடியே ஒரு வணிகக்கேளிக்கைப் படம். அதற்குள் அது ஒரு வாழ்க்கையை மிக நுட்பமாகச் சித்தரிக்கிறது. நாம் மறந்துவிட்ட ஓர் அறக்கேள்வியை முன்வைக்கிறது. அவ்வகையில் முக்கியமான படம் என்றே நினைக்கிறேன்

எனக்கு இப்படம் பிடித்தமைக்கு தனியாக ஒரு காரணம் உண்டு. 2006ல் நான் மலேசியா சென்றபோது நண்பர் டாக்டர் சண்முகசிவா என்னை ஒரு பள்ளியைத் திறந்துவைக்க அழைத்த்ச்சென்றார். அச்சு அசல் கபாலியில் வருவதுபோலவே ஒரு பள்ளி. நான் அதைத் திறந்துவைத்தேன்

அது சிறையிலிருக்கும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கான இரவுப்பள்ளி. அங்கிருக்கும் குடியிருப்புகளில் கணிசமானவற்றில் இருபெற்றோரும் இல்லாத குழந்தைகள் உள்ளன. பல பெற்றோர் சிறையில். பெரும்பாலானவர்கள் மலேசியாவின் நிழல் உலகுடன் தொடர்புடையவர்கள். குப்பைபொறுக்குவதுபோன்ற தொழில்செய்பவர்கள். வறுமை காரணமாக இளைஞர்கள் எளிதாகக் குற்றம்நோக்கிச் செல்கிறார்கள்

அந்தப்பள்ளியை தொடங்கி சொந்தச்செலவில் நடத்துபவர் ஒரு மனம்திருந்திய குற்றவாளி. ஆப்ரிக்கர் போலிருந்தார். மொட்டைத்தலை, கண்ணாடி, குறுந்தாடி. தனியார் பாதுகாவலராக வேலைபார்க்கிறார். உழைத்துச்சேர்த்த பணம் முழுக்க அவரால் அப்பள்ளிக்குச் செலவிடப்படுகிறது. அவர் ஒரு அதிதீவிர ரஜினி ரசிகர்

நாம் காணும் கொலாலம்பூர் அல்ல மலேசியா. நான் நாஞ்சில்நாடனுடன் மலேசியாவின் கிராமப்புறங்களில், தோட்டங்களில் பயணம்செய்யும்போது வறுமையில் வாடும் தமிழ்க்குடும்பங்கள் பலவற்றைக் கண்டேன். தகரக்கொட்டகைகள். மெலிந்து கறுத்த பெண்கள். உலர்ந்த குழந்தைகள்.

இத்தனைக்கும் மலேசியா பெட்ரோலிய வளம் மிக்க நாடு. சுண்ணாம்புக்கனி மிக்கது. அதன் உள்கட்டமைப்பும் வைப்புச்செல்வமும் மிக அதிகம். ஆனால் சட்டபூர்வமாகவே மலேசியாவில் தமிழர்கள் கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். அதற்கு எதிராக இண்ட்ராஃப் வழியாக உருவான சிறிய எதிர்ப்பு கூட அழிக்கப்பட்டது.

எந்தவகையான அரசியலியக்கமும் இல்லாத வெற்றிடத்திலேயே குற்றக்குழுக்கள் உருவாகின்றன. கபாலியின் அரசியல் இதுதான். சிலநாட்களுக்கு முன்னர்கூட கபாலியைப்போலவே ஒரு ‘நலம்நாடும் குற்றவாளி’ சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி வந்தது. அதன் காட்சிப்பதிவும் இணையத்தில் வெளிவந்தது – அப்படியே கபாலி!

கபாலியின் அந்தப் பள்ளிக்கூடச்சூழலின் யதார்த்தம் உண்மையில் என்னைக் கண்கலங்கச் செய்தது. ரித்திகா மிக இயல்பாக நடித்திருந்தார். மலேசியப்பெண் என்றே நினைத்தேன். அந்த நிழல் உலக விருந்தும் அதேபோல உண்மையான நுட்பங்களுடன் இருந்தது.

கபாலியை கலைப்படங்களை மட்டுமே படமென நினைக்கும் ஒருவர் நிராகரிப்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் சாதாரண ஹாலிவுட்  வணிகப்படங்களை எல்லாம் ரசிக்கும் கூட்டம் அதை மொக்கை என்றும் குப்பை என்றும் போகிறபோக்கில் எழுதியது வருத்தம் அளிக்கிறது

இத்தகைய படங்களை சாமானிய சினிமா ரசிகன் உள்வாங்கமுடியாது குழம்புவது இயல்புதான். ஆனால் சற்றுமேம்பட்ட ரசனைகொண்ட படித்த இளைஞர்கள் அவர்களுக்கு செய்திகள் வழியாக, விவாதங்கள் வழியாக உதவலாம். இணையம் அதற்கு வசதியான ஊடகம். மலையாளத்திலும் கன்னடத்திலும் எங்கும் நிகழ்வது அதுவே

தமிழில் படித்த இளைஞர்கள் பாமரர்களை விட மோசமான ரசனையை வெளிப்படுத்தினார்கள். தன் எல்லைக்குள் நின்றபடி நிகழ்த்தப்பட்ட  ஆத்மார்த்தமான ஒரு முயற்சியை ஒற்றைவரியில் நிராகரித்து, அசட்டு நக்கலும் கிண்டலும் செய்து, அதை தோல்வியடையச்செய்ய முயன்றனர். அவர்களும் பாமரரகளைப்போலவே எதையோ எதிர்பார்த்துச்சென்று ஏமாந்தவர்கள். அந்த எளிய உணர்வுநிலைகளை அவர்களாலும் கடக்கமுடியவில்லை என்பது பெரியஏமாற்றம்..

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 20
அடுத்த கட்டுரைசார்வாகமும் நீட்சேவும்