அன்புள்ள ஜெ,
சொல்வளர்காட்டின் தத்துவம் குறித்த உரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன. கடைசியாக தத்துவம் நம்பமறுப்பவனுக்கானதாக அல்லாமல் நம்ப ஆயத்தமானவனுக்கான உருவை அடைந்துள்ளதாக எண்ணுகிறேன். இது இலக்கியத்தில்தான் சாத்தியம் என்பது ஒருபுறம் இருக்க, உங்கள் படைப்புகளிலேயே இது அறிதான ஒன்றாகத்தான் உள்ளது. அதற்கு காரணம் ‘விஷ்ணுபுரத்தில்’ வருவது போல இது ஒரு தர்க்க சபையில் நடக்கவில்லை என்பதே. இங்கிருப்பது தருமன் என்னும் மாணவன். அவன் பல தரப்புகள் உள்ளன என்னும் அறிவாலேயே விவாதிக்க வரவில்லை கண்டடைய வந்திருக்கிறான். தத்துவம் பயில்பவனுக்கு தெரியும், விவாதிக்காமல் உள்வாங்குவது எவ்வளவு கடினம் என்று. அதே நேரத்தில் இந்திய தத்துவம் இயங்கும் முறை இவ்வாறே இருந்திருக்கமுடியும். ஒரு தத்துவ முறையின் அனைத்து தர்க்க சங்கிலி தொடரையும் முழுமையாக அறிந்த பின் ஆதன் வலிமை குறைந்த கண்ணியை உடைத்து எறிவது அல்ல, ஆதை மேலும் பலப்படுத்தி தனக்கானதாக கண்டடைவதே இந்திய முறையின் சாரமாக உள்ளது. தர்க்க சபை விவாதங்கள் எல்லாம் பிறகு தான். இந்த மரபு இவ்வத்தியாயங்களில் இயல்பாக வெளிப்படுகிறது.
சமீபத்தில் வந்த அத்தியாயங்களில் சார்வாகம் குறித்த உரை ஒரு வெளிப்பாடு. ஆச்சர்யப்படுமளவிற்கு சார்வாகம் நீட்ஷேவின் தத்துவக் கொள்கையை ஒத்துள்ளது, மன்னிக்கவும் மாறாக சொல்வதே நியாயம். அரை அத்தியாயத்திற்கே வரும் அந்த உரை கிட்டதட்ட நீட்ஷேவின் ஓட்டுமொத்த தத்துவ கொள்கையையும் அடக்கியதோடல்லாமல் அவர் தத்துவம் விரிவாக பேசத்தவறிய இருத்தல்(Ontology) மற்றும் புறப்புறம்(Nuemenon) குறித்த அணுகுமுறையையும் சுட்டிகாட்டுகிறது.
‘Ubermensch’
“எவர் தெய்வமும் மண்ணையும் விண்ணையும் முழுதாளவில்லை. ஆற்றல் வெல்கிறது என்பதுதான் பருப்பொருளின் மாறா நெறி. பெரியபாறை சிறியபாறையை உடைக்கும். யானை முயலை மிதித்துக் கடந்துசெல்லும். எனவே ஆற்றல்கொண்டவராகுக. வெற்றிகொள்க. அதையே மானுடருக்கு நாங்கள் சொல்கிறோம்”
‘Gott ist Tod’
“எரியூட்டுதலை, மூவேளை நீர்வணக்கத்தை அது மறுத்தது. தெய்வங்களை செறுத்தது. பூசகர்களை, அவர்களின் சடங்குகளை இகழ்ந்தது. இங்குள்ளது பருவெளி. மானுடன் அதிலொரு துளி. அதை ஆக்கி, உண்டு, அதில் இன்புற்று மறைவதே அவனுக்குரிய கடன். இதற்கப்பாலுள்ள எதன் ஆணையையும் நிறைவேற்றும் பொறுப்பு அவனுக்கில்லை”
Aesthetic Affirmation
”அறம் பொருள் இன்பம் வீடு என நான்கு விழுப்பொருட்கள் மானுடருக்குண்டு என்று வகுத்துள்ளனர் வைதிகர். இன்பத்திற்கு உதவாத அறம் பயனற்றது. பொருள் பொருளற்றது. வீடு என்பது நிலைபேறான இன்பமே. எனவே இன்பமன்றி விழுப்பொருள் பிறிதில்லை. புல்லுக்கும் புழுவுக்கும் மாக்களுக்கும் மானுடருக்கும் அதுவே மெய்யான இலக்கு”
Perspectivism
“எப்போதைக்குமான உண்மை என ஏதும் இப்புவிமீது இருக்கமுடியாது. காலத்தில் இடத்தில் தருணத்தில் அறிபவனால் அறியத்தக்க ஒன்றே அறிவெனப்படுகிறது. அது அவனுக்கு நலன்பயக்குமெனில் உண்மை, அல்லதெனில் அரையுண்மை. பொய்யென்று ஏதும் இப்புவியில் இல்லை.”
நீட்ஷேவின் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் முக்கியமானது அவர் ஒரு முழு தத்துவ முறைமையை (System Philosophy) உருவாக்கவில்லை என்பதே. இதற்கு காரணம் அவர் காண்ட் (Critique of pure reason) போலவோ ஷோபன்ஹாவர் (The world as will and idea) போலவோ canon எதையும் உருவாக்கவில்லை. அவரது தத்துவம் முறைப்படுத்தப்படாத உதிரி புத்தகங்களாக அவரது பலவிதமான சர்ச்சைகளுடன் (polemics) சிதறி கிடக்கிறது.
நீட்ஷேவின் தத்துவம் உண்மையான கண்டடைதல்கள் கொண்டதல்ல மாறாக அது அதுவரை பேசப்பட்ட மேற்கின் தத்துவ மரபுடன் குறிப்பாக ஷோபன்ஹாவருடனான தனது எதிர்வினைகளின் தொகுப்பே என விமசிக்கப்படுவதுண்டு. நீட்ஷேவை குறித்த எனது அபிப்பிராயமும் இவ்வாறாகவே இருந்து வந்தது. ஆனால் சார்வாகம் குறித்த இந்த அத்தியாயம் அதை மாற்றியமைத்தது. நீட்ஷேவின் தத்துவ தெறிப்புகளுக்கு ஒரு சாரம் கிடைத்தது போல உணர்கிறேன். இத்தருணத்தில் நீட்ஷேவின் முதுமையான தோற்றம் கொண்ட ஒரு புகைப்படத்தை நினைவுகூர்கிறேன். Ubermensch குறித்து பேசிய இந்த மனிதனை பெரும்பாலும் இளமையில் சித்தரிப்பதையே விரும்புவர். ஆனால் இளம் வயதிலேயே கொடும் நோயால் தாக்கப்பட்ட பார்வை இழப்பு போன்ற பாதிப்புகளுடன் போராடிய நீட்ஷே மானுடன் குறித்த மாபெரும் நம்பிக்கைவாத தத்துவ சொற்களை உதிர்த்தது ஒரு கண்டடைதல் என்றே இப்போது எண்ணுகிறேன். பின்னால் அவரது தனி மனிதன் கொள்கை, அமைப்புகள் மேலான அவரது விமர்சனம் காரணமாக இருத்தலியல்வாதிகள் அவரை கையில் எடுத்து கொண்டதால் ஏற்பட்ட இருள் பிம்பம் அவரை முற்றிலும் வேறொரு நபராக நம் நினைவில் நிறுத்தி விட்டது.
நீட்ஷே கிழக்கின் தத்துவங்களை ஒரு வித நிராகரிப்புடனே பார்த்திருப்பார் காரணம் ஷோபன்ஹாவரை குறித்த அவரது பார்வை தன்னை கிழக்கின் ஒருத்தலிலிருந்து (world renunciation) மானுடத்தை மீட்க வந்தவராக கற்பனை செய்துகொள்ள வைத்தது (நீட்ஷே மானுட சிந்தனை போக்கே தனக்கு முன் தனக்கு பின் என பிரிக்கபடும் என்று ஒரு இடத்தில் கூறுகிறார்). எனவே அவருக்கு பௌத்த தத்துவம் ஓரளவு அறிமுகம் இருந்தாலும் சார்வாகம் குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை. அறிந்திருந்தால் அவரது சாரம் இன்னும் பலம் கொண்டிருக்கும் என்றே தோன்றுகிறது. “o What do those wise men of india not know?” என ஷோபன்ஹாவர் ஒரு இடத்தில் நெகிழ்கிறார்.
தங்களது மதிப்பீட்டின்படி நீட்ஷேவின் இடம் என்ன? உங்கள் குரு நித்ய ஸைதன்ய யதி நீட்ஷேவை குறித்து என்ன அபிப்பிராயம் கொண்டிருந்த்தார்?
அரங்கநாதன்
ஷோப்பனோவர்
அன்புள்ள அரங்கநாதன்,
சொல்வளர்காடு நாவல். ஆகவே அதில் நேரடியான தத்துவம் இடம்பெறுவதற்கான சில எல்லைகள் உள்ளன. தத்துவத்திற்கான வரையறைமொழி புனைவுக்குள் இடம்பெற முடியாது. மேலும் ஒவ்வொரு கொள்கைக்கும் அதில் அளிக்கப்பட்டிருக்கும் இடம் அதிகபட்சம் இரண்டாயிரம் சொற்கள்.
ஆகவே அவை மிகமிகச்சுருக்கமாகச் சொல்லப்படுகின்றன. இலக்கியத்திற்குரிய உருவக மொழியைக் கையாள்கின்றன. படிமங்களை முன்வைக்கின்றன. அவை தத்துவமே அல்ல, தத்துவம் போல.
இச்சிந்தனைகளில் என் பங்களிப்பென்பது சில இடைவெளிகளைப் பொருத்திக் காட்டுவதும் புனைவுமொழியை அளிப்பதும் மட்டுமே. பிரகஸ்பதியை முதற்புள்ளியாகக் கொண்ட சார்வாக மரபு, அல்லது பிரகஸ்பதிய மரபு இந்திய சிந்தனைமுறையின் முக்கியமான ஒரு தரப்பு.
இயல்பாகவே அதற்கு உலகமெங்கும் உள்ள பொருண்மைவாத, நாத்திகவாத சிந்தனைகளுடன் நெருக்கம் இருக்கும். சார்வாகர்கள் வெறும் மறுப்பாளர்களோ அவநம்பிக்கைவாதிகளோ அல்ல. அவர்களுக்கு என ஒரு முழுமையான பிரபஞ்சநோக்கு இருந்தது.
நான் நீட்சேவின் சிந்தனைகளை விரிவாக அறிந்ததில்லை. நித்ய சைதன்ய யதியும் அவரைப்பற்றி அதிகமும் பேசியதில்லை. நித்யா வாழ்ந்த அக்காலகட்டத்தில் ஃபாஸிசத்தின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்ந்தவர் என்னும் முத்திரை நீட்சே மேல் இருந்தது. பின்னர் பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள், குறிப்பாக ஃபூக்கோ போன்றவர்கள், வந்தபின்னரே அந்த முத்திரை அகன்றது. நித்யாவுக்கும் அந்தக்கசப்பு இருந்தது என்றே நினைவுகூரும்போது தெரிகிறது
நித்யா நீட்சேவின் அதிமானுடன் என்னும் உருவகம் பற்றிப் பேசியிருக்கிறார். அதை நிராகரித்து விராடபுருஷன் என்னும் கருத்தை முன்வைத்து. விழைவின் உச்சமான அதிமானுடன் அழிவுச்சக்தியாகவே இருக்கமுடியும், ஏனென்றால் அவன் ஒரு பெரிய விசை. எந்த ஒற்றைவிசைக்கும் எதிர்விசை இருக்கும் என்றார்.
நீட்சேவின் காலகட்டத்தில்தான் இந்திய சிந்தனைகள் ஜெர்மனிய மொழியில் அறிமுகமாயின. மாக்ஸ்முல்லரும் நீட்சேவும் சமகாலத்தவர். ஆனால் நீட்சே இந்திய சிந்தனைமுறைகளில் பௌத்தம் பற்றித்தான் ஓரளவு அறிந்திருந்தார் எனத் தெரிகிறது. இரு உரைகளில் பௌத்தம் குறித்த நீட்சேவின் புரிதலும் பிழையானது என நித்யா சொல்கிறார்
அது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஒரு தத்துவமரபை அறிய நூல்கள் மட்டும் உதவாது. அந்நூல்களைச்சார்ந்து பலகோணங்களிலான உரையாடல்கள் நிகழவேண்டும்.அத்துடன் இன்னொன்று உண்டு. தத்துவம் என்பதே வெவ்வேறு வகையான அறிதல்முறைகள் கொண்டதாக இருக்கமுடியும். பேரா. குந்தர் இந்தியதத்துவத்தை தத்துவம் என மேலைநாட்டில் சொல்லப்படும் பொருளில் சொல்லமுடியாது என வாதிடுகிறார். அதைச்சார்ந்து அகேகானந்தபாரதியின் தந்த்ரா குறித்த நூலில் ஒரு விவாதத்தை வாசித்த நினைவு.
இந்தியதத்துவம் ஆன்மிகமான நுண்ணறிவு மற்றும் யோக-தியான சாதனைகள் ஆகியவற்றுடன் இணைந்ததாகவும், கவியுருவகங்கள் மற்றும் படிமங்கள் கொண்டதாகவும்தான் உள்ளது. அதை இறையியலும் தத்துவமும் மெய்யியலும் கலந்த ஒற்றை அறிவுத்தளம் எனவேண்டுமென்றால் சொல்லிப்பார்க்கலாம். வெறும் தத்துவமாக தர்க்கபூர்வமாக அறியமுயல்கையில் இடர்கள் பல உருவாகின்றன.
தோராயமாக இப்படிச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. மேலைத்தத்துவம் எப்படியோ அறவியலுடன் [ethics] சம்பந்தப்பட்டிருக்கிறது. அவர்கள் எத்தனை விலகிச்சென்றாலும் ஆழத்தில் அறத்தேடலே தத்துவத்தின் பெறுபயன் என நினைக்கிறார்கள். ஆனால் இந்திய தத்துவம் மேலோட்டமாக அறவுரை எனத் திகழ்ந்தாலும் சாராம்சத்தில் முழுமையறிவு என்னும் கருத்தைநோக்கிச் செல்கிறது.
மேலைநாட்டுச் சிந்தனையாளர் பலருக்கும் இந்திய சிந்தனைமுறைமேல் விலக்கமோ இதைக் கற்பதில் இடர்பாடோ உருவாக இதுவே காரணம். அவர்கள் பலசமயம் பாராட்டும் இடங்கள்கூட அறவியல்சார்ந்தவையாகவே உள்ளன. என் நினைவில் ஆல்பிரட் சுவைட்ஸர் நேரடியாகவே சொல்லியிருக்கிறார், இந்தியமெய்யியல் அறநோக்கு அற்றது என.
ஜெ