[ 5 ]
“மைத்ரேயரைப் பார்க்க அமைச்சர் விதுரர் சென்றபோது கனகரும் அடைப்பக்காரனாக மூங்கில்கூடையுடன் நானும் உடன்சென்றோம்” என்று காலன் சொன்னான். “மைத்ரேய மாமுனிவர் புஷ்பகோஷ்டத்திற்குப் பின்னாலிருந்த குறுங்காட்டுக்குள் முனிவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த ஈச்சையோலைக் குடிலில் தங்கியிருந்தார். மாமுனிவரான பராசரரின் வழிவந்தவர் அவர் என்று அறிந்திருந்தேன். அவர்களுக்கு வேதத்தைவிட புராணங்களே மெய்யறிதலின் பெருந்தொகை என்றனர். அவருடன் அவரது எட்டு மாணவர்களும் வந்திருந்தனர்.”
நாங்கள் செல்லும்போது அவர் அன்றைய வகுப்பு முடிந்து மாணவர்களுடன் அளவளாவிக்கொண்டிருந்தார். விதுரர் முனிவரின் தாள்பணிந்து முகமனும் வாழ்த்தும் உரைத்தார். நாங்களும் வணங்கி அப்பால் அமர்ந்துகொண்டோம். மைத்ரேயர் “உம்மை மீண்டும் காண்பது உவகை அளிக்கிறது, விதுரரே” என்றார். திரும்பி தன் மாணவர்களிடம் “இவரை நான் முன்பு ஒருமுறை அக்ஷவனத்தில் சந்தித்திருக்கிறேன். அன்று இவர் இளைஞர். தன் வாழ்க்கையின் இலக்கு என்ன என்று என்னிடம் கேட்டார். வாழ்க்கையின் இலக்கு வேறு பொருள் வேறு என்று நான் சொன்னேன். அவ்வண்ணமென்றால் பொருள் என்ன என்று என்னிடம் கேட்டார்” என்றார்.
விதுரர் துயரப்புன்னகையுடன் “ஆம்” என்றார். “அன்று நான் இவரிடம் சொன்னேன், வாழ்க்கையின் இலக்கு ஒவ்வொரு பிறவிக்கும் ஒன்றே அல்ல என்று. ஒவ்வொருநாளுக்கும் ஓர் இலக்கென்றா இப்புவியில் வாழ்கிறோம்? துஞ்சுவது போலும் சாக்காடு, விழிப்பது பிறப்பு. பிறந்திறந்து பெருகியோடும் இந்தப் பயணத்தின் முற்றிலக்கை அறிவதனால் இப்பிறவியில் எப்பயனும் கூடுவதில்லை. கூரிய வாளின் முனைவழியாக ஊர்ந்துசெல்லும் எறும்பிடம் அதை சொன்னால் அது என்ன பயனை அடையப்போகிறது?”
விதுரர் “நான் அன்று சொன்னேன், எரிகொள்ளியில் அமர்ந்திருக்கும் எறும்பிடம் சொல்லலாம் அல்லவா என்று. இன்று இருபுறமும் எரி கொண்ட சுள்ளியில் தவிக்கிறேன், முனிவரே” என்றார். மைத்ரேயர் புன்னகை செய்து “ஆம், அன்று நான் உம்மிடம் சொன்னேன் வாழ்வை அறிய விழைபவர் முப்பிறவியை அறிந்தாகவேண்டும் என்று. அப்போதுகூட இலக்கை ஒருவாறாக உய்த்துணர்வதற்கு மட்டுமே அது உதவும் என்றேன். அப்பிறவிகளில் இருந்து இப்பிறவி வரை அழியாது தொடர்வது என்ன என்று மட்டும் அறிந்தாலே போதுமே என்று நீர் சொன்னீர்” என்றார்.
“அன்றுரைத்ததையே இன்றும் சொல்கிறேன்” என்று மைத்ரேயர் சொன்னார். “ஒருவனின் பிறப்பும் வாழ்வும் இறப்பும் அவனைச் சூழ்ந்தவர், அணுகியவர், அகலே வாழ்பவர் என பல்லாயிரத்தவருடன் பின்னியிணைந்தவை. எனவே அதை முற்றறிதல் எவருக்கும் இயலாது. ஆனால் நீர் என்னைப் பணிந்து உமது முற்பிறப்பைச் சொல்லும்படி கோரினீர். அதை நான் என் அறிவிழியால் கண்டு உரைக்கமுடியும் என்றும் ஆனால் அதற்குரிய வேளை வருகையில் நானே தேடிவருகிறேன் என்றும் சொன்னேன். அது இவ்வேளை.”
விதுரர் தலைவணங்கினார். மைத்ரேயர் மாணவர்களிடம் கைகாட்ட அவர்கள் ஏழு மரப்பெட்டிகளை இழுத்துவந்து அருகே வைத்து அதில் ஒன்றை திறந்தனர். அதற்குள் சுவடிகள் நிறைந்திருந்தன. “இது பராசரரின் புராணமாலிகையின் முழுவடிவம்” என்றார். “எங்கள் மெய்மரபின் முதலாசிரியர் பராசரரிடமிருந்து உருவாகி எங்கள் கல்விமரபில் நீடிப்பது இம்முறை. பராசரரின் புராணமாலிகை முழுவடிவில் பன்னிரண்டாயிரம் கதைகளின் பெருந்தொகை. அதன் உட்கதைகள் முப்பத்துஆறாயிரம். ஊடுகதைகள் அறுபத்தேழாயிரம். அதில் சொல்லப்பட்டுள்ள பெயர்கள் மட்டும் எட்டு லட்சம்” என்றார் மைத்ரேயர்.
“பாரதவர்ஷத்தின் எவர் கதையும் இதற்குள் எவ்வண்ணமோ சொல்லப்பட்டிருக்கும் என்பதுதான் இம்முறையின் அடிப்படை நெறி. பெயர் தொட்டு எடுத்து விரலோட்டிச் சென்று உரிய புள்ளியில் நிறுத்துவதற்கென ஓர் முறைமை உண்டு. ஏழாண்டுகாலம் ஆசிரியரிடம் அமர்ந்து பயிலவேண்டியது. அத்துடன் அது விரலில் தெய்வங்களை எழச்செய்யும் ஊழ்கமும் கூட” என்றபடி அவர் மாணவன் அளித்த ஒரு சுவடித்தொகையை கையில் எடுத்தார். “இதுவே சுட்டேடு. இதிலிருந்து பிரிந்து செல்பவை கிளையேடுகள்” என்றபடி விதுரரிடம் “உமது நாள், கோள், தெய்வம் ஆகியவற்றை உரையுங்கள்” என்றார்.
விதுரர் அவற்றைச் சொன்னதும் அவர் அரைவிழி மூடி அச்சுவடிகளை புரட்டிக்கொண்டிருந்தார். ஒரு சுவடியை நிறுத்தி வாசித்து அதன் வரிகளில் விரலோட்டி ஒரு வரியில் நின்றார். அதைக் குனிந்து நோக்கிய மாணவன் மெல்லிய குரலில் சொல்ல ஒருவன் மூன்றாவது பெட்டியைத் திறந்து அதை அருகே கொண்டுவந்து வைத்தான். அதில் ஒரு சுவடிக்கட்டை எடுத்து அவ்வண்ணமே தேடி ஓர் ஏட்டை உருவி அதில் விரலோட்டி மைத்ரேயர் நிறுத்தியதும் அவன் அச்சொல்லை நோக்கி இன்னொரு பெட்டியை எடுத்தான். மீண்டும் ஒரு சுவடியை எடுத்து சொல்தேடி அடைந்து சுட்டியதும் அதற்கேற்ப மாணவன் ஒரு ஏட்டுக்கட்டை எடுத்தான். அவர் அதை வாசித்தபின் பெருமூச்சுடன் திரும்ப வைத்தார்.
“விதுரரே, இளமைந்தரின் களியுவகையை மானுடர் பின்னர் அடைவதே இல்லை. எனென்றால் அவர்கள் இளையோரைவிட மேலும் இப்புவியை அறிந்துவிட்டார்கள். அறியும்தோறும் துயர் என்பதே வாழ்க்கை. ஒரு வாழ்க்கைக்கு மேல் பிறிதொன்றையும் அறிவது பெருந்துயரையே அளிக்கும். இதை முன்னரும் உம்மிடம் சொன்னேன்” என்றார் மைத்ரேயர். “முனிவரே, நூறாண்டு கண்ட முதியவர்கள் இளமைந்தரின் களிப்பை தாங்களும் அடைகிறார்கள். முற்றறிபவர் துயருறுவதில்லை” என்றார் விதுரர்.
“ஆம், விழைந்தபின் அறியாமல் அமைவதில்லை மானுட உள்ளம்” என்றபின் மைத்ரேயர் தொடர்ந்தார். “முதல்வரி கன்னிமூலை. அடுத்த சுட்டு காகம். அடுத்த சுட்டு யமன். மூன்றையும் இணைத்த கதை ஆணிமாண்டவ்யருடையது. அக்கதையை நீர் அறிந்திருக்கக்கூடும்” என்றார். “ஆம்” என்றார் விதுரர். “எட்டு வசுக்களில் இறுதிவசுவின் கூறான மாண்டவ்ய முனிவர் முழுமை அடையும்பொருட்டு பேசாநோன்பு கொண்டு தவமிருந்தார். அவர் இருந்த குகைக்குள் அரசப்படைகளிடமிருந்து தப்பி ஓடிவந்த திருடர்கள் புகுந்து ஒளிந்தனர். துரத்தி வந்த படைத்தலைவன் அவரிடம் திருடர்களைப்பற்றி கேட்டான். அவர் மறுமொழி இறுக்கவில்லை. குகைக்குள் புகுந்து அவர்களைப் பிடித்து கொன்றபின் திரும்பிவந்த படைத்தலைவன் அவரையும் திருடர்குழுவினர் என எண்ணி ஈட்டியின் ஆணியை நட்டு அதன்மேல் அவரை கழுவேற்றிவிட்டுச் சென்றான்” என்றார் மைத்ரேயர்.
அக்கதையை மைத்ரேயர் பிறிதொருவகையில் விரித்துச் சொன்னார். மூன்றுநாட்கள் அக்கழுவிலேயே அமர்ந்து வலிமிகுந்து கதறி உயிர்துறந்த மாண்டவ்யர் அந்த ஆணியுடன் தென்புலத்தார் உலகுக்குச் சென்றார். அங்கு அறத்தின் தலைவன் என அமர்ந்திருந்த யமனிடம் இது எவ்வண்ணம் தனக்கு நிகழ்ந்தது என்று கேட்டார். “நிகழும் ஒவ்வொன்றும் நெறிப்படியே” என்றான் யமன். “ஒன்று பிறிதொன்றுக்கு நிகர் எனக் காட்டுவதே என் தலைமேல் அமைந்த துலா.”
கடும்சினத்துடன் “என் துயருக்கு நிகராக நான் செய்த பிழை ஏது?” என்றார் மாண்டவ்யர். “நீர் அவ்வரசரின் குடி. அரசனுக்கு உதவவேண்டிய கடமை கொண்டவர். அதைச் செய்யாது அமைந்தது உம் பிழை. அதன்பொருட்டே இறப்பு” என்றான் யமன். “அந்தத் திருடர்கள் கருவுற்றிருந்த பெண்ணொருத்தியைக் கொன்று அவள் அணிந்திருந்த நகையை திருடினர். அவளருகே நின்றிருந்த இளமைந்தனையும் தலைவெட்டி வீழ்த்தினர். தடுக்கவந்த இரு இளைஞரைக் கொன்று துரத்தி வந்த வீரர்களையும் கொன்றபின் அந்த குகைக்குள் புகுந்தனர். எண்ணியோ எண்ணாமலோ நீர் அவர்களின் குற்றங்களுக்கு உடந்தையாக ஆனீர். அப்பிழைக்காகவே மண்ணில் உச்சமான வலியை அடைந்தீர்.”
சினம்கொண்டு கண்ணீர் விட்ட மாண்டவ்யர் “இறப்புக்கரசே, பேசாநோன்பு என் தவம். எளிய மானுடரின் அரசுக்கும் அறத்துக்கும் நான் கட்டுப்பட்டவனா?” என்று கேட்டார். “மாண்டவ்யரே, அரசுக்கு கட்டுப்படாதவர் என்றால் அரசின் பாதுகாப்பில்லாத காட்டுக்குள் நீர் சென்றிருக்கவேண்டும்” என்றான் யமன். “அரக்கரையும் அசுரரையும் விலங்குகளையும் அஞ்சி நீர் அரசாட்சி நிலவும் மண்ணுக்குள் தவம் செய்தீர். அவன் கோல் உமக்குக் காப்பென்றால் அதன் நெறிக்கு நீரும் கட்டுப்பட்டவரே” என்றான்.
“அறமோ அடர்காட்டிலும் தொடர்வது. ஓர் அன்னையின் விழிநீரும் இளமைந்தனின் குருதியும் உமக்கு ஒரு பொருட்டல்ல என்றால் அத்தவத்தால் நீர் அடைவதுதான் என்ன?” என்று யமன் கேட்டான். “உலகைத்துறத்தலே தவம். உலகின் கடமைகளுக்குள் வாழ்பவனுக்குரியதல்ல அது” என்றார் ஆணிமாண்டவ்யர். “உண்மைத் தவத்தை உலகியலிலும் ஆற்றலாம்” என்றான் யமன். “உலகியலை நீ அறிந்ததில்லை. மெல்லுடலிகள் முட்புதரில் வாழ்வதுபோன்றது அறம்தேர்வோன் அன்றாட வாழ்க்கையில் அமைவது” என்றார் ஆணிமாண்டவ்யர்.
“உமது இயலாமையை நெறியென இங்குரைக்க வேண்டாம்” என யமன் கூச்சலிட்டான். “மூடா, எவரிடம் இச்சொல்லை எடுத்தாய்? இதோ, நான் தீச்சொல்லிடுகிறேன். உன் துளியில் ஒன்று மைந்தன் என மண்பிறக்கட்டும். அங்கே உலகியலின் பெருங்கொந்தளிப்புக்கு நடுவே அறம்நாட முயன்று அகமழியட்டும்” என்றார் மாண்டவ்யர். “நான் அடைந்த இக்கட்டை அவனும் அறிக! தேர்ந்த சொல் ஆயிரம் நாவில் உறைகையிலும் சொல்லற்றவனாக அவையமர்வான். செவிடர் கூடிய அவையில் கூவித்தளர்வான்.”
விதுரர் தளர்ந்தவர் போல பீடத்தில் உடல்சாய்த்தார். மைத்ரேயர் சுவடிப்பேழைகளை மூடி எடுத்துக்கொண்டு செல்லும்படி சொன்னார். அவர்கள் அவற்றை இழுத்து அகற்றுவதை விதுரர் பொருளற்ற வெறிப்புடன் நோக்கிக்கொண்டிருந்தார். நானும் கனகரும் விழிப்புற்று ஒருவரை ஒருவர் நோக்கினோம். எனக்கு முதலில் அக்கதையினூடாக அவர் சொல்லவந்தது என்ன என்று புரியவில்லை. கனகருக்கும் புரியவில்லை என்று உணர்ந்தேன்.
“விதுரரே, தன்னையறிகையில் பெரும் பொருளின்மை ஒன்றையே மானுடர் உணர்கிறார்கள். அவ்வெறுமையைக் கடந்து இங்கு தங்கிவாழும் உளவல்லமையை திரட்டிக்கொள்வது எளிதல்ல” என்று மைத்ரேயர் சொன்னார். “ஆகவேதான் இதை நீர் அறியவேண்டாம் என்றேன்.” விதுரர் ஒளியற்ற புன்னகையுடன் “ஆம், இப்போது அறிந்துகொண்டேன், மாமுனிவரே. இதற்கப்பால் அவ்வெறுமை என்னுடன் இருக்கும். அது என் சொற்களில் தயக்கமாகவும் என் எண்ணங்களில் இடைவெளிகளாகவும் என் கனவுகளில் புன்னகையாகவும் வெளிப்படட்டும்” என்றார். “தகுதியான சொற்கள்” என்றார் மைத்ரேயர்.
மீண்டும் சற்றுநேரம் அமைதி நிலவியது. விதுரர் “முனிவரே, தாங்கள் இன்று எங்கள் அரசரை பார்க்கவேண்டும். அவருக்கு அவர் தந்தை விரும்பும் சில சொற்களை சொல்லவேண்டும்” என்றார். மைத்ரேயர் “அறவுரை சொல்வது என் கடமை” என்றார். “அவரது உடன்பிறந்தார் இன்று காட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் உயிருடன் மீள்வதே அரிது. அவ்வாறு நிகழுமென்றால் இக்குடிக்கு தீராப்பெரும்பழி சேரும்” என்றார். “ஆம், அறிவேன். அதை நான் அவரிடம் சொல்கிறேன்” என்றார். “இந்த சுவடிக்கட்டுகளும் உடனிருக்கட்டும்” என்றார் விதுரர். ஒருகணம் விழிகூர்ந்தபின் “அது தேவை என்றால் அவ்வாறே ஆகட்டும்” என்றார் மைத்ரேயர்.
விதுரர் எழுந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினார். நானும் கனகரும் வணங்கினோம். அவர் எங்கள் தலைதொட்டு வாழ்த்தினார். திரும்பியபின் தயங்கிய விதுரர் “கதையின் எஞ்சிய பகுதி ஒன்றை தாங்கள் வாசித்தீர்கள், சொல்லவில்லை முனிவரே” என்றார். அவர் புன்னகையுடன் “அதைக் கேட்காமல் உம்மால் செல்லமுடியாதென நான் அறிவேன்” என்றார். “ஆம், ஆணிமாண்டவ்யர் என்ன ஆனார்?” என்றார் விதுரர். மைத்ரேயர் நேர்க்குரலில் “சினம் கொண்ட யமன் அவர்மேல் மறுதீச்சொல் இட்டான் என்கின்றது புராணமாலிகை. துலாமுள்ளின் தவிப்பு என்றால் என்னவென்று அறிவீரா என்று யமன் கூவினான். மானுடனாகப் பிறந்து அதை அறிந்துவிட்டு மீளும். உம் உடல் தைத்தது ஒரு முள்ளே. ஆயிரம் முட்களில் படுத்து அதை உணர்வீர் என்றான்” என்றார்.
“மைத்ரேயரின் புன்னகையை இப்போதும் நினைவுறுகிறேன்” என்றான் காலன். “விதுரர் பெருமூச்சுடன் தலைவணங்கிவிட்டு வெளியே நடந்தார். நானும் கனகரும் உடன் சென்றோம். எங்களிடம் உடன்நின்று மைத்ரேயரை அரசரவைக்கு கொண்டுசெல்லும்படி விதுரர் ஆணையிட்டார்.” தருமன் பெருமூச்சுடன் உடலை நீட்டி கைவிரித்து தன்னை மீட்டுக்கொண்டார்.
[ 6 ]
மைத்ரேயருடன் அவரது மாணவர்களும் அந்த சுவடிப்பேழைகளுடன் வந்தனர். கனகர் என்னிடம் “அரசர் எந்நிலையில் இருக்கிறார் என்பதே தெரியவில்லை. அவரை பிறர் அணுகவிடாது அவரது தோழர்கள் சூழ்ந்திருக்கிறார்கள்” என்றார். “உடல்நிலை எவ்வண்ணம் உள்ளது?” என்றேன். “அது நன்றாகவே உள்ளது என எண்ணுகிறேன்” என்றார் கனகர். நான் யாதவப்பேரரசிக்கு உரியவன் என்பதை அவர் எவ்வண்ணமோ உய்த்துணர்ந்திருந்தார் என நானும் உணர்ந்திருந்தேன். ஆனால் நாங்கள் அதை முழுமையாகவே மறைத்துக்கொண்டோம்.
அரசர் இருந்த மருத்துவநிலை இளைய பால்ஹிகரின் ஆணைக்குள் இருந்தது. அதை காவல்காத்த காந்தார வீரர்கள் அவர் சொல்லுக்கே கட்டுப்பட்டனர். எங்களை அவர்தான் முதலில் எதிர்கொண்டார். எதிர்பார்த்தது போலவே “அவர் முனிவர்களை சந்தித்து அறவுரை கேட்கும் நிலையில் இல்லை, அமைச்சரே” என்றார். கனகர் முன்னரே விதுரரால் சொல்லப்பட்ட மறுமொழியை உரைத்தார். “ஆம், அறிவேன் பால்ஹிகரே. ஆனால் மைத்ரேயர் வெறும் முனிவர் அல்ல. நலம்நோக்கும் திறன் கொண்டவர். அரசரின் உடல்நிலையை அவரால் நோக்கி ஆவதென்ன என்று கூறமுடியும்.”
இளைய பால்ஹிகர் அதை சிலகணங்கள் சிந்தித்தார். “பராசரரின் வழிவந்தவர். இந்த அரசமரபே பராசரரில் இருந்து எழுந்தது என்று அறிந்திருப்பீர்கள். பராசரரின் மைந்தராகிய கிருஷ்ணதுவைபாயனரின் சொல்லால்தான் நாம் பாரதவர்ஷத்தில் இன்று வாழ்கிறோம்” என்றார் கனகர். “இவர் யார்?” என்று என்னைச் சுட்டி கேட்டார். “என் அணுக்கன்” என்றார் கனகர். இளைய பால்ஹிகர் எண்ணிநோக்க இடம்தராமல் கனகர் மேலும் “முனிவர் கிளம்பி வந்துவிட்டார். அவரை திருப்பியனுப்புவது முறையல்ல” என்றார். “நன்று, அரைநாழிகை நேரம். அதற்குமேல் இல்லை” என்றார் இளைய பால்ஹிகர்.
அரசர் தென்னக மருத்துவர் ஏழுவரால் நலம் நோக்கப்பட்டுக்கொண்டிருந்தார். அகத்தியமுனிவரின் வழிவந்த தென்னாட்டு மருத்துவரான எயிற்றன் இளங்கண்ணன் அவரை நோக்கும்பொருட்டு வரவழைக்கப்பட்டிருந்தார். நாங்கள் சென்றது உச்சிப்பொழுது. விதுரர் தேர்ந்தெடுத்த நேரம். அது ஏன் என்று எனக்கு அங்கு சென்ற பின்னரே புரிந்தது. அரசநிலையில் அங்கரும் மருத்துவநிலையில் எயிற்றனும் இல்லை. அவர்கள் உணவுண்டு ஓய்வுகொள்ளச் சென்றுவிட்டிருந்தனர். இளையமருத்துவர் நால்வரும் மருத்துவப்பணியாளரும் செவிலியரும் மட்டுமே இருந்தனர். இளைய பால்ஹிகரின் ஏவலன் எங்களை உள்ளே அழைத்துச்சென்றான்.
மருத்துவ அறையில் மருந்துப்புகையின் மணம் சூழ அரசர் துயின்றுகொண்டிருந்தார். அவர் அருகே தாழ்ந்தபீடத்தில் இளைய கௌரவர் துச்சாதனர் அமர்ந்தபடியே துயில சாளரத்தோரம் துர்முகரும் துச்சலரும் சுபாகுவும் நின்று மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தனர். சுபாகுதான் எங்களைப் பார்த்தார். “என்ன?” என்றார். “மைத்ரேய மாமுனிவர் அரசரைப் பார்க்க வருகிறார்” என்றார் கனகர். “அரசரையா? இப்போதா? இது காலை உழிச்சிலுக்கும் கட்டுமாற்றலுக்கும்பின் அரசர் துயிலும் நேரம்” என்றார் சுபாகு.
“இளைய பால்ஹிகரே அனுப்பினார்” என்றார் கனகர். “பராசரரின் வழிவந்த மைத்ரேயர் நம் குடிக்கு மூத்தவர் போன்றவர். அரசரின் உடல்நிலையை நோக்கிச் சொல்லவே அவர் வந்துள்ளார்.” சுபாகு சினத்துடன் “ஆனால் அரசரை இப்போது எழுப்ப முடியாது. அவர் பெருவலியில் துன்புற்று அஹிபீனா முகர்ந்து இப்போதுதான் துயிலத்தொடங்கினார்” என்றார். அதற்குள் துச்சாதனர் விழித்துக்கொண்டு “என்ன?” என்றார். கனகர் “பால்ஹிகரால் முனிவர் இங்கு அனுப்பப்பட்டுவிட்டார். வந்து மருத்துவசாலை வாயிலை அணுகிவிட்டார். இனி நாங்கள் ஒன்றும் சொல்லமுடியாது” என்றார். துச்சாதனர் புரிந்துகொண்டு சினத்துடன் பீடத்தின் கைப்பிடியைத் தட்டியபடி எழுந்து “யார் அனுப்பியது அவரை? மூத்தவரை எழுப்ப முடியாது. நான் சொன்னதாகச் சொல்லும்” என்றார்.
மெல்லிய முனகலுடன் அரசர் விழித்துக்கொண்டு தாழ்ந்த குரலில் “வரச்சொல், இளையோனே” என்றார். “மூத்தவரே” என்று அழைத்துக்கொண்டு துச்சாதனர் அருகே ஓடினார். “வரச்சொல்… எனக்கு விடாயடங்க ஏதாவது கொடு… ஒருவாய் போதும்.” துச்சாதனர் கைகாட்ட செவிலியர் பழச்சாறுடன் வந்து அவருக்கு சிறுகரண்டியால் அள்ளி ஊட்டினர். மும்முறை அருந்திவிட்டு போதும் என அவர் தலையசைத்தார். அவர் வாயை துடைத்தபின் அவர்கள் அகன்றனர்.
நான் அரசரையே நோக்கிக்கொண்டு நின்றேன். அவரை அக்கோலத்தில் நான் எண்ணியிருக்கவே இல்லை. உடல் வற்றி உலர்ந்த வாழைமட்டை போலிருந்தது. இரு கைகளும் நரம்புகள் புடைத்திருக்க முழங்கையும் கணுக்கையும் எலும்பு முண்டுகள் எழுந்து இருபக்கமும் கிடந்தன. தொண்டைமுழை மிகப்பெரிதாக எழுந்து மெல்ல அசைந்தது. கன்னங்கள் ஒட்டி, பழுத்த பெரிய விழிகள் கொண்ட கண்கள் கருகிச்சுருங்கி, பற்கள் உதிர்ந்த வாயில் உதடுகள் உலர்ந்து, அவர் முகம் பாதிமட்கிய சடலம் போலிருந்தது. அப்படி எண்ணியமைக்காக நான் உளம் கூசினேன்.
குறடுகள் ஒலிக்க மைத்ரேயர் உள்ளே வந்தார். அவருடன் மாணவர்கள் கொண்டுவந்த சுவடிப்பேழைகளை இளையோர் வியப்புடனும் ஐயத்துடனும் நோக்கினர். அரசர் மெல்லிய குரலில் “வணங்குகிறேன், முனிவரே. பொறுத்தருளல் வேண்டும். கைகூப்பவோ தலைவணங்கவோ இயலாதவனாக இருக்கிறேன்” என்றார். மைத்ரேயர் அந்நிலையில் அரசர் இருப்பாரென்று எதிர்பார்த்திருக்கவில்லை. “அரசே” என திகைப்புடன் சொல்லி திரும்பி கனகரை பார்த்தார். “இன்று இதுதான் என் அவை… அமர்க!” என்றார் அரசர்.
மைத்ரேயர் மிகஎளிமையான உள்ளம்கொண்டவர் என்பதை நான் முன்னரே அறிந்திருந்தேன். அரசசூழ்ச்சிகளை அவர் அப்போதும் புரிந்துகொள்ளவில்லை. அமர்ந்தபடி “நான் அரசவை என்றே எண்ணியிருந்தேன். இங்கு நுழைந்தபோதுதான் மருத்துவநிலை என உணர்ந்தேன்… அப்போதுகூட தாங்கள் இங்கிருப்பதை என்னால் உய்த்துணர முடியவில்லை” என்றார். கனகர் “சினம் கொண்ட பிதாமகர் பீஷ்மரால் அரசர் தாக்கப்பட்டார். மூத்தோரின் அன்புக்கு நிகராகவே சினமும் இருக்கும் என்பார்கள். அவ்வாறே நிகழ்ந்தது” என்றார். “ஆம், அதைச் சொல்லி கேள்விப்பட்டேன். ஆனால் இத்தனை பெரிய அடி என என்னால் கணிக்கமுடியவில்லை. என்ன சொல்கிறார்கள் மருத்துவர்? எத்தனை காலம் இங்கே கிடக்கவேண்டியிருக்கும்?” என்றார்.
“இன்னும் சிலநாள்” என்றார் சுபாகு. “ஒருவேளை வாழ்நாள் முழுக்கவேகூட. இன்னும் என் உள்ளுறுப்புகள் குருதியுமிழ்வதை நிறுத்தவில்லை. மூச்சில் வலி மிகுந்துள்ளது. எனவே சொல் அனைத்தும் வலியே” என்றார் அரசர். அறியாது வழிந்த கண்ணீருடன் துச்சாதனர் இறைஞ்சக் கூப்பியது போல கைகளை கோத்துக்கொண்டார். கைகளை பல்லாயிரம் முறை அவ்வுணர்ச்சியுடன் கூப்பியிருப்பார். எனவே கண்ணீர் இயல்பாகவே கைகளை கூப்பச்செய்கிறது என எண்ணிக்கொண்டேன்.
மைத்ரேயர் சற்றுநேரம் என்ன பேசுவதென்று அறியாமல் கைகளை மடிமேல் கோத்தபடி அரசர் படுத்திருந்த மஞ்சத்தின் காலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். “தங்கள் அறவுரைகளை சொல்லலாம், முனிவரே” என்றார் அரசர். “இளையோனே, இங்கு அரசனுக்கு சொல்லளிக்கும் முனிவனாக வந்தேன். இப்போது பராசரரின் மாணவனாக, என் குலத்து இளையோனை ஆற்றுப்படுத்தும் முதியவனாக இதை சொல்கிறேன். நீ செல்லும் பாதை உகந்தது அல்ல. அது உனக்கு மட்டும் அழிவை அளிப்பதல்ல.”
“முனிவரே, உங்கள் பாதங்களை சென்னிசூடி நான் சொல்வதற்கொன்றே உள்ளது. நான் என் வழியை முழுமையாக முடிவு செய்துவிட்டேன்” என்றார் அரசர். வலியுடன் அவர் உடல் மெல்ல அதிர இருகைகளும் இழுத்துக்கொண்டன. மருத்துவர் இருவர் அருகே சென்று கைகளை மெல்லப்பற்றி நீவி தசையிழுபடலை சீரமைத்தனர். வலிமுனகலுடன் பற்களால் இதழ்களைக் கடித்து இறுக்கி கண்களை மூடினார். கழுத்துநரம்புகள் புடைத்து நெளிந்தன. கண்களிலிருந்து நீர் வழிந்து காதுகளை நோக்கி சொட்டியது.
“மைந்தா, பாரதவர்ஷத்தின் இன்றுள்ள அறவோரோ அரசரோ குடிமூத்தோரோ அன்னையரோ நீ செய்ததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சூதில்வென்று மண்ணைக் கவர்ந்தது இழிவு. பெண்ணை அவைமுன் நிறுத்தி இழிவுபடுத்தியது கீழ்மை. அவர்களை கானேக அனுப்பியது கொடுமை. ஒன்றை அறிந்துகொள், குடிகளால் ஏற்கப்படாத அரசனின் கோல் ஒருகணமும் நிலைத்து நிற்காது. நிலைக்காத கோல்கொண்ட அரசன் ஐயமும் பதற்றமும் கொண்டவனாகிறான். தன் அரியணையின் கால்களையே அவனால் நம்பமுடியாது. அவன் வாள் குருதியில் நனையத்தொடங்குகிறது.”
“நீ இப்போது ஆற்றிய பழிகளுக்காக மட்டும் நான் அஞ்சவில்லை. இதில் தொடங்கும் நீ இனி ஆற்றப்போகும் பெரும்பழிகளுக்காகவே பதறுகிறேன். ஆம், ஐயமே தேவையில்லை. பழியில் தொடங்கியது பழியையே வளர்க்கும். ஒருநாளும் நீ நிறைவுடன் நாடாளமுடியாது. வாழ்ந்தோமென எண்ணி விண்ணேகவும் முடியாது” மைத்ரேயர் சொன்னார். “இப்போதும் பிந்தவில்லை. நீ உன் தமையனை அழைத்துவந்து அவனுக்குரிய அரசை அளி. அந்த ஒரு செயல் வழியாக நீ அவனை எப்போதைக்குமாக வென்று செல்வாய். அறத்திலும் மறத்திலும் நீயே முதல்வன் என்றாவாய். கொடுப்பதனூடாக அடைவதைப்போல, பொறுப்பதனூடாக வெல்வதைப்போல அழியாத செல்வமும் பெருமையும் பிறிதில்லை. ஒருமுறை அதை சுவைத்துப்பார். உன் உள்ளம் மலரும். புதிய மானுடனாக இப்படுக்கையிலிருந்து நீ எழுவாய்…”
மெல்லிய முனகல்களுடன் அரசர் படுக்கையில் கிடந்தார். அசைவே இல்லாத உடல், ஆனால் அது துடித்துக்கொண்டிருந்தது. விலாவிலும் ஒட்டி உள்ளடங்கிய வயிற்றிலும் நரம்புகள் நெளிந்தன. தசைகள் விதிர்த்தன. “நீ மண்ணை விழைகிறாய். அது அரசனுக்குரிய இயல்பு. விழைவையே வேதம் சொல்கிறது. வென்றடைவதையே அது கொண்டாடுகிறது. ஆனால் விழைவுகள் அனைத்தும் இப்புவியில் மறுவிசைகளால் நிலைப்படுத்தப்பட்டுள்ளன. எல்லையின்மை என்பதே மானுடர்க்கில்லை. எல்லையின்மையையும் முழுமையையும் விழைபவர் தெய்வங்களை போருக்கு அழைக்கிறார்கள். அவர்கள் தெய்வங்களால் அழிக்கப்படுவார்கள்.”
“உன் எல்லையை அறிக! அது பாண்டவர்களே. பீமனும் அர்ஜுனனும் இருக்கையில் நீ நிகரிலாது பாரதவர்ஷத்தை ஆளமுடியாது. ஆகவே அவர்களை ஏற்றுக்கொள். மானுடனாக உன் வரையறைகளை வகுத்தவன் ஆவாய்” என்றார் மைத்ரேயர். அரசர் மெல்ல முனகியபடி தலையை மட்டும் அசைத்தார். பின்னர் “முனிவரே, நீங்கள் எத்தனை சொல்லெடுத்தாலும் இனி இப்பிறவியில் எனக்கு மறு எண்ணம் இல்லை” என்றார்.
சற்றே சினம்கொண்ட முனிவர் “என்னிடம் உன் முற்பிறவியை கணிக்கச் சொன்னார்கள். அதை நோக்கி உன் வாழ்க்கையை சொல்கிறேன். மைந்தா, உன் உள்ளம் இத்தனை உறுதிகொள்வது ஏன் என நீயே உணர்வாய். அது உன்னை நீயே மேலும் முழுமையாக காணச்செய்யும்” என்றார். அவர் தலையசைக்க மாணவர்கள் பேழைகளை எடுத்து வைத்தனர். மைத்ரேயர் “அரசரின் அனைத்துச் செய்திகளையும் முன்னரே பெற்றிருக்கிறேன். அவற்றுடன் நான் அறியவிரும்புவது ஒன்றே. அரசரின் கனவுகள் என்ன?” என்றார்.
அரசர் மறுமொழி சொல்லவில்லை. துச்சாதனர் சினத்துடன் ஏதோ சொல்ல வர சுபாகு அவரைத் தடுத்து “உத்தமரே, அரசரின் உடல்நிலையை தாங்களே காண்கிறீர்கள். பிறிதொருநாள் வருக!” என்றார். அதற்குள் அரசர் மெல்லிய குரலில் “காகங்கள்” என்றார். மைத்ரேயர் சுவடிகளை எடுத்து ஒன்றிலிருந்து ஒன்றுக்கென தாவிச்சென்றார். பின்பு நீள்மூச்சுடன் அவற்றை திருப்பிக்கொடுத்துவிட்டு எழுந்துகொண்டார். அவர் முகமும் உடலும் மாறிவிட்டிருந்தன. “மைந்தா, நீ யார் என்பதை அறிந்துகொண்டேன். இதுவே இறுதித்தருணம் உனக்கு. பிறிதொன்று அமையப்போவதில்லை.”
“ஆம், இது நான் வெற்றிகொண்டு நின்றிருக்கும் தருணம்” என்றார் அரசர். “இன்று பாரதவர்ஷத்தில் எனக்கு நிகரென எவருமில்லை. இப்படுக்கையிலிருந்து எழுவேன். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியென அமர்வேன்.” மைத்ரேயர் இதழ்களில் புன்னகை எழுந்தது. “இல்லை, நீ ஆளப்போவதில்லை. உன் எதிர்காலத்தையும் நான் பார்த்துவிட்டேன். மூடா, நீ ஆளப்போவதில்லை. பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி என ஒருநாளும் நீ அழைக்கப்படப் போவதில்லை. பதின்மூன்றாண்டுகாலம் கரந்து வாழப்போவது அவர்கள் அல்ல, நீதான்.”
உச்சவிசையுடன் உடலை உந்தி அரசர் பாதி எழுந்துவிட்டார். “பார்ப்போம். இதற்குமேல் என்ன பார்ப்போம்” என கூவியபடி வலக்கையால் தன் இடத்தொடையை ஓங்கித் தட்டினார். அப்படியே மல்லாந்து விழுந்து வலிப்புகொண்டு துடிக்கத் தொடங்கினார். மைத்ரேயர் சிவந்த முகத்துடன் கைநீட்டி ஓரடி முன்னால் வைத்து முழங்கிய குரலில் “மூடா, நீ தொடைபிளந்து கிடப்பதை நான் பார்த்துவிட்டேன். நீ பிறந்த கணம் முதல் இதோ இந்நகரில் தோன்றி உனக்காகக் காத்திருக்கிறது உன்னைக் கொல்லும் பெருங்கதாயுதம்” என்றார். பின்னர் திரும்பிப்பார்க்காமல் நடந்து வெளியேறினார்.