நான்காம் காடு : ஐதரேயம்
[ 1 ]
ஒற்றையடிப்பாதை நெடுங்காலத்திற்கு முன்னரே காலடிகள் படாமலாகி மறைந்துவிட்டிருந்தது. ஆகவே அதை விழிகளால் பார்க்கமுடியவில்லை. ஆனால் பாதையை மறந்து இயல்பாக நடக்கும்போது கால்கள் அதை கண்டடைந்தன. முதலில் குறும்புதர்களில் கால் சிக்கியும் கல்களில் இடறியும் அவர்கள் தடுமாறினாலும் விரைவிலேயே கால்களை நேரடியாகவே சித்தம் கட்டுப்படுத்தத் தொடங்கியது. அதன்பின் அவர்கள் வழியை எண்ணவில்லை.
கையில் மூங்கில்வில்லில் சிற்றம்புகளுடன் அர்ஜுனன் முன்னால் நடந்தான். அவனுக்குப் பின்னால் தருமனும் தொடர்ந்து திரௌபதியும் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து நகுல சகதேவர்கள் கைகளில் கூர்முனை பொருந்திய நீள்வேல்களுடன் சென்றனர். அவர்களுடன் இணைந்தும் காட்டுக்குள் சென்று கிளைகள் வழியாக மீண்டும் நடக்கும் மந்தையை பறந்து தொடரும் காகம் போல பீமன் சென்றான்.
ஐதரேயக் காடு பறவைகளின் ஓசைகளால் நிறைந்திருந்தது. அவை மிகப்பெரிய ஓர் உரையாடலில் ஈடுபட்டிருப்பவை போல என தருமன் எண்ணினார். ஒவ்வொரு பறவையென நோக்கினால் அவை இணைகளுக்காக ஏங்கின, குஞ்சுகளை ஆற்றுப்படுத்தின, எதிரிகளை அஞ்சின, அறைகூவின, கூடி உணவுண்ண அழைத்தன, உண்டபின் மகிழ்ந்தாடின. பறவைகள் அமர்ந்த ஒருமரம் பிறிதொன்றுடன் உரையாடியது. ஒரு குன்று மற்றொன்றுடன் பேசியது. முழு காடே விண்ணை நோக்கி பேசிக்கொண்டிருந்தது. தனிக்குரல்களைக் கேட்டு செவிமயங்குகையில் அவ்வோசை ஒருங்கிணைந்து ஒற்றைப்பெருக்கென்றாகி ஒரு சொல்லின் முடிவிலா ஒழுக்கென்று காட்டியது. அதில் மறைந்து பின்பு சித்தம் மீளும்போது தன்னருகே இருந்த சிறுபறவையின் ஒற்றைத்தனிக்குரலைக் கேட்டு தருமன் உடல் அதிர்ந்தார்.
துவைதக்காட்டிலிருந்து கிளம்பி காம்யகக் காட்டில் சிலநாட்கள் தங்கியிருந்தனர். அங்கே அவர்களுக்கு பிரஹஸ்பதி நீதியை கணாதரின் முதல்மாணவர் சப்தகர் கற்பித்தார். அதன் சுருக்கமான வடிவத்தை அரசர்களுக்குரிய வகையில் காம்பில்யத்தில் முன்பு தங்கியிருந்த அந்தணர் ஒருவர் துருபதனுக்குக் கற்பித்ததை திரௌபதி நினைவுகூர்ந்தாள். தாபகர் என்னும் அந்த அந்தணர் விழியற்றவர். கைக்கோல் என ஒரு குள்ளனை உடனழைத்துக்கொண்டு ஊர்கள்தோறும் செல்பவர். அவையில் நெறிநூல் உரைத்துப் பரிசில் பெற்றதும் அவர் “அரசே, உனக்கு மட்டும் என ஓர் அரசநெறிநூலை உரைக்கவிருக்கிறேன். கோல்கொண்டு அரசமரும் தகுதி அற்றவர்கள் அதை கேட்கலாகாது. இத்தொன்மையான நூல் வேதங்களுடன் பிறந்தது. வேத ரிஷியாகிய பிரஹஸ்பதியால் இயற்றப்பட்டது. அவரது மாணவர்களால் முழுதும் பயிலப்படுகிறது. அவர்கள் அறிவது காட்டுமதயானை. நான் சங்கிலி அணிந்த வேழத்தை உனக்கு அளிக்கிறேன்” என்றார். அன்றுமாலை அரசரின் வசந்த மண்டபத்தில் அமர்ந்து அந்நூலை உரைத்தார்.
“அரசே, பிறந்து பசித்து அழுது முலைநோக்கி உதடு குவிக்கும் கணம் முதல் இறுதி நீருக்காக கைகளை அசைத்து உதடுகளை நீட்டும் தருணம் வரை மானுடர் செயல்தொடரில் கட்டுண்டிருக்கிறார்கள் என்று அறிந்தவனே இப்புவியின் கணக்குகளை அவிழ்க்கும் முதல் எண்ணை கண்டடைந்தவன். தான் மேன்மையுறும் வழியையும் இழிவுறும் முறையையும் அறியாத உயிரென ஏதுமில்லை இவ்வுலகில். எனவே மானுடன் எங்கும் நோக்கவேண்டியதில்லை, தன்னுள் நோக்குவதே அனைத்துக்கும் விடையளிப்பது.”
தாபகர் சொன்னார் “தெய்வத்தையே அனைத்துக்கும் இழுப்பவன் மூடன். தெய்வமில்லை என அவனுடன் பேசப்புகுபவன் பெருமூடன். இங்கு ஆற்றுவன அனைத்தும் எதிர்வினை கொண்டவை என உணர்ந்தவனே அறிஞன். முதற்செயலின் மறுசெயலே மானுடனின் மறுகணம். ஒருதுளி முலையுண்டதுமே அன்னை எனும் உறவும், இனிமை எனும் சுவையும், பசி எனும் தேவையும், பால் எனும் பொருளும் உருவாகி வந்துவிடுகின்றன. பகையும் ஐயமும் அச்சமும் பிறக்கின்றன. இன்பம் பிறந்ததுமே துன்பம் உடன் தோன்றிவிடுகிறது.”
“வலைநடுவே இருக்கிறோம் என உணர்ந்தவனே உண்மையில் இருக்கிறான். பிறந்து இறந்து செயலாற்றி அவ்வலையைப் பின்னுவது தானும்தான் என்றுணர்ந்தவன் அறியத்தொடங்குகிறான். அறிதலும் வலைபின்னுவதே என்று கண்டவன் விடுதலைபெறுகிறான்” என்றார் தாபகர். “எனவே ஒவ்வொரு சொல்லையும் அதன் எதிர்ச்சொல் என எழுந்து சொல்வெளியெனப் பெருகப்போவது என்ன என்றுணர்ந்து சொல்க! ஒவ்வொரு செயலையும் எதிர்ச்செயல்நிரை என்ன என்றுணர்ந்து செய்க!”
“ஆம், எதிர்வருவது அறியமுடியாத காலப்பெருக்கில் உள்ளது. காலமே என்றான செயலெதிர்ச்செயல் என்னும் வலைப்பின்னலில் உள்ளது. ஆகவே அறியமுடியாமையே இங்கு எஞ்சுகிறது என்று உரைப்பவன் பேருண்மை ஒன்றை சொல்கிறான். ஆனால் அரசே, பேருண்மைகளைக்கொண்டு நூல்களை எழுதலாம். சொல்லெனச் சுருக்கி காட்டிலமர்ந்து ஊழ்கம் கொண்டு விண்ணேகலாம். அவை அரசனுக்கு உதவாது. அவை அரிய மணிகள். அணிகளெனச் சூடுதற்கே உரியவை. எளிய உண்மை சந்தையில் உணவாக மாறும், வழித்துணையாக உடன்வரும் நாணயம் போன்றது. அது நீ வாழும் காலத்தில் உன் விழியெட்டும் தொலைவுக்குள் நீ ஆற்றி பயன்கொய்யும் செயல்வட்டத்திற்குள் மட்டுமே பொருள்கொள்வது. உடைந்த உண்மைகளைப் போற்றுக! அவையே இவ்வுலகை ஆற்றியுள்ளன.”
“அறியமுடியாமையை பீடமாக்கி அறிவு நின்றுள்ளது. இவ்வலையின் கண்ணிப்பெருக்கு நீ அறியமுடியாதது. ஆனால் உன்னருகே உள்ள முதல்கண்ணியை நீ அறியமுடியும். அதன் அறியா எல்லையில் உள்ள கண்ணியும் அந்த முதற்கண்ணியின் தொடர்ச்சியே என்று உணர்க! வலையையே அறியமுடியும் என்பதனால் அதை அறிக! தேவையானவற்றை அறிந்தவன் ஆவாய்” தாபகர் பின்னர் சொல்லெண்ணி அவைகூடவும், விளைவறிந்து செயலாற்றவும் உதவும் பதினெட்டு நெறிகளை அவையில் எடுத்துரைத்தார்.
காம்யகத்தில் சப்தகர் பிரஹஸ்பதி நீதியின் மெய்ப்பொருளை நோக்கி சென்றார். “அரசே, இப்புடவி ஒரு இடமல்ல, ஒரு பொருளல்ல, ஒரு இருப்பல்ல. எனவே இதற்கு முதல்முடிவில்லை. வடிவம் இல்லை. முக்காலமென்றும் ஏதுமில்லை. இது ஒருநிகழ்வு. தன்னைத்தானே பின்னி விரிந்துகொண்டே இருப்பது. அப்பின்னலின் ஒரு கண்ணியில் நீங்கள் இருந்தால் அது உங்கள் உலகம். அங்கிருப்பவற்றுடன் தொடர்புள்ளவற்றால் ஆனது அதன் வடிவம். அங்கு நீங்கள் உணர்வது இருப்பு. அதுவே காலத்தை முன்பின் என வகுத்து உங்களுக்கு அளிக்கிறது.”
“இது இடமல்ல என்பதனால் மையம் என ஏதுமில்லை. பொருண்மை அல்ல என்பதனால் நிலை என ஏதுமில்லை. இருப்பல்ல என்பதனால் நோக்கமென ஏதுமில்லை. இந்நிகழ்வின் நெறியென்பது செயல்கள் முற்றிலும் நிகரான விளைவுகளாக மாறியே ஆகவேண்டும் என்பதே. ஏனென்றால் இது கூடுகிறதென்றாலும் குறைகிறதென்றாலும் அலகிலா காலப்பெருவெளியில் இது முன்னரே அழிந்துவிட்டிருக்கும். இது நீடிக்கிறதென்பதனாலேயே இது மூவா முதலா சுழற்சி என அறியலாம். செயலே காரணம், விளைவு அதன் காரியம். காரியம் அனைத்தும் பிறிதுக்குக் காரணம். காரியகாரண உருமாற்றமெனும் அலகிலாப் பெருந்தொடரையே இங்கு புடவியென நாம் அறிகிறோம். அதையே பிரஹஸ்பதியின் மெய்யியல் கர்மம் என்கிறது.”
“நம் ஒவ்வொரு காலத்துளியும் அடுத்த காலத்துளிக்குக் காரணம். நம் இக்கணத்து உடல் முந்தைய கணத்து உடலின் காரியம். கர்மத்தில் உள்ளன அனைத்தும். கர்மமே அனைத்தும். இச்சொற்களைக் கேட்ட நீங்கள் முந்தைய நீங்கள் அல்ல. ஒவ்வொன்றும் பறக்கும் பெரும்புயலை ஒரு கணமின்னலில் ஓவியமெனக் காண்பதே இப்புடவி என்று உணர்ந்தவன் விழிகொண்டவன். காரணம் காரியமென மாறும் என்னும் நெறியே மாறுதலே ஆன இப்புடவியின் மாறாமை என்றறிக! அரசே, கர்மத்தை அறிந்து கர்மமென உணர்பவனே தன்னையறிந்தவன்.”
“இப்பெரும் சுழற்பெருக்கிற்கு வெளியே இதை ஆக்கியதும் ஆட்டுவிப்பதும் அழிப்பதுமென ஏதுமில்லை. அவ்வாறு ஒன்றிருந்தால் அதன் காரணம் என்ன? அது காரணம் என்றால் அதன் காரணம் என்ன? அது வளர்கிறதென்றால் மறையவும்கூடும். அழியாதது எனில் செயலற்றது. செயலாற்றுகிறது எனில் அதுவும் கர்மத்திற்குள் அமைந்ததே. கர்மத்திற்குள் அமைந்தது கர்மத்தை ஆக்கி ஆட்டி அழிப்பது அல்ல. இங்கு இவ்வண்ணம் இருக்கும் இது என்றுமுள்ளது. இது சுழற்சி. எனவே இதன் இறுதியே தொடக்கமும் ஆகும். எனவே இதற்கு முழுமுதற்காரணம் என ஒன்றில்லை.”
காம்யகக் காட்டில் ஒன்பது மாதகாலம் தங்கி பிரஹஸ்பதி சூத்திரங்களைக் கற்றுத்தேர்ந்தார் தருமன். அவற்றுக்கு உரையென எழுதப்பட்ட பன்னிரு நூல்களையும் பாடம் கேட்டார். ஒருநாள் சொல்லாடுகையில் சப்தகரிடம் கேட்டார் “அனைத்தும் காரணம் கொண்ட காரியங்களே என்றால் பிரஹஸ்பதியின் கர்மவாதத்திற்குக் காரணமாக அமைந்தது எது?” சப்தகர் சிரித்து “உணவு உடலாக மாறுவதைக் கண்ட மூதாதை வேடர்களாக இருக்கலாம்” என்றார். பின்பு “உண்மையில் அதை தொல்கர்மவாதம் என்றே சொல்வதுண்டு. பழங்குடிகள் எதுவும் அழிவதில்லை என்று எண்ணுகிறார்கள். ஒவ்வொன்றும் இன்னொன்றாக ஆகிக்கொண்டிருக்கிறது. இறந்தவர்கள் மண்ணுக்குள் புகுந்து கருவாகி உடல் திறந்து திரும்பி வருகிறார்கள் என்பதே அவர்களின் முதல்மதம்.”
தருமன் “பிரஹஸ்பதிய மெய்யியலின் காரியம் எது?” என்றார். “இது விதையல்ல, ஒற்றைமுளையென எழ. இது அனல். தொட்டதையெல்லாம் அனலாக்கிக்கொண்டிருக்கிறது. வைதிகமரபிலுள்ள அனைத்துக் கர்மவாதங்களும் சார்வாகத்திற்கு கடன்பட்டவைதான். ஆயினும் சூரியனை முதற்காரணமாக முன்வைத்து புவியைத் தொகுக்கும் வைதிகமரபான ஐதரேயம் சார்வாகத்திற்கு அணுக்கமானது. சார்வாகமளவுக்கே தொன்மையானது” என்றார் சப்தகர்.
“சுக்ல யஜுர்வேதத்தை முதனூலாகக் கொண்ட ஐதரேய மெய்மரபின் அறிவு நூறு பிராமணங்களாகவும் நூறு ஆரண்யகங்களாகவும் தொகுக்கப்பட்டு இன்று கற்பிக்கப்படுகிறது. ஐதரேயமே மூன்று உள்மரபுகள் கொண்ட பெரும்போக்கு என்கிறார்கள் அறிஞர்கள். சடங்குகளுடன் நிற்பவர்கள் ஐதரேயப் பிராமணங்களை கடப்பதில்லை. ஐதரேய ஆரண்யகங்களை உதறி முன்செல்லும் மெய்யுசாவிகளின் ஒரு புதுமரபும் அதற்குள் உள்ளது” என்று சொன்ன சப்தகர் “இந்த ஐயம் எழுந்தமையாலேயே நீங்கள் ஐதரேயக் காட்டுக்குச் செல்லுங்கள். அங்கு நீங்கள் தேடுவது உங்களைத் தேடிவருவதாக!” என வாழ்த்தினார்.
ஐந்துநாட்களுக்குப்பின் ஐதரேயக்காட்டுக்குச் செல்லும் வழியைத் தெரிந்துகொண்டு அவர்கள் காம்யகத்திலிருந்து கிளம்பினர். வழியில் இல்லறத்தோர் வாழும் ஊர்களுக்குள் நுழையாமல் காடுகள் வழியாகவே சென்றனர். வேறுவழியில்லாமல் சில ஊர்களைக் கடக்க நேர்கையில் இருள்பெருகி விழிகள் அனைத்தும் மூடியபின்னரே பொழுதுதேர்ந்தனர். வழியில் அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளவில்லை. திரௌபதி ஆழ்ந்த அமைதிக்குள் சென்றுவிட்டிருந்தாள். சிலவேளை அவள் அவர்களுடன் இருப்பதையே அவரால் உணரமுடியவில்லை. அர்ஜுனன் விழிமட்டுமாக மாறிவிட்டிருந்தான். நகுலனும் சகதேவனும் மட்டும் ஒருவருக்கொருவர் மெல்லிய குரலில் உரையாடிக்கொண்டனர்.
பீமன் அகவியும் கூவியும் குழறியும் பிளிறியும் முரண்டும் மூளியும் காட்டுயிர்களுடன் உரையாடிக்கொண்டே வந்தான். அவன் தலைக்குமேல் ஆள்காட்டிக்குருவி எப்போதும் பறந்தது. பறவைக்கூட்டங்கள் நகைத்தபடி அவனைச் சூழ்ந்து சிறகடித்தன. குரங்குகள் அவனை எல்லையில் எதிர்கொண்டு எல்லைவரை கொண்டு சேர்த்தன. அவன் அழைப்பை ஏற்று கானுலாவிய தனிக்களிறு ஒன்று தேடிவந்தது. அதன்மேல் ஏறிச்சென்று தோள்நிறைய பலாப்பழங்களுடன் திரும்பிவந்தான். உச்சிப்பாறைமேல் தொற்றி ஏறி தேன்கூடு கொண்டுவந்தான். வழியில் தலைநீட்டிய மலைப்பாம்பொன்றை எடுத்து தோள்களில் மாலையென அணிந்துகொண்டான். அவனை நோக்கி புன்னகைத்தபடி தருமன் நடந்தார்.
ஐதரேயக்காட்டை தொலைவில் வேள்விப்புகை எழக்கண்டதுமே அவர்கள் உணர்ந்தனர். அதை இலக்காக்கி அவர்கள் சென்றபோது எதிரே வேதமாணவர்கள் குழுவாக வந்தனர். தாடியும் மீசையும் அடர்ந்து பழுத்து மங்கிய மரவுரி அணிந்து புழுதிமூடி எதிரே வந்த அவர்களை முனிவர்கள் என்றே அவர்கள் எண்ணினர். அர்ஜுனன் அவர்கள் எவரென்று கேட்டான். “சதபதபிராமணத்தை கற்க வந்தவர்கள். ஜைமினியின் சொல்மரபைச் சேர்ந்தவர்கள்” என்றனர்.
அவர்களிடம் தருமன் வழி உசாவினார். “நேர் எதிரே தெரியும் உயர்ந்த பாறையே சதபதம் எனப்படுகிறது. அதிலிருந்து விழும் சிற்றருவியின் கரையில் உள்ளது ஐதரேயக் கல்விச்சாலைகளின் தலைநிலை. அங்கே அக்குருமரபின் நூற்றுப்பதினேழாவது ஆசிரியரான திவாகரர் அமர்ந்திருக்கிறார். ஆயிரத்தெட்டு மாணவர்களும் எழுபத்தாறு ஆசிரியர்களும் அங்குள்ளனர். வேள்விப்புகையையும் சதபதமுடியையும் நோக்கியே நீங்கள் அங்கே சென்றடைந்துவிடமுடியும்” என்றார் அவர்களில் முதலில் வந்தவர்.
அங்கிருந்து பாதை தெளிவான அடையாளங்களுடன் இருந்தது. அவர்கள் அணுகும்தோறும் சதபதசிருங்கம் அமுதகலம் போல மேலெழுந்து வந்தது. அதன் உருண்டபாறைமுடிமேல் நின்றிருந்த பேராலமரத்தின் வேர்கள் விரல்கள்போல மாறி கரும்பாறையுருளையை கவ்வியிருந்தன. அருவியொலி காற்றிலேறி வந்து செவிதொட்டு மறைந்தது. அவர்கள் அந்திவெளிச்சம் அணையத்தொடங்கியபோதே ஐதரேயக் கல்விச்சாலையை அடைந்தனர். தொலைவில் வேதம் எழத்தொடங்கிவிட்டிருந்தது. கைகளைக் கூப்பியபடி தருமன் அதைநோக்கி சென்றார்.
[ 2 ]
அப்க முனிவரின் மைந்தரான விசாலர் தன் பதின்மூன்று மனைவியரில் பிறந்த பதினெட்டு மைந்தர்களாகிய மாணவர்களுடன் காட்டிலிருந்து வெளிவந்து அருகிலிருந்த மகிபாலம் என்னும் ஊருக்குள் நுழைந்தபோது எதிரே மகிதை என்னும் குயவப்பெண் குடத்தில் நீருடன் நடந்துவந்தாள். அவளை விலகிச் செல்லும்படி கைகாட்டிவிட்டு விசாலர் அவருக்கே இயல்பான உரத்த குரலில் வேதமெய்ப்பொருளை விளக்கிக்கொண்டு நடந்தார். “புடவியை நாம் உருவாக்கி எடுக்கிறோமென்பதில் ஐயமில்லை. உருவாக்கியதைக் கடந்து உண்மையை நோக்கிச் செல்வதே கடினம். மாணவர்களே, அறிஞன் அவனே உருவாக்கிய அறிதல்களினால் சிறையிடப்பட்டிருக்கிறான்” என்றார்.
குடத்துடன் ஒதுங்கி புதருக்குள் நின்ற மகிதை “அந்தணரே, சுழற்சியினால் உருவான எதுவும் சுழற்சியால் அழியுமாறும் ஆகும்” என்றாள். “சீ, விலகு! குயவப்பெண்ணுக்குரியதல்ல வேதமெய்ப்பொருள்” என்று ஒரு மாணவன் அவளை விலக்கிவிட்டான். அவர்கள் பேசியபடி முன்னால் சென்றனர். “விலங்குகள் வாஸனையாலும், மானுடர் நினைவுகளாலும், அறிஞர் சொற்களாலும், முனிவர் இருத்தலுணர்வாலும், தெய்வங்கள் சடங்குகளாலும் சிறையிடப்பட்டிருக்கிறார்கள். மாணவர்களே, பிரம்மம் தன் அறியமுடியாமையின் கூண்டுக்குள் அடைபட்டுள்ளது” என்றார் விசாலர்.
ஆனால் அவள் சொன்ன அச்சொல் அவரது உள்ளத்தில் நீடித்துக்கொண்டே இருந்தது. மிக எளிய பெண், இளையவளும்கூட. அவர்கள் பேசிக்கொண்டிருந்த எதையும் அவள் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை. போகிறபோக்கில் அவளறிந்த எதையோ சொன்னாள். ஆனால் அச்சொல் அக்கணம் எழுவதற்கு ஏதோ ஆணையிருந்தாகவேண்டும். அவள் சொன்னதென்ன? சுழற்சியைப்பற்றி. அதைப்பற்றித்தானே அவரும் பேசிக்கொண்டிருந்தார். “மஹத் சுருங்கி அகங்காரமாகிறது. அகங்காரம் முனைகொண்டு சித்தம். சித்தம் அலைகொண்டு புத்தி. புத்தி புலன்களென ஐந்து முகம் கொள்கிறது. புலன்கள் புடவியை சமைக்கின்றன” என்றார் விசாலர்.
“அறியமுடிவதையே அறிவெனக் கொள்கிறோம் என்னும் பெருஞ்சிறையிலிருந்து எப்போதேனும் விடுதலை கொள்ளுமா மானுடம்? அறியேன். இக்கணம் இதைச் சொல்கையில் இதுகாறும் காடமர்ந்து தவம்செய்தவர்களை, உடலுருகி சித்தமென எரிந்து அணைந்தவர்களை, அறிந்தறிந்துசென்று அறியாமையைக் கண்டவர்களை, எஞ்சாது எய்த எண்ணி எய்தினோம் என்று எஞ்சியவர்களை எண்ணி என் அகம் உருகுகிறது. காற்றை விழுதெனப்பற்றி விண்ணேற முயல்பவர்கள்தானா மானுடம் கண்ட மெய்யுசாவிகள் அனைவருமே என எண்ணி திகைப்படைகிறேன்” என்றார்.
அன்று அச்சிற்றூரின் சாவடியில் அவர்கள் தங்கினர். ஊர்மக்கள் கொண்டுவந்து அளித்த அரிசியை கீரைகளுடன் கலந்து அமுதாக்கி மாணவர்கள் பரிமாறினர். அதை உண்டபின் குளிர்ந்த கருங்கல்லில் புழுதியை வீசியகற்றிவிட்டு உடலோய்ந்து படுத்துக்கொண்டார் விசாலர். அறியா ஆழத்திற்குள் சென்றுகொண்டிருந்தபோது அந்தக் குயவப்பெண்ணின் குரலைக் கேட்டார். பின்பு துயில்கலைந்து விழித்துக் கொண்டபோது மெல்லிய ரீங்காரமாக இருந்தது உலகோசை. கையூன்றி புரண்டு காட்சிவெளியை நோக்கினார். அது மிகமெல்ல பெருவட்டமாக அவரைச் சூழ்ந்து ஓடிக்கொண்டிருந்தது. அதன் மையமென இருந்தன அவர் விழிகள்.
எழுந்து மேலாடையைச் சீரமைத்து ஓசையில்லாத காலடிகளுடன் நடந்தார். அந்தப் பெண் குடத்துடன் ஒதுங்கி நின்ற மரத்தருகே வந்தார். அப்பால் அவர்கள் கடந்து வந்த சிற்றாறு இருந்தது. அதிலிருந்து அவள் தண்ணீர் மொண்டுசென்ற நீர்த்தடம் அப்போதும் இருந்ததைக் கண்டு அதை பின்தொடர்ந்து சென்றார். குட்டைப்புதர்களினூடாகச் சென்ற ஒற்றையடிப்பாதையில் நடந்து தாழ்ந்த புற்கூரைகொண்ட குயவனின் குடிலை சென்றடைந்தார். அதைச்சுற்றி களிமண் குவைகளும் விறகுக்குவியல்களும் இருந்தன. கன்றுகளுடன் பசுக்கள் நின்றுகொண்டிருந்தன.
அப்போது மகிதை சக்கரத்தில் களிமண் வைத்துச் சுழற்றி பானை வனைந்துகொண்டிருந்தாள். அவரது காலடியோசை கேட்டு ஒரு பசு எழுப்பிய குரலை அவள் கேட்டாள். எழுந்து குனிந்து கூரைமூங்கிலில் பற்றியபடி அவரை நோக்கினாள். அந்தணமுனிவர் தன் இல்லம் வந்தது அவளுக்கு எந்த எழுச்சியையும் ஏற்படுத்தவில்லை என்பதை அவர் கண்டார். மிக இயல்பான புன்னகையுடன் அவள் இறங்கி அருகே வந்து “என் சிற்றிலுக்கு வருக, அந்தணரே!” என்று வரவேற்றாள். “படைப்பு நிகழும் இடம்” என்றார் விசாலர். “ஆம், அமர்க…” என்று அவள் ஒரு மணைப்பலகையை போட்டாள். அவர் அமர்ந்ததும் குடிலுக்குள் நுழைந்து மரத்தாலத்தில் கனிகளுடன் திரும்பி வந்து அவர் அருகே வைத்தாள். “அருந்துக, இது என் குடியின் கொடை” என்றாள். அவர் அக்கனிகளைத் தொட்டு வாழ்த்தியபின் ஒரு அத்திக்கனியை எடுத்து உண்டார்.
“சொல், நீ காலையில் எதைச் சொன்னாய்?” என்றார். “நீங்கள் புடவி உருவாவதைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தீர்கள். இது பெரும் சுழற்சியால் மட்டுமே உருவாகிவரமுடியும்” என்றாள். “ஏன் அது சுழற்சியாக இருக்கவேண்டும்?” என்றார். “முடிவிலாத அசைவு எதுவும் சுழற்சியே. எங்கும் செல்லாது தன்னைத்தான் நிகழ்த்திக்கொண்டிருக்கும் செலவு அது” என்றாள். வியந்து அவளை நோக்கினார். உடலெங்கும் புழுதியும் முழங்கைவரை களிச்சேறும் இருந்தன. குழல்கற்றைகள் கலைந்து கன்னத்தில் நிழலாடப் பறந்தன. “நீ என்ன கற்றிருக்கிறாய்?” என்றார்
“நான் எதையும் கற்றதில்லை, முனிவரே” என்றாள். “எந்தையுடன் பேசிக்கொண்டிருப்பதே என் கல்வி. அவர் களிமண் எடுக்கவும் விறகு சேர்க்கவும் பானை விற்கவும் செல்லும்போது நானும் செல்வேன். கண்டதையும் கேட்டதையும் என் எண்ணத்தால் விரித்தெடுத்துக்கொள்வேன்.” பெருமூச்சுடன் விசாலர் “நீ இன்றுகாலை சொன்னதற்கென்ன பொருள்?” என்றார். அவள் குயவர் சக்கரத்தருகே சென்றமர்ந்தாள். அங்கே பாதியுருவான குடம் ஒன்றிருந்தது. சக்கரத்தை வலக்கையால் இடவலமாகச் சுற்றி விரலால் அதன் விளிம்பை தொட்டாள். அவள் கையில் மையெனக் குழைந்து சரடென இழைந்து மெல்ல அது உருக்கொண்டது.
“மெல்லிய தொடுகையை அதுவே பெருக்கிக்கொள்கிறது. ஏனென்றால் அது உருவெடுக்க விழைகிறது” என்று மகிதை சொன்னாள். “அதைவிட மெல்லிய தொடுகையை இவ்வாழிக்கு அளிக்கிறேன். அது சுழல விரும்புகிறது. ஏனென்றால் சுழற்சியே பொருள்களின் இயல்பான அசைவு. இப்புவியில் இருக்கும் அனைத்து அசைவுகளும் ஏதேனும் சுழற்சியின் பகுதிகளே. இதோ விழிநோக்கும் அனைத்துக் கிளைகளும் சுழன்றுகொண்டிருக்கிறன. காற்றிலேறும் அத்தனை தூசிப்பருக்களும் சுழல்கின்றன. இங்கு கலமென குடமென வட்டை என கும்பா என நிறைந்திருக்கும் அத்தனை பொருட்களும் அந்த சுழற்சியின் வடிவங்கள்தான்.”
அவள் தன் இடக்கையால் அந்த ஆழியை மறுதிசை நோக்கி திருப்பினாள். அவள் கை அங்கேயே இருந்தது. மெல்ல குடம் களிமண்ணாக மீண்டது. சற்றுமுன் உருக்கொண்டு அங்கிருந்த ஒன்று கண்ணெதிரே வானில் மூழ்கி இன்மை என்றாவதை அவர் திகைப்புடன் நோக்கி அமர்ந்திருந்தார். “இதுவும் சுழற்சியே. இச்சுழற்சியை நீட்டினால் இக்களிமண் மறுதிசையில் மீண்டும் குடமாகும்” என்றாள் மகிதை.
அவளை தன்னுடன் அழைத்துக்கொண்டு விசாலர் தன் கல்விநிலைக்கு மீண்டார். அவருடைய பதினான்காவது மனைவியாக அவள் ஆனாள். அவள் பிறந்தெழாக் குலத்தோள் என்பதனால் அவளை இதரை என்று பிறர் அழைத்தனர். அவளுக்குப் பிறந்த மைந்தன் மகிதாசன் என அழைக்கப்பட்டான். தாசன் என்னும் பெயரே அவனை பிற மைந்தரிடமிருந்து முழுமையாக விலக்கியது. அவன் உடலில் சேறு இல்லையென்றாலும் மகி என்னும் சொல்லாக அவன் பேருடன் எப்போதும் மண் இருந்தது.
கருவிலேயே மகிதாசன் வேதம் கற்றான். மழலையென முதற்சொல்லையே வேதமென உரைத்தான். சொல்லறியும்போதே வேள்விப்பந்தலில் அமர்ந்து கொண்டான். ஆயினும் அங்கே அயலவனாகவே இருந்தான். ஒருநாள் தந்தைக்கு வேள்விக்குரிய கலங்களை அவன் தூய்மைப்படுத்திக்கொண்டிருக்கையில் நெய்ப்பிசுக்கேறிய வெண்கலக் கலத்தை தரையிலிருந்து மண் அள்ளிப்பூசி துலக்கினான். விசாலருக்கு அந்தணப்பெண்ணில் பிறந்த கிருபன் என்னும் மைந்தன் அவனை நோக்கி சினந்து “மண்ணை அள்ளித் துலக்கி உன் குலத்தைக் காட்டிவிட்டாய். எழுந்து விலகு, இழிந்தோனே” என்றான்.
“நான் வேதமெய்யறிவால் எவருக்கும் இளைத்தவன் அல்ல” என்று மகிதாசன் சொன்னான். “வேதம் ஒவ்வொன்றிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டவனுக்குரியது. நீ உன் பெயர்போலவே மண்ணுக்கு அடிமை…” என்றான் கிருபன். பிற மைந்தர் அவனை நோக்கி நகைத்தனர். கண்ணீருடன் விலகிச்சென்ற மகிதாசன் அதை தன் தந்தையிடம் சொல்ல தருணம் நோக்கி இருந்தான். அன்றுமாலை நூலாய்வு முடிந்து தந்தை மைந்தருடன் விளையாடுவதைக் கண்டு அருகணைந்தான். கிருபனையும் பிறரையும் விசாலர் தன் மடிமேல் வைத்து கொஞ்சுவதைக் கண்டான். தன்னை ஒருநாளும் அவ்வாறு அவர் குலவியதில்லை என்று உணர்ந்ததும் அவன் உடல் பதறத்தொடங்கியது. கண்ணீருடன் அங்கிருந்து விலகிச் சென்றான்.
அன்னை அவனை ஆறுதல்சொல்லி அணைத்துக்கொண்டாள். “நான் மண்ணுக்கு அடிமையா?” என்று மைந்தன் வினவ “மானுட உடல்கள் அனைத்தும் மண்ணுக்கு அடிமையே. கற்றவனின் சித்தம் மட்டுமே விடுதலைகொள்வது” என்று மகிதை சொன்னாள். அவனை அழைத்துச்சென்று களிமண்ணில் ஓர் அன்னையுருவை செய்தாள். மேலிரு கைகளிலும் மலரும் அமுதகலமும் ஏந்தி கீழ் இரு கைகளாலும் ஆழி ஒன்றைச் சுழற்றியபடி அமர்ந்திருந்த அவ்வன்னைவடிவத்தை சுட்டிக்காட்டி “மைந்தா, இதுவே உன் குடித்தெய்வமாகிய அன்னை மகி. இவளை வணங்குக!” என்றாள்.
வணங்கி நின்ற மைந்தனிடம் “அனைத்துயிரையும் ஆக்குபவள். அமுதூட்டி வளர்ப்பவள். அழித்து உண்டு பசியாறுபவள். அளவிலா பொறுமைகொண்டவள். அனலை உள்கரந்தவள். அனைத்துத் தன்னுணர்வுகளாலும் அறியப்படும் மகத் இவளே. அகங்காரமாகி, அறிவாகி, உணர்வாகி, ஐம்புலனாகி நிற்பவள். இவளை வணங்குக!” என்றாள். “அன்னையை அணுகியிரு. முட்டிமுட்டி அவள் பாலைக்குடி. அன்னை அளவுக்குமேல் அமுதூட்டுவதில்லை. ஒருநாள் உன்னை அவள் விலக்கி இனி நீ என்னவன் அல்ல, செல் என்பாள். அன்று நீ விடுதலை கொள்வாய்” என்றாள். அன்னையை வணங்கி அச்சிறிய சிலையை கையிலெடுத்துக்கொண்டு சிறுவன் தந்தையின் காட்டிலிருந்து விலகிச்சென்றான்.
பன்னிரண்டு ஆண்டுகாலம் மகிதாசன் தனித்த குடில் ஒன்றில் குயவனாக வாழ்ந்தான். கலம்செய்து விற்று அப்பொருள் கொண்டு தவம்செய்தான். பின்பு மெல்லிய புகைத்தாடியும் சுடர்கொண்ட கண்களும் மெலிந்த கரிய உடலும் கொண்ட இளைஞனாக தன் தந்தை வாழ்ந்த காட்டுக்குச் சென்றான். முதிய விசாலர் தன் மைந்தர்களான மாணவர்களுக்கு வேதமெய்ப்பொருளை சொல்லிக்கொண்டிருந்தார். “பிரம்மத்தை அறியக்கூடுவதில்லை என்பதே அதைப்பற்றிய முதல் அறிவென்று அறிக! ஏனென்றால் அறிந்ததுமே அது அறிவென்றாகிறது. எல்லைக்குட்பட்டதாகிறது. அலகிலியான அது அப்படி தன்னை அடைத்துக்கொள்வதில்லை.”
அப்போது கையில் ஒரு குடத்துடன் அவர் கல்விச்சாலை முன்வந்து நின்றான் மகிதாசன். அவனைக் கண்டதுமே அடையாளம் கொண்ட விசாலர் திகைப்புடன் எழுந்தார். “ஆசிரியரே, உங்களுக்கு என் ஆசிரியக்கொடையென ஒன்றை கொண்டுவந்தேன். நிகரற்றது, முடிவிலாதது. விசும்பு” என அக்குடத்தை காட்டினான். “இதற்குள் நிறைந்துள்ள விசும்பைப் பெற்றுக்கொண்டு என்னை வாழ்த்துங்கள்!” அக்குடத்தை அவர் காலடியில் வைத்தான். அவர் அவன் சொல்வதென்ன என்று புரிந்துகொண்டார். மெல்லிய உடல்நடுக்கத்துடன் நோக்கி நின்றார்.
சினம் கொண்ட கிருபன் வெளியே வந்து கைநீட்டி “மூடா, உன் குடத்தில் அடங்குவதா விண்ணகம்? ஆணவத்திற்கு எல்லை இல்லையா?” என்றான். “அவ்வாறென்றால் இக்குடத்திற்குள் இருப்பதென்ன?” என்று மகிதாசன் கேட்டான். “எங்குமுளது விசும்பு என்றால் இது விசும்பே.” மூத்தமாணவனாகிய சூக்தன் “இது வானென்றால் வெளியே இருப்பது என்ன?” என்றான். “அதுவும் வானே. குடத்தில் அள்ளப்பட்டமையால் இது குடவானம். வெளியே இருப்பதை விரிவானம் என்று சொல்லுங்கள். சொல்வதுதான் பொருளாகிறது.”
விசாலர் கைகளைக் கூப்பியபடி அணுகி தனயன் முன் கால்மடித்து மண்டியிட்டு தளர்ந்த குரலில் “ஆசிரியனே, அழியாத மெய்யறிவை எனக்கு அருள்க!” என்றார். அவரது மாணவர்கள் மெய்விதிர்த்து அதை நோக்கி நின்றனர். விசாலரின் நெற்றிப்பொட்டில் கைவைத்து வாழ்த்தினான் மகிதாசன். அவர் தலையை கைவளைத்து காதில் அப்பெருஞ்சொல்லை சொன்னான். “பிரக்ஞையே பிரம்மம்.”
ஐதரேயப் பெருங்காட்டில் திவாகரர் தன் கல்விச்சாலையில் ஆசிரியரின் புலித்தோலிட்ட பீடத்தில் அமர்ந்து சொன்னார். “இதரையின் மைந்தர் என்பதனால் மகிதாசன் ஐதரேயர் எனப்பட்டார். அவரது மெய்யறிவு இங்கு கிளைத்துத் தழைத்தமையால் இது ஐதரேயக்காடு எனப்பட்டது. பிராமணங்களாகவும் ஆரண்யகங்களாகவும் தொகுக்கப்பட்ட ஐதரேய மெய்யியலின் முதல் பெருஞ்சொல் அதுவே.” அவரது மாணவர்கள் வண்டுகள் இணைந்த ரீங்காரம் போல அதை முழங்கினர்.