ஜெ,
ஞானக்கூத்தன்ல் குறித்த உங்கள் குறிப்பை வாசித்தேன். அவரைப்பற்றிய அஞ்சலிக்கட்டுரைகளில் அபிலாஷ் எழுதிய இக்குறிப்பை வாசித்தேன்.
=====================================================================
ஞானக்கூத்தனுக்கு அஞ்சலி: அபிலாஷ்
ஞானக்கூட்டத்துக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.
நான் நவீன கவிதையை படிக்க துவங்கிய காலத்தில் நண்பர்கள் ஞானக்கூத்தனை சிலாகித்து பாராட்டுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் நான் அவரை அப்போது படிக்க தவறவிட்டேன். ஆங்கில இலக்கிய படிப்பு எனக்கு பல நவீன ஐரோப்பிய கவிஞர்களை அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு நான் அப்பின்புலத்தில் தமிழின் நவீன கவிஞர்களை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இவர்களுக்கு பிறகு தான் ஞானக்கூட்டத்தின் மொத்த கவிதைத் தொகுப்பை எடுத்து வாசித்தேன். இயல்பாகவே எனக்கு ஏமாற்றமாக இருந்தது.
எனக்கு ஞானக்கூத்தன் ஒரு நவீன கவிஞரே அல்ல எனப் பட்டது. நவீன கவிதையின் வளர்ச்சிக்கு வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமானுக்கு கூட ஒரு பங்கு உண்டென சொல்வேன். கலீல் கிப்ரான் கூட நவீன கவிதை வாசகனுக்கு முக்கியமானவர் தான். ஆனால் ஞானக்கூத்தன் இவர்களுக்கு வெகுபின்னால் இருக்கிறார். அவர் எழுதியவை ஒருவித செவ்வியல் தனிப்பாடல்கள். சற்றே லகுவான நேரடி மொழியில் எழுதப்பட்ட மரபுக் கவிதைகள். அவரது பகடியும் எனக்கு வெகுசிலாக்கியமாய் பட்டதில்லை.
அதன் பிறகு அவர் கவிதையியல் பற்றி எழுதின நூலை படித்தேன். சம்ஸ்கிருத ரசா கோட்பாட்டை கவிதையியலாக மாற்றும் முயற்சி. எனக்கு அந்நூல் அதிருப்தி அளித்தது.
எப்போதுமே ஒரு எழுத்தாளனுக்குள் முரண்பட்ட பண்பாடுகளின் குறுக்கீடு நிகழ வேண்டும். வாசிப்பு அல்லது வாழ்க்கை மூலமாக. உதாரணமாய் ரொம்ப மரபார்ந்த ஆள் இடதுசாரி சிந்தனைகளின் ஆட்பட்டாலோ அல்லது இறுக்கமான நவீன மனம் ஒன்றை மரபார்ந்த இலக்கியம் அல்லது மதம் நோக்கி ஈர்க்கப்பட்டாலோ அல்லது அசோகமித்திரனுக்கு நிகழ்ந்தது போல் ஒரு எதார்த்த வாழ்வு தமக்குள் இருக்கும் லட்சியவாதங்களை முறியடித்தாலோ இது நிகழலாம். அப்போது படைப்பூக்கம் கிளர்ச்சி பெறும். புது சிந்தனைகள் தோன்றும். இதற்கு மற்றொரு சிறந்த உதாரணம் புதுமைப்பித்தன். ஞானக்கூத்தனுக்குள் இது நிகழவில்லை என தோன்றுகிறது. பட்டுப்புழுவாகமே வாழ்ந்து விட்டார். அல்லது தான் சந்தித்த எதிர்நிலைகளை அவர் எளிய பகடிகள் மூலம் கடந்து சென்று விட்டார். அப்படியான பகடிகளில் நான் ரசித்தது
நாய்
=====
காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள் நடவாத தெருவில் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன
ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குரைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?
:
இதில் இந்த “பார்ப்பான்” என்ற சொல்லின் அரசியல் பற்றி நிறைய விமர்சிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் இன்றைய மீடியா கூச்சல் யுகத்துக்கு பொருத்தமான கவிதை தான் இது. அதே நேரம் இந்த பகடியும் ஆழமான ஒன்றல்ல. அதை விட எனக்கு சு.ராவின் இக்கவிதை சிறந்த பகடி என தோன்றுகிறது.
எனக்குத் தெரிந்த பூனை ஒன்று
நேற்று இறந்தது
சவ அடக்கத்துக்கு
நாங்கள் போயிருந்தோம்
என் நண்பனின் மனைவி
அழத் தொடங்கியபோது
என் மனைவியும் அழுதாள்
குழந்தைகள் அழுதன
சில வார்த்தைகள் பேசும்படி
என் நண்பன் என்னைக் கேட்டுக்கொண்டான்
நான் பேசத் தொடங்கினேன்:
‘இந்தப் பூனையின் மியாவ் மியாவ்
வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து
வித்தியாசமானது
மேலும்…
இக்கவிதையில் பகடி வெறும் வெட்டி சர்ச்சை பற்றியல்ல ஒரு பண்பாட்டின் அபத்தமான பேச்சு மரபை பற்றியது. இதிலுள்ள நுணுக்கமான அபத்தம் ஞானக்கூத்தனில் இல்லை
========================================================================
ஞானக்கூத்தனைப்பற்றிய இந்தக்கருத்தை எப்படி எதிர்கொள்வது?
மகேஷ்
அன்புள்ள மகேஷ்
இது சாரு நிவேதிதா எழுதிய பதிவு
http://newsable.asianetnews.tv/south/gnanakoothan-the-greatest-tamil-poet-since-subramanya-bharati
ஒரு படைப்பாளியைப்பற்றி மாறுபட்ட கோணத்தில் பேசப்படுவது இயல்பானது. அது அப்படைப்பாளியைப்பற்றிய விவாதங்களைக் கூர்மையாக்கவே செய்யும். ஞானக்கூத்தனைப்பற்றி மிகக்கடுமையான விமர்சனத்தை வெங்கட் சாமிநாதன் முன்வைத்திருக்கிறார் [தரிசனமற்ற பயணத்தின் அழியும் சுவடுகள்] சுந்தர ராமசாமிக்கும் அந்த எண்ணமே இருந்தது.
ஞானக்கூத்தனின் அங்கதம் பழைமை நோக்கைச் சார்ந்தது . பொதுவாகவே உலகம் முழுக்க சிறந்த அங்கதக்காரர்கள் பழமைவாதிகளும் அவநம்பிக்கைவாதிகளும்தான். அலைக்கழிப்பாலோ மோதலாலோ அல்ல முற்றிலும் விலகிநிற்பதனால்தான் அங்கதம் உருவாகிறது. மாறுபட்ட நோக்கில் அனைத்தையும் பார்ப்பதன் விளைவு அது
ஞானக்கூத்தனுக்கு இரண்டு முகம் உண்டு. சம்ஸ்கிருத காவிய இயலை முன்வைத்து தீவிரமாக உரையாடிய ஞானக்கூத்தன் ஒரு முகம். அனைத்தையும் நோக்கிச் சிரிக்கும் ஞானக்கூத்தன் இன்னொரு முகம். அவர் சம்ஸ்கிருத காவிய இயலை நோக்கிச் சென்றதே அதில்தான் அவர் எழுதிய பாணிக்கு இலக்கண அனுமதி இருந்தது என்பதுதான்.
ஞானக்கூத்தனின் அங்கதக் கவிதைகள் பல ஒட்டுமொத்தமாகவே நவீன வாழ்க்கையின் அபத்தத்தையும் சலிப்பையும் நுட்பமாக வெளிப்படுத்துபவை. குப்பைத்துணை, என்னமாதிரி உலகம் பார் இது, மேஜைநடராஜர், தொட்டிமீன்கள் என பல அற்புதமான ஆக்கங்கள் நினைவுக்கு வருகின்றன.
பொதுவாக இத்தகைய எல்லாக் கருத்தாக்கங்களும் அகவயமானவையே. ‘எனக்குப்படுகிறது ‘எனக்கு பிடிக்கவில்லை’ என்ற எல்லையை விமர்சனக் கருத்துக்கள் கடப்பதில்லை. ஞானக்கூத்தனை மட்டும் அல்ல கருத்துச் சொல்பவர்களையும் புரிந்துகொள்ள உதவுபவை கருத்துரைப்புகள்
ஞானக்கூத்தனைப் பொறுத்தவரை அவர் கவிஞராக ஒருவகையான ‘அடித்தளமில்லா’ நிலைகொண்டவர். எதையும் அவரால் எள்ளலாகவே பார்க்கமுடிகிறது. தத்துவார்த்தமாகத் தொகுத்துக்கொள்ளவோ, நிலைபாடுகள் எடுக்கவோ அவர் முயல்வதில்லை. ஆகவே அவர் ‘விமர்சனம்’ முன்வைப்பதில்லை. ‘கேலி’ தான் செய்கிறார். கலைக்கிறார், திரும்ப அடுக்குவதில்லை
ஆகவே ஒருங்கிணைவை அல்லது இசைவை நாடுபவர்களுக்கு அவருடையது இலக்கற்ற கிண்டல் என்று தோன்றலாம். கலைவை அல்லது சிதைவை விரும்புபவர்களுக்கு அவருடையவை முக்கியமான படைப்புகள் என்று தோன்றலாம்.
ஜெ