அண்ணன்
ஒரு முக்கியமான நிகழ்வை நீங்கள் நடத்தி முடித்தமைக்காய் பரட்டுகிறேன். அ.கா. பெருமாள் அவைகளை உங்கள் வீட்டில் தான் முதன் முதலாக நான் சந்தித்தேன். அப்பொழுது எனக்கு பனை மரம் குறித்த ஆய்வுகள் எல்லாம் நடார் சமூகத்தின் பெருமையை நிலைநாட்டுவதற்கு என்ற சிறிய வட்டத்திற்குள்ளே மட்டுமே என்றிருந்தது. நீங்கள் அதை உணர்ந்தீர்களோ என்னவோ தெரியாது, அ.கா. பெருமாள் அதை குறிப்பறிந்து எனக்கு உணர்த்தினார். அன்று எனக்கு அவர் ஒரு நடார் அல்லதவர் என்று மட்டும் புரிந்தது. எனினும், எனது ஆய்வுகள் தொடரும் சமயத்தில் நான் புரிந்துகொள்ளும்படியாக பல காரியங்களைக் கண்டுகொண்டேன். நான் மிகவும் மதிக்கும் ஒரு முக்கியமான ஆய்வாளராக அவரை நான் இன்று காண்கிறேன். அவரது உழைப்பை கண்டு பிரமிக்கிறேன். அவர் ஓடி அலையவேண்டாம், வரும் நாட்களில் அவரை தொடர்ந்து வரும் மாணவர்கள் பல்லயிரம் எழும்புவார்கள். பூரண ஆயுளோடு அவர் தனது தமிழ் தொண்டாற்ற இறைவனை வேண்டுகிறேன். காட்சன் சாமுவேல்
|
**
அன்புள்ள ஜெயமோகன்
அ.கா.பெருமாள் அவர்களுக்கு நீங்கள் சொந்த செலவில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்திருந்ததை அறிந்து வியபப்டைந்தேன். பின்னர் பழைய நிகழ்ச்சிகளை வாசித்தபோது நீங்கள் தொடர்ச்சியாக இதைச் செய்துவருவதை கண்டு மேலும் மகிழ்ச்சி அடைந்தேன். எழுத்து மூலம் வருவாய் இல்லாத தமிழ்ச் சூழலில் நீங்கள் இதைச் செய்வதை எண்ணியபோது மகிழ்ச்சியும் குற்றவுணர்ச்சியும்தான் ஏற்பட்டது. நான் அறிந்தவரை தமிழிலே எந்த ஒரு பிரபல எழுத்தாளரும் பிற எழுத்தாளரை கௌரவிக்க ஒரு விழா எடுததாகச் சரித்திரமே இல்லை. நல்ல பணவசதியுடன் இருந்த உங்கள் குரு சுந்தர ராமசாமி கூட செய்ததில்லை. ஏன் இப்போது காலச்சுவடு ஊர் ஊராக விழா எடுப்பதெல்லாமே சுந்தர ராமசாமியை தூக்குவதற்காக மட்டும்தான். தன் நூல்களுக்கு தானே விழா எடுப்பதுதான் தமிழில் வழக்கம். நீங்கள் இம்மாதிரி விழாக்களுக்கு எங்களைப்போன்றவர்களை தாராளமாக அணுகலாம். எங்கள் கடமை என்றே நினைப்போம் [தமிழ்ழக்கம்]
சுரேஷ் அருணாச்சலம்
அன்புள்ள சுரேஷ்,
நன்றி. இம்மாதிரி நிகழ்ச்சிகளை மிக சுருக்கமான செலவில் எடுத்துவிட முடியும். மேலும் இதை சொந்த செலவில் செய்யும்போது ஒரு மனநிறைவு கிடைக்கிறது. முக்கியமான ஒருவரைந் ஆமே கௌரவித்தோம் என்ற நிறைவு அது. இதில் என் மனைவி மிகவும் கண்டிப்பானவள். எல்லா விழாவும் அவளுடைய பணத்தில்தான்.
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்
அ.கா.பெருமாள் அவர்களை பாராட்டி நீங்கள் எடுத்த விழாவுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். நான் முன்பே உங்களுக்கு எழுதியிருக்கிறேன். திண்ணை இதழிலே நீங்கள் அ.கா.பெருமாள் அவர்கள் தொகுத்த நாட்டுப்புற தெய்வங்களின் கதைகளைப்பற்றி எழுதியபோது நான் உங்களுக்கு ஒரு கடிதம் போட்டேன். அக்கதைகளில் பொன்னிறத்தாள் கதை எங்களுடைய சொந்த குலதெய்வமாகும். அந்தக்கதையை வாசித்து மனநிறைவு அடைந்தேன். இம்மாதிரி விஷயங்கள் எல்லாமே காலத்திலே மறைந்து போய்விடும். அ.கா.பெருமாள் அவர்களைப்போன்ற அறிஞர்கள் அவற்றை சேமித்துப்பாதுகாப்பதனால்தான் நம்முடைய பாரம்பரியம் அழியாமல் காக்கப்படுகிறது
சுப்ரமணியம்
புனே
**
அன்புள்ள ஜெயமோகன்
கொஞ்ச காலமாகவே உங்கள் இணைய தளத்தைப் படித்து வருகிறேன். அ.கா.பெருமாள் அவர்களுக்கு நீங்கள் அமைத்த விழாவுக்கு நன்றி. அவரது பெயர் அ.காக்கும்பெருமாள் பிள்ளை தானா? 1980௮3ல் நான் ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் படித்தேன். அப்போது அவர் எனக்கு தமிழாசிரியர். எனக்கு தமிழிலக்கியங்களில் உள்ள ஆர்வமும் பயிர்சியும் அவராலேயே உருவாக்கபப்ட்டன. இப்போதும் அவர் தேவாரம் திருவாசகம் போன்றவற்றை வகுப்பில் நடத்திய முறை நினைவில் நிற்கிறது. அவற்றை மனப்பாடம்செய்து சொல்லிக்கொள்ளும் வழக்கம் மாணவப்பருவத்தில் எனக்கு இருந்தது. அவர் அடிக்கடி வையாபுரிப்பிள்ளையைப்பற்றி சொல்லுவார். தமிழிலக்கிய வரலாற்றில் வையாபுரிப்பிள்ளையின் பங்களிப்பையும் அவற்றின் நிறைகுறைகளையும் விளக்குவார்
அன்புடன்
சுந்தர் சாமுவேல்
அன்புள்ள சுந்தர் சாமுவேல் அவர்களுக்கு,
நீங்கள் சொல்லும் அதே காக்கும்பெருமாள் பீள்ளைதான் அ.கா.பெருமாள். சின்னஞ்சிறு ஊரான ஆரல்வாய்மொழியில் அந்த கலைக்கல்லூரியில் கிட்டத்தட்ட அவர் எவராலும் பொருட்படுத்தப்படாமல் பணியாற்றி ஓய்வுபெற்றார். அவருக்கு வட்டிக்குவிடுதல், சீட்டு போடுதல், ரியல் எஸ்டேட் போன்ற தமிழாசிரியர்களின் குலத்தொழிலில் ஆர்வமில்லை என்பதனாலேயே அவர் அவரக்ளால் நிராகரிக்கபப்ட்டார். அவர் ஓய்வுபெற்றபோது அவரது கல்லூரியில் ஒரு சிறிய விழாகூட நடத்தபப்டவில்லை. ஆனால் இன்று ஓர் ஆய்வாளராக அவருக்கு தமிழ் அறிவுலகில் மறுக்க முடியா இடம் இருக்கிரது. அ.கா.பெருமாள் நன்றாகவே பேசுவார். நகைச்சுவையுடன், அரிய தகவல்களுடன். அவர் நன்றாகவே வகுப்பு எடுப்பார் என்பதை என்னால்ஊகிக்க முடிகிறது
ஜெ
**
அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு
அ.கா.பெருமாள் அவர்களுக்கு நீங்கள் நடத்திய விழாவைப்பற்றிய தகவல்களை வாசித்தேன். நீங்கள் அவரைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள். ஆனால் அவர் ஆரல்வாய்மொழி கல்லூரியில் வேலைபார்த்தார் என்ற தகவலை வாசித்தபோதுதான் அவர் எனக்கு தமிழ் கற்றுத்தந்திருக்கிறார் என்பதை நான் அறிந்தேன். 1983 முதல் நான் அங்கே படித்தேன். மிகவும் சுமாரான மாணவன். எனக்கு அவருடன் அறிமுகம் ஒன்றும் கிடையாது. ஆனால் அவர் வகுப்பிலே நடத்திய பாடங்களை நான் மறக்கவில்லை என்பதை இப்போது உணர்கிறேன். அதேசமயம் நான் அங்கே படித்த எல்லாவற்றையும் முழுமையாகவே மறந்துவிட்டேன். காலேஜின் காரிடார்கள் மட்டும்தான் ஞாபகம் இருக்கிறது. ஆனால் காக்கும்பெருமாள் சார் நடத்திய தமிழ்ப்பாடல்கள் பல நினைவில் உள்ளன. அவர்கள் ஒருமுறை வகுப்பில் தனிப்பாடல்களைப்பற்றி நிறைய சொன்னார். ஆண்டான் என்ற கவிஞர் ஆரல்வாய்மொழியை வசைபாடி ஒரு கவிதை எழுதியிருப்பதைச் சொல்லியதை நான் நினைவுகூர்கிறேன். மூளி அரல் வாய் மொழி என்று முடியும் அந்தக்கவிதை. ஆரல்வாய்மொழியிலே அன்றாடம் மணல் மாரி பொழியும் என்பது கவிஞனின் வசை. உண்மையில் அப்பப்டித்தான் கிளாஸிலேயே மண் உள்ளே வரும். அன்றைக்கு ஜன்னல்வழியாக புழுதி உள்ளே வந்துகொட்டியபோதுதான் அந்தபபாடலை ஐயா அவர்கள் சொன்னார்கள். அப்போதெல்லாம் இலக்கிய ரசனை ஏதும் இல்லை. வேலைக்குச் சேர்ந்து வேலைதேடும் பதற்றம் இல்லாமல் ஆன பிற்பாடுதான் இலக்கிய ரசனை உருவாகியது. இப்போது உங்களையெல்லாம் வாசிக்கிறேன். அதற்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர் ஐயா காக்கும்பெருமாள் அவர்கள்தான். அவர்களுக்கு நீங்கள் எடுத்த விழா மிகவும் சிறப்புடையது.நாங்கள் எல்லாம் செய்திருக்க வேண்டிய விழா அது
சண்முகம்
மும்பை
**
அன்புள்ள செயமோகன்,
அ.கா.பெருமாள் போன்ற அறிஞர்களை கௌரவிப்பதும் ஊக்குவிப்பதும் நம்முடைய கல்வி அமைப்புகள் செய்ய வேண்டிய வேலை. நம் நாட்டில் இப்போது தொடர்ச்சியாக வேலைசெய்யும் ஆய்வாளர்கள் விரல்விட்டு எண்ணத்தக்க சிலரே. ஆ.சிவசுப்ரமணியம், தொ.பரமசிவம், குடவாயில் பாலசுப்ரமணியம், செ.இராசு ,ராமச்சந்திரன் போன்று ஒருசில பெயர்களையே நம்மால் சொல்ல முடிகிறது. இவர்களில் ஒருவரைப்பற்றிபேசினாலும் பிறருடைய பெயர்களையும் சொல்ல நேர்கிறது. ஆனால் நம் நாட்டில் பல ஆயிரம் பேராசிரியர்கள் வெற்று ஊதியம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். செம்மொழி நிதி என்றபேரில் கோடிக்கணக்கான ரூபாய் வீணடிக்கப்படுகிறது. உண்மையான ஆய்வாளர்களுக்கு அதில் ஒரு துளி கூட கிடைப்பது இல்ல்லை. நீங்கள் செய்த வேலை நன்றிக்குரியது
எழில்வாணன்
சென்னை