ஞானக்கூத்தன் மறைவு

gnaanakkootthan

தமிழ் நவீனத்துவத்தின் முதன்மையான துவக்கப்புள்ளி என ஞானக்கூத்தனை சொல்லலாம். நவீனத்துவத்துவத்தின் அடிப்படை இயல்புகளான எதிர்ப்பு, வன்மை, கசப்பு ஆகியவை நுட்பமான பகடியாக வெளிப்பட்ட கவிதைகள் அவருடையவை.  ஏறத்தாழ 30 ஆண்டுகள் சென்னயில் ஒரு இலக்கிய மையமாக அவர் திகழ்ந்தார்.  ஆத்மாநாமிலிருந்து தொடங்கி இரண்டு தலைமுறை கவிஞர்கள் அவரிடமிருந்து உருவாகி வந்தனர்.  தமிழில் ஒரு நவீனத்துவ அலையை உருவாக்கிய கசடதபற அவரது முன்முயற்சியால் வெளிவந்தது.

ஞானக்கூத்தனுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது.  தமிழின் முதன்மையான முன்னோடி ஒருவர் எந்த கௌரவமும் அளிக்கப்படாமல் மறைந்தார் என்ற இழிவிலிருந்து தமிழ் தப்பித்துக்கொண்டது.

நேற்று சிங்கப்பூர் தமிழ்க் கவிஞர் நெப்போலியன் என்னை பார்க்க வந்திருந்தார்.  அவரிடம் ஞானக்கூத்தன் பற்றியும் ஆத்மாநாம் பற்றியும் விரிவாக பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அறியவில்லை ஞானக்கூத்தன் தன் இறுதிப் படுக்கையில் இருந்தார் என்று.  காலையில் நெப்போலியன் அழைத்து செய்தியை கூறினார்.  எப்போதும் எங்கோ அவருடைய  ஒரு கவிதை வாசிக்கப்படுகிறது. அவரைப்பற்றி எவரோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதுவே கவிஞனுக்கு முதன்மையான அங்கீகாரம்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் சார்பிலும் என் சார்பிலும் ஞானக்கூத்தனுக்கு அஞ்சலி.

பிகு

ஞானக்கூத்தனின் இறுதிச் சடங்குகள் காலை 10 மணி அளவில் திருவல்லிக்கேணி ஈஸ்வர தாஸ் லாலா தெருவில் உள்ள மகனது இல்லத்தில் நடைபெறும்.

முந்தைய கட்டுரைதேசிய கல்விக்கழகத்தில்
அடுத்த கட்டுரைஞானக்கூத்தன் – ஆவணப்படம்