தஞ்சை தரிசனம் – 4

அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி காலை ஓய்விடத்தில் இருந்து தாராசுரத்துக்கு கிளம்பினோம். தாராசுரத்துக்கு நான் முதன்முதலாக 1986ல் வந்தேன். அப்போது குடந்தையில் இருந்து அங்கே செல்ல ஒழுங்கான பாதையே கிடையாது. புதர்கள் அடர்ந்த மண்சாலை வழியாக ஆட்டோவில்செல்லவேண்டும். இப்போது நல்ல தார்ச்சாலை வந்துவிட்டது. ஆனாலும் அது சிற்றூர்தான்

பழங்காலத்தில் குடந்தை நகரின் ஒருபகுதியும் தாரசுரமும் பட்டீஸ்வரமும் இன்னும் சில கிராமங்களும் இணைந்து பழையாறை என்று அழைக்கப்பட்டன. நீண்ட வரலாறு கொண்ட ஒரு நகரம் அது. சோழர்காலத்திலேயே அது பழைய ஆறை என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆறைநகர் என்று பாடல்கள் சொல்கின்றன. அரிசிலாற்றை ஒட்டி இது அமைந்திருந்தது. இங்கே வரலாற்றுக்காலத்துக்கு முந்தைய முதுமக்கள்தாழிகளும் பானையோடுகளும் கிடைத்துள்ளன.

பழையாறை கிபி ஐந்தாம் நூற்றாண்டு முதலே வரலாற்றில் பேசப்படுகிறது. களப்பிரர் காலத்திலேயே இந்நகரம் சிறப்புற்றிருந்திருக்கலாம். இந்நகரை அப்பர் பாடியிருக்கிறார். முறையான வரலாற்றுத்தகவல்கள் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த நந்திவர்ம பல்லவன் காலம் முதல் கிடைக்க ஆரம்பிக்கின்றன. பல்லவர் தென்னாட்டை ஆண்டகாலத்தில் சோழர்கள் பழையாறையை தலைநகராகக் கொண்டு பல்லவர்களுக்கு திறைசெலுத்தி வாழ்ந்தார்கள். விஜயாலயனுக்கு பின்னர் பழையாறை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. ராஜராஜன் காலத்தில் தலைநகர் பழையாறையில் இருந்து தஞ்சைக்குச் சென்றது.

பழையாறையைப்பற்றி வித்வான் வே.மகாதேவன் ‘வரலாற்றில் பழையாறை மாநகர்’ என்ற நூலில் விரிவாக பேசியிருக்கிறார். கல்கியின் பொன்னியின்செல்வனில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் பழையாறையில் நிகழ்கின்றன. பழையாறையை இன்று மனதுக்குள் பழையாறையை உருவகிப்பது மிகவும் கடினம். தாராசுரம் பழைய பட்டீஸ்வரத்தின் மையம். இங்கே 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு ராஜராஜேஸ்வரம் என்று பெயர். அது மருவி தாராசுரமாகியது ஐராவதேஸ்வரர் வெள்ளையானையால் வழிபடப்பட்ட லிங்கம் என்று தொன்மம். தேவிக்கு தெய்வநாயகி என்று பெயர்.

தஞ்சையின் தனிப்பெரும் கோயில்கள் மூன்றுதான். ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரியகோயில். அவன் மகன் ராஜேந்திரன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் கோயில். அவன் மகன் இரண்டாம் ராஜேந்திரன் கட்டிய ஐராவதீஸ்வரர் கோயில். மூன்று கோயில்களும் ஒன்றில் இருந்து ஒன்று உருவானவை போல. அளவில் பெரியகோயில் தஞ்சைகோயில்தான். கங்கைகொண்ட சோழபுரம் கோயில் இன்னமும் சிற்ப அழகுள்ளது. தாரசுரம் அதன் உச்சம்.

தாராசுரத்தில் கலிங்கநாட்டு சூரியனார்கோயிலின் சாயல் உண்டு. ஆச்சரியம் என்னவென்றால் இரண்டும் ஏறத்தாழ ஒரேகாலகட்டத்தில் கட்டப்பட்டவை.சூரியர்கோயில் 1238-1264 ல் கட்டப்பட்டது. ஒரேகாலகட்டத்தில் கட்டப்பட்ட தஞ்சைபெரியகோயிலுக்கும் கஜூராகோ கோயிலுக்கும், அதேபோல சூரியர் கோயிலுக்கும் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கும் உள்ள ஒப்புமைகளை எவராவது கவனித்து எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. இந்தைய நிலம் முழுக்க ஒரே கலைப்பரப்பாக விளங்கியது என்பதற்கான கண்கூடான சாட்சிகள் இவை

85 அடி உயரமான கோபுரம். கோயிலை ஒரு மாபெரும் ரதமாக உருவகித்திருக்கிறார்கள். யானைகளும் குதிரைகளும் அதை இழுப்பது போல செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் அடித்தளம் மிக உயரமானது அதன் சுவர்கள் முழுக்க நிரம்பியிருக்கின்றன சிலைகள். நடனக்காட்சிகளே அதிகம். கேரள நாட்டு இடைக்கா போன்ற வாத்தியம் நடனத்துடன் மிருதங்கம் போல வாசிக்கப்பட்டிருந்ததை கண்டேன்.

தாராசுரம் கோயிலின் சிற்பங்களில் சோழர்கால மணற்பாறைச் சிற்பங்கள் அவற்றின் முழுமையை அடைந்துவிட்டன. அவர்களின் சிற்பவெற்றியே நடராஜர்தான். இக்கோயிலின் புறச்சுவரில் உள்ள நடராஜர் சிலையை கல்லால் ஆன நடராஜர்சிலைகளின் சிகரம் எனலாம். இறைவனின் முகத்தில் உள்ள அற்புதமான புன்னகையை இளங்காலை ஒளியில் பார்ப்பதென்பது ஒரு பெரும் கலையனுபவம். ஆம், மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே.

கும்பகோணத்திலிருந்து ஆவூர் செல்லும் பேருந்து வழியில் முழையூரிலிருந்து கிழக்கே 1.கி.மீ சென்றால் பட்டீஸ்வரம். இக்கோயில் அக்காலத்தில் பழையாறையின் மையத்தில் இருந்திருக்கலாம். பழைமையான மையக் கோயில் பல படிகளாக விரிவாக்கம் செய்யப்பட்டு இன்றைய வடிவில் உள்ளது. சமீபகாலத்தில் திருப்பணி செய்திருக்கிறார்கள். இன்று திருப்பணி என்றால் அற்புதமான கோயில்கோபுரங்களை ஏலக்குத்தகை முறையில் கணிசமான கையூட்டும் பெற்றுக்கொண்டு கொத்தனார்களின் கைகளில் ஒப்படைத்து விருப்பம்போல எமல்ஷன் பெயிண்ட் பூசுவதுதான். கோபுரம் ஒரு மாபெரும் குப்பைக்குவியலை கண்களுக்குள் கொட்டியது போல வந்து நம்மை அறைகிறது. மிட்டாய்வண்ணங்கள். கிளிப்பச்சை, ரத்தச்சிவப்பு, ஊதா, நீலம், மஞ்சள். எந்த அடிப்படைக் கலையுணர்வும் இல்லை. ஒரே சிலையிலேயே அனைத்து வண்ணங்களும் பூசப்பட்டிருக்கின்றன. துவாரபாலகர்கள் சிவப்பும் நீலமும் கலந்த பட்டாபட்டி அண்டர்வேர் போட்டு நிற்கிறார்கள்.

கோயிலுக்குள் கோபுரத்திலும் கேவலமான வண்ணங்கள். கோயிலுக்குள் சற்று நேரம்கூட நிற்க முடியவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தஞ்சையின் பல கோயில்களில் பெரும் பொருட்செலவில் செய்யப்பட்ட திருப்பணிகள் மூலம் கோயில்களே கிட்டத்த அழியும் நிலையில் உள்ளன. மணல்வீச்சு முறைப்படி கோயில்சிற்பங்கள் மழுங்கடிக்கப்பட்டன. கற்சிற்பங்கள்மீதுகூட வண்ணங்கள் பூசப்பட்டு ஆபாசப்படுத்தப்பட்டன. இந்த திருப்பணிகளுக்கு பக்தர்கள் பக்தியால் கசிந்துருகி கோடிக்கணக்கில் நன்கொடை அளித்திருக்கிறார்கள். நமக்கு சிவபாதசேகரர்களான சோழர்கள் அளித்த இந்த மாபெரும் கலைப்படைப்புகளை சீரழித்த பாவம் நம் சந்ததிகளைச் சூழும். கண்டிப்பாக சிவன்கோயிலை இடித்து குலநாசம் வரசெய்யும் செயலுக்கு நிகரானதே இதுவும்.

பட்டீஸ்வரத்தில் இருந்து ராஜராஜசோழனின் சமாதி இருக்கும் உடையாளூர் கிராமத்தை நோக்கிச் சென்றோம். தஞ்சையின் மிக பிந்தங்கிய கிராமங்களில் ஒன்று இது. ஒரு கார் சென்றால் இருபக்கமும் முட்கள் கிழிக்கும் சிறிய சகதிச்சாலையில் சென்றோம். வழி விசாரித்தபோது ஒரு குடிசையை சுட்டிக்காட்டி அதுதான் என்றார்கள். குடிசை முன்னால் ராஜராஜசோழனின் கிழிந்த பிளாஸ்டிக் போஸ்டர் ஒன்று இருந்தது. அங்கே சென்று கேட்டபோது அந்த குடிசையில் இருந்த பக்கிரிசாமி என்ற பெரியவர் ’இதுதான் வாங்கோ’ என்றார். குடிசையின் பின்பக்கம் கிழிந்து உள்ளே வெளிச்சமாக இருந்தது.

குடிசைக்குப் பின்பக்கம் ஒரு சிறிய தோட்டம். அது கோயிலுக்குச் சொந்தமான நிலம் என்றார்கள். அதில் வெட்டவெளியில் பாதிப்பங்கு மண்ணில் புதைந்ததாக ஒரு பெரிய சிவலிங்கம் இருந்தது. அதுதான் ராஜராஜ சோழன் இறந்த இடத்தில் கட்டப்பட்ட பள்ளிப்படை கோயிலுக்குள் இருந்த சிவலிங்கம் என்றார் பெரியவர். மண்ணுக்குள் ஒரு சிறிய கோயிலின் செங்கல் அடித்தளம் இருக்கிறது , ஆனால் இன்னும் முழுமையாக தோண்டப்படவில்லை என்றார். அவரே லிங்கத்துக்கு சிவாய நம சிவாய நம என்று சொல்லி தீபம் தூபம் காட்டினார். அவர் அந்த வேலையைச் செய்துகொண்டு அங்கேயே இருப்பதாகச் சொன்னார்.

உடையாளூர்

உடையாளூர் கைலாசநாதர் கோயிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு தற்போது கைலாசநாதர் கோயிலில் எதிரேயுள்ள குளத்தின் மறுகரையில் கட்டப்பட்டுள்ள பால்குளத்தி அம்மன் கோயிலில் கதவு மாட்டியுள்ள உருளைத் தூணில் உள்ள கல்வெட்டில் அது ராஜராஜனின் பள்ளிப்படை குறிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இன்று இணையத்தில் தேடியபோது கீழ்க்கண்ட பத்தி கிடைத்தது

இந்த விஷயத்தில் அதிக அக்கறை காட்டி வரும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியனிடமும் இதுகுறித்துப் பேசினோம். ‘‘அந்த இடத்தில்தான் ராஜராஜ சோழன் சமாதி இருக்கும் என்பதை 100 சதவிகிதம் உறுதியாக சொல்லத்தகுந்த ஆதாரங்கள் இல்லைதான். ஆனால், அதுவாகத்தான் இருக்கும் என்பதற்கு 90 சதவிகித சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அதைப்பற்றி பேசுவதற்குள் அதை சமாதி என்று சொல்வது தவறு. அவனது அஸ்தி வைக்கப்பட்டு, அதன்மீது எழுப்பப்பட்ட பள்ளிப்படை கோயிலாகவோ நினைவு மண்டப மாகவோகூட அது இருக்கலாம். அதனால் அதை நினைவிடம் என்று அழைக்கலாம். சோழ மன்னர்களின் குடும்பத்தினர் தஞ்சையில் அரசாண்டாலும் அவர்கள் வசிக்கும் மாளிகைகள் பழையாறையில்தான் இருந்தது. அதோடு ராஜராஜ சோழனின் மனைவியர்களில் ஒருவரான பஞ்சவன் மாதேவியினுடைய பள்ளிப்படை கோயில், பட்டீஸ்வரத்தில்தான் இருக்கிறது. அதனாலும் அந்த நினைவு மண்டபத் தூணாலும் அந்த இடம் ராஜராஜ சோழனின் நினைவிடம்தான் என்று உறுதியாக சொல்லலாம். கங்கைகொண்ட சோழபுரத்தையும், தஞ்சாவூரையும் அகழ்வாராய்ச்சி செய்ததைப் போல, இங்கும் மத்திய தொல்பொருள் துறை முழுவீச்சில் அகழாய்வு செய்தால், இன்னும் பல சரித்திர சான்றுகள் கிடைக்கும்’’ என்றா

சோழர்களின் காலகட்டத்தின் மாபெரும் கலைச்சிகரங்கள் வழியாக வந்து அந்த இடத்தில் நின்ற போது ஒரு செவ்வியல் நாவலின் அங்கத உச்சம் கொண்ட காட்சியில் கதைமாந்தராகிவிட்ட உணர்ச்சியை அடைந்தேன்.

உடையாளூர்

 குடவாயில் பாலசுப்ரமணியம் 

பிற கட்டுரைகள்

சிற்பப் படுகொலைகள்…

சிற்பப் படுகொலைகள்-இரு கடிதங்கள்

புதுக்கோட்டை கடிதங்கள்

முந்தைய கட்டுரைதஞ்சை தரிசனம் – 3
அடுத்த கட்டுரைமார்க்ஸ்-கடிதம்