சிங்கப்பூர் -கடிதங்கள்

IMG_0607

 

அன்புள்ள ஜெ,

சிங்கப்பூர் அரசு உங்களை முதன்முதலில் கௌரவிக்கும் பெருமையைத் தட்டிச் சென்றுள்ளது. தமிழையும் ஒரு அரசாங்க மொழியாகக் கொண்ட ஒரு அரசால் உங்கள் அனுபவமும், வழிகாட்டுதலும் அதன் வருங்காலத் தூண்களுக்குப் பகிரப் படுவது என்பது உண்மையிலேயே மிகவும் சிறப்பான ஒன்று. உங்களின் சிங்கப்பூரில் இரு மாதங்கள் கட்டுரை மிக முக்கியமான ஒன்றைத் தொட்டுச் செல்கிறது. அது புனைவை வாசிப்பதால் கிட்டும் பயன்.

“புனைவுவாசிப்பும் சரி, புனைவு எழுதும் பயிற்சியும் சரி, எதிர்காலத்தில் எழுத்தாளர்களாக ஆகப்போகிறவர்களுக்குரியவை மட்டும் அல்ல. அவை அறிவியலாளர்களோ நிர்வாகிகளோ ஆகப்போகிறவர்களுக்கும் உரிய இன்றியமையாத அடிப்படைகள்தான்.மொழியை விரித்து ஒன்றை தொடர்புறுத்தும் பயிற்சியை அவை அளிக்கின்றன. ஒரு சூழலை கற்பனையில் விரித்துக்கொள்ளவும் பலவகையில் வளர்த்தெடுக்கவும் கற்பிக்கின்றன.

இன்றைய வாழ்க்கையின் தொழில்நுட்பம், அறிவியல், வணிகம், நிர்வாகம் என அனைத்துத் துறைகளும் தொடர்புறுத்தல்கலைக்கு மிகமுக்கியமான இடம் அளிப்பவை. சிறந்த தொடர்புறுத்தல் என்பது வெற்றிக்கான முதல்படி. அதற்குத் தேவையானது மொழித்திறன். புரிய வைக்கும் திறன் மட்டும் அல்ல, கற்பனையைத் தூண்டும் திறன். நம்பவைக்கும் திறன். அது புனைவுவாசிப்பால் உருவாவது. ஆகவேதான் புனைவுவாசிப்பும் புனைவெழுத்தும் நவீனக்கல்வியின் ஆதாரங்களாக இன்று வலியுறுத்தப்படுகின்றன.”

மிக முக்கியமான ஒரு அவதானிப்பு இது. இதை நான் முழுமையாக உணர்ந்திருக்கிறேன், இப்பயனை அனுபவித்துக் கொண்டும், அறுவடை செய்து கொண்டும் இருக்கிறேன். பல முறை நண்பர்களிடமும், நேரில் உங்களிடமும் சொன்னது தான். என்னளவில் வெண்முரசு என் வாழ்வில் ஒரு பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்திய படைப்பு. என் சொந்த வாழ்வு மட்டுமல்லாமல் என் அலுவலக வாழ்க்கையிலும் அதன் தாக்கத்தை உணர்ந்த போது தான் எனக்கே வாசிப்பின் பலன் புரியத் துவங்கியது எனலாம். அதை வார்த்தைகளாக்க என்னால் இயலவில்லை. இன்று தெளிவாகவே மேற்கூறிய பாராவில் அதைச் சொல்லி விட்டீர்கள்.

ஆம். “தொடர்புறுத்தல்” – மிக மிக முக்கியமான ஒரு திறன். ஒரு மேலாளருக்கு மட்டுமல்ல என்னைப் போல ஒரு மென்பொருள் விரிவாக்குனருக்கும் மிக மிகத் தேவையான திறன். பல இடங்களில் கேட்ட, அனுபவத்தில் கண்டு கொண்ட, கற்பனையில் விரித்தெடுத்து எதிர்காலத்திற்கும் பயன்படத்தக்க ஒரு மென்பொருளை எழுத, புதியதாக சந்தையில் வந்திருக்கும் ஒரு தொழில்நுட்பத்தில் உடனடியாக இறங்கி பணி செய்ய இந்த தொடர்புறுத்தும் திறனும், கற்பனையில் விரித்தெடுக்கும் திறனும் மிக மிகத் தேவையானது. உதாரணத்திற்கு எனக்கு Java மென்பொருள் மொழி நன்றாகத் தெரியும். அந்த ஒரு மொழியின் அறிவே எனக்கு பல புதிய மென்பொருள் மொழிகளை சடுதியில் கற்று தேற போதுமானதாக இருந்திருக்கிறது. ஏனென்றால் என்னால் Java விற்கும், அந்த புது மொழிக்கும் ஏதேனும் ஒரு தளத்தில் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள இயலும். அங்கிருந்தே எளிதாகத் துவங்கி கற்றுக் கொள்ளவும் இயலும்.

புனைவு வாசிப்பில் மூளை மிக இயல்பாகவே இவற்றைச் செய்து கொண்டிருக்கும். எனவே தொடர்ந்து வாசித்து, அதை ஏதோ ஒரு வகையில் தொகுத்துக் கொள்ளும் ஒருவர் புனைவின் வெளியில் மட்டுமன்றி மற்ற இடங்களிலும் அச்செயலை மிக இயல்பாக, தன்னிச்சையாக செய்து கொண்டே தான் இருப்பார். விளைவாக மூளையின் நினைவுத் திறன் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இவை மற்றுமோர் வகையில் ஒரு அபாரமான சுய ஆணவ நிறைவைத் (self-ego satisfaction) தரும். இது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

மேலும் மொழியுடன் கூடிய தொடர்பு நம் உரையாடும் திறன், புரிய வைக்கும் திறன் மற்றும் கவனிக்கும் திறன் போன்றவற்றை பல மடங்கு அதிகரிக்கும். இதை நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன். வெண்முரசிற்கு ஏதேனும் ஒரு கடிதம் எழுதாத நாட்களில் (குறிப்பாக கடந்த சில நாட்களில்!!) என் வேலை செய்யும் திறன் (Productivity) மங்குவதையும், கடிதங்கள் எழுதும் காலங்களில் பல மடங்கு வேலைகளையும் சிறப்பாக செய்வதையும் மீண்டும் மீண்டும் கண்டுவருகிறேன்.

எனவே புனைவு வாசிப்பது என்பதால் வரும் அறிதல் என்பது வெறும் வாசிப்பின்பம், அனுபவம், சுய மலர்வு என்பதோடு நிற்பதில்லை. அதையும் தாண்டி பல தளங்களிலும் தாக்கம் ஏற்படுத்தும் வீச்சு கொண்டது. ஒரு அரசாங்கமே இதை, இதன் தேவையை உணர்ந்து தன் வருங்காலமான மாணவர்களுக்கு அதை முறையாக அறிவிப்பது மிகச் சிறப்பானது. புதிய உள்ளங்களை வெல்லவும், பைங்கூழ் களை கட்டி நூறு மேனியாக உங்கள் சொல் வளர்ந்து காடாகவும் என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்

 

IMG_0616

 

அன்புள்ள திரு ஜெயமோகன்

உங்களின் சிங்கப்பூர் பயணம் குறித்து மிக்க மகிழ்ச்சி. மாணவர்களை நீங்கள் சந்த்திப்பது மகத்தான மாற்றங்களை அவர்களில் ஏற்படுத்தும். எங்களில் பலர் உங்களின் எழுத்துக்களால் வாழ்வில் பெரும் மாற்றங்களை உணர்ந்தவர்கள். இளம் மாணவர்கள் அதூவ்ம் நேரடியா உங்களை சந்த்திக்கயில் நிச்சயம் பெரும் மாற்றம் கிடைக்கப்பெறுவார்கள். உங்கள் எழுத்துக்களை என்னிடமிருந்து கேட்டுத்தெரிந்து கொண்ட சரண் அடைந்த முதிர்ச்சி நான் கண்கூடாக கண்டது. எனவே சிங்கப்பூர் மாணவர்களின் நேரடிசந்திப்பு நிச்சயம் அவர்களுக்கு பெரும் பயனுள்ளதாகவே அமையும்

சரண் படிக்கும் பள்ளியின் துறவிகளின் ஆடம்பர வாழ்வைக்குறித்து அவனுக்கு கேள்விகள் இருக்கிறது. திருமணத்தையும், புலால் உணவையும் மட்டும் துறந்து, ரேடோ கைக்கடிகாரமும், ரேபான் கண்ணடியும், ஸ்போர்ட்ஸ் ஷூக்களும் அனுபவிக்கும் வாழ்வு துறவிகளுக்கானதா? இப்படி நிறைய கேள்விகள் வருகிறது அவனிடமிருந்து. பெரும்பாலும் எனக்கு விடை தெரியா கேள்விகளே அவை
இது போன்ற சிந்தனைகளே அவனுக்கு உங்கள் எழுத்துக்களின் பரிச்சயத்தால் தான் ஏற்பட்டிருக்கிறது. இளைஞர்களை நீங்கள் நேரடியாக சந்த்திக்கையில் அவர்கள் சமுதாயம் குறித்தும் வாழ்வு குறித்தும். எதிர் காலம் குறித்தும் சரியான கோணம் கிடைக்கப்பெறுவார்கள்

சிறப்பாக இந்தப்பயணம் நிறைவுற வாழ்த்துக்களுடன்

லோகமாதேவி

***

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

தங்களின் ‘சிங்கப்பூர் பயண’ விவரங்களை தற்போதுதான் அறிந்தேன்(எனது தாயார் காலமாகிவிட்டதால் தங்கள் வலைப்பக்கம் வரமுடியவில்லை).

மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.தங்களை கவுரவப்படுத்த(பத்மஸ்ரீ விருதின் மூலம்) தயாராக இருந்த இந்திய அரசை சில காரணங்களால் மறுத்துவிட்டு (என்னால் அதை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை) சிங்கப்பூர் அரசின் சிறப்பு அழைப்பின் பேரில், கல்விமுறையில் புனைவிலக்கியத்தின் இடத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடப்போவதை அறிந்து மகிழ்கிறேன்.தகுதியானவரைத்தான் சிங்கப்பூர் அரசு தேர்ந்து எடுத்திருக்கிறது.தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

 

அன்புடன்,

அ. சேஷகிரி.

***

அன்புள்ள ஜெ,

உங்கள் அறிவிப்பு வருவதற்கு இரண்டு தினம் முன்பு தான் நானும் நிர்மல் பிச்சையும் பேசிக் கொண்டிருந்த போது சொன்னேன் “இங்கேயெல்லாம் இந்த ‘writer in residence’என்று ஒன்றுள்ளது. அதுப் போன்ற ஒன்று ஜெயமோகனுக்கு அமைந்தால் அது மாணவர்களுக்கும் அவருக்கும் பரஸ்பர நன்மை பயக்கும்”. உங்களோடு கழித்த இரண்டு நாட்கள் பற்றி எழுதியப்போதும் அமெரிக்காவில் ஸால் பெல்லோவும், வில்லியம் பாக்னரும் பல்கலைக்கழகங்களில் “writer in residence” ஆக இருந்ததுப் போன்ற வாய்ப்பு உங்களைப் போன்றவர்களுக்கு அமைந்தால் நன்றாக இருக்கும் என்று எழுதினேன். வில்லியம் பாக்னர் அப்படிப் பனியாற்றிய போது மாணவர்களுடன் அவர் நடத்திய உரையாடல் புத்தகமாக வெளிவந்துள்ளது. உங்கள் அனுபவமும் அப்படி எழுதப்பட்டால் சுவாரசியத்திற்கு குறைவிருக்காது. உங்களுக்கு இது ஓரு நல் அனுபவமாக இருக்க வாழ்த்துகள்.

அன்புடன்

அரவிந்தன் கண்ணையன்

முந்தைய கட்டுரைஞானக்கூத்தன் இறுதிநாள்- காளிப்பிரசாத்
அடுத்த கட்டுரைடி.எம்.கிருஷ்ணாவுக்கு மகஸேசே