பியுஷ் – இந்துவெறுப்பாளரா?

 Photo for Repoter Jayaprakash Story.Photo/U K Ravi

 

அன்புள்ள ஜெ

பியுஷின் சமூகப் பணிகளும் மக்கள் நலனுக்காக அவர் ஆற்றி வரும் தொண்டினையும் மிகவும் வியந்து போற்றி அவருடைய விடுதலைக்காக குரல் கொடுத்ததுடன் பிரார்த்தனையும் செய்தோம். ஆனால் எல்லாம் இந்த வீடீயோவை பார்க்கும் வரை..(https://youtu.be/2wXg6mCYlKc) அவருக்கு ஏன் இந்த சாதி துவேஷம்? பெரும்பாலான மக்களின் நம்பிக்கையான கோவில்களையும் வழிபாடுகளையும் அவருடைய பேச்சுகளில் ஏன் கேவலப்படுத்துகிறார்?

இங்கு இயற்கை வளங்களை காயப்படுத்துவது யார்? மாரியாத்தா கோவில்களில் வழிபடும் சாமனிய மக்களா இல்லை அரசியல்வாதிகளும் வணிக முதலைகளுமா? சாமானிய மக்களிடமும் பள்ளிச் சிறார்களிடமும் ஏன் கோவில்களைப்பற்றியும் விக்கிரக வழிபாடுகள் பற்றியும் விமர்சனம் செய்கிறார்? அவருடைய சமூகப்பணிகள் பின்னால் ஏதோ hidden agenda இருப்பதாகத் தோன்றுகிறது.

அவருடைய நோக்கத்தை புரிந்து கொண்டதனாலோ என்னவோ பகுத்தறிவாளர்களும் இந்து மத எதிர்ப்பாளர்களும் இந்து மதத்தை விமர்சனம் செய்ததனால்தான் அவர் கைது செய்யப்பட்டதாக வலைத்தளங்களில் எழுதிவருகிறார்கள். உண்மையான சமூக ஆர்வலர் என நினைத்து ஆதரித்த எங்களைப் போன்றவர்களுக்கு அவருடைய இம்மாதிரியான பேச்சுக்கள் கவலை அளிக்கிறது.

கொ.வை. அரங்கநாதன்

அன்புள்ள அரங்கநாதன்

உண்மை. இந்த வகையில் பியுஷ் பேசும் பல பதிவுகளை நான் பார்த்துள்ளேன். இதைப்பற்றி கெவின்கேர் பாலாவிடம் விவாதித்ததும் நினைவில் உள்ளது.

பொதுவாக செயல்பாட்டாளர்கள் அனைவருமே ஒருமுனைப்பட்ட நோக்குள்ளவர்கள். ஆகவே ஒற்றைப்படையான பார்வை கொண்டவர்கள். விவாதித்து, பலபக்கங்களையும் கணக்கில்கொண்டு, நிதானமான நிலைபாடு எடுப்பவர்கள் அல்ல. அப்படி விவாதிப்பவர்கள் பலசமயம் ஒன்றும் செய்வதுமில்லை. ஆகவே அவர்களை சிந்தனையாளர்கள் என்றல்ல செயல்வீரர்கள் என்றே பார்க்கவேண்டும்.

இந்தியாவின் களப்பணியாளர்கள் பெரும்பாலும் ஒரே நாற்றங்காலில் உருவாகி வருபவர்கள். அவர்களிடம் இடதுசாரிக் கருத்துக்கள் மேலோங்கியிருப்பது இயல்பானதே. பலர் ஐரோப்பியச் சார்புகொண்டவர்களும்கூட. அவர்களில் பெரும்பாலானவர்கள் ‘அமைப்புக்கு எதிர்ப்பு’ என்னும் மனநிலை கொண்டவர்கள். அரசாங்கத்தைப்போலவே பெரும்பான்மை மதத்தையும், அதன் நம்பிக்கைகளையும் அவர்கள் எதிர்நிலை எடுத்தே பார்க்கிறார்கள்.

இவர்களின் சிந்தனைகள் நம் சூழலில் ஏற்கனவே கிடைக்கும் எளிமையான ‘டெம்ப்ளேட்’களில் அமைந்தவை. இங்கே இந்திய அரசு, இந்தியப் பண்பாடு, இந்து மரபு ஆகியவற்றை ஒற்றை அமைப்பாகவும், எதிர்க்கவேண்டிய ஒன்றாகவும் உருவகித்துக்கொள்வது என்பது கிட்டத்தட்ட நூறாண்டுக் காலமாக மெல்லமெல்ல உருவாக்கிக்கொண்ட ஒரு சிந்தனை.

அந்தக் கண்ணோட்டம் உருவாகி வந்த வரலாற்றை அறியாமல் வெறுமே ஒருவர் பேசுவதைக் கேட்டு கொந்தளிப்பது ஒருவகை அசட்டுத்தனம். இந்தியப்பாரம்பரியத்தை தேங்கி உயிரிழந்த ஓர் அமைப்பு என உருவகிப்பது இங்கே காலனியாதிக்கவாதிகளால் உருவாக்கப்பட்டது . ஓரியண்டல் என்னும் சொல்லுக்கே அதுதான் நேர்ப்பொருள்

அந்த காலனியாதிக்கக் காலகட்டத்து உருவகத்துக்கு எதிராகவே இங்கே இந்துமறுமலர்ச்சி இயக்கங்களும் அவற்றின் ஒட்டுமொத்த விளைவாக தேசிய இயக்கமும் உருவாகிவந்தன. விவேகானந்தர் முதல் நாராயணகுரு வரை, திலகர் முதல் காந்தி வரை அந்த எழுச்சியின் விளைவுகள்.

அந்த தேசிய இயக்கத்திற்கு எதிராகவே இங்கே இடதுசாரிக்கருத்துக்கள் உருவாகி வந்தன. இடதுசாரிக்கருத்தியலின் ஆழத்தில் உள்ளது ஐரோப்பிய வழிபாடுதான். ஆகவே அவர்கள் காலனியாதிக்கவாதிகளின் தரப்பை தாங்களும் எடுத்துக்கொண்டனர். அதை வளர்த்தெடுத்தனர்

காலனியாதிக்கவாதிகளுக்கு இந்தியாவின் மரபு என்பது தேங்கிப்போன மூடத்தனம், கூடவே இந்தியாவின் அடித்தள மக்களும் வெறுக்கத்தக்க இழிசினர்தான். இடதுசாரியினர் அடித்தள மக்களை உழைப்பாள வர்க்கம் என்று மாற்றிக்கொண்டனர். இந்திய மரபு அம்மக்களுக்கு எதிரானது என கட்டமைத்தனர். ஏனென்றால் அவர்கள் காலனியாதிக்கவாதிகளின் ஐரோப்பிய மேட்டிமைவாதப் பார்வையையை தாங்களு இந்துமரபின்மேல் செலுத்தினர்.

எம்.என்.ராய் முதல் இந்த சிந்தனை ஆரம்பிக்கிறது. இந்தியாவின் மகத்தான சிந்தனையாளர்கள் கணிசமானவர்கள் இந்த மரபைச்சேர்ந்தவர்கள். ஒட்டுமொத்தமான மரபுஎதிர்ப்பில் இருந்து கொஞ்சம் வெளிவந்து பௌத்தம் சமணம் போன்ற அழிந்துபட்ட சிறுபான்மை மதங்களை ஏற்றுக்கொண்டனர் சிலர். இந்துமத அமைப்பில் உள்ள பழங்குடி அம்சத்தை, வெகுஜன அம்சத்தை மட்டும் ஏற்றுக்கொண்டனர் இன்னும் சிலர்

ஆனால் ஒட்டுமொத்தமாக இந்துப்பண்பாட்டுக்கான எதிர்ப்பு என்பது இந்த இடதுசாரிச் சிந்தனையாளர்கள் அனைவரின் மூளைக்குள்ளும் ஒரு வைரஸ் போல பதிந்துள்ளது. அது நூறாண்டுக்கால வரலாறு கொண்டது. ஆகவே அதை எளிதில் வெல்லவோ மாற்றவோ முடியாது. மாபெரும் கருத்துச்செயல்பாடு மூலம் இன்னொரு நூறாண்டுக்காலத்தில் அதை மாற்றமுடியலாம்.

காந்திய இயக்கத்திற்குப்பின் உண்மையில் இடதுசாரிகளின் அந்த சிந்தனைக்குறுக்கத்தை எதிர்கொண்டு விவாதித்து மாற்றியமைக்கும் வல்லமை கொண்ட சிந்தனை இயக்கங்கள் இங்கே இல்லை. நாராயணகுருவின் இயக்கம் ஒரு சிறிய வட்டத்திற்குள் அதை இன்றுவரைச் செய்துகொண்டிருக்கிறது. நான் என்னையும் அந்நீட்சியில் சேர்த்துக்கொள்வேன்.

அதற்கு மாறாக, இடதுசாரிகளின் அத்தரப்பை வெறும் வெறுப்பரசியல் மற்றும் வசைபாடல்கள் வழியாக எதிர்கொள்பவர்களே எப்போதும் இருந்தார்கள். அரசியல் ரீதியாக அவர்கள் இன்று அதிகரித்திருக்கிறார்கள். அவர்களால் இடதுசாரிகளின் அறிவுத்தரப்பை எதிர்கொள்ளமுடியாது. எந்த ஓர் அறிவுத்தரப்பையும் தொடர்ச்சியான நிதானமான சமநிலைகொண்ட விவாதம்மூலம், கருத்துச்செயல்பாடு மூலம் மட்டுமே எதிர்கொள்ளமுடியும்.

இந்துமரபை தங்கள் கீழ்த்தரமான சாதிவெறிக்கும், மூடநம்பிக்கைகளுக்கும், மானுடவிரோதமான சமூகப்பழக்கவழக்கங்களுக்கும் ஆதரவாக நிறுத்தும் தரப்பு எப்போதும் இருந்தது. இன்றும் உள்ளது. அவர்களின் விளக்கங்களும் விரித்துரைகளும் இங்குள்ள இடதுசாரிகளின் இந்துமரபு எதிர்ப்புக்கான நியாயமான அடிப்படை ஒன்றை தொடர்ச்சியாக அளித்து வருகின்றன என்பதையும் எவரும் காணமுடியும்.
பியுஷ் எளிதாக அந்த ‘டெம்ப்ளேட்’டில் சென்று விழுந்ததில் ஆச்சரியமில்லை. அவர் சிந்தனையாளர் அல்ல. மனசாட்சியின் குரலால் இயக்கப்படும் களப்பணியாளர். அவரது அந்த நிலைபாட்டுக்குரிய அனைத்து நியாயங்களையும் இங்குள்ள குறுகிய மதவெறியர்கள், சாதியவாதிகள், அரசியலாளர்கள் அளித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

இன்று குஜராத்தில் தலித்துக்களுக்காகப் போராடும் ஒருவர் அங்குள்ள பழமைவாத மத அமைப்புகள் இந்தியப்பண்பாட்டின் பன்மைத்தன்மையையோ, சமூகப்பழக்கவழக்கங்களின் வரலாற்றையோ அறிந்துகொள்ளாமல் மாட்டிறைச்சி விஷயத்தில் எடுத்துக்கொண்டுள்ள மூர்க்கமான நிலைபாட்டை எதிர்க்காமலிருக்கமுடியுமா என்ன?

நீங்களே பார்க்கலாம், ஒவ்வொரு ஊரிலும் களப்பணியாளர்களின் எதிரிகளாக எழுந்து வருபவர்கள் மத,சாதிய மேலாண்மைகொண்டவர்கள் அல்லவா? அவர்களுக்கு எதிரான செயல்பாடு மெல்ல மதத்திற்கும் பாரம்பரியத்திற்கும் ஒட்டுமொத்தமாகவே எதிரானதாக ஆவது என்பது ஒன்றும் வெறும் காழ்ப்பின் விளைவு அல்ல.

அதெல்லாம் இல்லை, அனைத்தும் இங்கு நன்றாகவே உள்ளன என்று நீங்கள் வாதிட வருகிறீர்கள் என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

இத்தகைய ஒற்றைப்படை நிலைபாடுகள் சரியா, இவர்களின் பணிக்கு உதவியானதா என்பது இன்னொரு கேள்வி. ஆனால் இவர்கள் இப்படிச் சொல்வதனாலேயே இவர்களின் பங்களிப்பையும் சாதனைகளையும் ஏற்கமறுப்பது வெறும் அரசியல்காழ்ப்பு மட்டுமே. பியுஷ் அல்லது உதயகுமாரின் இந்தவகையான ஒற்றைப்படை நிலைபாடுகளையும் பேச்சுக்களையும் அவர்களின் பங்களிப்பை ஏற்றுக்கொண்டு மறுப்பவனாகவே என்னை வைத்துக்கொள்வேன்.

இவர்களின் ஒற்றைப்படையான நிலைபாட்டை விமர்சிக்கலாம். ஆனால் அதற்கு நிகரான பொதுநலப்பணிகளையும் ஆற்றியாகவேண்டும்.அப்படி ஆற்றும் காந்தியவாதிகள் உள்ளனர். அண்ணா ஹசாரே போல. அவர்களே எனக்கு என்றும் முதன்மை முன்னுதாரணங்கள். இந்துத்துவ அரசியல் சார்ந்து வனவாசி கல்யாண் கேந்திரம் போன்றவற்றில் செயல்படுபவர்களும் உள்ளனர். இந்துத்துவத் தரப்பிலிருந்து எழுந்துவநத நானாஜி தேஷ்முக் போன்ற மாபெரும் இலட்சியவடிவங்கள் உள்ளனர்.

ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அடித்தள மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட மக்களுக்காகவும் இடதுசாரிகள் அல்லாதவர்களின் செயல்பாடுகள் மிகமிகக்குறைவாகவே உள்ளன என்பதே நடைமுறை உண்மை. இன்று இந்துத்துவர்களின் அடிப்படையையே அழிப்பது அடித்தள மக்களின் மதமாற்றம். அந்த உணர்வுடனாவது அடித்தள மக்களிடையே சேவை செய்யும் அமைப்புக்கள் இங்கு எத்தனை உள்ளன?

அடித்தளமக்களுக்கான உரிமைப்போரில் இதுவரை எத்தனை குரல்கள் இவர்களில் இருந்து எழுந்துள்ளன? சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் சுரண்டல்களுக்கு எதிராக எத்தனை போராட்டங்கள் இவர்களால் நடத்தப்பட்டுள்ளன? பெரும்பாலும் அமைப்புகளுக்கு ஆதரவான மூர்க்கமான நிலைபாடுகள் மட்டுமே காணக்கிடைக்கின்றன என்பதுதானே உண்மை?

இந்நிலையில் களத்தில் நின்று போராடும் பியுஷ் போன்றவர்கள் நம் சமூகத்தின் இன்றியமையாத தேவையாக உள்ளனர். இலட்சியவடிவங்களாக தெரிகின்றனர். அவர்களின் அனைத்து அரசியல்நிலைபாடுகளையும் கடந்து அவர்கள் கொண்டாடப்படவேண்டியவர்கள். அவர்களின் அரசியல் ஒவ்வாமையை அளித்தால் அவர்களின் பங்களிப்பை கடந்து மேலும் பெரிய பங்களிப்பை உங்களைப்போன்று இந்துமரபில் நிற்பவவர்கள் ஆற்றலாம். அதன்பின் அவர்களின் அரசியலை விமர்சனம் செய்து நிராகரிக்கலாம்.

எவராக இருந்தாலும் என்னென்ன செய்தாலும் என் மதத்தையோ சாதியையோ விமர்சனம் செய்தால் நான் ஏற்கமாட்டேன், வெறுப்பேன் வசைபாடுவேன் என்பதற்கு அடிப்படைவாதம் என்று பெயர்

பி.கு

பியுஷை எதிர்ப்பவர்களில் இந்துத்துவர்களுக்கு மேலாகவே தீவிர இடதுசாரிகளே உள்ளனர்.அவரைப்பற்றிய அவதூறுகள் பெரும்பாலும் அவர்களால் பரப்பபடுபவை.
ஜெ

முந்தைய கட்டுரைஉலோகம்- சாகசம் மர்மம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 9