[ 11 ]
உணவுக்கூடத்திற்கே திருதராஷ்டிரர் தங்களை வரச்சொன்னது சௌனகரை வியப்பு கொள்ளச்செய்தது. அவர்கள் உள்ளே சென்றபோது தரையில் அமர்ந்து இடையளவு அமைந்திருந்த பீடத்தின்மேல் பொற்தாலத்தில் அடுக்கப்பட்டிருந்த அப்பங்களை திருதராஷ்டிரர் உண்டுகொண்டிருந்தார். அவர் மெல்லும் ஒலியும் கூடவே எழுந்த முனகல் ஓசையும் பரிமாறுபவர்களின் மெல்லிய கிசுகிசுப்புகளும் தாலங்களும் தட்டுகளும் அகப்பைகளும் முட்டிக்கொள்ளும் ஒலியும் மட்டும் அந்தப் பெரிய கூடத்தில் நிறைந்திருந்தன. அப்பால் சாளரத்தில் திரைச்சீலை மெல்ல நெளிந்த ஒளிமாறுபாடு அவர் மேல் வண்ண அசைவை உருவாக்கியது. அப்பங்களிலிருந்து ஆவியுடன் நெய்மணம் எழுந்தது.
திருதராஷ்டிரர் அவர்களின் காலடியோசையைக் கேட்டு “ம்ம்ம்” என உறுமினார். விதுரர் வணங்கி அருகே போடப்பட்ட பீடத்தில் அமர்ந்தார். திருதராஷ்டிரர் சௌனகரை நோக்கி தசைக்குழி விழிகளைத் திருப்பி “அமர்க!” என்றார். சௌனகர் தயக்கத்துடன் அமர்ந்தார். தலையைத் திருப்பி அவர்களுக்கு செவியைக் காட்டியபடி “ம்ம்” என்றார் திருதராஷ்டிரர் மென்றபடி. சௌனகர் அடுமனையாளர்களை பார்த்தார். அவர்கள் அவரையன்றி எவரையும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அப்பால் கரவுப்பாதை வழியாக ஓசையின்றி உருண்டுவரும் வெண்கலச் சகடங்கள் கொண்ட வண்டிகளில் உணவுப்பானைகள் வந்துகொண்டிருந்தன.
திருதராஷ்டிரர் உண்பதை சௌனகர் திகைப்புடன் நோக்கினார். இருகைகளாலும் அவர் அப்பங்களை எடுத்தார். எளிய உணவுண்பவருக்கு ஓர் அப்பமே ஒருவேளைக்கான உணவாகும் என்று தோன்றியது. அவர் ஓர் அப்பத்தை இரண்டாக ஒடித்து பருப்பில் தோய்த்து வாயில் இட்டு மென்று உண்டார். அந்த அசைவுகள் ஒவ்வொன்றிலும் நிகரற்ற பெரும்பசி தெரிந்தது. அவரது வலக்கைப்பக்கம் பொரித்த முழுப்பன்றியின் சிவந்த தசைப்பரப்பில் நெய் சூடாகப் பொரிந்து வற்றிக்கொண்டிருந்தது. அவரது இடக்கைப்பக்கம் திரிகர்த்தநாட்டு எரிமது பெரிய பீதர்நாட்டு வெண்குடுவையில் நுரைசூடி காத்திருந்தது. அதன் குமிழிகள் வெடிக்கும் ஒலி நத்தை ஊர்வதுபோல கேட்டது.
விதுரர் “பீஷ்மபிதாமகரின் ஓலை தங்களுக்கு வந்திருக்கும், மூத்தவரே” என்றார். “ஆம்” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் “அவர் தங்கள் ஆணையை ஏற்கவில்லை. அரசனென துரியோதனனையே ஏற்கிறார்” என்றார் விதுரர். “அறிந்தேன்” என்று திருதராஷ்டிரர் சொல்லிவிட்டு பன்றியூனில் ஒரு கீற்றைப்பிய்த்து எலும்புடன் வாயிலிட்டு மென்றார். எலும்பு அவர் வாய்க்குள் உடைபட்டு நொறுங்கும் ஒலியை மெல்லிய அதிர்வுடன் சௌனகர் கேட்டார். “பிதாமகர் மரபுமுறைகளை ஒருபோதும் மீறாதவர் என்பதே என் எண்ணமாக இருந்தது. அவர் ஏன் இவ்வண்ணம் செய்தார் என்பதை எத்தனை எண்ணியும் என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை” என்றார் விதுரர்.
திருதராஷ்டிரர் “அவர் விருப்பம் அது. நான் என் ஆணையை தெரிவித்துவிட்டேன்” என்றார். விதுரர் “பிதாமகரின் அந்த ஓலையை தங்களிடம் கொண்டுவரவேண்டாம் என்றே எண்ணினேன். ஆனால் நானறியாமல் ஒற்றர்கள் கொண்டுவந்துவிட்டனர்” என்றார். திருதராஷ்டிரர் “காலையில் படைபயில்கையில் கொண்டுவந்தனர். என் உள்ளம் கொந்தளித்தது. ஆனால் அதை பொருட்படுத்தவேண்டியதில்லை என பின்னர் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இளையோனே, இன்று காலை எனக்குத் தோன்றியது ஒன்றே. நான் இனி என் அரசிக்கு மட்டுமே கடமைப்பட்டவன். அவள்முன் நின்றுபேசும் தகுதியை மட்டுமே நான் ஈட்டிக்கொள்ளவேண்டும். என் இளையோன் மைந்தரையும் அவர் அரசியையும் தொழும்பராக்கிவிட்டு நான் அவளருகே செல்லமுடியாது” என்றார்.
பெருமூச்சுடன் அவர் மதுவை எடுத்துக் குடித்தார். குடம்நிறையும் ஒலி எழுந்து அடங்கியது. நீள்மூச்சுடன் குடத்தை வைத்துவிட்டு “அறிந்திருப்பாய், இன்று காலை அத்தனை பெண்களும் கொற்றவை ஆலயத்திற்கு சென்றிருக்கிறார்கள். அங்கே செங்கழலன்னைக்கு ஏழு மகிடங்களை குருதிபலியாக அளித்திருக்கிறார்கள். அதன் பொருளென்ன தெரியுமா? மகிடங்கள். நீயும் நானும் பிதாமகர் பீஷ்மரும் அனைவருமே மகிடங்கள். நம் குருதியில் குளிக்கிறாள் கொற்றவை… நம் குடிசெய்த பெரும்பிழைக்கு ஈடாக அவள் காலடியில் வைக்கப்படுகின்றன மகிடங்களின் தலைகள்… அவற்றின் கொம்புகள்…” என்றார். கைகளை வீசி தலையை அசைத்தார். “இனி எப்போதேனும் என்னால் கொம்பொலியை ஒரு கதறலாக அன்றி கேட்கமுடியுமெனத் தோன்றவில்லை…”
விதுரர் “ஆம், நாம் நம் கடமையை செய்தாகவேண்டும். நாம் விண்புகும்போது நம்மை தந்தையர் வந்து சூழ்வார்கள். அவர்களின் விழிகளை எதிர்கொள்ளவேண்டும்” என்றார். “வேறுவழியே இல்லை. ஆதுரசாலையில் இருக்கும் துரியோதனனைச் சிறையிட்டு அரசப்பொறுப்பை நீங்கள் முழுமையாக ஏற்கவேண்டிய தருணம் இது. பிதாமகர் பீஷ்மர் எதிர்ப்பார் என்றால் அவருடனும் போருக்கு நாம் சித்தமாகவே இருக்கிறோம்…” திருதராஷ்டிரர் “வெல்வதைப்பற்றி நான் எண்ணவில்லை. நான் செய்யவேண்டியதை செய்தாகவேண்டும். நான் உயிருடனிருக்கும்வரை என் இளையோன்மைந்தர் தொழும்பராகமாட்டார். மூதாதையர் மேல் ஆணை” என்றார்.
விதுரர் விழிகாட்ட சௌனகர் “ஆனால் எதுவானாலும் பிதாமகரின் ஆணையையே சென்னிசூடுவதாக அரசர் சொல்கிறார்” என்றார். “யார் தருமனா? ஆம், அவன் அவ்வாறுதான் சொல்வான்” என்றார் திருதராஷ்டிரர். “ஆனால் இந்நாடு என்னுடையது. அவன் இம்மணிமுடியின் தொழும்பன். ஆனால் அவனை மைந்தன் என்று மட்டுமே அது கருதும்.” அவர் உண்பதை நிறுத்தவே இல்லை. இரு ஏவல் விலங்குகள் என அக்கைகள் அவர் வாயை ஊட்டிக்கொண்டே இருந்தன. நெடுங்காலமாக அக்கைகளுடன் ஒத்துழைத்துப் பழகிய அடுமனையாளர்கள் விரைந்த அசைவுகளுடன் உணவை கொண்டுவந்து வைத்துக்கொண்டிருந்தனர். கரிய அவருடல் ஆழமான குழிபோல் தோன்றியது. உணவு அதற்குள் சென்றுகொண்டே இருந்தது.
மெல்லிய குரலில் “இன்றே அரசாணையை பிறப்பித்துவிடுகிறேன்” என்றார் விதுரர். “சொற்றொடர்களை சஞ்சயன் உங்களுக்கு வாசித்துக்காட்டுவான். இங்கே கோல் ஒன்றே. அது ஹஸ்தியின் கையில் இருந்தது. அறமெனச் சொல்லி இம்மண்ணில் நாட்டப்பட்டது அது. அது நின்றாகவேண்டும்.” திருதராஷ்டிரர் தலையை அசைத்து “ஆம், அது அனைவரையும் கட்டுப்படுத்தும். இளையோனே, அரசர்கள் அரியணை அமர்வது வாழ்பவர்களுக்காக மட்டும் அல்ல, மண்மறைந்த மூதாதையருக்காகவும்தான்” என்றார். அவர் குரல் எழுந்தது. “பிதாமகர் பீஷ்மர் நாளை காலையிலேயே காடேகட்டும். அவரது சொல் எனக்கு எதிராக எழுமென்றால் என் படைகள் அவரையும் சிறையிடட்டும்” என்றார்.
விதுரர் முகம் மலர “ஒரு படைப்பூசல் எழுமென்றால் நம்முடன் இளைய யாதவரின் படைகள் நிற்கக்கூடும். அதற்கென தூதனுப்பியிருக்கிறேன்” என்றார். சௌனகர் அக்குறிப்பை உணர்ந்து “இளைய பாண்டவர் தொழும்பராவதை ஒருபோதும் இளைய யாதவர் ஏற்கப்போவதில்லை. அவர் படைநடத்துவார் என்றால் இங்கே எவரும் எதிர்நிற்கப்போவதில்லை” என்றார். “ஓலை இன்றே அவரிடம் கிடைத்துவிடும். அவர் படைகொண்டுவருவார் என்னும் செய்தியே நமக்குப் போதும்” என்றார் விதுரர்.
“எவரையும் நம்பி நானில்லை. வேண்டுமென்றால் களத்திற்குச் சென்று அங்கே உயிரிழக்கவும் நான் சித்தமாக இருக்கிறேன். எதுவானாலும் சரி, என் இளையோன்மைந்தர் ஒருபோதும் அடிமைப்படமாட்டார்கள். அதில் மறு எண்ணமே எவருக்கும் தேவையில்லை” என்றார் திருதராஷ்டிரர். “நான் இருக்கும்வரை அது நிகழாது. விண்ணேகிய என் இளையோனை இதோ என்னருகே உணர்கிறேன். அவன் மூச்சுக்காற்று என்மேல் படுவதுபோல் தோன்றுகிறது” என்றார். விதுரரும் உளம்நெகிழ்ந்து “ஆம் மூத்தவரே, நேற்றிரவு முழுக்க மூத்தவர் பாண்டுவின் அருகிருப்பையே நானும் உணர்ந்துகொண்டிருந்தேன்” என்றார்.
பெருமூச்சுடன் தட்டை கையால் தட்டினார் திருதராஷ்டிரர். அடுமனையாளர்கள் இருவர் வந்து அவர் தோளைப்பற்றினர். “நான் இனி சொல்வதற்கேதுமில்லை. அரசன் என என் ஆணையையே பிறப்பித்திருக்கிறேன்” என்றார். அவர் எழுந்து நின்றபோது குரல் வானிலிருந்தென ஒலித்தது. “இவ்வரசு நான் அளித்தது. என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதை எவரும் மறக்கவேண்டியதில்லை” என்றபின் தன் கைகளை நீட்டினார். இருவர் பித்தளை அகல்பாத்திரத்தில் கொண்டுவந்த நறுமணநீரால் அவர் கைகளை கழுவினர். ஒருவர் அவர் வாயை துடைத்தார்.
சொல்முடிந்தது என திருதராஷ்டிரர் தலையசைக்க விதுரர் வணங்கிவிட்டு திரும்பினார். அவர்கள் வாயிலை அடைந்தபோது உள்வாயிலை நோக்கிச்சென்ற திருதராஷ்டிரர் திரும்பாமலேயே “விதுரா” என்று அழைத்தார். அக்குரல் மாறுபட்டிருந்ததை சௌனகர் உணர்ந்தார். “மூத்தவரே” என்றார் விதுரர். “எப்படி இருக்கிறான்?” விதுரர் ஒருகணம் கடந்து “பிழைத்துக்கொண்டார் என்றார்கள்” என்றார். “நீ பார்த்தாயா?” விதுரர் “இல்லை” என்றார். “சென்று பார்…” என்றார் திருதராஷ்டிரர். ஒருகணம் கழித்து “பார்த்துவிட்டு வந்து என்னிடம் சொல்” என்றார். “ஆணை” என்றார் விதுரர். திருதராஷ்டிரர் மெல்ல கனைத்தார். உள்ளத்தை மடைமாற்ற விழைகிறார் என சௌனகர் உணர்ந்தார். மீண்டும் இருமுறை கனைத்தபின் எடைமிக்க காலடிகளுடன் அவர் நடந்து சென்றார்.
[ 12 ]
“அவ்வாணை ஒன்றே இங்கே பிழையொலி” என்றார் விதுரர். “எப்போதும் மிகமெல்லிய பிழையொலிகள் தவிர்க்கப்பட முடியாதவை. அவை பெருகும்தன்மை கொண்டவை.” ஆதுரசாலைக்கான இடைநாழியில் அவர்கள் நடந்தனர். ஆதுரசாலையின் முகப்பிலிருந்து இரு ஏவலர் அவர்களை நோக்கிவருவதை சௌனகர் கண்டார். அப்பால் கர்ணனின் அணுக்கரான சிவதர் நின்றிருந்தார். சௌனகர் “அவர் தன் மைந்தனை இன்னமும் வந்து பார்க்கவில்லை அல்லவா?” என்றார். “வரமாட்டார். அவரே முன்பு அரசரை அறைந்து வீழ்த்தியபோதும் வரவில்லை” என்றார் விதுரர். “ஆனால் அவர் கேட்ட அவ்வினா எளிய ஒன்றல்ல.”
“மூத்தவரின் உள்ளம் முதல்மைந்தனை விட்டு விலகாது என்பதற்கான சான்று அது…” தலையை அசைத்தபடி “அனைத்தையும் திசைதிருப்புவது பிதாமகரிடமிருந்து துரியோதனன் பெற்ற தண்டனை… அது பிதாமகரை மாற்றியது. தந்தையின் உள்ளத்தையும் சென்றடைந்துவிட்டது” என்றார் விதுரர். சௌனகர் “நான் அதை அப்போதே எண்ணினேன்” என்றார். “நானும் அன்றிரவு அதை எண்ணினேன். ஆனால் அப்போது என்னுள் ஓர் உவகையே எழுந்தது” என்றார் விதுரர். “எத்தனை சிறிய உணர்வுகளால் ஆனவன் நான் என்று உணரும் தருணங்களில் ஒன்று அது. நான் அடித்த அடிகள் அவை ஒவ்வொன்றும்.”
சிவதர் அவர்களைக் கண்டதும் தலைவணங்கினார். விதுரர் “அங்கர் உள்ளே இருக்கிறாரா?” என்றார். “இருக்கிறார்” என்ற சிவதர் மேலும் தாழ்ந்த குரலில் “அவர் இங்கிருந்து செல்வதேயில்லை” என்றார். “அறிந்தேன்” என்று விதுரர் அவரை நோக்காமலேயே சொன்னார். “இளைய பால்ஹிகரும் உடனிருக்கிறார்” என்றார் சிவதர். “நன்று” என்ற விதுரர் அவரது வருகையை அறிவித்து மீண்ட ஏவலனிடம் தலையசைத்துவிட்டு உள்ளே சென்றார்.
சௌனகர் ஆதுரசாலை குளிர்ந்திருப்பதாக உணர்ந்தார். பித்தளைக்குமிழ்கள் நீர்த்துளிகள் போல் கனிந்து துளித்திருந்தன. தூண்களின் மெழுகுவளைவுகளில் ஒளி வண்ணங்களாக அசைந்தது. அங்கே மூலிகைமணம் நிறைந்திருந்தது. உள்ளே நின்றிருந்த மருத்துவர் விதுரரைக் கண்டதும் அணுகி வணங்கி “பன்னிரு எலும்புமுறிவுகள். மூன்று மூட்டு முறிவுகள்… உள்ளே பல இடங்களில் புண்கள். ஆறுமாதங்களாகும் எழுந்து அமர” என்றார்.
“தன்னினைவிருக்கிறதா?” என்றார் விதுரர். “ஆம், உச்சகட்ட வலி. உடலை அசைக்கலாகாது. ஆயினும் அமைதியாகவே இருக்கிறார்.” விதுரர் “யானைகள் வலிதாங்கும் திறன் கொண்டவை” என்றபின் சௌனகரை நோக்கி தலையசைத்துவிட்டு உள்ளே சென்றார். அவர்களைக் கண்டதும் துரியோதனனின் படுக்கையருகே அமர்ந்திருந்த கர்ணன் எழுந்து நின்றான். அவன் எழுந்ததைக் கண்டபின்னரே அப்பால் ஏதோ சுவடியில் ஆழ்ந்திருந்த பூரிசிரவஸ் அவர்கள் வருவதை உணர்ந்தான். அவனும் எழுந்தான். இருவரும் தலைவணங்கினர்.
“வருக, அமைச்சரே” என்றான் துரியோதனன். அவன் குரல் நோயுற்ற ஓநாயின் முனகல்போல் ஒலித்தது. “ம்” என விழிகளால் அமரும்படி சுட்டிக்காட்டினான். விழிகளை மட்டும் திருப்பி சௌனகரிடம் “நல்வரவாகுக, அந்தணரே” என்றான். அவர் தலைவணங்கி அமர்ந்தார். “உடல்நிலைகுறித்து மருத்துவர் சொன்னார்” என்றார் விதுரர். “ஆம், ஆறுமாதங்களுக்குமேல் ஆகும் மீள. கதை எடுத்துச் சுழற்றமுடியுமா என்று அதன்பின்னரே சொல்லமுடியும்” என்றான் துரியோதனன். விதுரர் சிலகணங்களுக்குப்பின் “தந்தையர் சிலசமயம் அப்படித்தான்…” என்றார். “காட்டுப் பிடியானை தன் வேழமைந்தனை சிலசமயம் மிதித்துவிடுவதுண்டு என்பார்கள்.”
அந்த முறைமைப்பேச்சுக்கு துரியோதனன் மறுமொழி சொல்லவில்லை. “நான் பேரரசரை பார்க்கச் சென்றிருந்தேன்” என்றார் விதுரர். “உங்கள் நலம் என்னவென்று கேட்டார். உங்களை வந்து பார்க்கும்படி அவர் என்னிடம் ஆணையிட்டார்.” கர்ணன் சற்றே அசைவதைக் கண்டதும் விதுரரின் புலன்கள் கூரடைந்தன. “அவரது செய்தியைச் சொல்லவே வந்தேன். உடன் பாண்டவர்களின் தரப்பு என இவரையும் அழைத்து வந்தேன்.” துரியோதனன் சொல்லலாம் என விழியசைத்தான். “அரசே, தங்கள் அரசு இன்றும் தங்கள் தந்தையின் கொடையே. அவர் இருக்கும்வரை அவ்வண்ணமே அது இருக்கும். அவரது ஆணைப்படி இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் இழந்தவை அனைத்தும் அவர்களுக்கு திருப்பி அளிக்கப்படுகின்றன.”
“ஆம், ஆனால் வென்றவர் அரசர். அவருக்கு தனிப்பட்ட உரிமையான தொழும்பர்கள் அவர்கள். அஸ்தினபுரியுடன் எவற்றையெல்லாம் பேரரசர் தன் மைந்தருக்கு அளித்தாரோ அவற்றையெல்லாம் அவர் திரும்பக் கொள்ளட்டும்” என்றான் கர்ணன். இதழ்வளைய வெறுப்புடன் விதுரர் “இது அரச உரையாடல். இங்கு உங்கள் இடமென ஏதுமில்லை, அங்கரே” என்றார். “நான் இன்று அஸ்தினபுரியின் நால்வகைப் படைகளின் பெரும்படைத்தலைவன். அரசர் படுக்கைவிட்டு எழுவதுவரை அரசு என் சொல்லில்தான் இருக்கும். அரசாணையை உங்களுக்கும் அனுப்பியிருந்தோம்” என்றான் கர்ணன்.
“இது எங்கள் குடிக்குள் நிகழும் சொல்கொள்ளல்” என்றார் விதுரர். “உங்கள் சொல் கோரப்படும்போதன்றி எழவேண்டியதில்லை.” கர்ணன் சினத்துடன் “இல்லை, இது அரச மணிமுடியின் உரிமைகுறித்தது. படைத்தலைவனாக நான் அதை அறிந்தாகவேண்டும்” என்றான். “அரசரின் சொல் இதுவே. சென்று உரையுங்கள். தந்தை அளித்தவற்றை மைந்தர் திருப்பி அளிப்பார்கள். தாங்கள் வென்றதை அவர்கள் அளிக்கவேண்டியதில்லை.”
“மூடச்சொல்லுக்கு மறுமொழி இல்லை. அவ்வண்ணமென்றால் அரசர் ஆண்டபோது ஈட்டிய செல்வமெல்லாம் எவருடையவை? அவர் கொண்டுள்ள அனைத்தும் இவ்வரசின் அரியணையில் அமர்ந்து ஈட்டியவை. பசு அது பெறப்போகும் கன்றுகளாலும் ஆனதே” என்றார் விதுரர். கர்ணன் “இச்செல்வம் அஸ்தினபுரியின் செல்வத்தைக்கொண்டோ படைவல்லமை கொண்டோ ஈட்டப்பட்டது அல்ல… எந்த மன்றிலும் இந்தச் சொல் நிற்கும்” என்றான்.
“நான் சொல்லாடவில்லை” என்றான் துரியோதனன். அவன் உடலின் ஒவ்வொரு கணுவும் வலியால் அதிர்வதை கண்ணால் பார்க்கமுடிந்தது. நெற்றியிலும் கன்னங்களிலும் நரம்புகள் பாறைமேல் மாணைநீர்க்கொடி என புடைத்து நின்றன. கைவிரல்களின் நுனிகள் வெட்டுபட்ட தசைபோல அதிர்ந்து அதிர்ந்து இழுத்தன. அவன் பேச முயன்றபோது இதழ்கள் கோணலாகின. “பேசவேண்டியதில்லை, அரசே” என்றான் கர்ணன். “ம்” என்று துரியோதனன் அமைதியானான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து காதுகளை நோக்கி சென்றது. பூரிசிரவஸ் எழுந்து வந்து அதை துடைத்தான்.
“நான் தெளிவாகவே சொல்லவிழைகிறேன். ஒருநிலையிலும் உங்கள் உடன்பிறந்தோரை தொழும்பரெனக் காண உங்கள் தந்தை சித்தமாக மாட்டார். அவரது நூற்றொரு மைந்தரையும் கொன்றாலும்கூட… அதை அவர் வாயிலிருந்து கேட்டபின் இங்கு வந்துள்ளேன்” என்றார் விதுரர். “அதைவிட உங்கள் அன்னையின் முன்சென்று இந்திரப்பிரஸ்தத்தின் அரசியை தொண்டுமகளாக கொண்டுவர முயல்வதென்பது தெய்வங்களுக்கும் அரிது.” துரியோதனன் முனகினான். விதுரர் “ஆகவே, வேறுவழியே இல்லை. அரசாணையின்படி இந்திரப்பிரஸ்தம் பாண்டவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் இழந்தவை அனைத்தும் திருப்பிக்கொடுக்கப்படும்” என்றார்.
“இல்லை. அது நடவாது” என்றான் துரியோதனன். அச்சொற்களின் வலியை அவன் உடல் அதிர்ந்து அதிர்ந்து அடைந்தது. கட்டைவிரல் சுழித்தது. கழுத்துத்தசைகள் இழுபட்டு விம்மின. மெல்ல தளர்ந்து “அதற்கு நான் ஒப்ப இயலாது” என்றான். “அப்படியென்றால் அது போருக்கு அறைகூவுவதே. உங்களையும் உங்களுக்கு ஆதரவாக வருபவர்களையும் சிறையிட அரசாணை வரும்” என்றார் விதுரர். “பேரரசர் ஆணையிட்டுவிட்டார். அதை ஓலையாக்குவதற்கு முன் பேசிவிட்டுச்செல்லலாம் என்றே நான் வந்தேன்.”
“ஆம், அவர் அதையே சொல்வார் என நான் அறிவேன்” என்றான் துரியோதனன். “ஆனால் சரியோ பிழையோ இனி பின்னகர்தல் இல்லை. இனி நான் சூடும் பெரும்பழி என பிறிதில்லை. இப்பாதை சென்றுசேருமிடம் களப்பலி என்றால் அவ்வாறே ஆகுக! அக்களத்தில் நான் பெறுவது தந்தையைக் கொன்ற பழி என்றாலும் எனக்குத் தயக்கமில்லை.” விதுரர் தளர்ந்த குரலில் “அரசே” என்றார். “நான் இப்பிறவியில் இனியொரு முடிவை எடுக்கப்போவதில்லை. என் குலம் மட்டுமல்ல இந்நாடே அழியினும் சரி, எரிமழை எழுந்து இப்புவியே அழியினும் சரி” என்று துரியோதனன் சொன்னான். “இனியில்லை. இதுவே என் முடிவு. ஒரு சொல் மாற்றில்லை.”
“அரசே, என்ன சொல்கிறீர்கள் என்று உணர்கிறீர்களா? இன்னமும்கூட நீங்கள் திரும்பிவர வழியிருக்கிறது.” துரியோதனன் தன்னையறியாமல் சிரித்துவிட்டான். உடனே வலியுடன் உடலை இறுக்கி கண்களை மூடினான். இமைகள் வண்ணத்துப்பூச்சி சிறகுகள் போல அதிர்ந்தன. திறந்து விழிகள் சிவந்து கலங்கி வழிய “என்ன வழி? தருமன் என் பிழைபொறுத்தருள்வான். அவன் கருணையை ஏற்று இங்கு நான் வாழவேண்டும் அல்லவா? அமைச்சரே, இனி வளைதல் இல்லை. இறப்புவரை… இறப்பும் அவ்வண்ணமே” என்றான்.
அவன் உடல் உச்சவலியில் துள்ளத்தொடங்கியது. “ஆ” என விலங்குபோல முனகியபடி தலையை அசைத்தான். உதடுகளைக் கடித்த பற்கள் ஆழ்ந்திறங்க குருதி கனிந்து முகவாயில் வழிந்தது. “மருத்துவர்…” என்று கர்ணன் சொன்னான். பூரிசிரவஸ் எழுந்து வெளியே ஓடினான். மூச்சிறுகிச் சாகும் விலங்கின் ஒலியில் முனகியபடி துரியோதனன் துவண்டான். மருத்துவர்கள் மூவர் செம்புக்கலத்துடன் அருகே வந்து அகிபீனா புகையை அவன் முன் வைத்து தோல்குழாயை அவன் மூக்கில் பொருத்தினார்கள். மூச்சிழுத்து விட்டு அவன் இருமினான். ஒவ்வொரு இருமலுக்கும் உடல் துள்ளி அமைந்தது. பின் இருமலுடன் குருதித்துளிகள் தெறிக்கத்தொடங்கின. மார்பிலும் தோளிலும் போடப்பட்டிருந்த வெண்ணிறமான கட்டுகள் மேல் கருமை கலந்த கொழுங்குருதிச் சொட்டுகள் விழுந்து ஊறி மலர்ந்தன.
மெல்ல அவன் விழிகள் மேலே செருகிக்கொண்டன. கைவிரல்கள் ஒவ்வொன்றாக விரிய கால் தளர்ந்து இருபக்கமும் விழுந்தது. தாடை தொங்க வாய் திறந்து பற்களின் அடிப்பக்கம் தெரிந்தது. மருத்துவர்கள் குருதிபடிந்த அவன் வாயையும் மூக்கையும் துடைக்கத் தொடங்கினர். அவன் மூச்சு சீரடைவதை விதுரர் நோக்கிக்கொண்டிருந்தார். பின்பு பெருமூச்சுடன் எழுந்தார். கர்ணன் “சென்று தந்தையிடம் சொல்லுங்கள் அமைச்சரே, போரில் அவர் வெல்லமுடியாதென்று. அவரைச் சிறையிட்டுவிட்டு இந்நகரை அரசர் ஆள்வார். அந்த இழிமக்கள் இங்கே தொழும்பர்பணி செய்வார்கள்… ஐயம் வேண்டியதில்லை” என்றான்.
“நீ விரும்புவதுதான் என்ன?” என்று வெறுப்பால் சுருங்கிய முகத்துடன் விதுரர் கேட்டார். “கீழ்மகனே, உனக்கு சூதர்சொல்லில் அமையவிருக்கும் இடமென்ன என்று அறிவாயா?” கர்ணன் “எதுவானாலும் சரி, அது என் தோழனுக்கும் உரியதே. நான் இங்கு அவருடன் இருப்பேன். மூன்று தெய்வங்களும் வந்து எதிர்நின்றாலும் சரி” என்றான். விதுரர் மீண்டும் தளர்ந்து “இதெல்லாம் என்ன என்று புரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்குச் சிற்றறிவு இல்லை” என்றார்.
“அமைச்சரே, நீங்கள் இங்கு வந்தது ஏனென்று தெரியும். பிதாமகர் பீஷ்மர் எங்களை ஆதரித்துவிட்டார். ஆகவே உங்களுக்கு வேறுவழியில்லை” என்றான் கர்ணன். “மூடா” என்று சினத்துடன் சொன்ன விதுரர் மீண்டும் தணிந்து “பிதாமகர் அல்ல, முக்கண்ணனே போர்முகம் கொண்டாலும் இளைய யாதவரை வெல்லமுடியாது…” என்றார். கர்ணன் புன்னகை விரிய “அதை களத்தில் பார்ப்போம்” என்றான். “பரசுராமரின் வில்லுக்கும் போரில் நின்றாடும் கலை தெரியும் என உலகம் அறியட்டும்.”
விதுரர் “போர்தான் தீர்வென்றால் அதுவே நிகழட்டும்” என்றபின் வெளியே நடந்தார். கர்ணன் அவருக்குப் பின்னால் “துவாரகையில் இளைய யாதவர் இல்லை என்பதையும் நான் அறிவேன், அமைச்சரே. நீங்கள் அனுப்பிய செய்தி அங்கே சென்றுசேர்வதற்கே நாளாகும். அது இளைய யாதவரைச் சென்றடைந்து மீள மீண்டும் நாட்களாகும்” என்றான். அவர் திரும்பிப் பார்க்கவில்லை. கர்ணன் உரக்கச் சிரித்து “அதை அறிந்தே இளைய யாதவர் அகன்றிருக்கிறார் என்று அறியமுடியாத அளவுக்கு அறிவிலிகள் அல்ல நாங்கள்” என்றான்.
அவன் சொற்களைக் கேளாதவர் போல விதுரர் வெளியே சென்றார். வெளியை அடைந்ததும்தான் அறைக்குள் சூழ்ந்திருந்த மூலிகைக்காற்று தன்னை அழுத்திக்கொண்டிருந்ததை சௌனகர் உணர்ந்தார். “தெய்வங்களுக்குரிய உறுதி…” என்றார் சௌனகர். “ஆம், என்னை அச்சுறுத்துவது அதுவே” என்றார் விதுரர். “கற்களிலேயே தெய்வங்களை அமைக்கவேண்டும் என்று சொல்லப்படுவது ஏன் என்று ஒருமுறை கலிங்கச் சிற்பி சொன்னார். கல்லென்று காலத்திலும் எண்ணத்திலும் நிலைகொண்டவை அவை. நிலைகொள்ளாமையே மானுடம். நிலைபேறு எதுவென்றாலும் அது தெய்வத்தன்மையே.”
“நாம் செய்வதற்கொன்றே உள்ளது” என்றார் அவரைத் தொடர்ந்துசென்ற சௌனகர். “பிதாமகரிடம் பேசுவோம். அவர் புரிந்துகொண்டார் என்றால் போதும்.” விதுரர் “இல்லை, அவரிடம் பேசமுடியாது” என்றார். “முதியவர்கள் ஒருகட்டத்திற்குமேல் செவியிலாதோர் ஆகிவிடுகிறார்கள்.” சௌனகர் “ஆம், எந்த ஒரு மறுமொழியையும் அவர் முதலிரு சொற்களுக்குமேல் கேட்பதில்லை. பொறுமையிழந்து அவர் விழிகள் அசையத் தொடங்கிவிடுகின்றன” என்றார். “நாம் சந்திக்கவேண்டியவர் கணிகர்தான்” என்றார் விதுரர். அவரே மேலே சொல்லட்டுமென சௌனகர் காத்திருந்தார். “அவரது காலடிகளில் விழுவோம்… அவர் அருள்புரியட்டும்” என்றபின் விதுரர் “செல்வோம்” என்றார்.