இறந்தவனின் இரவு

1

குமரகுருபரன்

குமரகுருபரன் விருது

வெளிநாடு போவதற்காக செல்பேசியை எடுத்து எண்களை பார்த்துக்கொண்டிருந்தேன். குமரகுருபரனின் எண் இருந்தது. அழிக்கவில்லை. ஜெயகாந்தன் எண் இதில் இருக்கிறது. பாலு மகேந்திராவின் எண் இருக்கிறது. ஒரு எண்ணாக அவர்கள் எப்போதும் என் மனதில் இருந்ததில்லை. ஆனால் இறந்தபின்னர் எண்ணில் அவர்கள் எஞ்சியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

குமரகுருபரனை அவர் இருந்தபோது நான் இத்தனை விரும்பியதில்லையா? அவர் இருந்தபோது இன்னும்கொஞ்சம் தொலைபேசியில் அழைத்துப்பேசியிருக்கலாமோ? நான் பேசும்போதே நாணிக்குழற தொடங்கியிருக்கும் அவரது குரலை நினைவுகூர்கிறேன். இன்னும் கொஞ்சம் அணுகியிருக்கலாமோ? இருப்பவர்களிடமிருந்தெல்லாம் இத்தனை அகல்வதனால்தான் நான் இறந்தவர்களிடம் அத்தனை அணுக்கமாக ஆகிறேனா என்ன?

இறந்தவர்களை அத்தனைபேரும் மெல்லமெல்ல மறந்துவிடுவதைக் காண்கிறேன். இன்று ஒவ்வொருநாளும், ஒருநாள்கூட விடாமல், லோகித தாஸை நான் நினைப்பதுபோல அவர் மைந்தர்களோ மனைவியோ நினைக்கிறார்களா? இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் சுந்தர ராமசாமி எனக்கு ஒரு வாழும் ஆளுமையாகவே எஞ்சுகிறார். ஒருமணிநேரம் உரையாடலென்றால் அவர் வராமலிருக்கமாட்டர் என்கிறார்கள் நண்பர்கள்

நான் இறந்தவர்களின் உலகில்தான் கூடுதலாக வாழ்கிறேனா என்ன? கடந்தகாலங்கள். செறிவான உணர்வுகள் கூடியவை. நிகழ்காலத்தின் அலைவுகளும் மறைவுகளும் அற்றவை. குமரகுருபரன் இப்போதிருக்கும் உலகிலிருந்துகொண்டு என்னை மேலும் அணுக்கமாக அறிவார் என்று தோன்றுகிறது. இந்த நள்ளிரவில். இந்தத்தனிமையில் குமரகுருபரனுக்காக ஒரு நீண்ட மூச்சு.

ஆனால் நான் அழுததே இல்லை. தற்கொலைசெய்துகொண்ட அன்னைக்காக, தந்தைக்காகக்கூட. சுந்தர ராமசாமியின் சடலத்தின் முன் கதறிவிட்டு மீண்டுவந்த யுவன் சொன்னான்,  ‘போய்ப்பார்த்துவிட்டுவா. அழுதிருவே. அவ்ளவுதாண்டா. ஒருதடவ அழுறதுக்கப்பால வாழ்க்கையிலே மரணத்துக்கு பெரிய மதிப்பெல்லாம் கெடையாது’ நான் சென்றுபார்க்கவில்லை. அழவும் இல்லை

குமரகுருபரனுக்காகவும் ஒருதுளிக் கண்ணீர்விடவில்லை. ஒரு மெல்லிய நடுக்கமாக மட்டும் அவர் இறப்புச்செய்தியை அறிந்தேன். சாத்தியமான அனைத்துச் சொற்களையும் அள்ளி அவர் மேல் போட்டுமூடிக்கொண்டேன். இவ்விரவில் இந்தத்தனிமையில் மிக அந்தரங்கமாக குமரகுருபரனைத் தொடுகிறேன். இரவுகளில் வாழ்பவர்களால் இறப்புகளைக் கடந்துசெல்லமுடியாது..

முந்தைய கட்டுரைசிங்கப்பூர் பயணம் -கடிதங்கள் 2
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 6