தஞ்சை தரிசனம் – 3

அக்டோபர் 18, காலை தஞ்சை விடுதியில் இருந்து கிளம்பி தஞ்சை பெரியகோயிலைப் பார்க்கச்சென்றோம். இந்தவருடம் ஆயிரமாவது பிறந்தவருடத்தைக் கொண்டாடும் இந்த கலைப்பொக்கிஷம் ஓர் அபூர்வமான பாடலைப்போல மீண்டும் மீண்டும் பார்க்கத்தக்கது. எத்தனை முறைப்பார்த்தாலும் கண்முன் மீண்டும் புதிதாக நிகழ்ந்துகொண்டே இருப்பது.

நான் 1981ல் ஊரைவிட்டு ஓடிவந்து முதன்முறையாக இதைப்பார்த்தபோது சொல்லவிந்து அப்படியே நின்றிருக்கிறேன். பிரம்மாண்டமான அமைப்புகளில் பேரழகு கைகூடுவதென்பது மிக அபூர்வமான ஒரு சாத்தியக்கூறு. ஒழுங்கும் முழுமையும் அத்தகைய பெரும் அமைப்புகளில் எளிதில் சாத்தியமாவதில்லை. ஏனென்றால் மனிதன் மிகச்சிறியவன் என்பதே. மேலும் நம் பார்வையில் அழகு என்பது நம்முடைய எளிய பார்வைக்குள் அடங்கும் பொருட்களிலேயே கண்டடையப்படுகிறது. நம்மை மீறி விரியும் ஒன்றில் நாம் ஓர் இனியபயங்கரத்தை அல்லது நிம்மதியின்மையை மட்டுமே அடைகிறோம்.

ஆனால் செவ்வியலின் சவால் என்பது ’பிரம்மாண்டமான பேரழகு’ என்பதை அடைவதில்தான் உள்ளது. மனிதனின் படைப்பூக்கம் அவனுடைய கைக்குள் அடங்கும் பொருட்களில் ஆரம்பிக்கிறது. அதில் அவன் அடையும் வெற்றி அவனை மேலும்மேலும் என உந்துகிறது. வானளாவ பிரபஞ்சமாளாவ விரிய விரும்புகிறான். ‘நான் படைப்பதனால் என்பெயர் இறைவன்’ என்று அவன் கலையுள்ளம் விம்மிதம் கொள்கிறது. அதுவே செவ்வியல்கலைஞனின் மன அமைப்பு. விரிய துடிப்பதே அவன் கலையின் ஆதார இயல்பு

புதுக்கோட்டை முதல் பயணத்தை தொடங்கும்படி சொன்னவர் தமிழகச் சிற்பக்கலை குறித்த நுண்ணிய புரிதல் கொண்ட தமிழினி வசந்தகுமார். முதலில் குடுமியான்மலை போன்றகுடைவரைகோயில்கள். அனேகமாக அவையெல்லாம் பல்லவர்காலத்தில் உருவானவை. அதன்பின் சிறிய உருண்ட கோபுரங்கள் கொண்ட கொடும்பாளூர் பாணி கோயில்கள் உருவாயின. இவை விஜயாலய சோழன் காலகட்டத்தைச் சார்ந்தவை. சிற்பக்கலை படிப்படியாக தன்னை மேம்படுத்திக்கொண்டபின் செவ்வியலை நோக்கிச் சென்றது. தஞ்சை பெரியகோயில் சோழ சிற்பக்கலையின் செவ்வியல் பாணியின் முதல்பெரும் உதாரணம்.

அதுவரை சோழ சிற்பக்கலை பயின்றுவந்த அத்தனையும் பெரியகோயிலில் மையம் கொண்டன. மணல்க்கல்லை மென்மையாகச் செதுக்கி சிலையாக்கும் நுட்பம். சிறிய சிறிய சிகரங்களாக கோயிலை அமைப்பது. அவற்றை தனித்தனியாக செதுக்கி மேல்மேலாக அடுக்கி எழுப்பும் நுண்ணிய கணிதம், அனைத்தும். தஞ்சை பெரியகோயிலின் முதல் அற்புதம் அதை தூரத்தில் இருந்து பார்த்தால் சிறிய செப்புத்தேர் போல அது தெரிவதுதான். நெருங்க நெருங்க அது அப்படியே தலைக்கு மேலேறிவிடுகிறது.

எல்லா கோணங்களிலும் ஒரே அளவுள்ள கூம்புக்கோபுரம். அருகே சென்று நின்றால் அதன் சிகரங்களின் தொடுப்புவிளிம்பு மெல்லிய வளைவுடன் மேலே செல்வதைக் காணலாம். பலவகைகளிலும் கஜூராகோவின் காந்தரிய மகாதேவர் ஆலயத்தை நினைவூட்டும் கட்டிடக்கலை. இரு கோயில்களும் ஏறத்தாழ சம காலத்தில் உருவானவை. கிபி 1050 ல் சந்தேலா ராஜபுத்திரர்களால் கட்டப்பட்ட காந்தரிய மகாதேவர் கோயில் தஞ்சை கோயிலின் பாதி அளவுள்ளது. இன்னும் பலமடங்கு நுட்பமான சிற்பவேலைப்பாடுகள் கொண்டது. இரு கோயில்களுமே மணற்பாறைகளால் ஆனவை.

தஞ்சைகோயிலை பார்த்துக்கொண்டிருந்தபோது கம்பராமாயணத்தை எண்ணிக்கொண்டேன். இரண்டும் சோழர்கால சாதனைகள். இரண்டுமே தமிழ்ச் செவ்வியலின் உச்சங்கள் பேரமைப்பின் பேரழகு. ஒவ்வொரு துளியும் முழுமையுடன் ஒன்றுடன் ஒன்றாக இணைந்து மேலும் மேலும் முழுமையாகிக்கொண்டே செல்லும் கலைச்செறிவு. தலைமைச் சிற்பி வீரசோழன் குஞ்சர மல்லனான ராஜராஜ பெருந்தச்சன் கல்லில் எழுதிய கம்பன்.

தஞ்சையில் இருந்து கிளம்பி மீண்டும் திருவையாறு சென்றோம். தமிழகத்தின் பஞ்சாப் என்று திருவையாறைச் சொல்ல்லாம். காவேரியின் கிளைகளான காவேரி குடமுருட்டி வெண்ணாறு வெட்டாறு வடவாறு என ஐந்து ஆறுகள் பாயும் நிலம் இது. திருவையாறுக்கு மையமாக உள்ளது ஐயாறப்பன் அல்லது பஞ்சநதீஸ்வரர் கோயில். தேவிக்குப் பெயர் அறம்வளர்த்தநாயகி அல்லது தர்ம சம்வர்த்தினின். கோயில் கிட்டத்தட்ட 15 ஏக்கர் பரப்புள்ளது. இரண்டு மாபெரும் கோட்டைகளால் சூழப்பட்டது. கோயில் முகப்பின் ஏழுநிலைகள் கொண்ட ராஜகோபுரம். ஒன்றுள் ஒன்றாக ஐந்து பிராகாரங்கள்.

இங்குள்ள குளத்துக்கு சூரியபுஷ்கரணி என்று பெயர். இங்கே கைலாயக்காட்சியை காண அப்பர் பாடியபோது சிவபெருமான் தோன்றியதாக தொன்மம் உள்ளது. பொதுவாக சிவ ஆலயங்களில் சிவன் ஐம்பூதங்களில் ஏதோ ஒன்றால் ஆனதாகச் சொல்லப்படும். இங்கே உள்ள லிங்கம் மண் [அப்பு]வால் ஆனது. நாங்கள் சென்றபோது கோயிலில் அனேகமாக கூட்டமே இல்லை. குளிர்ந்த கல்காடாக தூண்கள் நின்றிருக்க பிராகாரங்களில் இருளும் ஒளியும் கலந்து விரிந்துகிடந்தன. காலைபூஜை முடிந்து ஐயாறப்பரும் தேவியில் கருவறை ஒளியில் பட்டு ஒளிர அமர்ந்திருந்தார்கள்.

திருவையாறில் இருந்து திருக்காட்டுப்பள்ளி கோயிலுக்குச் சென்றோம். சின்னஞ்சிறு ஊர். சந்தைபோல கடைத்தெரு ஓசையிட்டுக்கொண்டிருந்தது. கோயில் பழைமையானது. மூலக்கருவறை விஜயாலயசோழன் காலத்தையது. முதலாம் ஆதித்யசோழன் காலத்து திருப்பணிபற்றி கல்வெட்டுகள் உள்ளன. அதைச்சுற்றி மேலும் மேலும் கட்டி எழுப்பியிருந்தார்கள் சோழர்கள். இந்த விஷக்இக்கோயில் சிவலிங்கம் நெருப்பாலானது. அக்னீஸ்வரம் என்று பெயர். லிங்கத்தின் மீது ஒரு செம்புக்குடுவையில் இருந்து எந்நேரமும் தைலம் சொட்டிக்கொண்டிருக்கும்.

கோயில் தெருவிலிருந்து நாலைந்தடி ஆழத்தில் இருந்தது. பொதுவாக பழைய கோயில்கள் இவ்வாறு மண்ணில் புதைந்துள்ளன. காரணம் எந்த விதமான பிரக்ஞையும் இல்லாமல் கோயிலைச்சுற்றி மேல் மேலாக தார்ச்சாலைகளை போட்டுக்கொண்டே செல்வதுதான். விளைவாக கோயில் குளத்துக்குள் செல்கிறது. மழைநீர் முழுக்க கோயிலுக்குள் வந்து சேர்ந்து அதன் அஸ்திவாரத்தை இளக்கிவிடுகிறது. தொன்மையான கோயில்களை மத்திய தொல்பொருள்துறை கவனமாகவே பேணுகிறது. கோயிலைச்சுற்றி மேடு உருவாக விடுவதில்லை. அகழ்ந்தெடுத்தா ஆலயங்களில் நீர் தேங்க அனுமதிப்பதும் இல்லை. தமிழகத்தின் எல்லா கோயில்களையும் மத்திய தொல்பொருள்துறை எடுத்துக்கொண்டால்கூட நல்லது என்று பட்டது

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து திருமழபாடி சென்றோம். கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது இத்தலம். சிவபெருமானுக்கு வைத்தியநாதர் என்று பெயர்

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

என்ற புகழ்பெற்ற பாடலை சுந்தரர் பாடியது இந்த தலத்தைவைத்துத்தான். இதற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு என்றார்கள். கோயில் சராசரி அளவுள்ளது. பெரிய பிராகாரங்களில் மதிய வெயில் பெரிய வெள்ளித்தூண்கள் போல ஆங்காங்கே இறங்கி நின்றது.

கொள்ளிடம் பாலைவனமொன்றின் வால்போல மணல்நீட்சியாகக் கிடந்தது. டிசம்பைல் அது சட்டென்று மாபெரும் நதியாக ஆகிவிடுவதைக் கண்டிருக்கிறேன். அதன் விரிவு காரணமாகவே நீரின் ஓட்டத்தை நம்மால் உணரமுடியாது. கொள்ளிடம் கரையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம்

எங்களுக்கு தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது சுவாமிமலை அருகே உள்ள ஒரு ஓய்விடத்தில். இண்டெக்கோ நிறுவனத்தின் [ INDeco Hotels] இந்த ஓய்விடம் உண்மையில் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவான ஓர் அக்ரஹாரம். அங்கே இருந்த வீடுகளை வாங்கி மேலும் பலவீடுகளை அதேபோல செய்து ஒரு சிறு கிராமமாக ஆக்கியிருக்கிறார்கள். பழையபாணி சுருள் ஓட்டுக்கூரைகொண்ட , சிவப்பு சிமிட்டி போட்ட திண்ணைகளுடன் கூடிய, வீடுகள். வெயில் பொழியும் உள் முற்றம். சுற்றிலும் திறந்த பெரிய திண்ணைகள். பழங்கால புகைப்படங்கள். வீட்டுச்சாமான்கள். உள்ளே குளிர்சாதன அறைகள். ஆனால் பழைய கதவுகள் பழையபாணி கட்டில் மெத்தைகள்.

விடுதியில் இருந்து கிளம்பி நீரதநல்லூர் சென்றோம். ஒருவர் கொள்ளிடத்தின் மிக அழகிய காட்சி தெரியும் ஊர் என அதைச் சொல்லியிருந்தார். ஆனால் அப்போது அரியலூருக்கான நான்குவழிச்சாலை அவ்வழிச்செல்வதற்காக மாபெரும் பாலம் கட்டும் வேலை நடந்துகொண்டிருந்தது. ஒரே கான்கிரீட் சிமிட்டி கம்பிக்குவியல். ஆகவே அங்கிருந்து தாராசுரம் சென்றோம்.

அந்திமயங்கும்போது ஓரு முக்கியமான இடத்தில் இருக்கவேண்டுமென்பதே எண்ணம். தாராசுரம் அதற்கேற்ற ஊர்தான். தஞ்சைபெரியகோயிலின் தம்பி. மஞ்சள் மயங்கி சிவந்து அணைகையில் அக்கோயிலின் செந்நிற கற்கோபுரம் பொன்னாலான மணிமுடிபோல சுடர் விட்டு உருகி உருகி வழிந்துகொண்டிருந்ததை கண்டு இரவுவரை அமர்ந்திருந்தோம்

Swamimalai

திருவையாறு

சோழர் கலை

இந்தியப் பயணம் 15 – கஜுராஹோ

முந்தைய கட்டுரைகாந்தி கடிதங்கள்
அடுத்த கட்டுரைதஞ்சை தரிசனம் – 4