வணக்கம் ஜெ,
நான் கல்லூரியில் படிக்கும்பொழுது ஏதாவது ஒரு பிரபல நடிகரின் திரைப்படம் வெளியாகிவிட்டால் நிச்சயம் ஒரு வாரத்திற்கு உள்ளாவது பார்த்துவிட வேண்டும். இல்லையேல் சமூகத்திற்கு எதிராய் மிகப்பெரிய குற்றமிழைத்தவன்போல் நம்மைப் பார்ப்பார்கள். இன்னும் நீ தல/தளபதி/தலைவர் படத்தைப் பாக்கலயா? நீ வாழ்றதே வேஸ்ட் என்பார்கள். மிகைபடுத்திச் சொல்லவில்லை. உண்மையிலேயே எனக்கு நிறைய முறை நேர்ந்தது இது.
இந்த அவமானங்களுக்கு அஞ்சியே பிடிக்கிறதோ இல்லையோ படத்தைப் பார்த்துவிடுவோம். அதன் பிறகு அடுத்த பிரபல நடிகரின் படம் வருகிறவரை இந்தப் படத்தைப் பற்றிய விவாதம் ஓடிக்கொண்டிருக்கும். ஒவ்வொருவரும் இயக்குனர் அளவிற்கு பேசிக்கொண்டிருப்பார்கள். சினிமாவைத் தவிர்த்த வேறு விவாதங்கள் எல்லாம் பெரும்பாலும் இருக்காது. எப்போதாவது சிறு குழுக்களுக்குள் அரசியல் விவாதம் இருக்கும். இலக்கியம் எல்லாம் கிடையாது. ஏனென்றால் யாருக்கும் தெரியாது.
உண்மையில் இந்த விவாதங்களில் தனித்து விடப்படலை எவனும் விரும்பமாட்டான். அதற்காகவாவது புதிய படத்தை அப்பொழுதே பார்த்துவிடத்துடிப்பான். முதல்நாள் முதல்காட்சியை கல்லூரியைக் கட் செய்துவிட்டு பார்க்கிறவனைத்தான் திரையில் பார்த்த நாயகனின் பிரதியாக கல்லூரிக் குழுக்கள் ஏற்றுக்கொள்ளும். அப்படி நாயகனாக விரும்புகிற ஒவ்வொருவனும் முதல்நாள் முதல்காட்சியைப் பார்க்கத் துடிப்பான். அது ஒரு கவுரவப் பிரச்சனை.
சமூகவலைதளங்களில் இன்னொரு கூட்டம் உண்டு. ஒரு நடிகரை இகழ்ந்தும் இன்னொருவரைப் புகழ்ந்தும் பதிவு செய்வார்கள். அதற்குப் பிறகு கல்லூரி விவாதத்தின் நீட்சியாக அங்கே வந்து இளைஞர்கள் மாறி மாறி வசை பொழிவார்கள். சாதாரண வசைகள் அல்ல. தனக்குப் பிடிக்காத நடிகரைப் பற்றி, அவர் குடும்பத்தைப் பற்றி, அவர் ரசிகனின் தாயைப் பற்றிய வசைகளை, அவன் பிறப்பைப் பற்றிய வசைகளைச் சொல்வார்கள்.
என் நெருங்கிய நண்பனொருவன் ஒருமுறை அவனுக்குப் பிடித்த நடிகரைப்பற்றி இரண்டொரு வார்த்தைகள் பேசியதற்காக என் கழுத்தை நெரிக்க ஆரம்பித்துவிட்டான். வலிக்குது என்று பலமுறை கத்திய பிறகுதான் விட்டான். அவனிடம் ஊறியிருந்த அந்த வன்மம் நான் எதிர்பாராதது. பல ஆண்டு நட்பைக்கூட உதாசீனப்படுத்திவிடக்கூடிய மனநோயை ,சினிமா தமிழ்ச்சூழலில் கொண்டுவந்திருப்பதை என்னால் அன்றைக்கு நம்பவே முடியவில்லை.
தமிழகத்தில் சினிமா இப்படிப்பட்ட நிலையை தமிழர் வாழ்வியலில் அடைய முக்கியக்காரணம் குழு மனப்பான்மையை இளைஞர்கள் முன்னெடுப்பது என்று தோன்றுகிறது. சமூக நன்மைக்காய் ஒருபோதும் இக்குழு திரள்வதில்லை என்பது நமக்குத் தெரிந்ததே. பெரும்பாலான சமூகப் பிரச்சனைகளில் குழு மனப்பான்மைதான் நம்மை வழி தவறச் செய்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. மைய நீரோட்டத்தில் கலக்காத ஒருவனாக, தனித்தியங்கும் ஒருவனைச் சூழல் தொடர்ந்து புறக்கணிக்கிறபொழுது அவனும் குழு மனப்பான்மைக்குள் இணைந்துவிட வேண்டிய தேவை வந்துவிடுகிறது.
ஒரு பெண் நம்மை கடந்துபோகிறாள் என்று கொள்வோம். நாமும் தனியாக இருந்தால் அவளைப் பார்த்து வெறுமனே புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டுக் கடந்துவிடுவோம். குழுவாக இருந்தால் நினைத்துப் பாருங்கள். அந்தப் பெண்ணை வெட்கப்படச்செய்து, கூனிக்குறுகச் செய்துவிடுவோம். கலப்புத் திருமணம் பெற்றோர் சம்மதமின்றி செய்து கொள்கிறார்கள். ஆனால் ஒரு காலத்திற்குப் பிறகு அதை ஏற்றுக்கொள்ளப் பெற்றோர் முன்வந்தாலும் அதைத் தடுப்பது எது? அவர்களைத் தொடர்ந்து வெறியேற்றுவது யார்? சாதிக் குழு என்னும் குழு மனப்பான்மை.
சினிமா பைத்தியங்களாய்த் திரிவதும் குழுவாகத்தான். இந்தக் குழுவிலிருந்து பிரிந்து தனித்தியங்கும் ஒருவன் மாற்றுச் சிந்தனையை முன்னெடுப்பான். ஆனால் மைய நீரோட்டம், தனித்தியங்குபவனைத் தடுத்துக்கொண்டே இருக்கும். என் வீட்டிற்கு அருகில் எனக்கு நண்பர்கள் இல்லை. குழு மனப்பான்மைக்குள் சிக்கிய கல்லூரி நண்பர்களுடன் தேவையான அளவிற்கே பேசுகிறேன். அதனால் என்னைச் சுற்றிக் குழுக்கள் இல்லை. மகிழ்ச்சியாக, எனக்குப் பிடித்தாற்போல் வாழ முடிகிறது.
தனித்தியங்கும் சூழல் ஒவ்வொருவருக்கும் வாய்க்கிறபொழுது, இலக்கிய வாசிப்பு விசாலமாகிறபொழுது இந்த சினிமாசார் சூழல் மாற வாய்ப்பிருக்கிறது. ஆனால் எனக்குப் பெரிய நம்பிக்கை இல்லை. இந்த தலைமுறையைவிட படுமோசமாக அடுத்த தலைமுறை உருவாகிக்கொண்டிருப்பதைக் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு ஏதும் நம்பிக்கை இருக்கிறதா?
அகில் குமார்
அன்புள்ள அகில்,
சிலமாதங்களுக்குமுன் ஒரு புதிய ஆப்பிள் ஐஃபோன் வகை அறிமுகம் செய்யப்பட்டது. அதற்காக உலகம் முழுக்க இதைவிட பலமடங்கு பிரம்மாண்டமான வெறி உருவாக்கப்பட்டது. ஒவ்வொன்றும் அரைலட்சம் ரூபாய் மதிப்புள்ளவை அந்த செல்பேசிகள். பல கோடிபேர் அவற்றை வாங்கினர். அவற்றின் பல்வேறு குறைகளை இப்போது சொல்கிறார்கள். அது ஒரு தோல்வி என்றுகூட இன்று ஒருவர் சொன்னார். ஆனால் பலகோடி ரூபாய்க்கு அவை விற்கப்பட்டுவிட்டன
புதிய கார்கள் பைக்குகள் போன்ற புதிய நுகர்பொருட்கள் சந்தைக்கு வரும்போது இப்படி ஓர் அலை உருவாக்கப்படுகிறது. அவையெல்லாம் இன்றைய வணிகத்தின் ஒரு வழிமுறை மட்டுமே. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கலாம். மாற்றுக்கருத்து இருந்தால் எதிர்க்கலாம். குறைகள் கண்டால் எதிர்த்துச் செயல்படலாம். ஆனால் ஏதோ புதிய சமூக அநீதியைக் கண்டதுபோல கொதிப்பதெல்லாம் பாசாங்குத்தனம்.
சிலர் பாசாங்கு செய்கிறார்கள். பலர் மக்கள் அந்த வணிகப்பிரச்சார அலையில் அடித்துச்செல்லப்படுவதுபோல அதை எதிர்த்து கொந்தளிக்கும் மாற்று அலையால் அடித்துச்செல்லப்பட்டு தாங்களும் கொந்தளித்துக் கருத்துச்சொல்கிறார்கள், அவ்வளவுதான். கொந்தளிப்பவர்களுக்கு ஒரு அடையாளம் கிடைக்கிறது அல்லவா?
கபாலி போன்ற படங்களுக்கான கொண்டாட்டங்கள் மேலே சொல்லப்பட்டதுபோன்ற வணிக உத்திகளே. அசலுக்குமேல் மதிப்பு உருவாக்கப்படவேண்டும் என்னும் வணிக நோக்கத்தின்பொருட்டே அந்த அலை உருவாக்கப்படுகிறது என்பதும் உண்மைதான். ஆனால் அவை நுகர்பொருட்கள் அல்ல, கூட்டுக்கேளிக்கைகள். கூட்டுக்கேளிக்கைகளுக்கு மக்கள் கூட்டாக ஒன்று சேரவேண்டிய அவசியம் உள்ளது. ஆகவேதான் மக்களே அந்த அலையில் தங்களை விரும்பி ஒப்புக்கொடுக்கிறார்கள்.
கேளிக்கையில் கூட்டான கேளிக்கை என்று வேறுபட்டது. ஒரு பாடலை நீங்கள் தனியறைக்குள் அமர்ந்து கேட்டு ரசிப்பது ஓர் அனுபவம். ஒரு திருவிழாப் பந்தலில் பல்லாயிரம்பேருடன் அமர்ந்து கேட்பது முற்றிலும் வேறு அனுபவம். அதற்காகவே நான் திருவையாறு சென்றுகொண்டிருந்தேன். இன்று தொலைக்காட்சி வந்தபின்னரும் பெரும் மைதானங்களில் கூடி விளையாட்டுக்களை பார்ப்பவர்களின் மனநிலை அதுதான்.
சமீபத்தில் ஐரோப்பியக் கோப்பை கால்பந்து விளையாட்டு நடந்துகொண்டிருந்தபோது பாரீஸில் இருந்தேன். கால்பந்து ரசிகர்களின் களிவெறியை கண்கூடாகக் கண்டேன். மக்கள் பெருந்திரளாக மாறி துள்ளித்துள்ளி ஆர்ப்பரித்தனர். முகங்களில் வண்ணங்களைப்பூசியபடி சாலைகளில் கூச்சலிட்டுக்கொண்டு பெருகிச்சென்றனர். வெறிகொண்டு நடனமிட்டனர். அவர்களின் அந்த பெரும்பரவசத்தை வேறு எதைக்கொண்டும் ஈடு செய்யமுடியாது.
இன்றைய நவீன வாழ்க்கையின் ஒரு கேளிக்கை அது என்றால் அதற்கு எதிரான வெற்றுக்கசப்புகளால் என்ன பயன்? மக்கள் எந்நேரமும் சமூகக் கவலையுடன், தேசப்பற்றுடன், இருத்தலியல் துயருடன், குறைந்தபட்சம் மூலநோயுடன் ஏன் இருந்துகொண்டிருக்கவேண்டும்? பாவம், நாமெல்லாம்தான் இப்படி ஆகிவிட்டோம். ‘மக்க’ளாவது மகிழ்ச்சியாக இருக்கட்டுமே.
பெரிய அரங்குகளில் அமர்ந்து கலைநிகழ்ச்சிகளை கூட்டாக ரசிப்பது உலகமெங்கும் எப்போதும் உள்ளது. சமீபத்தில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பயணம்செய்தபோது அந்தக்கூட்டுக்கேளிக்கையின் வெறியை கொப்பளிப்பை பலமுறை அரங்குகளில் கண்டேன். நான் மட்டும் அதற்கு அன்னியமாக அமர்ந்திருந்தேன்
நம் திரையரங்குகளைவிட மும்மடங்கு பெரிய அரங்குகளில் இசைநாடகங்களுக்கு மக்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர். ஒவ்வொரு பாடலுக்கு கூச்சலிட்டு பாடி நடனமிட்டனர். எழுந்து நின்று கைதட்டினர்.ஊளையிட்டனர்.
லண்டனில் சமீபத்தில் நான்கண்ட மாமாமியா என்னும் இசைநாடகம் பழைய ABBA இசைக்குழுவினரின் பாடல்களால் ஆனது. அதற்கு வந்த மக்களின் கொண்டாட்டமும் பரவசமும் நம் எம். ஜி. ஆர் மற்றும் ரஜனிகாந்த் படங்களுக்கு வரும் ரசிகர்களிடம் மட்டுமே காணக்கிடைப்பது. தரம் எம்ஜியார் படங்களை விட சற்று குறைவுதான். ஆனால் மிகமிக அதிகமான கட்டணம். அந்தக்கட்டணம் அந்த நாடகத்திற்கு மட்டும் அல்ல, அந்தக்கொண்டாட்டத்திற்காகவும்தான்
இந்தக்கூட்டுக்களியாட்டம் எப்போதுமே மக்களிடம் இருந்துள்ளது. ரோம் நகரத்தின் கொலோசியத்தில் ஒரேசமயம் எழுபதாயிரம்பேர் அமரமுடியும். எண்ணிக்கை கூடக்கூட களிவெறி கூடுகிறது. நம் திருவிழாக்களின் கொண்டாட்டமும் அத்தகையதே.
மனிதர்கள் தன்னை தனித்துணர விரும்புவார்கள். நான் நான் என்றே பேசிக்கொண்டிருப்பார்கள். அவ்வப்போது அந்த நானை சட்டைபோலக் கழற்றி வீசிவிட்டு நாம் நாம் என்று கூத்தாடிக் களியாட்டமிடுவார்கள். அது மிகப்பெரிய விடுதலை. கூட்டுக்களியாட்டம் என்பது அதற்காகவே.
இன்று சினிமா நம் நவீன கூட்டுக்களியாட்டமாக இருக்கிறது. நாம் பாரம்பரியமாகக்கொண்டிருந்த பல கூட்டுக்களியாட்டங்கள் இல்லாமலாகி இது வந்து சேர்ந்திருக்கிறது. நாம் நாடகங்களை இப்படி பெருங்கொண்டாட்டமாக பார்த்திருக்கிறோம். திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை போன்றவர்களின் இசைநிகழ்ச்சிகளை இப்படி திரண்டு ரசித்திருக்கிறோம். அன்றும் இதேபோல எதிர்க்குரல் இருந்திருக்கும்.
உண்மையில் இங்குள்ள பல கும்பல்வன்முறைகள்கூட கூட்டுக்களியாட்டங்கள்தான். பல அரசியல் மாநாடுகள் கூட்டுக்களிவெறியை மட்டுமே வெளிக்காட்டுகின்றன. அவற்றைவிட எவ்வளவோ ஆபத்தற்ற களியாட்டம் இது. சொல்லப்போனால் பிரான்ஸில் நடந்த ஐரோப்பிய கால்பந்தைவிட வன்முறையற்றது இது.
சற்று வரலாற்றுணர்வும் சற்று சமூகச்சூழலை அவதானிக்கும் மனநிலையும் இருந்தால், கொஞ்சம் அறிவுஜீவிக்கவலைகளை ஒத்திவைத்துவிட்டு இந்த நிகழ்வை கவனித்தால் இது என்றுமுள்ள ஒன்று என்பதை எளிதில் உணரமுடியும்.
இவற்றை நாம் அவதானிக்கலாம். ஆராயலாம். அறிவுஜீவியாக விலகி நின்று நம் தனித்துவத்தை பேணிக்கொள்ளலாம். இந்தக்கூட்டுக்களிவெறி மனநிலை ஜனநாயக அமைப்புகளைக் கைப்பற்றும் அதிகாரமாக ஆகும்போது மக்களின் தனிமனதை நோக்கிப் பேசலாம். கூட்டுமனநிலை பல தருணங்களில் தர்க்கபூர்வசிந்தனைக்கு எதிரான உணர்வுவேகமாக ஆவதைச் சுட்டிக்காட்டலாம், அதெல்லாம் வேறு விஷயம்.
உண்மையில் ஓர் இளைஞன் ‘நான்வேறு’ என உணருமிடத்திலேயே அவன் எதையாவது சாதிக்க ஆரம்பிக்கிறான். எழுதுகிறான். படிக்கிறான். பாடுகிறான்.பைக்கில் இமையமலை ஏறுகிறான். ஒற்றைச்சக்கர சைக்கிளில் மோட்டார் பொருத்த முயல்கிறான். அந்த அகங்காரமே ஒருவனுக்கு பெரும்செல்வம். எல்லோரையும்போல் இருப்பது ஒர் இழிவு.
ஆனால் அது மிகச்சிலருக்கே சாத்தியம். எல்லாரும் அப்படி இருக்கமுடியாது. ஏனென்றால் அந்த எல்லோரும் மறுதரப்பு அல்லவா? அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களை வசைபாடுவதோ எள்ளிநகையாடுவதோ அசட்டுத்தனம். அறியமுடிவதே சரியானது. விலகுவதென்பது வெறுமே ஆணவம் கொள்வதற்காக அல்ல. மேலும் உயரத்தில் நின்றுகொண்டு, மேலும் முழுமையாக அறிந்துகொள்வதற்காக மட்டுமே.
கூட்டமாக மக்கள் தங்களை உணரும் கொண்டாட்டம் இது. ஆனால் கூட்டுக்களியாட்டமே ஒரு பெரும்பாவம் என்றும், அதை ஏற்பவர்கள் அனைவரும் மூடர்கள் என்றும், அது இங்கே உள்ள ஒருவகை சமூகச்சீர்கேடு என்றும் பாவலா செய்வதும் அதை மேட்டிமைத்தனத்துடன் அணுகுவதும் போலித்தனம். அதிலும் கபாலி ஃபீவர் அசட்டுத்தனம் , ஆனால் உலகக்கோப்பை ஃபீவர் மேட்டுக்குடித்தனம் என்னும் மனநிலையைப்போல அசட்டுத்தனமான ஒன்று வேறில்லை.
ஒரு குறிப்பிட்ட காலம் வரைத்தான் இந்தவகையான கபாலிக்காய்ச்சல் எல்லாம் இருக்கும். அதன்பின் அறிவுஜீவி ஆகி கபாலக்காய்ச்சல் வரத் தொடங்கியதும் அகன்றுவிடும். ஆனால் தன் தனித்தன்மையை முழுமையாகத் தக்கவைத்துக்கொண்டே மக்களோடு மக்களாக இந்த கொண்டாட்டத்தில் பங்கெடுக்க முடிந்தால் அது பெரிய வரம்தான்.என்னால் ஒரு திருவிழாவில் அப்படிக் கரையமுடியும். ஒரு மதச்சடங்கில் என்னை மறந்துவிடமுடியும். கபாலியில் முடியாது. நான் இன்னமும் பாட்ஷாவே பார்க்கவில்லை.
நானெல்லாம் அறிவாளியாக உணர்ந்த இளமையிலிருந்தே இந்த களியாட்டங்களுக்கு எதிரான மனநிலைகொண்டிருந்தவன். காரணம் அக்காலத்து கம்யூனிசம். அதன்பின்னர் இந்துத்துவம். அதன்பின் ஆன்மீகம். சுந்தர ராமசாமி வேறு இதெல்லாம் ‘நேஸ்டி இன்டியன்ஸ் ஆண்ட் பிளேடி டேமில்ஸ்’ மட்டுமே கொண்டிருக்கும் கேவலமான பழக்கம் என்றும், கும்பல் மனநிலை என்றும் வெள்ளைக்காரன் எல்லாம் ‘டீசண்டா ஜெண்டில்மேன் மாதிரி’ ரசிப்பவன் என்றும் சொல்லிக்கொடுத்திருந்தார். அதையெல்லாம் நானும் நம்பினேன்
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கண்ட கூட்டுக்களியாட்டங்களைப் பார்க்கையில் “பரவாயில்லை சுந்தர ராமசாமி பேச்சைக்கேட்டு துரையெல்லாம் கெட்டுப்போகவில்லை” என்று ஆறுதல் அடைந்தேன். ஒரு பெண் இத்தாலியின் கால்பந்து வெற்றியைக்கேட்டு பரவசவெறிகொண்டு பாரீஸில் தெருவில் சட்டையை தூக்கிக்கொண்டு நடனமிட்டதைக் கண்டபோது சுந்தர ராமசாமி அதை கிளாஸிக்கல் பாலே என நினைத்துக்கொள்வாரோ என நினைத்தேன் .
கூட்டுக்களியாட்டங்கள் மக்களிடையே தேவையாக இருக்கும் வரை இருந்துகொண்டுதான் இருக்கும். அவற்றில் ஈடுபடுபவர்களுக்கு அது எப்படி எவரால் உருவாக்கப்படுகிறது என்றெல்லாம் நன்றாகத் தெரியும். அது வணிகம் என்றும் தெரியும். ஆனால் அப்படி அதை கூட்டுப்பித்தாக ஆக்கிக்கொண்டால் மட்டுமே அந்தக் களியாட்டம் இருக்கமுடியும். அவர்கள் அதைத்தான் செய்கிறார்கள்.
ஆகவே அவர்கள் விசிலடித்துக் கொண்டாடுகிறார்கள். அந்த வேகத்தை வளர்த்து வளர்த்து உச்சம் நோக்கிக் கொண்டுசெல்கிறார்கள். அதற்குத்தான் அவர்கள் பணம் கொடுக்கிறார்கள். இசைக்கலைஞர்கள், விளையாட்டுவீரர்கள் மேல் மேலைநாடுகளில் இருக்கும் இந்தவகையான வெறியில் ஒரு சிறுபகுதிகூட இங்கில்லை என்பதே உண்மை.
நேற்று முன்தினம் கொலோசியத்தில் கூச்சலிட்டு நடனமிட்டார்கள். ”அக்கிலிஸ் அக்கிலிஸ்” ‘யுலிஸஸ் யுலிஸஸ்’ என்று ஆடிக்கொண்டாடினர். அதன்பின்னர் “எல்விஸ்! எல்விஸ்!” என்று கண்னீர்மல்க வெறிகொண்டு கூச்சலிட்டனர். ”வாத்யாரே வாத்யாரே” என்று பரவசம் அடைந்தனர். இன்றைக்கு திரையரங்கில் ‘சூப்பர் ஸ்டார்! சூப்பர் ஸ்டார்” என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
அதை புரிந்துகொள்ளாமல், அதில் ஈடுபடவும் முடியாமல், வயிறுஎரிந்து குண்டிவழியே குடலாபரேஷன் பண்ணும் அறிவுஜீவிகளுக்கு அந்தக்கொண்டாட்டம் இல்லை – என்னைச்சொன்னேன்.
ஜெ