அன்புள்ள ஜெயமோகன்,
இரண்டு மாதங்கள் மொழி,இலக்கிய, வாசிப்பு தொடர்பான பணியின் பொருட்டு சிங்கப்பூர் செல்கிறீர்கள். மகிழ்ச்சி.
மொழியையும், வாசிப்பையும் புறக்கணித்ததால் ஏற்பட்டிருக்கும் விபரீத விளைவுகளை இந்தியா எப்போது உணரப்போகிறதோ!
நான் ஆசிரியராக, தலைமை ஆசிரியராக, முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றிய காலங்களில் வாசிப்புப் பழக்கத்தை மாணவர்களிடையிலும், ஆசிரியர்களிடையிலும் உருவாக்கவும், வளர்க்கவும் நிறைய முயற்சி செய்திருக்கிறேன். அது தொடர்பான என் புரிதல்கள் சில:
- ஆசிரியர்களும், பெற்றோரும் வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தால், தாம் வாசித்தவை பற்றி குழந்தைகளிடம் பகிர்ந்து கொண்டால் வாசிப்புப் பழக்கம் அவர்களிடம் உருவாகும், வளரும். ஆனால், பெரும்பாலான ஆசிரியர்களிடம் வாசிப்புப் பழக்கம் இல்லை. அதை உருவாக்கிக் கொள்ளும் ஆர்வமும் இல்லை. பெற்றோர்களும் அப்படித்தான். (ஒரு சில சந்தர்ப்பங்களில் அடுத்த கூட்டத்தில் படித்த புத்தகங்களைப் பற்றி கேட்பேன் என்று ஆசிரியர்களை மிரட்டக் கூட செய்திருக்கிறேன்)
- வாசிப்புப் பழக்கம் உள்ள ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களை வாசிக்கத்தூண்டுவார்கள். குழந்தைகளுக்கு வாசிப்புத் தூண்டுதலே அருகிப் போனது.
- ஒவ்வொரு ஆண்டும் புதிய நூல்களை வாங்கி பள்ளி நூலகத்தில் சேர்ப்பதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் நிதி உண்டு. வருடந்தோறும் புதிய புத்தகங்கள் வாங்கப்படுகின்றன. அவை எத்தகைய புத்தகங்கள், எவ்வாறு வாங்கப்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். குப்பைப் புத்தகங்களும் வணிக நூல்களுமே வாங்கப்படுகின்றன. வாங்கிய நூல்களே திரும்பத் திரும்ப வாங்குவதும் உண்டு. அத்தகைய நூல்களைப் படிக்க நேரும் குழந்தைகள் ஏற்கனவே உள்ள சிறிதளவு வாசிப்பு ருசியையும் இழந்து விடுவார்கள்.
- அனைவருக்கும் கல்வி,அனைவருக்கும் இடை நிலைக் கல்வி இயக்கங்களின் மூலம் புத்தகங்களும், இதழ்களும் வாங்க நிதி அளிக்கப்படுகிறது. ஆனால் அவை பல பள்ளிகளில் முறையாகப் பயன்படுத்தப் படுவதில்லை.
- சில பள்ளிகளில் ஆங்கில நாளிதழின் நான்காம் பக்கத்தில் ஒரு நூறு ரூபாய் நோட்டை காலையில் வைத்து விட்டு மாலையில் திறந்து பார்த்தால் பணம் பத்திரமாக இருக்கும். ஆங்கில நாளிதழ்கள் திறக்கப்படுவதே இல்லை. கிளார்க்குகளாகப் பயன்படுத்தப் படும் தலைமை ஆசிரியர்களுக்கு அதைப் பார்ப்பதற்கு நேரமும் இல்லை.
சில பக்கங்கள் கூட வாசிக்கவோ எழுதவோ முடியாத சில தலைமுறைகளை உருவாக்கி நாசம் செய்திருக்கிறோம்.
சிங்கப்பூர் செயல்பாடுகள் பயனுற அமைய வாழ்த்துக்கள்!
அன்புடன்,
ஜெ.சாந்தமூர்த்தி,
மன்னார்குடி
***
அன்புள்ள ஜெ.மோ. அண்ணா,
உங்கள் சிங்கப்பூர் பயணம் இனிதே நிகழவும், புதிய பணி சிறக்கவும் வாழ்த்துகள்.
தமிழகத்தில் நீங்கள் செய்ய வேண்டிய கல்விப்பணியை சிங்கப்பூர் அரசாவது புரிந்துகொண்டதே என்பதில் மகிழ்ச்சி. அந்த அனுபவம் நமது நாட்டுக்கு நீங்கள் திரும்புகையில் நமது மாணவர்களுக்கும் உதவக்கூடும்.
நன்றி.
என,
வ.மு.முரளி
***
சார் வணக்கம்
சிங்கப்பூரில் இரு மாதம். சிங்கப்பூர் அரசு பணி. கேட்பதற்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இங்கே சென்னையில் நாங்கள் பெரிய நூலகம் கட்டி அதை யாரும் பயன்படுத்தாதவாறு பார்த்துக்கொள்கிறோம். :)
அன்புடன்
க.ரகுநாதன்
***
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் சிங்கப்பூர் பணி சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வகுத்து கொடுக்க கூடிய பாதைகளை பொறுத்தமட்டில், உங்களின் சிந்தனைகளும் எழுத்துகளும் பெரிய திறப்பாக இருக்கிறது. என்னளவில் இங்கிருக்ககூடிய பல தாக்கங்களையும் தாண்டி, குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஒரு சூழ்நிலையை பற்றிய முடிவுகளை நிதானமாகவும் நமபிக்கையுடனும் எடுக்க உங்கள் எழுத்துக்கள் உதவி இருக்கின்றன. அந்த வகையில் உங்களின் சிங்கப்பூர் பணி பற்றிய குறிப்புகளை உற்சாகத்துடன் எதிர்பார்க்கிறேன்.
நான் சமீபத்தில் தாகூர் எழுதிய கோராவின் ஆங்கில மொழிபெயர்ப்பை படித்து முடித்தேன். அதில் வரும் பாத்திரங்கள் இளைஞர்களாக இருந்த போதிலும் மிக ஆழமான சம்பாஷணைகளில் ஈடுபடுகிறார்கள். விவாதங்களின் போது அவர்களின் கருத்துக்கள் தீர்க்கமாகவும் தெளிவாகவும் இருந்தது. இதில் ஆச்சர்யம் சுசரிதாவின் வயது பதினைந்து இருக்கலாம் என்று தெரிகிறது. கோராவும் பினாயும் இருபத்தியிரண்டு வயதானவர்கள். ஒரு புனைவே ஆனாலும் அந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட விரிந்த சிந்தனையும் கருத்தாக்கமும் பெரும்பான்மையானவர்களுக்கு சாத்தியமாக இருந்ததா? அல்லது இவர்கள் எல்லாம் விதிவிலக்குதானா? சரித்திரத்தில் வெகு இளைய வயதில் சாதித்த சிந்தனாவாதிகளெல்லாம் அபூர்வமான அறிவுஜீவிகள் மட்டும்தானா அல்லது சிறந்த சிந்தனைசக்தியை பயிற்றுவிக்கும் முறை காலப்போக்கில் தேய்ந்து விட்டதா ?
நேரமிருக்கும்போது உங்கள் கருத்துக்களை எழுதவும்.
அன்புடன்
கோகுல்