வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 5

[ 5 ]

சௌனகர் தருமனின் அரண்மனைக்குச் செல்வதற்குள் அரசாணை வந்துவிட்டிருந்தது. அவர் தேரிறங்கி அரண்மனை முற்றத்தை அடைந்தபோது அங்கே அரசப்படையினர் நின்றிருப்பதை கண்டார். அங்கே நின்றிருந்த நூற்றுவர்தலைவனிடம் “என்ன நிகழ்கிறது?” என்றார். அவன் “அமைச்சரே, அரசருக்குரிய தொழும்பர்களை அழைத்துச்சென்று தொழும்பர்குறி அளித்து அவர்களுக்குரிய கொட்டிலில் சேர்க்கும்படி ஆணை. அதற்கென அனுப்பப்பட்டுள்ளோம்” என்றான்.

சௌனகர் மறுமொழி சொல்லாமல் அரண்மனைக்கூடத்திற்குள் நுழைந்தார். எதிரே வந்த ஏவலனிடம் “அரசரும் தம்பியரும் எங்கே?” என்றார். “அவர்கள் மாடியில் இருக்கிறார்கள். ஆயிரத்தவனும் வீரர்களும் மேலே சென்றிருக்கிறார்கள்” என்றபடி அவன் உடன் வந்தான். “என்ன நிகழ்கிறது அமைச்சரே?” என்றான். “சுரேசர் எங்கே?” என்றார் சௌனகர். “அவர் அரண்மனைக்கு சென்றிருக்கிறார். இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வந்த அனைவரும் உடனே அரண்மனைக்குச் செல்லும்படி ஆணை வந்தது.”

மாடிப்படிகளில் ஏறி இடைநாழி வழியாக விரைந்து மூச்சிரைக்க கூடத்தை அடைந்த சௌனகர் அங்கே நின்றிருந்த காவலனிடம் “அமைச்சர் சௌனகர். அரசரை நான் பாக்கவேண்டும்” என்றார். “அரசரா? இங்கே ஒருவரே அரசர். அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் அரசர் அவர்.” அத்தகைய செயல்களுக்கு உரியவன் அவன் என்று சௌனகர் எண்ணிக்கொண்டார். அங்கு வந்திருந்த அத்தனை படைவீரர்களின் முகங்களும் ஒன்றுபோலிருந்தன, கீழ்மைகளில் மட்டுமே உவகை காணக்கூடியவர்கள். ஆகவே தங்கள் ஆழத்தில் தங்கள் மேலேயே மதிப்பற்றவர்கள். அதை வெல்ல தங்களைச் சுற்றி மேலும் கீழ்மையை நிரப்பிக்கொண்டு கீழ்மையில் திளைப்பவர்கள். ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரியவர்களை அரசு எங்கோ சேமித்து வைத்திருக்கும். கொல்லனின் பணிக்களத்தின் வகைவகையான கருவிகள் போல, அவர்கள் மட்டுமே ஆற்றும் தொழில் ஒன்று இருக்கும்.

“நான் அஸ்தினபுரியின் பேரமைச்சர் விதுரரின் ஆணையுடன் வந்தவன்” என்றார் சௌனகர். அவர் அருகே வந்த இன்னொருவன் சிரித்து “விதுரர் அமைச்சராக நீடிக்கிறார் என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டியிருக்கிறது, அந்தணரே…” என்றான். இன்னொருவன் அருகே வந்து “இந்திரப்பிரஸ்தத்தின் அமைச்சர்கள் அனைவரும் உடனே அரண்மனைக்குச் செல்லும்படி ஆணையிருந்ததே! ஏன் செல்லவில்லை நீர்? இதன்பொருட்டே உம்மை சிறைப்படுத்த வேண்டியிருக்கிறது” என்றான். சௌனகர் “நான் செய்தி சொல்ல வந்தது இந்திரப்பிரஸ்தத்தின் அரசரிடம். அச்செய்தி விதுரரால் அனுப்பப்பட்டது. அதைச் சொல்லவில்லை என்றால் அதன் பொறுப்பு என்னுடையது அல்ல” என்றார்.

அவர்களின் கண்கள் சுருங்கின. நீண்டநாள் கீழ்மை அவர்களை கீழ்மையின் வழிகளில் மட்டும் கூர்மைகொண்டவர்களாக ஆக்கியிருந்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். அந்த நேரடியான கூற்றை அவர்களால் வளைக்காமல் புரிந்துகொள்ளமுடியவில்லை. அந்தச் சிக்கலை கண்டதும் எரிச்சலடைந்த காவலன் “உள்ளே சென்று செய்தியை சொல்லும். சொன்னதுமே நீர் அஸ்தினபுரியின் அரசரவைக்கு சென்றாகவேண்டும்” என்றான். “நன்று” என்று சொல்லி சௌனகர் உள்ளே சென்றார்.

தருமன் மரவுரி அணிந்து நின்றிருக்க அருகே கொழுத்த உடலும் தடித்த கழுத்தில் அமைந்த மடிப்புகள் கொண்ட மோவாயுமாக ஆயிரத்தவன் உள்ளே நோக்கியபடி நின்றிருந்தான். காலடியோசை கேட்டு திரும்பி சௌனகரை நோக்கிவிட்டு அவர் வருகையை சித்தம்கொள்ளாமல் மீண்டும் உள்ளே நோக்கி “எத்தனை பொழுதாகிறது? விரைவில்…” என உரக்க குரல்கொடுத்தான். அவன் தன் முகத்தை சற்று மேலே தூக்கி வைத்திருந்த முறையே அவன் அத்தருணத்தைவிட தாழ்ந்தவன் என்பதை காட்டியது. அதை வந்தடைய தன் உள்ளத்தை அவன் தூக்கி எழுப்ப முயல்கிறான் என சௌனகர் எண்ணினார். உள்ளிருந்து நகுலனும் சகதேவனும் மரவுரிகளுடன் வெளியே வந்தனர். “அணிகளென எதையும் அணிந்திருக்கலாகாது, அனைத்தும் அரசருக்குரியவை…” என்ற ஆயிரத்தவன் திரும்பி சௌனகரை நோக்கி “நீர் யார்?” என்றான்.

சீரான குரலில் “இவர்களை தொழும்பர்களென அழைத்துச்செல்ல ஆணையிட்டவர் யார்?” என்றார் சௌனகர். அவன் “நான் ஆயிரத்தவன்” என்று சொன்னபின்னர் அச்சொற்களைக் கேட்டு அவனே சினம்கொண்டு “முதலில் நீர் யார்? எப்படி உள்ளே வந்தீர்?” என்றான். “நான் அமைச்சர் விதுரரின் செய்தியுடன் வந்திருக்கிறேன். இன்னும் சற்றுநேரத்தில் உமக்குரிய அரசாணை வரும்… அதுவரை பொறுத்திரும்” என்று சௌனகர் சொன்னார். அவன் பெருமூடன் என்பது எதையும் இயல்பாக உள்வாங்காத விழிகளிலிருந்து தெரிந்தது. ஆனால் மூடத்தனத்திற்கும் அரசுப்பணியில் பெரும் பயனுண்டு. அவர்கள் தெரிவுசெய்யப்பட்டு வைப்பில் இருந்தாகவேண்டிய படைக்கலங்கள். அவர்களின் அர்ப்பணிப்பு ஐயத்திற்கிடமற்றதாக இருக்கும். ஆணைகளை தடையற்ற கண்மூடித்தனத்துடன் அவர்களால் நிறைவேற்றமுடியும். நோக்கமோ விளைவோ அவர்களுக்குள் நுழையாது.

“எனது ஆணை இளவரசர் துச்சாதனரிடமிருந்து மட்டுமே… விதுரருக்கும் எனக்கும் சொல்லே இல்லை” என்று அவன் சொன்னான். ‘ஆனால் அவர்களை எளிதில் குழப்பமுடியும்’ என சௌனகர் எண்ணிக்கொண்டார். “ஆம், ஆனால் எனக்கும் விதுரருக்கும் உறவிருக்கிறது. அவரது ஆணையை நான் உம்மிடம் கூறலாம் அல்லவா?” அவன் அருகே நின்றவனை நோக்கிவிட்டு “அதை எப்படி நான் நம்புவது?” என்றான். அருகே நின்ற காவலனின் கண்கள் பளிச்சிட்டன. அவன் மூடனல்ல என்று சௌனகர் உடனே உணர்ந்தார். இத்தகைய மூடர்கள் ஒரு கூரியவனை அருகே வைத்திருப்பார்கள். அவனை நம்பி செயல்படுவார்கள். அவனை அஞ்சிக்கொண்டும் அவன் மேல் வஞ்சம்கொண்டும் துன்புறுவார்கள்.

“நம்பவேண்டியதில்லை… ஆனால் நம்பாமலிருப்பதன் பொருட்டு நீர் கழுவிலேறுவீர் என்றால் அது உம் பொறுப்பே” என்றார் சௌனகர். அவன் மீண்டும் திரும்பி அருகே நின்ற காவலனை நோக்கினான். அவன் உதவ வராமல் கண்களில் சிரிப்பு உலோக முள்முனையென ஒளிர நின்றிருந்தான். ஆயிரத்தவன் திடீரென எழுந்த சினத்துடன் “என்ன செய்கிறீர்கள் அங்கே? நேரம் பிந்தினால் உங்களை சட்டகத்தில் கட்டி ஆடை அவிழ தெருவில் இழுத்துச்செல்வேன்…” என்று கூவி தன் கையிலிருந்த சவுக்கைத் தூக்கி சொடுக்கினான். தருமன் வேண்டாம் என்றார். அவரது உதடுகள் மட்டுமே அசைந்தன. கண்கள் களைத்து உதடுகளுக்கு இருபக்கமும் ஆழமான கோடுகள் மடிந்து தோலில் சுருக்கங்கள் படிந்து அவர் மிகமுதியவராகிவிட்டிருந்தார்.

சௌனகர் “நீர் துச்சாதனரிடம் ஒரு சொல் கேட்டுவருவதே மேல்” என்றார். குரலைத் தூக்கி “எனக்கிடப்பட்ட ஆணைகள் தெளிவானவை… நான் எவருக்கும் மறுமொழி சொல்லவேண்டியதில்லை” என்றான் அவன். சௌனகர் வியப்புடன் ஒன்றை உணர்ந்தார். அறிவற்றவர்கள் உரக்கப்பேசும்போது உள்ளீடற்ற கலத்தின் ஓசைபோல அந்த அறிவின்மை முழங்குகிறது. அது எப்படி என்று அவர் உள்ளம் தேடியது. அவர்கள் மெதுவாக பேசும்போது அறிவின்மையை எப்படி மறைக்கமுடிகிறது? மறுகணமே அவர் அதை கண்டடைந்தார். அறிவிலியர் இயல்பாக மெல்ல பேசுவதில்லை, அதை அவர்கள் பிறரிடமிருந்து போலி செய்கிறார்கள். எப்போதும் சொல்தேர்ந்துபேசும் சூழ்ச்சியாளர்களையே அவர்கள் பின்பற்றுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் அல்லும்பகலும் அஞ்சுவது சூழ்ச்சியாளர்களையே.

உள்ளிருந்து பீமனும் அர்ஜுனனும் மரவுரியாடைகளுடன் வெளியே வந்தனர். ஆயிரத்தவன் அவர்களைக் கண்டதும் பற்கள் தெரிய, சிறிய விழிகள் இடுங்க நகைத்து “கிளம்புங்கள்! உங்களுக்குரிய இடம் காத்திருக்கிறது” என்றான். தழும்புகள் நிறைந்த கொழுத்த முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை சௌனகர் வியப்புடன் நோக்கினார். எதன்பொருட்டு மகிழ்கிறான்? அவன் ஆற்றிய பெருஞ்செயல் என எண்ணுகிறானா? அவர்கள் அடையும் சிறுமை கண்டு களிப்பு கொள்கிறானா? இல்லை என்று தோன்றியது. அது நடப்பவர் தடுக்கி விழக்கண்டு சிரிக்கும் சிறுவனுடையது. மிகமிக எளியது. எளிய விலங்கு. இழிவில்திளைத்தல் என்பது எளியவர்களுக்குரியது. உயரிய இன்பங்கள் எதையும் அடைய முடியாதவர்களுக்காக தெய்வங்கள் வகுத்தது.

“நில்லும்!” என உரத்த குரலில் சௌனகர் சொன்னார். “இச்செயலை நிறுத்தும்படி விதுரரின் ஆணை வந்துள்ளது. நீர் அதை மீறுகிறீர். அதை உமக்கு அரசுமுறையாக சொல்ல விழைகிறேன்.” அவன் மீண்டும் அருகே நின்ற காவலனை நோக்க அவன் இம்முறை உதவிக்கு வந்தான். மெல்லிய குரலில் “அரசாணை என்றால் அதற்குரிய ஓலையோ பிற சான்றோ உங்களிடம் உள்ளதா, அந்தணரே?” என்றான். “என் சொற்களே சான்று. நான் அமைச்சன்” என்றார் சௌனகர். ஆயிரத்தவன் போலிசெய்யும் மென்குரல் இவனுடையது என எண்ணிக்கொண்டார். அவன் “ஆம், ஆனால் அஸ்தினபுரியின் அமைச்சர் அல்ல” என்றான்.

‘இன்னும் சற்றுநேரம்’ என சௌனகர் எண்ணிக்கொண்டார். “என்ன வேண்டும் உனக்கு? சொல், விதுரர் உனக்கு ஆணையிட முத்திரைக்கணையாழியை கொடுத்தனுப்பவேண்டுமா? எந்த ஆயிரத்தவன் அரசாணைக்கு இதற்குமுன் சான்று கோரியிருக்கிறான்?” அது பொருளற்ற பேச்சு என்று உணர்ந்தமையால் அவர் பேசிக்கொண்டே சென்றார். “நான் கேட்கிறேன். விதுரரின் ஆணையை மறுப்பவன் எவன்? அவன் பெயர் எனக்கு வேண்டும். ஏனென்றால் நான் அவரிடம் என்ன நடந்தது என்று சொல்லியாகவேண்டும்.”

ஆனால் அருகே நின்றவன் பேச வாயெடுப்பதற்குள் ஆயிரத்தவன் பெரும்சினத்துடன் “விதுரர் எவரென்றே நான் அறியேன். நானறிந்தவர் இளையவர் மட்டுமே. சென்று சொல்லும்! எனக்கு எவரும் ஒரு பொருட்டல்ல” என்றான். சௌனகர் மேலும் உரத்தகுரலில் “இளையவர் விதுரரின் ஆணையை மீறுவார் என்றால் அவரும் தண்டிக்கப்படுவார். ஆனால் அவர் அரசகுருதி. நீர் கழுவேறுவீர்” என்றார். அச்சொல் அவனை திகைக்கச்செய்தது. அவன் உள்ளம் தளர்வது உடலசைவில் தெரிந்தது. “நான் எனக்கிடப்பட்ட ஆணையை…” என்றான். “ஆணை, இதோ என்னிடமிருந்து வருவது” என்றார் சௌனகர்.

“வேண்டாம், அமைச்சரே! அவர் தன் பணியை செய்யட்டும்” என்று மெல்லிய குரலில் தருமன் சொன்னார். அத்தனை நிகழ்ச்சிகளுக்குப்பின் அக்குரலை முதன்முறையாக கேட்கிறோம் என சௌனகர் எண்ணினார். அது மிகவும் தளர்ந்து தாழ்ந்திருந்தது, பசித்துக் களைத்தவனின் ஓசைபோல. அந்த ஒற்றைச் சொற்றொடரின் இடைவெளியில் இறுதிவிசையையும் திரட்டி ஆயிரத்தவன் தன்னை மீட்டுக்கொண்டான். நெஞ்சைப் புடைத்தபடி முன்னால் வந்து “எனக்கு எவர் ஆணையும் பொருட்டல்ல. நான் இளையவரின் பணியாள். அவரது சொல் ஒன்றே எனக்கு ஆணை…” என்றபின் திரும்பி “கிளம்புங்கள் தொழும்பர்களே… இனி ஒரு சொல்லை எவர் எடுத்தாலும் சவுக்கடிதான்… கிளம்புங்கள்!” என்றான்.

அவனைப்போன்றவர்களின் ஆற்றல் என்பது எல்லைகளைக் கடக்க முடியாதபோது எழும் எதிர்விசையில் உள்ளது என சௌனகர் எண்ணினார். தருமன் சௌனகரிடம் விழிகளால் விடைபெற்றுவிட்டு முன்னால் சென்றார். இளையவர்கள் தொடர்ந்தனர். அவர்கள் இடைநாழியை நோக்கி செல்ல உளப்பதைப்புடன் சௌனகர் பின்னால் சென்றார். என்ன செய்யலாம் என்று எண்ணியபோது சித்தம் கல்லெனக் கிடந்தது. ஒரு கணத்தில் அனைத்தும் தன்னை கைவிட்டுவிட்டதைப்போல உணர்ந்தபோது கால்கள் தளர்ந்தன. ஏதோ ஒன்று நிகழவிருக்கிறது என அவர் உணர்ந்த அக்கணத்தில் ஆயிரத்தவன் தருமனின் பின்கழுத்தில் ஓங்கி அறைந்து “விரைந்து நடடா, அடிமையே!” என்றான்.

தருமன் சிற்றடி எடுத்துவைத்து தள்ளாடி தலையை பிடித்துக்கொண்டார். நால்வரும் ஒலிகேட்ட காட்டுவிலங்குகளென உடல்சிலிர்த்து அசைவிழந்தனர். “என்னடா நின்றுவிட்டீர்கள்? …ம்” என்று அவன் நகுலனை அறைந்தான். அவன் கன்னத்தைப் பற்றியபடி முன்னால் சென்றான். சௌனகர் கால்கள் நடுங்க நின்றுவிட்டார். அவர் அஞ்சியது அதைத்தான் என்பதை அப்போதுதான் உணர்ந்தார். பீமன் பெருமூச்சுடன் “செல்வோம்!” என்றபடி நிமிர்ந்த தலையுடன் நீண்ட பெருங்கைகள் ஆட நடந்தான். அர்ஜுனன் அவனை தொடர்ந்தான். தருமனின் முகம் அமைதிகொண்டுவிட்டதை சௌனகர் கண்டார். அதுவரை இருந்த களைப்பும் சோர்வும் அகன்று அது இனியநினைவொன்று எழுந்ததுபோல மலர்ந்திருந்தது.

இடைநாழியின் மறு எல்லையை அவர்கள் அடைவதற்குள் வெளியே ஓசை கேட்டது. அந்த மழுங்கலான பேச்சொலியில் இருந்தே சௌனகர் அதை உணர்ந்துகொண்டார். “மூடா, அதோ வருகிறது அரசாணை. கேள்… உன் கழுமரம் சித்தமாகிவிட்டது” என்று கூவினார். ஆயிரத்தவன் தயங்கியபோது படிகளில் ஏறிவந்த படைத்தலைவன் “கீர்மிகா, இது பேரரசரின் ஆணை! அவர்களை விட்டுவிடுக! இந்திரப்பிரஸ்தம் அவர்களுக்கு அரசரால் திருப்பியளிக்கப்பட்டுவிட்டது” என்றான்.

ஆயிரத்தவன் தலைவணங்கி “ஆம், படைத்தலைவரே” என்றான். அவனுக்கு ஒரு சொல்லும் புரியவில்லை என்பது தெரிந்தது. அவன் அருகே நின்ற காவலன் “நாங்கள் செய்தவை அனைத்தும் இளையகௌரவரின் ஆணைப்படியே” என்றான். ஒருகணத்திற்குள் அவன் வெளியேறும் வழியை கண்டுபிடித்ததை உணர்ந்த சௌனகர் ஏன் அவன் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறான் என்பதை புரிந்துகொண்டார். உரத்தகுரலில் “ஆம், அது முன்னரே விதுரருக்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. அதை நான் இவர்களிடம் சொன்னேன். விதுரரின் ஆணையை இவன் மீறினான். அதை நானே அவரிடம் சொல்லவும் வேண்டியுள்ளது” என்றார்.

படைத்தலைவன் “அதை அரசரோ அமைச்சரோ உசாவட்டும். என் பணி செய்தியை அறிவிப்பதே. பேரரசரின் ஆணை முறைப்படி அறிவிக்கப்பட்டுவிட்டது” என்றபின் தருமனை நோக்கி தலைவணங்கி “செய்தியை தங்களிடம் அமைச்சரே வந்து அறிவிப்பார், அரசே” என்றான். திரும்பி ஆயிரத்தவனிடம் “செல்க!” என்று ஆணையிட்டான். நகுலன் தருமனின் கைகளைத் தொட்டு “உள்ளே செல்வோம், மூத்தவரே” என்றான். தருமனின் தலைமட்டும் நடுங்கிக்கொண்டிருந்தது. “ஆம்… ஆம்…” என்றபின் நகுலனின் கைகளைப்பற்றியபடி உள்ளே சென்றார். சகதேவனும் அவர்களுடன் செல்ல அர்ஜுனன் பீமனிடம் “வருக!” என்று சொல்லி தோளை தொட்டான்.

பீமன் ஆயிரத்தவனை அறையக்கூடும் என்ற எண்ணம் சௌனகர் உள்ளத்தில் எழுந்தது. ஆனால் அவன் இயல்பாகத் திரும்பி உள்ளே சென்றபோதுதான் ஒருபோதும் களத்தில் நிகர்வல்லமை கொண்டவர்களை அல்லாது பிறரை பீமன் அடித்ததில்லை என்று நினைத்துக்கொண்டார். மறுகணமே அந்த எளிய காவலர்தலைவனை அவன் மறந்துவிடக்கூடும். அவர்கள் உள்ளே சென்றதும் கணத்தில் அவருள் பெருஞ்சினம் எழுந்தது. ஆயிரத்தவனிடம் “வீணனே, நீ இன்று செய்ததற்காக கழுவில் அமர்வாய்… “ என்று பல்லைக் கடித்தபடி சொன்னார்.

அவன் சிறியவிழிகள் சுருங்கி ஒளிமங்கலடைய “என் கடமையை செய்தேன்… நான் காவலன்” என்றான். அவரது உணர்வுகள் அணைந்தன. அவனைப்போன்றவர்கள் கற்பனைசெய்ய முடியாதவர்கள். ஆகவே அவர்களுக்கு அச்சம் வளர்ந்து பெருகுவதன் பெருவலி இல்லை. கழுவிலேற்றப்படுவான் என்றால்கூட அந்தத் தருணத்தின் விலங்குத்துயரம் மட்டுமே. அவன் முற்றிலும் வெல்லப்படமுடியாதவன்போல் தோன்றினான். வடிவற்ற அசைவற்ற பாறை. அவர் பெருமூச்சுடன் திரும்பிக்கொண்டார்.

[ 6 ]

சௌனகர் உள்ளே சென்றபோது யுதிஷ்டிரர் பீடத்தில் தலையை கைகளால் பற்றியபடி அமர்ந்திருக்க தம்பியர் வெவ்வேறு இடங்களிலாக சுவர்சாய்ந்தும் தூண்பற்றியும் நின்றனர். சாளரம் வழியாக வெளியே நோக்கியபடி அர்ஜுனன் நின்றிருந்தான். அரைக்கணம் அப்படி அவன் நின்றது கர்ணனோ என எண்ணச்செய்தது. சௌனகர் அமைதியாக தலைவணங்க யுதிஷ்டிரர் மெல்ல எழுந்து அவருக்கு பீடம் காட்டி அவர் அமர்ந்தபின் தான் அமர்ந்துகொண்டார். சௌனகர் பீமனை மீண்டும் நோக்கிவிட்டு கைகளை மார்பில் கட்டிக்கொண்டார்.

நகுலன் அமைதியை உடைத்தான். “நாம் கொடையாக அரசை ஏற்கத்தான் வேண்டுமா, அமைச்சரே?” என்றான். சௌனகர் “நான் விதுரருடன் சென்று பேரரசரை பார்த்தேன். என் முன்னால்தான் அனைத்து உரையாடல்களும் நிகழ்ந்தன. நான் சான்றாக வேண்டுமென்பதற்காகவே என்னை விதுரர் அழைத்துச்சென்றிருக்கிறார் என இப்போது உணர்கிறேன்” என்றார். அவர் அங்கே நிகழ்ந்தவற்றை சொன்னபோது அர்ஜுனன் அச்சொற்களை கேட்டதுபோலவே தோன்றவில்லை. “அவர் உங்களுக்கு அறக்கொடை அளிக்கவில்லை, தந்தை என அளிக்கிறார்” என்றார் சௌனகர்.

“ஆம், என்னை தன் முதல் மைந்தன் என அவர் சொன்னார் என்று கேட்கையில்…” என்று சொல்லவந்த யுதிஷ்டிரர் மேலே சொல்லெழாது நிறுத்தி தன்னை அடக்கிக்கொண்டார். “அவர் இத்தருணத்தில் ஒரு தந்தையென்றே திகழ்கிறார். அவர் எப்போதுமே அது மட்டும்தான்” என்றார் சௌனகர். “பேரரசி காந்தாரி அதற்கும் அப்பால் சென்று இக்குலம் ஆளும் பேரன்னை வடிவமாகி நின்றார்.” தருமன் கைகூப்பினார். கண்களில் நீர் எழ பார்வையை திருப்பிக்கொண்டார். “நம் அரசி இன்னமும் அங்கே காந்தாரியருடன்தான் இருக்கிறார்” என்று சௌனகர் சொன்னார்.

பீமன் உரத்த குரலில் “அது மூத்ததந்தையின் ஆணை என்பதை மட்டுமே நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அதை அவர் மைந்தர்கள் ஏற்கவேண்டுமென்பதில்லை” என்றார். “அவர் சூதாட்டநிகழ்வுக்கு முந்தையநாள் மைந்தனைக் கண்டு மன்றாடியதாகவும் அவன் அவரை மறுதலித்ததாகவும் சொல்கிறார்கள்.” சௌனகர் “உண்மை” என்றார். “ஆனால் மரபுப்படி இந்த அரசு பேரரசருக்குரியது. அவரது கொடையாகவே மைந்தர் அதை ஆள்கிறார்கள்.”

பீமன் “நான் கேட்பது அதுவல்ல. அரசை அவர்கள் அளிக்கவில்லை என்றால் இவர் என்ன செய்வார்?” என்றான். “கொல்ல ஆணையிடுவாரா? நாடுவிட்டு துரத்துவாரா? மாட்டார். அவர் அருந்தந்தை என்றீர்கள் அல்லவா, அது உண்மை. அவரது பெருமையும் இழிவும் அங்கிருந்து பிறப்பதே. தந்தையாகவே அவரால் செயல்படமுடியும். பேரரசர் என்று ஒருபோதும் தன்னை உணரமுடியாது. அவர் எந்நிலையிலும் தன் மைந்தரை விட்டுக்கொடுக்கப்போவதில்லை. அதை அவர்களும் அறிவார்கள்.” புன்னகையில் உதடுகள் வளைய “அவர்கள் அறிவார்களோ இல்லையோ சகுனி அறிவார், கணிகர் மேலும் நன்றாகவே அறிவார்” என்றான்.

சௌனகர் “அவரது ஆணை பிறந்ததுமே இந்திரப்பிரஸ்தம் நம்முடையதென்றாகிவிட்டது. நம் படைகள் இன்னமும் நம்முடன்தான் உள்ளன” என்றார். யுதிஷ்டிரர் “அவரது ஆணை எதுவோ அதற்கு கட்டுப்படுவோம்” என்றார். “நாம் அரசுகொள்ள அவர்கள் விடப்போவதில்லை” என்று பீமன் உரக்கச் சொன்னான். “கணுக்கணுவாக ஏறி அவர்கள் வந்தடைந்த உச்சம் இது. ஒற்றை உலுக்கலில் அவர்களை வீழ்த்த ஒப்புவார்களா என்ன?”

சௌனகர் “ஆனால் அவர்களுக்கு வேறுவழியில்லை. பேரரசரின் சொல் இன்னும் குடிகளிடையே செல்லும்” என்றார். கடும் சினத்துடன் உறுமியபடி அவரை நோக்கி வந்த பீமன் “குடிகளா? எவர்? பன்னிருபடைக்களத்தில் விழிவிரித்திருந்தார்களே, அந்தக் கீழ்விலங்குகளா? அவர்களா இங்கே அறம்நாட்டப்போகிறார்கள்?” என்றான். சௌனகர் “ஆம், அவர்கள் அங்கே இழிவை காட்டினார்கள். அதனாலேயே அவர்கள் இத்தருணத்தில் எதிர்நிலை கொள்ளக்கூடும். அத்தகைய பல நிகர்வைப்புகள் வழியாகவே மானுடர் முன்செல்கிறார்கள்” என்றார்.

“நாம் ஏன் இதைப்பற்றி இப்போது பேசவேண்டும்?” என்று சகதேவன் தணிந்த குரலில் சொன்னான். “அவர்கள் இறுதி முடிவெடுக்கட்டும். நாம் காத்திருப்போம்.” தருமன் திரும்பி நோக்கி “ஆம், இளையோன் சொல்வதே முறையானது. நாம் செய்யக்கூடுவது காத்திருப்பது மட்டுமே” என்றார். பின்பு கைகளை பீடத்தின் கைப்பிடிமேல் வைத்து மெல்ல உடலைஉந்தி வயோதிகர்கள் போல எழுந்தபடி “நான் சற்று இளைப்பாறுகிறேன்” என்றார். அவர் மீண்டும் முதியமுகம் கொண்டுவிட்டதை சௌனகர் கண்டார்.

சுரேசர் வாயிலில் வந்து நின்று தலைவணங்கினார். தருமன் திரும்பி நோக்கி “என்ன?” என்றார். சௌனகர் அவரை அருகே வரும்படி தலையசைத்தார். சுரேசர் தருமனை வணங்கிவிட்டு சௌனகரிடம் “அஸ்தினபுரியின் அமைச்சர் தங்களை அமைச்சுநிலைக்குச் செல்லும்படி கோரியிருக்கிறார்” என்றார். நெஞ்சு அதிர “ஏன்?” என்றார் சௌனகர். “அரசர் தன் தந்தையை ஏற்கமுடியாதென்று அறிவித்திருக்கிறார். வேண்டுமென்றால் போருக்கும் சித்தமாக இருப்பதாகவும் தன்னுடன் காந்தாரத்தின் படைகள் இருப்பதாகவும் சொல்லிவிட்டார்.”

பீமன் உரக்க நகைத்தபடி கூடம் நடுவே வந்தான். “ஆம், எண்ணினேன். இதுவே நிகழும். வேறொன்றும் நிகழ வழியில்லை… அவர்கள் ஓர் அடிகூட இனிமேல் பின்னால் வைக்கமுடியாது. அமைச்சரே, பெரிய இழிசெயல் ஒன்றை செய்தவர்கள் பின்னகர்ந்தால் இறந்தாகவேண்டும். ஆகவே அவர்கள் அவ்விழிவை முழுமையாக பற்றிக்கொள்வார்கள். மேலும் மேலும் இழிவை சூடிக்கொள்வார்கள்.”

சௌனகர் சினத்துடன் ஏறிட்டு நோக்கி “இவ்வாறு நிகழவேண்டுமென்று நீங்கள் விழைந்ததுபோல் தோன்றுகிறதே!” என்றார். “ஆம், அதிலென்ன ஐயம்? நான் விழைந்தது அதைத்தான். இவர்கள் கொடையெனத் தரும் அரசை ஏற்று அங்கே முடிசூடி அமர இவரால் இயலலாம். சிறுமைசெய்யப்பட்ட என் குலக்கொடியை மீண்டும் முகம்நோக்க என்னால் இயலாது.” அவன் இருகைகளையும் ஓங்கி அறைந்தான். “என் வஞ்சினம் அங்கேயே இருக்கிறது. என் மூதாதையர் வாழும் மூச்சுலகில். அந்த இழிமகன்கள் அனைவரையும் களத்தில் நெஞ்சுபிளந்து குருதிகொள்ளாது அமையப்போவதில்லை.”

5

“இளையவரே, அங்கே புஷ்பகோஷ்டத்தில் வாழும் முதியவரை அவரது மைந்தர் மறந்ததைப்போலவே நீங்களும் மறந்துவிட்டீர்கள். அவரோ ஒரு தருணத்திலும் அவர்களில் இருந்து உங்களை பிரித்துநோக்கியவரல்ல” என்றார் சௌனகர். “அவைநடுவே அவரது நூறுமைந்தரை நெஞ்சுபிளந்து குருதியுண்பதாக நீங்கள் அறைகூவினீர்கள். அதற்குப்பின்னரும் உங்களை தன் மைந்தர் என்றே அவர் சொன்னார். அவர் மைந்தர் வென்ற அனைத்தையும் திருப்பியளித்தார். உங்களை நெஞ்சோடணைத்து பொறுத்தருளக் கோருவதாக சொன்னார். உங்கள் அரசியின் கால்களை சென்னிசூடுவதாக சொல்லி அவர் கண்ணீர்விட்டபோது நான் விழிநனைந்தேன்.”

“ஆம், அவர் அத்தகையவர். எந்தையின் மண்வடிவம் அவரே” என்றான் பீமன். “ஆனால் இது ஊழ். அமைச்சரே, நீங்களே அறிவீர்கள். சொல்லப்பட்டவை பிறந்து நின்றிருக்கும் தெய்வங்கள். அவை எடுத்த பிறவிநோக்கத்தை அடையாது அமைவதில்லை. நான் அவைநடுவே சொன்ன சொற்களால் ஆனது இனி என் மூச்சு.” சௌனகர் ஏதோ சொல்லவர கையமர்த்தி “நான் பொறுத்தமையப்போவதில்லை. நடந்தவற்றின்மேல் மானுடர் எவருக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. என் குலமகள் அவைநடுவே நின்றாள். அதன்பொருட்டு அவர்கள் என் கையால் இறந்தாகவேண்டும்…” என்றான்.

சௌனகர் பெருமூச்சுடன் அமைதியானார். நகுலன் பேச்சை மாற்றும்பொருட்டு “காந்தாரர்களை சகுனி வழிநடத்துகிறாரா?” என்றான். “இன்று நகரில் காந்தாரர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களின் படைப்பிரிவுகள் அனைத்தும் மேற்குக்கோட்டைமுகப்பில் ஒன்றுகூடியிருக்கின்றன. தெற்குக் கோட்டைவாயிலும் அப்பால் புராணகங்கையின் குடியிருப்புகளும் முன்னரே அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அஸ்தினபுரியின் பாதிப்பங்கு காந்தாரர்களிடம் இருக்கிறது” என்றார் சௌனகர். “ஜராசந்தனுக்காகவும் சிசுபாலனுக்காகவும் சினம்கொண்டுள்ள ஷத்ரியர்களும் அரசருக்கு துணைநிற்கிறார்கள்.”

தன் உணர்ச்சிகளிலிருந்து மெல்ல இறங்கித்தணிந்த பீமன் பெருமூச்சுடன் கைகளை உரசிக்கொண்டான். சௌனகரை நோக்காமல் “துரியோதனனின் படைகளும் கர்ணனின் படைகளும் இணைந்தால் மட்டும் போதும். விழியிழந்தவருக்கு ஆதரவு என்றே ஏதுமிருக்காது. சில முதியகுலத்தலைவர்கள் ஏதாவது சொல்லக்கூடும்…” என்றான். நகுலன் “படைகளை கர்ணன் நடத்துவான் என்றால் அவர்கள் வெல்லற்கரியவர்களே” என்றான்.

“பீஷ்மர் இருக்கிறார்” என்றார் சௌனகர். “அவர் ஒருநிலையிலும் பேரரசரை விட்டு விலகமாட்டார். குடிநெறிகள் மீறப்படுவதை இறுதிவரை ஏற்கவும் மாட்டார்.” பீமன் “ஆம், ஆனால் அவர் எந்தப் படைகளை நடத்தப்போகிறார்?” என்றான். சௌனகர் “இல்லை இளவரசே, பீஷ்மர் எந்த நிலை எடுக்கப்போகிறார் என்பதை ஒட்டி அனைத்துக் கணக்குகளும் மாறிவிடும்” என்றார். “பார்ப்போம். சென்று அங்கே என்ன நிகழ்கிறது என்று எங்களுக்கு சொல்லுங்கள்” என்றான் பீமன்.

சௌனகர் தருமனிடம் தலையசைவால் விடைபெற்று திரும்பினார். தருமன் மெல்லிய தளர்ந்த குரலில் “அமைச்சரே” என்று அழைத்தார். “அங்கே என் தரப்பாக ஒன்றை சொல்லுங்கள். பிதாமகர் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் மறுசொல்லின்றி முழுமையாக கட்டுப்படுவேன். அதுவன்றி சொல்ல எனக்கு ஏதுமில்லை.” அவர் விழிகளை நோக்காமல் தலையசைத்துவிட்டு சௌனகர் வெளியே நடந்தார்.

முந்தைய கட்டுரைவணிகக்கலையும் கலையும்
அடுத்த கட்டுரைசிங்கப்பூர் பயணம் -கடிதங்கள் 2