மதியம் புதுக்கோட்டைக்கு வந்து ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு விடுதி ஒன்றை அமர்த்திக்கொண்டோம். வெயிலில் அலைந்ததற்கு குளிர்சாதனம்செய்த அறை உடனடியாக தூக்கத்தை கொண்டு வந்தது. நான்கு மணிக்கு எழுந்து கொண்டு குளித்துவிட்டு திருமயம் கோட்டையைப்பார்க்கச் சென்றோம்.
தமிழகத்தில் எஞ்சியிருக்கும் தொன்மையான கோட்டைகளில் ஒன்று இது. சாலையே கோட்டைக்குள் சென்றுதான் மதுரைக்குப்போகிறது. உயரமான கோட்டைமதில் சேதமடைந்து நிற்கிறது. சில இடங்களில் அதில் சுண்ணாம்பு பூசி சரிசெய்திருக்கிறார்கள். பழைய கோட்டைக்கு மேல் மேலும்கட்டி உயரமாக்கப்பட்டு துப்பாக்கிசுடும் புழைகளுடன் செய்யப்பட்டிருக்கிறது. ராமநாதபுரம் சேதுபதி 1687ல் இந்தக்கோட்டையை எடுத்துக்கட்டியிருக்கிறார்.
கோட்டைக்குமேலேசெல்ல படிகள் உள்ளன. ஆலமரங்கள் முளைத்து நிழல் பரவி நிற்கும் கோட்டைக்குள் மலையுச்சியில் ஏழெட்டேக்கர் விரிவுள்ள பெரிய முற்றம். அதன் நடுவே பீரங்கிமேடை. சுற்றிலும் மழையில் புல்முளைத்து காற்றிலாடியது. சுற்றிலும் ஆயுதபூஜையின் ஒலிகள். எல்லாமே சினிமாப்பாட்டுக்கள். காற்று அவற்றை அள்ளி விதவிதமாக கலந்து விளையாட ரஹ்மானும் ராஜாவும் சேர்ந்து இசையமைத்த பாடல்களை கேட்கும் வாய்ப்பு அமைந்தது.
கோட்டைக்குள் சின்னமருது ஒளிந்திருந்தார் என்று சொல்லப்படும் ஒரு தாழ்வான கட்டிடம் உள்ளது. பலவகையான பள்ளங்களும் உருளைப்பாறைகளும் கொண்ட கோட்டைவளாகம். ஒரு சிறுவன் அவனே தன்னை கைடாக அறிவித்துக்கொண்டு எங்களுக்கு சின்னமருதுவின் அறையைக் காட்டி ஐம்பது ரூபாய் பெற்றுச்சென்றான்.
கீழே இரு சன்னிதிகள் கொண்ட ஒரே கோயில். சைவ வைண ஒற்றுமைக்கு ஆதாரமாக உள்ளகோயில் இது என்று சொன்னார்கள். இரு கடவுள்களுக்கும் அருகருகே கோயில்கள் உள்ளன. சத்தியகிரீஸ்வரர் ஆலயமும் திருமெய்யர் ஆலயமும். இங்குள்ள பெருமாள்கோயிலுக்கு ஆதிரங்கம் என்று பெயருண்டு. ஸ்ரீரங்கத்தை விட பழமையானது என்றார்கள். அது உண்மை என்று தோன்றவில்லை. பெருமாள் சிருஷ்டிக்கான முத்திரைகூட இல்லாமல் இருப்பதனால் அப்பெயர் என்று நினைக்கிறேன்
கிபி ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கோயிலும் கோட்டையும் கட்டப்பட்டன. [ஸ்ரீரங்கம் சிலப்பதிகாரத்திலேயே சொல்லப்பட்டுவிட்டது] சோழர்கள் தலையெடுத்தபோது அவர்கள் கைக்கு வந்துவிட்டது. சோழர்களின் வீழ்ச்சிக்குப்பின்னர் பாண்டியர்களின் ஆதிக்கத்துக்கு வந்தது. சிறிதுகாலம் ஹொய்ச்சள ஆதிக்கத்தில் இருந்தது. இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், இரண்டாம் ஜடாவர்மன் வீர பாண்டியன் ஆகியோரின் காலத்திலிருந்து கல்வெட்டுக்களும் காணக் கிடைக்கின்றன.
பெருமாள்கோயில் மலைச்சுவரில் குடையப்பட்டது. பெருமாள் யோகசயனத்தில் இருக்கிறார். திருவட்டார் பெருமாளை நினைவுபடுத்தியது சிலை. மது கைடபர்’ என்னும் இரு அசுரர்களிடமிருந்து பூமி தேவியையும், தேவர்கள், கின்னரர்களையும் காப்பாற்றுகிறார் என்கிறது தல வரலாறு. பாடல்பெற்ற தலம்.
மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்யமலையானைச் சங்கேத்தும்
கையானை கைதொழாக் கையல்லகண்டாமே.”
என்று திருமங்கையாழ்வார் பாடியிருக்கிறார்.
கிபி எட்டாம் நூற்றாண்டில் முத்தரையர் தலைவரான சாத்தன் மாறன் என்பவரின் தாயார், குடைவரைக் கோயிலைத் திருப்பணி செய்தார் என்று கல்வெட்டுகளில் காண்கிறோம். 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டுகளும், 15, 16ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த விஜயநகர அரசின் கல்வெட்டுக்களும் காணக்கிடைக்கின்றன.
கோயிலை ஒட்டி எண்கோண வடிவிலான அழகிய குளம் உள்ளது. அங்கே ஒரு கிழவர் மட்டும் குளித்துக்கொண்டிருந்தார். குளத்தருகே நின்றிருந்தபோது நூற்றுக்கணக்கான தட்டாரப்பூச்சிகள் அந்தியொளியில் பொற்சிறகுகளுடன் சுழன்று சுழன்று ரீங்கரித்துப் பறந்துகொண்டிருப்பதைக் கண்டேன். ஓவி விஜயனின் கசாக்கின் இதிகாசத்தில் தட்டாரப்பூச்சிகள் இறந்தவர்களின் ஆத்மாக்கள் என்று வரும். அங்கே இறந்த போர்வீரர்கள் என நினைத்துக்கொண்டேன். காலத்தை கற்பனைமூலம் கடக்க அப்படி சில படிமங்கள் தேவைப்படுகின்றன.
அன்று மாலை விடுதியில் தூங்கிவிட்டு அக்டோபர் 17 அன்று அதி காலையில் கிளம்பி நார்த்தாமலைக்குச் சென்றோம். காலையில் நார்த்தாமலைக்கு குறுங்காட்டை வகிடெடுத்துச் சென்ற பாதையில் செல்வது அமைதியான மனக்கிளர்ச்சியை அளித்தது. நார்த்தாமலை குன்றுகள் ஒன்பது உள்ளன. நார்த்தாமலைப் பகுதி மொத்தம் ஒன்பது மலைகளைக் கொண்டது. மேல மலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையன் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மை மலை, மண் மலை, மற்றும் பொன்மலை- இவைதான் அவற்றின் பெயர்கள். கடம்பர் மலையில் முதலாம் ராஜராஜன் கட்டிய சிவன் கோயில் உள்ளது. மலைக்கடம்பூர்த்தேவர். பிற்பாடு பாண்டியன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கட்டிய அருகே நகரீஸ்வரம் என்ற சிவன்கோயிலும் மங்களாம்பிகை கோயிலும் உள்ளன.
ஏரி ஒன்றின் கரையில் இருந்து அபாரமாக சரிந்தேறும் ஒற்றைப்பாறை மலையில் தொற்றி ஏறிச்சென்றோம். பாறையின் சருமம் திரச்சி மீனின் செதில்போல் பரவியிருந்தது. பெரிய ஒரு தாய்மிருகத்தின் அடிவயிறு போல. மலை இரு பெரும் அலைகளாக உறைந்து நின்றது. ஓர் அலைமீது நடந்து இன்னொரு அலைவளைவை பார்த்துச்சென்றோம்.
மலையுச்சியில் விஜயாலய சோழீஸ்வரம் என்ற கோயிலும் அதைச் சுற்றி ஆறு சிறு கோயில் கட்டுமானங்களும் உள்ளன. பிரதானக் கோயிலில் நந்திக்குப் பின்னால் இரு குடைவரை கோயில்கள் உள்ளன. முதலாவது சமணர் குடகு அல்லது பதினெண்பூமி விண்ணகரம் என்று அழைக்கப்படும் பெரிய குகை. இந்தக்குகை ஏழாம் நூற்றாண்டில் சமணர் குகையாக இருந்தது என்கிறார்கள். இந்த குடைவரைக் கோயில் பிற்காலத்தில் விஷ்ணு கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. இதன் அர்த்த மண்டபத்தில் 12 ஆளுயர விஷ்ணு சிலைகள் உள்ளன. சிலைகள் அனைத்தும் ஒரே போல உள்ளன. பௌராணிகர்கள் ஒருவேளை அந்த மூர்த்திகளின் தனித்தனிப் பெயர்களைச் சொல்ல முடியலாம்
முத்தரையர் தலைவனான இளங்கோ ஆதி அரையன் என்பவரால் இந்தக் கோயில் கட்டப்பட்டது என்பதற்கான சான்றுகளை துவாரபாலகர்களுக்கு அடியில் உள்ள கல்வெட்டுகளீல் காணலாம் என்று வாசிக்க முடிந்தது. ஆதி முத்தரையர்களின் நகரம் இது. பல்லவர் ஆட்சியில் இருந்தது. விஜயாலய சோழன் காலத்தில் முத்தரையர்கள் சோழர்களின் கீழ் வந்தார்கள். ராஜராஜனின் பட்டப்பெயர்களில் ஒன்று ’தெலுங்குக் குல காலன்’. அப்பெயரால் தெலுங்குக் குல காலபுரம் என அழைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு ஆலய ஊழியர் வந்து எங்களை அடையாளம் கண்டுகொண்டார். அவரிடம் சாவி இருந்தது. குகைக்கோயிலை திறந்து விஷ்ணுசிலைகளைக் காட்டினார். கோயிலின் கூரை செம்மையாக்கப்படாமல் செதுக்குத்தடங்களுடன் இருப்பதைக் கண்டேன். அது ஏன் என புரியவில்லை. பின்னர் விஜயாலய சோழீச்சரம் கோயிலை திறந்து உள்ளே சென்றோம். சிறிய முன்மண்டபம். உள்ளே பளபளக்கும் சிறு லிங்க மூர்த்தி. அந்தக்கோயிலின் சுவர்களீல் ஓவியங்கள் இருந்திருக்கின்றன. அழிந்துபோன ஓவியங்களின் தடங்களைக் கண்டொம்
அப்போது ஒன்று புரிந்தது. கல்பரப்பில் சுதைபூசி அதன்மேல் ஓவியங்களை வரைவது அக்கால வழக்கம். அதன்பொருட்டே, சுதைக்கு பிடிப்பு நிற்கவேண்டும் என்று கல்லை செதுக்குதடங்களுடன் விட்டிருக்கிறார்கள். இப்போது சுதைப்பூச்சே இல்லாமலாகிவிட்டது.
மலையுச்சியில் நின்று எங்கே திரும்பினாலும் நாகரீக தடங்கள் இல்லை. இரு பெரும் ஏரிகள் தெரிந்தன. அவையும் சோழர்காலத்துக் கனவில் இருந்தன. ஆனால் தூரத்தில் மிகப்பெரிய கல்குவாரி ஒன்று இருந்தது. அங்கே கற்களை வெடி வைத்து தகர்த்துக்கொண்டிருந்த அதிர்வால் கோயில் அதிந்ததை கண்டதாக நண்பர் திருமலைராஜன் எழுதியிருந்தார். அப்போது வேலை ஆரம்பித்திருக்கவில்லை. வெடிகளால் இன்னும் சில வருடங்களில் இக்கோயில் ஆட்டம் கண்டு சரியக்கூடும். கல்குவாரியினர் விற்றும் விடுவார்கள்.
திரும்பிவரும்வழியில் பெரிய மலைத்தேன்கூடுகளைக் கண்டோம். பெரும்பன்றி ஒன்றின் அகிடுகளைப்போல மலையின் அடியில் தொங்கிக்கிடந்தன. மலைக்குமேலே மழைநீர் தேங்கிய ஒரு குளம். அதில் மிதக்கும் புல்ப்பரப்பு. அதன் பெயர் தெப்பப்புல் என்றார் ஊழியர். கடம்பன்மலைக்குக்குச் செல்லாமல் நேராக மலையடிப்பட்டிக்குச் சென்றோம்
வரலாறு.காம் இணையதளத்தில் இருந்துதான் மலையடிப்பட்டி என்ற ஊரைப்பற்றி கேள்விப்பட்டேன். வழி விசாரித்துத்தான் செல்லவேண்டியிருந்தது. அது ஒரு சிற்றூர். அங்கே விஜயாலயசோழன் காலகட்டத்து பெருமாள்கோயில் ஒன்றிருந்தது. குகைக்கோயில். உள்ளே சுவரில் பெரிய புடைப்புச்சிற்பமாக பெருமாள். அங்கே நின்ற ஒருவர் அவர் மாதம் இருமுறை தஞ்சையில் இருந்து வந்து அதற்கு பூஜைகள் செய்வதாகச் சொன்னார். மற்றபடி வழிபாடேதும் இருப்பதாக தெரியவில்லை.
கோயிலுக்குப் பின்னால் பெரும்பாறைகள் உருண்டு நின்ற வெட்டவெளி வெயிலில் தகித்துக்கிடந்தது. அங்கே நின்று அவற்றை பிறக்காத கோயில்களாக எண்ணிக்கொண்டேன்.
மதியம் தஞ்சைக்கு வந்தோம். உணவுண்டபின்னர் தஞ்சை அரண்மனைக்குச் சென்றோம். அங்கே ராஜராஜன் பொருட்காட்சி. சரஸ்வதிமகாலுக்கு விடுமுறை. பொருட்காட்சியில் சோழர்கால செப்பு, வெண்கல திருமேனிகளையும் கற்சிற்பங்களையும் கண்ட்டோம். சிற்பங்கள் வழியாகச் செல்லும்போது மெல்ல அடுத்தடுத்த நூற்றாண்டுகளை நோக்கி நகரும் அனுபவம் ஏற்பட்டது. சோழர்காலத்தின் கலையுச்சம் என்பது செம்பு, வெண்கலம்,ஐம்பொன் சிற்பங்களிலேயே.
நடராஜர், உமை சிற்பங்களை உலகின் மாபெரும் கலைச்சாதனைகளின் வரிசையில் வைக்கமுடியும். சிறுமியாக, முதிர்ந்த பெண்ணாக விதவிதமான தோற்றங்களில் உமையை காணும்போது பெண்ணழகின் தெய்வீகத்தை மட்டும் பிரித்து எடுப்பதில் கலை அடைந்திருக்கும் வெற்றி அவை என நினைத்தேன்.
மாலை காரிலேயே திருவையாறு சென்றோம். இருட்டும்வரை தியாகராஜர் சமாதி அருகே நிறைந்தோடிய காவிரியின் விளிம்பில் அமர்ந்திருந்தோம். தி.ஜானகிராமனைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். காவிரியுடன் கலந்த மன்னர்கள் கவிஞர்கள் எத்தனைபேர்! ஆனால் கம்பனும் ஜானகிராமனும்தான் எப்போதும் காவிரியுடன் சேர்த்து நினைவுக்கு வருகிறார்கள்.
இருட்டியபின் நிலாவில் நடந்து ஐயாறப்பன் கோயிலுக்குள் சென்றோம். நிலவுபரவிய சுற்று வெளியில் ஓங்கிய கோயில்கோட்டைச்சுவர்களின் அடியில் சுற்றிவந்தோம். நிலவு விழுந்துகிடந்த குளத்தின் கரையில் நின்றிருந்தோம். பின்னர் காவிரியின் ஐந்து கிளைகளும் நிலவொளியாக வழிவதைக் கண்டபடி அறை திரும்பினோம்.
http://www.jeyamohan.in/?p=313 சிதம்பரம் நாட்டியாஞ்சலி