நமது விருந்தோம்பல்..

Kerala

 

இந்தியாவெங்கும் தொடர்ச்சியாகப் பயணம் செய்துகொண்டிருப்பவன் நான். இந்தியாவிலேயே சுற்றுலாப்பயணிகளுக்கு மிக உகந்த மாநிலம் இமாச்சலப்பிரதேசம் என்று தயங்காமல் சொல்வேன். மக்கள் மிகமிக நெருக்கமாகப் பழகுபவர்கள். எங்கும் இனிய உபசரிப்பு மட்டுமே இருக்கும். எவ்வகையான சட்ட ஒழுங்குப்பிரச்சினையும் இல்லை. சொல்லப்போனால் அங்கே குற்றம் என்பதே மிகவும் குறைவு. மகிழ்ச்சி அட்டவணையில் இந்தியாவில் முதலிடத்தில் இருப்பது இமாச்சலப்பிரதேசம்தான்.

பொதுவாக இந்தியாவே சுற்றுலாப்பயணிகளுக்கு அணுக்கமான தேசம்தான். மத, சாதிக்கலவரங்களால் மட்டுமே போக்குவரத்து தங்குமிடம் ஆகியவற்றில் பிரச்சினை வரக்கூடும். மற்றபடி மக்கள் எப்போதும் அன்னியருக்கு உதவும் பண்புடனும் மதிப்புடனும்தான் இருப்பார்கள். சுற்றுலாவை நம்பியிருக்கும் மாநிலங்களான சிக்கிம், உத்தரகண்ட் போன்றவை மட்டும் அல்ல குஜராத், கர்நாடகம் கூட சிறந்த உபசரிப்புப் பண்பாடு கொண்டவை.

ஆனால் தமிழ்நாட்டை அப்படிச் சொல்லமுடியாது. பயணிகளிடம் மக்கள் இங்கே ஒரு சிறிய மனவிலக்கம் கொண்டிருக்கிறார்கள் என்பதை என்னிடம் பலரும் சொல்லியிருக்கிறார்கள். கூடவே இங்குள்ள அனைத்துச் சுற்றுலாமையங்களிலும் ஒரு ரவுடிக்கும்பல் இருக்கும். அவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு மிகக்கவனமாக இருக்கவேண்டும். உதாரணமாக மாமல்லபுரம். நான் எந்த சுற்றுலாப்பயணிக்கும் மாமல்லபுரத்தைச் சிபாரிசு செய்யமாட்டேன். என் கண்முன்னாலேயே அயல்நாட்டுப்பயணிகள் அவமதிக்கப்படுவதை, மிரட்டப்படுவதை பலமுறை கண்டிருக்கிறேன்.

தமிழகம் எங்கும் பொது இடங்களிலும் சுற்றுலா மையங்களிலும் குடிகாரர்களின் தொல்லை மிகுதி. நம்பகமான விடுதிகளை அமர்த்திக்கொள்ளவேண்டும். மதுரைப்பகுதியின் சுற்றுலாத்தலங்கள் தமிழகப் பயணிகளுக்கேகூட பாதுகாப்பானவை அல்ல. மதுரைப்பகுதி மக்களும் அன்னியர்களிடம் முரட்டுத்தனமாகவே நடந்துகொள்கிறார்கள். ஒருமுறை தேனி அருகே எங்கள் காரில் ஒரு கோழி மாட்டிக்கொண்டது. அந்த ஊரே திரண்டு எங்கள் காரை மறித்து மிரட்டி கூச்சலிட்டு எங்களிடம் ஆயிரம் ரூபாய் பறித்துக்கொண்டது.

இன்னொருமுறை மேலூரில் ஒரு பெரியவர் காரின் கதவை பலமாகத் தட்டினார். நிறுத்தி என்ன என்று கேட்டபோது கார் அவர்மேல் முட்டிவிட்டது என கூச்சலிட்டு பணம் கேட்டு வாங்கிக்கொண்டார். பிற மாவட்டங்களில் பதிவுசெய்யப்பட்ட கார்களில் இப்பகுதிகளில் செல்வது ஆபத்து. உள்ளூரில் உள்ள நம்பகமான டாக்ஸி ஓட்டுநர்களை அமர்த்திக்கொள்வது மிக அவசியம்.

வெளிநாட்டுப்பயணிகளுக்குத் தமிழகத்தில் மிக முக்கியமான பிரச்சினை பொது இடங்களில் குவிந்திருக்கும் மலம். மாமல்லபுரமே அந்த கடற்கரையை நம்பி வாழ்கிறது. ஆனால் கடற்கரை முழுக்க மலக்குவியலாக இருக்கும். வெளிநாட்டினர் அப்படி பொது இடங்களில் மலம் கிடக்கும் என்பதை கற்பனையே செய்திருக்கமாட்டார்கள். சமீபத்தில் மாமல்லபுரத்தில் நானும் மகனும் கடற்கரையோரம் நின்றிருந்தோம். நாலைந்து வெள்ளைக்காரிகள் கடல்மணலில் ஓடிவிளையாடிக்கொண்டிருந்தனர். மலத்தை மிதித்தும் அதிலேயே அமர்ந்தும் கொண்டாடினர். அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களிடம் சொல்வது மேலும் சங்கடமானது. அங்கே நிற்கமுடியாமல் அகன்று விட்டோம்.

ஆனால் ‘தெய்வத்தின் சொந்த நாடு’ ஆன கேரளம்போல சுற்றுலாப்பயணிகளுக்கு ஆபத்தான இடம் இந்தியாவில் பிறிதில்லை. கேரளத்தில் அனேகமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் இல்லை. பயணம், தங்குமிடம் எதற்குமே சிக்கல் இல்லை. ஆனால் பொதுவாக மக்களின் மனநிலையே கடுமையானது. வருபவர்களை எதிரிகளாக, ஏய்த்துப்பிடுங்கி அனுப்பப்படவேண்டியவர்களாக ஒட்டுமொத்த கேரளமும் நினைக்கிறதோ என்ற சந்தேகம் வரும். கேரளத்தில் அடைந்த கசப்பான அனுபவங்களை அனேகமாக ஒவ்வொரு பயணியும் சொல்வார்கள். இத்தனைக்கும் கேரளம் சுற்றுலாவை நம்பி இருக்கும் மாநிலம். சுற்றுலாவை ஊக்குவிக்க முயலும் மாநிலம்

முதன்மையாக, சேவைச்சிக்கல்கள். பாபநாசம் சினிமாவுக்காக தொடுபுழாவில் ஒருநாளுக்கு ஏழாயிரம் ரூபாய் கட்டணம் வாங்கும் விடுதியில் தங்கியிருந்தேன். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து “டீ கிடைக்குமா?” என்று கேட்டேன். “டீ ஏழுமணிக்கு” என்றார் நிர்வாகி. “இங்கே நானே டீ போட்டுக்கொள்ள கெட்டில் கிடைக்குமா?” என்றேன். “கிடைக்காது” என்றார். “அருகில் டீக்கடை உண்டா?” என்றேன். “இல்லை” என்றார். “டீ குடிக்க ஏதாவது வழி உண்டா?” என்றேன். “தெரியாது” என்றார். கேட்டுமுடிப்பதற்குள் அலட்சியமான ஒற்றைச்சொல் பதில்கள். நான் தயாரிப்பு நிர்வாகியை அழைத்துச் சொல்ல அவர் எனக்கு டீ அனுப்பினார்.

கேரளத்தின் விடுதிகள் பெரும்பாலும் வெளிநாட்டில் இருப்பவர்களால் கட்டிவிடப்பட்டவை. உள்ளூரில் நிர்வாகம் செய்யவும் சேவை செய்யவும் ஆள்கிடைப்பதில்லை. கிடைப்பவர்களுக்கு எந்த அக்கறையும் இருப்பதில்லை. மலையாள ஊழியர்கள் மிக அலட்சியமான, முரட்டுத்தனமான பாவனைகளுடன் இருப்பார்கள். சாப்பாட்டுத்தட்டை நம் முன் கொண்டுவந்து வீசுவார்கள். எதைக்கேட்டாலும் ஒற்றைச்சொல்லில் ‘இல்லை’ ‘தெரியாது’ என்பார்கள். அல்லது வெறுமே தோளைக்குலுக்குவார்கள். அல்லது மணிப்பூர், பிகாரி ஊழியர்கள். அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. மொழிகூட.

அதைவிட ஆபத்து கேரளத்தின் ஓய்வுத்தங்குமிடங்கள். ‘ரிசார்ட்’ எனப்படும் இந்தத் தங்குமிடங்கள் பெரும்பாலும் மலைச்சாரலில் இயற்கையழகு மிக்க இடங்களில் இருக்கும். ஆனால் அந்திக்குப்பின் நிர்வாகத்தரப்பில் ஒரு பதினைந்து வயதுப்பையன் மட்டுமே இருப்பான். பயணிகள் தாங்களே தங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். பயணிகளில் பெரும்பாலானவர்கள் இரவில் மிதமிஞ்சிக் குடித்து, எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாதவர்களாக இருப்பார்கள். குடும்பத்துடன் சென்றால் அவர்களிடம் மாட்டிக் கொள்ள வேண்டியிருக்கும். பல நண்பர்களுக்க்கு கசப்பான அனுபவங்கள் நிகழ்ந்துள்ளன. சமீபத்தில் நான் தங்கியிருந்த விடுதியில் பயணியர் கும்பல் அங்கிருந்த ஒரே தம்பதியினரின் குடிலைச் சூழ்ந்து கதவைத்தட்டி அந்தப்பெண்ணை கேட்டு கலவரம் செய்தனர். அவர்கள் கதவையே திறக்காததனால் தப்பித்தனர்.

கடைசியாக, கேரள சாலையோர உணவகங்களின் உணவு. குறிப்பாக அசைவ உணவு. ஒரு பயணி சென்ற ஆண்டு ஓட்டலில் மாமிச உணவு உண்டு மரணம் அடைந்திருக்கிறார். பலமுறை கேரளத்தின் மாமிச ஓட்டல்களின் உணவுண்டவர்கள் உயிர்துறந்து அவை அரசால் தடைசெய்யப்பட்டுள்ளன. ஷோபி என்னும் புகழ்பெற்ற நடிகர் சாலையோர உணவை உண்டு இறந்திருக்கிறார். மிகப்பழைய உணவை மீண்டும் மீண்டும் சூடுசெய்து விற்பார்கள். எங்கு சென்றாலும் நம்பகமான உணவகத்தைப்பற்றி கேட்டுத்தெரிந்துகொண்டு செல்லவேண்டும்.

ஒருமுறை இயக்குநர் சாமியும் நானும் மலம்புழாவில் ஒரு விடுதியில் சாப்பிட்டோம். நம்பவே முடியாத அளவு கேவலமான உணவு. அப்படியே தூக்கி வைத்துவிட்டு நான் சென்று ஓட்டல் உரிமையாளரிடம் “எப்படி இப்படி ஒரு உணவை விற்கிறீர்கள்? சுற்றுலாப்பயணிகள் ஆனாலும் அவர்கள் மனிதர்கள் அல்லவா?” என்றேன். “வேண்டுமென்றால் சாப்பிட்டுவிட்டு போ. வம்புக்கு வந்தால் ஊருக்குப் போகமாட்டாய்” என்றார். நான் மேலே பேசமுடியவில்லை

கடைசியாக, சுற்றுலாப்பயணிகள் காவல்துறையில் இருந்து எந்தப்பாதுகாப்பையும் பெற முடியாது. போலீஸ்காரர்கள் மிகமிக கடுமையாகவே நடந்துகொள்வார்கள். சென்றதுமே எவரையாக இருந்தாலும் ‘அடா’ என்று பேச ஆரம்பிப்பார்கள். இங்கே சென்ற காலங்களில் சுற்றுலாப்பயணிகள் தாக்கப்படுவதும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதும் தொடர்ச்சியாக நிகழ்கின்றன. அபூர்வமாகவே வழக்குகள் பதியப்படுகின்றன. ஏனென்றால் வழக்கு முடியும்வரை பாதிக்கப்பட்டவர் அந்த ஊரில் இருந்தாகவேண்டும். நீதிமன்றத்திற்கு வருடக்கணக்கில் சென்று சாட்சி சொல்லி வழக்கை நடத்தவேண்டும். வெளியூர்பயணிகள் அதைக்கேட்டதுமே கண்ணீருடன் கிளம்பிச்சென்றுவிடுவார்கள்.

சுற்றுலாப்பயணி என்பவர் ஒரு சமூகத்தை, ஒரு ஊரை நம்பி அங்கே வருபவர். அவரிடம் எந்த பாதுகாப்பும் இல்லை. அவர் அந்த ஊருக்கு பணத்தை கொடுக்க வருகிறார்.  குறைந்தபட்சம் அந்த மதிப்பாவது அவரிடம் காட்டப்படவேண்டும். மறுமுறை பொது இடத்தில் ஒரு சுற்றுலாப்பயணி சீண்டப்பட்டால், ஏமாற்றப்பட்டால் அருகே நின்றிருப்பவர்களாகிய நாம் கண்டிப்பாக எதிர்வினையாற்றவேண்டும். அவரைப் பாதுகாக்கவேண்டும். அது நம் கடமை

ஏனென்றால் சுற்றுலாப்பயணியை ஏமாற்றுபவர், சீண்டுபவர் நம் பிரதிநிதியாக நின்று அதைச் செய்கிறார். ‘செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பார்’ என்று வள்ளுவர் விருந்தோம்புதலைச் சொன்னார். அந்தப் பெரிய பண்பாட்டை அவமதிப்பவர்கள் நம்மில் உள்ள இந்த புல்லுருவிகள்தான்.

முகங்களின் தேசம் என நினைக்கும்போது நெகிழச்செய்யும் நினைவுகளை எழுப்பும் முகங்களுக்குச் சமானமாகவே கசப்பையும் வெறுப்பையும் அளிக்கும் பல கடந்தகால முகங்கள் மனதில் எழுகின்றன. அவற்றில் ஒன்றுகூட வட இந்தியாவைச் சேர்ந்தது அல்ல, அனைத்துமே கேரளத்தையும் தமிழ்நாட்டையும் சேர்ந்தவை என்பது மேலும் வருத்தம் அளிக்கிறது. அவற்றை தனித்தனியாக நினைவுகூர்ந்து பதிவுசெய்யக்கூடாது என நினைத்துக்கொள்கிறேன். நாம் நம்மை கண்ணாடியில் பார்த்துக்கொள்வது போன்றது அவ்வனுபவம். அவை நம் முகங்கள்.

சில ஆண்டுகளுக்குமுன் நமீபியாவின் விண்டூக் நகருக்குச் சென்றிருந்தேன். அங்கே ஓர் ஓட்டலில் நானும் மாதவன்குட்டி என்னும் திரை நண்பரும் தங்கியிருந்தோம். அவர் மாத்திரை ஒன்றைக் கொண்டுவர மறந்துவிட்டார். அந்த மாத்திரையின் பெயரை செல்பேசியில் சேமித்திருந்தார். அதை வாங்கிக்கொண்டு வாருங்கள் என்று வரவேற்பாளரிடம் சொன்னார். அங்கெல்லாம் முழுக்க முழுக்க பெண்கள்தான் ஓட்டல் நிர்வாகத்தைச் செய்கிறார்கள்.

வரவேற்புப்பெண் அரைமணிநேரம் கழித்துக் கதவைத் தட்டினார். “சார், நீங்கள் சொன்ன மாத்திரை கிடைக்கவில்லை. ஆகவே ஒரு டாக்டரிடம் ஃபோனில் பேசினேன். இந்த மாத்திரை ஆசியாவில் மட்டும் கிடைக்கும் பிராண்ட் என்றார். இதற்கு இணையன ஆப்ரிக்க மாத்திரையை அவரிடம் கேட்டு வாங்கி வந்திருக்கிறேன். இந்த மாத்திரை வேண்டுமென்றால் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லை, டாக்டரை நேரில் பார்க்கவேண்டும் என்றால் ஒருமணி நேரத்தில் ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் இந்தியர் என்பதனால் இந்திய டாக்டரைப் பார்க்கவேண்டும் என்றால் இரண்டு மணிநேரம் ஆகும்” என்றாள். கையில் மாத்திரை இருந்தது.

இதன் பெயர்தான் விருந்துபச்சாரம். இந்தியாவில் இமையமலைப்பகுதிகளில் மட்டுமே ஓரளவாவது இதைப்பார்க்கமுடியும். நாம் செல்லவேண்டிய தூரம் மிகமிக அதிகம்.

 

குங்குமம் முகங்களின் தேசம் தொடரில் வெளிவந்த கட்டுரை

முந்தைய கட்டுரைபாரதி- அரவிந்தன் கண்ணையன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 15