பியுஷ் மனுஷும் எதிர்க்குரல்களும்

index

 

ஜெ

பியுஷ் மனுஷ் பற்றி அவதூறும் வசையும் ஐயங்களுமாக இணையத்தில் பேசிக்கொண்டிருப்பவர்களில் சிறுபான்மையினர் இந்துத்துவர்கள். முக்கியமான தரப்பு எம்.எல் இயக்கத்தவர். அவர்கள் அவரை பூர்ஷுவா என்றும் தரகர் என்றும் பெண்பித்தர் என்றும் பலவாறாக பிரச்சாரம் செய்கிறார்கள். பல்வேறு பெயர்களில் வந்து பின்னூட்டங்களில் அவதூறு செய்பவர்களின் புரஃபைலைச் சென்று பார்த்தால் அவர்கள் பெரும்பாலும் எம்.எல் கோஷ்டியாகவே இருக்கிறார்கள்

சரி, பீயுஷா பியுஷா எது சரி?

மகாதேவன்

***

அன்புள்ள மகாதேவன்

பீயூஷ்தான் சரி. தேன் என்று பொருள். ஆனால் அவர் பியுஷ் என்றுதான் எழுதுகிறார்

இந்துத்துவர்களுடையது ஒரு மூர்க்கமான அரசியல். அவர்களின் தரப்பை ஏற்று, அவர்கள் கக்கும் வெறுப்பை தாங்களும் கக்கி, அவர்கள் இடும் கூச்சல்கள் அனைத்தையும் தாங்களும் இடாத அனைவருமே அவர்களுக்கு எதிரிகள்தான். வெறுக்கத்தக்கவர்கள், ஒழித்துக் கட்டப்படவேண்டியவர்கள். பீயூஷ் இடதுசாரி கருத்துக்களைக் கொண்டவராம், பிள்ளையார் சிலைகளை ஏரியில் கரைப்பதை எதிர்த்தவராம். ஆகவே அவர் சிறையில் கிடப்பது நாட்டுக்கு நல்லது, அவரது சாதனைகள் எல்லாம் நடிப்புகள் என்கிறார்கள்.  இவர்களை வழக்கமான தெருமுனை அரசியல் என்று சொல்லி முழுமையாகவே புறக்கணிக்க வேண்டியதுதான்.

‘தீவிர’ இடதுசாரிகள் நம் சூழலின் ஒரு சிறிய தரப்பு. ஆகவே ஓங்கி கூச்சலிடுபவர்கள். இவர்கள்தான் நம் சூழலின் முதன்மையான நாசகார சக்திகள் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. கருத்துச்சுதந்திரம்,ஜனநாயகம் மனிதஉரிமை, சூழியல் அனைத்துக்கும் முதன்மை எதிரிகள் இவர்கள். எந்தமக்களுக்காகப் போராடுகிறோம் என்கிறார்களோ அவர்களைச் சுரண்டி உண்டு அவர்களை அழித்துக்கொண்டிருக்கும் வைரஸ்கள்.

ஆனால் இளைஞர்களின் நடுவே இவர்களுக்கு ஒரு வகை இலட்சியவாத முகம் உள்ளது. ஆயிரந்தான் இருந்தாலும் இவர்கள் ஒரு கொள்கைக்காகப் போராடுபவர்கள் என்னும் நம்பிக்கையும் இங்கே பரவலாக உள்ளது. இவர்களை தியாகிகள் என சிலர் சொல்லும்போதுதான் சிரிப்பு வரும். என்னதான் தியாகம் செய்தார்கள் என்று நான் கேட்பதுண்டு. அதற்கு எவருமே பதில்சொன்னதில்லை

சென்ற முப்பதாண்டுக்காலமாக இவர்கள் செயல்படும் விதத்தை மட்டும் கூர்ந்து பார்த்தால் உண்மையில் இவர்கள் யார் என்று தெரியும். நம் சூழலில் எழும் எந்த ஒரு மக்களியக்கத்தின் கோஷங்களையும் இவர்கள் தாங்கள் ஏற்றுக்கொள்வார்கள். மேலும் உரக்க,உச்சகட்ட வன்முறை தெறிக்க அந்த கோஷங்களை எழுப்புவார்கள். இறால்பண்ணை ஒழிப்பு, தனியார்கல்வி எதிர்ப்பு, மணல்கொள்ளை எதிர்ப்பு, டாஸ்மாக் மூடல் என அது அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும்.

அப்படி அந்தக்கோஷங்களை கையில் எடுத்ததும் இவர்களின் இலக்கு களத்தில்நின்று போராடுபவர்கள்தான். உண்மையான மக்கள் எதிரிகளை வெறுமே பொதுவாக ஏகாதிபத்திய, தரகு முதலாளித்துவ சக்திகள் என வசைபாடுவதுடன் சரி. உண்மையில் அந்த கோஷங்களை எழுப்பி களத்தில் நின்று மெல்ல மெல்ல  மக்கள்சக்தியைத் திரட்டும் செயல்வீரர்களைத்தான் இவர்கள் அவதூறு செய்வார்கள். தனிப்பட்ட நேர்மையை இகழ்ந்து இழிவுசெய்வார்கள்.

அவர்களை கைக்கூலிகள், போலிகள் என அவதூறுசெய்வார்கள். தாங்களே உண்மையில் போராடுவதாகவும் அவர்கள் ஐந்தாம்படையினர் என்றும் அத்தனை ஊடகங்களிலும் கூச்சலிடுவார்கள். அப்படி எங்கே அவர்கள் களமிறங்கி செயலாற்றினார்கள் என்று பார்த்தால் அதிகபட்சம் ஒரு இருபதுபேர் கூடி ஒரு பொது ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அப்பால் எதுவுமே செய்திருக்கமாட்டார்கள்.

அந்த உண்மையான மக்களியக்கம் மெல்ல பலவீனப்பட்டு அழிந்தால் இவர்களும் தங்கள் பணிமுடிந்தது என விலகி அடுத்ததற்குச் சென்றுவிடுவார்கள். உதாரணமாக  இப்போது டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான காந்திய இயக்கங்களின் களப்பணியும் போராட்டமும் நிகழ்கிறது. சசிப்பெருமாள் ஆரம்பித்து வைத்தது அது. அவரது இறப்பு வழியாக மக்களிடம் செல்வாக்குபெற்றது. இன்று இவர்கள் அந்தக் கோஷத்தைக் கையில் எடுத்துக்கொண்டு டாஸ்மாக்கை உடைப்போம் என்று போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். வன்முறை தெறிக்க கூச்சலிடுகிறார்கள். கூச்சல் மட்டுமே இவர்கள் அறிந்தது. சசிப்பெருமாள் மதுமுதலாளிகளின் கைக்கூலி என்று இங்கே ஒரு எம்.எல்காரர் மேடையில் முழங்குவதைக் கேட்டேன்.

இவர்களின் வன்முறைமுழக்கம் காவல்துறைக்கு மிக வசதியானது. மக்கள் போராட்டத்தை வன்முறை என முத்திரைகுத்தி எளிதாக ஒடுக்கமுடியும். ஆனால் வன்முறைக்கும் வழக்குக்கும் ஆளாகிறவர்கள் எப்போதுமே உண்மையான களப்பணியாளர்கள் மட்டுமே, இந்த போலிப்புரட்சியாளர்கள் மிக எளிதாகத் தப்பிவிடுவார்கள். உண்மையில் எப்போதுமே காவல்துறையின் செல்லப்பிள்ளைகள் இவர்கள்.

இவர்களுக்கு அத்தனைபேருமே எதிரிகள்தான். காந்தியவாதிகளும்  சூழியலாளர்களும் மட்டும் அல்ல, இடதுசாரிக் கட்சிகள்கூட. இடதுசாரித் தீவிரவாதக் குழுக்களில் இவர்கள் தவிர அனைவருமே துரோகிகள்தான். இவர்கள் தமிழக அளவில் ஒரு நூறுபேர் இருப்பார்கள். அந்த நூறுபேர்தான் யோக்கியர்கள். அவர்களும் அமைப்பை விட்டு வெளியேறிவிட்டால் ஒழித்துக்கட்டபடவேண்டிய துரோகிகள்.

இவர்கள் எதையுமே செய்யமாட்டார்கள். ஒரு சாதாரண மக்கள் போராட்டத்தைக்கூட தொடர்ச்சியாக செய்யமாட்டார்கள். அதன்மேல் ஊடகக் கவனம் இருக்கும்வரைத்தான் இவர்களும் இருப்பார்கள். உண்மையில் இவர்கள் பல்வேறுவகையில் இவர்களைப் பயன்படுத்துபவர்களின் கைக்கூலிகள் மட்டுமே. பெரும்பாலான தொழிற்சாலைகளில் இடதுசாரித் தொழிற்சங்கம் வல்லமையுடன் இருந்தால் அவர்களை அவதூறுசெய்ய இவர்களை முதலாளிகள் ஊக்குவிப்பார்கள்.

இந்தக் கட்சிகள் நகரப்பேருந்துக்களைப்போல. ஐம்பதுபேர் ஏறுவார்கள். ஐம்பதுபேர் இறங்குவார்கள். எண்ணிக்கை அப்படியே இருக்கும். ஓட்டுநரும் நடத்துநரும்தான் அப்படியே இருப்பார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக அப்படியே இருக்கிறார்கள்.  இந்தச் சிறுகும்பல்தான் பல்வேறு பெயர்களில் பல்வேறு ஆட்கள் வழியாக அனைத்து ஆக்கபூர்வ செயல்பாடுகளையும் இழிவுசெய்கிறது.

இவ்வாறு இழிவுசெய்வது இவர்களுக்கு தவறும் அல்ல. உண்மை, அறம் என்பதெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. இவர்கள் தங்கள் வழிமுறையை ‘புரட்சிகர அறம்’ என்பார்கள். தங்கள் குழு ஆட்சியைக் கைப்பற்றி அரசமைத்தபின்னர் அந்த அறத்தை நடைமுறைப்படுத்துவார்களாம். அதுவரை ஆட்சிக்கு வருவதற்காக எதையும் பேசலாம், செய்யலாம், அதுவே புரட்சிகர அறம்.

இவர்கள் உருவாக்கும் நச்சுப்பிரச்சாரத்தை இருவகையினர் நம்பி ஏற்பார்கள். பெரும்பாலானவர்கள் தங்கள் தனிப்பட்ட அயோக்கியத்தனத்தை மறைக்க கருத்துவெளியில் புரட்சிவேடம் போடும் அற்பர்கள். பிறரை வசைபாடுவது மட்டுமே இவர்களின் புரட்சிச்செயல்பாடு. இன்னொரு வகையினர் சாகசத்தை விரும்பும், இலட்சியவாத வாழ்க்கையை கனவுகாணும், அவ்வளவாக வாசிப்போ உலக அனுபவமோ இல்லாத கிராமப்புற இளைஞர்கள். எப்போதும் பலியாவது இவர்கள்தான்

இவர்களின் பேருந்திலிருந்து இறங்கும்போது பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கை அழிந்திருக்கும். சென்ற காலங்களில் அப்படி பலர் அந்த சுழியிலிருந்து மீண்டு வர நண்பர்களுடன் கூடி பொருளியலுதவி செய்திருக்கிறேன். அதெல்லாமே பெரும் துயரக்கதைகள்.

இலட்சியவாத வாழ்க்கை என்பது மாளாப்பொறுமையுடன், அனைத்து எதிர்ப்புகளையும் பின்னடைவுகளையும் எதிர்கொண்டு, நீண்டகால அளவில் சிலவற்றைச் செய்துகாட்டுவது. கூச்சலிடுவதும் எம்பிக்குதிப்பதும் அல்ல. அப்படிச் செய்துகாட்டியவர்கள் நம் வழிபாட்டுக்குரியவர்கள். அவர்களை நாம் நம் சந்ததியினருக்குச் சுட்டிக்காட்டினாலொழிய அந்த விழுமியங்கள் பெருக வாய்ப்பில்லை

ஆம், நாம் சில்லறை சுயநலக்காரர்கள். பலவீனர்கள். ஆனால் குறைந்தபட்சம் இலட்சியவாதம்மீது நம் கீழ்மையை அள்ளிக் கொண்டு சென்று பூசாமலிருக்கும் நல்லுணர்வாவது நம்மிடம் வேண்டும். இல்லையேல் நமக்கு மீட்பில்லை

ஜெ

 மருதையப்பாட்டா

மருதையன் சொன்னது

சாரைப்பாம்பின் பத்தி

முந்தைய கட்டுரைதாயுமாதல் -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 7