சமூக வலைத்தளங்களில் ஈடுபாடு இல்லாததனால் பியூஷ் மனுஷ் மீது நிகழ்த்தப்பட்ட கீழ்த்தரமான அரசு வன்முறை பற்றி நான் நேற்று கோவையில்தான் அறிந்துகொண்டேன். கோவை நண்பர்கூட்டத்தில் அதைப்பற்றிப் பேசினோம்.
பியூஷ் மனுஷ் சேலம் தருமபுரி மாவட்டங்களில் பெரும்பணியாற்றிய சூழியல்போராளி. களப்பணியாளர். பல்வேறு ஏரிகளை மீட்டு எடுத்தும் தனிப்பட்டமுயற்சியில் காடுகளை உருவாக்கியும் சாதனைபுரிந்த முன்னுதாரண மனிதர்
அவருடன் அரசு அதிகாரிகள் மோதலில் ஈடுபட்டது மிக இயல்பானதே. நானறிந்த வரையில் அதிகாரி என்பவர் ஊழலில், அதிகாரத்திமிரில், உலகியலின் அனைத்துக்கீழ்மைகளிலும் மூழ்கியவர் மட்டுமே. விதிவிலக்குகள் மிகமிகச்சிலர். அவர்களும் செயல்படமுடியாத சூழல் நம்முடையது
காவல் அதிகாரிகளால் வழக்கொன்றில் சிக்கவைக்கப்பட்ட பியுஷ் மனுஷ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அங்கே அவரை முப்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள் சூழ்ந்து நின்று தாக்கியிருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர் மேல் ஒரு குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அதுவும் முதன்மைக்குற்றம் அல்ல. அதற்கே அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத விசாரணைச்சிறையை அளித்திருக்கிறது நீதிமன்றம். நமது நீதிமன்றங்கள் காவலதிகாரிகளின் அடிமைகளாகவே பெரும்பாலும் செயல்படுகின்றன. கொடும் குற்றவாளிகளுக்கெல்லாம் கேட்டதும் ஜாமின் வழங்குபவர்கள் இவர்கள்
பியூஷ் மனுஷ் போன்ற ஒரு மாமனிதர் இந்த அநீதிக்கு இரையாகும்போது நம் ஊடகங்கள் பொருட்படுத்தாமல் கடந்துசென்றதை சமகாலக் கீழ்மைகளில் ஒன்றாகவே காண்கிறேன். சமூகவலைத்தளங்கள் இல்லையேல் இந்த தாக்குதல் எவர் கண்களுக்கும் வராமலேயே போயிருக்கும்
பியூஷ் மனுஷ் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது சில இடதுதீவிரவாதிகள், சில வலதுதீவிரவாதிகள் விமர்சனங்களைச் சொல்ல ஆரம்பித்தனர். பிரித்துப்பேனெடுக்க இலக்கியவாதி ஒருவரும் முன்வந்தார். அவர் ஏன் தலித் பிரச்சினையை கண்டுகொள்ளவில்லை என்றார் ஒருவர். அவர் ஏன் இதைச்செய்யவில்லை என்றார் இன்னொருவர். அதைச்செய்திருக்கலாமே என்றார் பிறிதொருவர். இப்படிச்செய்திருக்கலாம் என்றார்கள் சிலர்.
நான் சுருக்கமாக இப்படித்தான் சொன்னேன். “அவர் களத்தில் இறங்கி செய்துகாட்டியவர்.
களத்தில் நின்றுசெய்துகா ட்டுவதென்றால் என்ன என்று நான் அறிவேன். வெட்டி எதிர்ப்பரசியல் வெறுப்பைக் கக்கவும் ஆணவம் கொண்டு வீங்கவும் மட்டுமே உதவக்கூடியது. அவரைப்போல எதையாவது எங்காவது செய்து காட்டிய ஒருவர் அன்றி பிறர் எந்த விமர்சனத்தைச் சொன்னாலும் ஐயா நீங்கள் செய்து காட்டியது என்ன என்பதே என் கேள்வியாக இருக்கும்.
பீயூஷுக்காக உரக்கக் குரலெழுப்பவேண்டிய நேரம் இது. இங்கே சமூகப்பணியாளர்கள் இனிமேலும் செயல்படவேண்டும் என்றால் வேறுவழியே இல்லை.
ஜெ