அன்புடன் ஆசிரியருக்கு
ஒவ்வொரு துளியையும் பற்றி கீழிறிங்க வேண்டிய பெரும் படைப்பு பின் தொடரும் நிழலின் குரல். கட்சியினால் வெளியேற்றப்பட்டு பிச்சைக்காரனாக இறந்த அந்த இளம் கவிஞனின் மனச்சாட்சியாக நின்று பெரும் விவாதங்களை எழுப்புகிறது. பத்து நாட்களாக ஏறக்குறைய மனம் பிசகிவிட்டதோ என குழம்பும் அளவுக்கு “பின் தொடரும் நிழலின் குரல்” என்னை எண்ண வைத்து விட்டது. குற்றமும் தண்டனையும் நாவலில் (இன்னமும் முழுதாகப் படிக்கவில்லை) ரஸ்கால்நிகாப் காணும் ஒரு கனவில் ஒரு குதிரையை குதிரைக்காரனும் சவாரி செய்பவர்களும் கூடியிருக்கும் மக்களும் சேர்ந்து துன்புறுத்தி அவமானப்படுத்தி கொல்வதைப் போன்ற சித்திரம் வரும். அக்கனவில் சிறுவனாக இருப்பான் ரஸ்கால்நிகாப். தன் அப்பாவிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என கண்ணீருடன் கேட்பான். அவன் அப்பாவும் ஏதோ சமாதானம் சொல்வார். ஆனால் அவனை யாரும் எதுவும் சமாதானப்படுத்தி விட முடியாது. அந்த குதிரையின் வலியை உணரும் ஒரு குழந்தையின் தூய்மையான கண்ணீர் அது. பின் தொடரும் நிழலின் குரல் வாசிக்கையில் பல இடங்களில் அந்தத் தூய்மையான கண்ணீர் கூசிச் சிறுக்க வைத்து விட்டது.
முன்னகரவே முடியாத பல கூர்மையான கேள்விகள். அக்கேள்விகளை தொகுத்துக் கொள்ளக் கூட முடியவில்லை. முதல் வாசிப்பு மனதில் பெரும் கொந்தளிப்புகளையே உருவாக்கியிருக்கிறது. புகாரின் வீரபத்திரபிள்ளை அருணாசலம் என நீளும் சரடில் ஒரு புள்ளியில் நானும் என்னை இணைத்துக் கொண்டு விட்டிருந்தேன். பொதுவுடைமைக் கொள்கைகளை கரைத்துக் குடித்தவர்கள் அதன் “மேற்கட்டுமானம்” மட்டும் தெரிந்த என் போன்ற அரைவேக்காடுகள் கம்யுனிஸம் குறித்து ஏதும் அறியாதவர்கள் என எத்தரப்பினரும் பொதுவாக புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றையே பேசு பொருளாக்குகிறது பின் தொடரும் நிழலின் குரல். அடிப்படை மானுட அறம். அது அப்பட்டமாக மீறப்படும் தருணங்களில் அறம் வற்றாத மனங்களில் எழும் கொந்தளிப்புகளும் கேவல்களும் சிதைவை நோக்கிச் செல்லத் தயங்காத அதன் தைரியமும்.
தொடக்கம் முதலே அருணாசலம் மரபுடன் அமைப்புடன் “தான்” கொள்ளும் சிக்கல்களை உணர்ந்த வண்ணமே இருக்கிறான். அந்த சஞ்சலங்கள் நீங்கி ஓங்கி உதைக்கும் போதே அவன் வண்டி “ஸ்டார்ட்” ஆகிறது. எனினும் மிக “நேராக” நாவலின் போக்கு இருப்பதாக எங்கோ ஒரு மூலையில் ஒரு எண்ணம் இருந்தது. திடீரென எந்தப் புள்ளியில் எனத் தெரியாமல் வீரபத்திரபிள்ளையின் வாழ்வு விரிகிறது. வாழ்வே தான். எந்தவித நேர்கோட்டுத்தன்மையும் இல்லாமல் அங்கதமாக ஏக்கமாக மூளையை வெளிறிப் போகச் செய்யும் பெரும் விவாதங்களாக நியாயப்படுத்தல்களாக என களைந்து போய் விடுகிறது. இப்படி ஒரு வடிவம் முதல் முறை படிப்பவர்களுக்கு இன்றும் பெரும் சவாலே. சிறுகதைகள் நாடகங்கள் நினைவுக்குறிப்புகள் என எல்லா பக்கமும் சிதறி வழிகிறது நாவல். இருந்தும் அனைத்தும் ஒரு மையச் சரடை நோக்கியே உந்துகின்றன அல்லது அப்படி உந்துவதாக நான் ஒரு வசதியான கற்பனையை செய்து கொண்டேன். உதாரணமாக ஜோணி எஸ்.எம்.ராமசாமி அருணாசலத்திடம் எவ்வளவு உணர்வுப்பூர்வமாக அறம் குறித்து பேசினாலும் இறந்தவர்கள் தன்னுடன் பேசுவதாக புலம்பும் அருணாசலத்திடம் மேன்மையான ஒரு உணர்வு வெளிப்படுவதாக எண்ணிக் கொள்கிறேன். அதை உறுதிபடுத்தும் விதமாக அவன் பசுவய்யாவின் கவிதையும் ஜெயமோகனின் கவிதையையும் ஒப்பிடும் இடத்தை சொல்லலாம். டால்ஸ்டாயும் தாஸ்தவேய்ஸ்கியும் இடம்பெறும் நாடகம் மனதை விட்டு நீங்க மறுக்கிறது. இறுதியில் இடம்பெறும் நீளமான அங்கத நாடகம் எத்தனை சித்தாந்திகளின் கண்களை சிவக்க வைத்ததோ? யாரையும் விட்டு வைக்கவில்லை பைத்தியஙகள்.
உயிர்த்தெழுதல் அழ வைத்து விட்டது. வெகு நேரம் அழுதேன். கிறிஸ்துவை இரவில் தனிமையில் கண்டது போன்ற ஒரு உணர்வு. பலமுறை கேட்ட வாக்கியம் தான் எனினும் “நீங்கள் மனம் திரும்பி குழந்தைகள் போல் ஆகாவிடில் எந்தையின் உலகிற்குள் ஒரு போதும் நுழைய முடியாது” என்பதை எனக்கு உரிமையான வாக்கியமாக எடுத்துக் கொள்கிறேன்.
இப்போது கூட எந்தப்பக்கத்தை திறந்தாலும் அப்படியே உள்ளே இழுத்துக் கொள்கிறது. மனம் சற்று சமநிலை அடைந்த பிறகு மீண்டும் வாசிக்கலாம் என எண்ணி மூடி வைக்கிறேன்.
நன்றி
அன்புடன்
சுரேஷ் ப்ரதீப்