கோவையில்…

travel with writer Jyamohan in the Spiti Valley at Himachal pradesh

 

ஐரோப்பியப் பயணம் முடிந்து திரும்பியபின் நண்பர்களுடன் ஃபோனில் பேசினேன். மீண்டுெமெொரு  வெளிநாட்டுப்பயணம் வரும் இருபத்தைந்தாம் நாள்முதல். ஆகவே அனைவரையும் ஒருமுறை சந்தித்துவிடலாமென்னும் எண்ணம் எனக்கே இருந்தது. கிருஷ்ணன் மணவாளன் ராஜமாணிக்கம் ஏ.வி.மணிகண்டன் போன்றவர்கள் நாகர்கோயில் வருவதாகச் சொன்னார்கள். வேண்டியதில்லை, நானே கோவைக்கு வருகிறேன் என்று சொன்னேன்

நேற்றுகாலை கோவை எக்ஸ்பிரஸில் கோவைக்குச் சென்றேன். திருப்பூர் கதிர் பெட்டியிலிருந்து இறங்கியதுமே வந்து வரவேற்றார். அரங்கசாமி, விஜய்சூரியன், கடலூர் சீனு, ஏ.வி.மணிகண்டன், கிருஷ்ணபிரபா ஆகியோர் ரயில்நிலைய முகப்புக்கு வந்திருந்தனர். வழக்கம்போல எதிரே உள்ள கடையில் ஒரு காபி சாப்பிட்டோம்.

இளையவாசகர் சந்திப்பு நிகழ்ந்த அதே பங்களா. நண்பர் நடராஜன் ஏற்பாட்டில் இப்போது அது ஒரு சித்தமருத்துவமனை. காந்திபுரம் பேருந்துநிலையத்தில் இருந்து டாக்டர் நஞ்சப்பா சாலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு நேர் முன்னால் உள்ள சந்து. புகழ்பெற்ற சித்த மருத்துவர் கு.சிவராமன் வாரம் ஒருமுறை வருகிறார். தேர்ந்த மருத்துவர்கள் நால்வர் தினமும் நோயாளிகளைப் பார்க்கிறார்கள். எங்களூர்க்காரர் – திசையன்விளையை கன்யாகுமரி மாவட்டம் என்று சொல்லலாம்தான் – தான் அங்கே ‘தெரப்பிஸ்ட்’. ஆசாரிப்பள்ளம் சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்.

அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனை நகருக்குள்ளேயே அமைந்திருப்பது ஒரு பெரிய வசதி. தொடர்ச்சியாக நீண்டநாள் செய்யும் மருத்துவம் எதுவாக இருந்தாலும் ஆயிர்வேத- சித்த மருத்துவர்களிடம் அதன் பின்விளைவுகள் மற்றும் மீளும் முறைகளைப்பற்றியும் வாழ்க்கைமுறையை அதற்கேற்ப அமைத்துக்கொள்வதுபற்றியும் ஒரு பரிசீலனைசெய்துகொள்வது நல்லது என்பது என் எண்ணம். உடல்நிலை அமைப்பை சீர்செய்து கொள்ளவேண்டிய மருத்துவ சிகிழ்ச்சைகளுக்கு இயற்கையை ஒட்டிய வழிமுறைகளான சித்த, ஆயுர்வேதமுறைகளே நல்லது என்பதும் என் புரிதல்

காலை பத்துமணிக்குள் இருபதுபேருக்குமேல் வந்துவிட்டனர். ஈரோட்டிலிருந்து கிருஷ்ணன், விஜயராகவன்,  சந்திரசேகர், திருப்பூரில் இருந்து ராஜமாணிக்கம்.சேலத்திலிருந்து பிரசாத், நாமக்கல்லில் இருந்து வாசு, சென்னையிலிருந்து சுரேஷ்பாபு, பாண்டிச்சேரியில் இருந்து ரமேஷ் சுப்ரமணியம் என்று பல்வேறு ஊர்களிலிருந்தும் நண்பர்கள் வந்திருந்தனர். மாலை வரை பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தோம். பெரும்பாலும் சிரிப்பு ,கிண்டல், வேடிக்கை. கொஞ்சம் சமகால அரசியல். கொஞ்சம் இலக்கியம்

விஷ்ணுபுரம் விருது குறித்தும் அதற்கான அமைப்பு ஏற்பாடுகள் குறித்தும் பேசினோம். சிலமுக்கியமான முடிவுகளை எடுத்தோம். அவற்றை பிற நண்பர்களுடன் கலந்துபேசவேண்டியிருக்கிறது.

மாலை எட்டரை மணிக்கு மீண்டும் நாகர்கோயில் எக்ஸ்பிரஸில் ஏறினேன். அதே ரயிலில் அதே பி ஒன், பத்தொன்பதாம் எண் படுக்கை. அதே தலையணை விரிப்புதானா என்று கொஞ்சம் சந்தேகம் வராமலில்லை. ரயில்நிலையத்திற்கு சுரேஷ் வெங்கடாத்ரி, குவிஸ் செந்தில், விஜய் சூரியன், கிருஷ்ணன், ராஜமாணிக்கம் ஆகியோர் ரயில்நிலையம் வந்திருந்தனர். எட்டரை மணிக்கு ஏறி ஒன்பதுக்கெல்லாம் தூங்கிவிட்டேன்

இரண்டுமாதத்திற்கு ஒருமுறை எப்படியும் கோவைக்கு வந்துகொண்டிருக்கிறேன். உண்மையில் அந்த அளவுக்கே நாகர்கோயிலுக்கும் வருகிறேன்

முந்தைய கட்டுரைகருத்துரிமையும் இடதுசாரிகளும்
அடுத்த கட்டுரைபியுஷ் மனுஷ்- நம் அறத்தின் முன்பாக