அன்பின் ஜெ..
எனது புரிதலில் உள்ள தவறைச் சுட்டியிருந்தீர்கள். நன்றி. உங்களுக்குக் கடிதம் எழுதிய பின்னர், அது எனக்குத் தோன்றியது – வேலைப்பளு அதை மீண்டும் சுட்டி எழுத விடாமல் இழுத்து விட்டது என்பதை இப்போது சொன்னால் சாக்குப் போக்காக இருக்கும்.
அடிப்படை விஷயங்களான – சமூக அறம் / உரிமைகள் – போன்ற விஷயங்களில், பல முன்னோடி தீர்ப்புகள் வந்திருக்கின்றன. . தினசரி நம் மீது குவியும் செய்திகளில், இது போன்ற ஒரு பகுதியை வெளிச்சத்தில் பார்ப்பது மிக அவசியம்.
தொழிலாளர் நலன், சுற்றுச் சூழல், எழுத்துரிமை – போன்ற பல விஷயங்களில் மிக அற்புதமான தீர்ப்புகள் வந்திருக்கின்றன – இதன் அடிப்படை நமது அரசியம் சட்டமைப்பு எனப் பலமுறை தோன்றியிருக்கிறது.
எடுத்துக்காட்டாக, நிறுவனங்களில், தொழிலாளர் சம்மந்தமான வழக்குகளில், பெரும்பாலும், தொழிலாளருக்குச் சாதகமான நிலையையே தொழிலாளர் துறை / நீதி மன்றங்கள் எடுக்கும். மனச்சாய்வு தொழிலாளரின் பக்கமே – அடிப்படையில், ஒரு சாதாரண மனிதனின் வாழ்வாதாரம் என. நிறுவனங்களுக்கிருக்கும் வியாபார அவசரங்களில், ஒரு தனித் தொழிலாளி தவறு செய்தாலோ / அல்லது சரியாக வேலை செய்ய வில்லையெனிலோ, அந்த தனிமனிதனை தூக்கிக் கடாசி விட்டுச் செல்ல முயலும். ஆனால், நமது மத்தியஸ்த நிறுவங்கனளில் இருக்கும் சட்டம் மற்றும் மனச் சாய்வுகள் காரணமாக, நிறுவனங்களுக்கு, லாபம் தாண்டி ஒரு சமூகக் கடமையும் இருக்கிறது என்னும் பாடம் வலுக்கட்டாயமாகப் புகட்டப்படுகிறது. கார்ப்பரேட் நெடுஞ்சாலயின் வேகத் தடுப்புகள் அவை.
சில ஆண்டுகள் முன்பு, கனவாக, கடற்கரையோரம் வசிக்க ஒரு இடம் தேடினோம் – உயர் அலை புள்ளியிலிருந்து, 500 மீட்டர் வரை, வீடுகள் கட்ட அனுமதி மறுக்கும் சட்டமும், அதனால், அது போன்ற குடியிருப்புகளுக்கு வங்கிகள் கடன் தர முடியாததும் எவ்வளவு பெரிய சூழல் பாதுகாப்பு முறை என உணர்ந்திருக்கிறேன். (இப்போது அச்சட்டம் மாற்றப்படுவதாகச் சொல்கிறார்கள் ). அதே போல், மெரீனாவிலிருந்து, திருவான்மியூர் வரை கடற்கரையோரமாக ஒரு மேம்பாலம் கட்டும் ஒரு முயற்சியும் சூழலியவாதிகளின் எதிர்ப்பு காரணமாகக் கைவிடப்பட்டது. இன்றும் இளவேனிற் கால இரவுகளில், சென்னையின் தன்னார்வலர்கள் (திருவண்ணாமலை அருண் போன்றவர்கள்) கடற்கரையோரம் தேடி, ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முட்டைகளைச் சேகரித்து, அவற்றைப் பொரிக்க வைத்து, கடலுக்கு அனுப்புவதைப் பார்க்கும் போது, அந்த மேம்பாலம் ஏன் தேவையில்லை எனப் புரிகிறது. அதன் பின்னால் உள்ள சூழல் சட்டங்களின் அருமையும், நீதி மன்றங்களின் நிலைப்பாடும். கடந்த ஆட்சியில், அதை ஜெயந்தி டேக்ஸ் என தொழிற்துறையினர் வசைபாடிய போதும், மனம் அதை ஏற்கவில்லை
பாலா