ஜெ
சமீபத்தில் மார்ட்டின் லிண்ட்ஸ்ட்ரோம் எழுதிய Small Data புத்தகத்தை படித்தேன். அவர் நிறுவனங்களுக்கு விற்பனையை கூட்டும் வழிகளை சொல்லும் ஆலோசகர். அவர் உலகத்தின் பல்வேறு மக்களை ஆராயந்து எழுதியாவது, மக்களின் மனதில் அடித்தளத்தில் கட்டுபடடுத்தப்பட்ட ஆசைகள் ஏதேனும் ஒரு விதத்தில் வெளிவரும். ஜப்பானில் உள்ள கட்டுக்கோப்பான வாழ்க்கைக்கு வடிகாலாக சிலர் பெண்களை சீண்டுகின்றனர் இதற்கென அங்கு பெண்கள் மட்டும் செல்லும் ரயிலை இயக்குகிறார்கள், இந்தியாவின் வாழ்க்கை இன்னல்களை மறைக்க மக்கள் கற்பனை சினிமாவை அதிகம் நாடுகின்றனர், அரேபியாவின் பல மக்களிடம் நெருப்பை பற்றிய அச்சம் நிலவுவதையும் அதை போக்க பல வீடுகளில் தண்ணீர், ஆறு போன்றவற்றின் படங்களை வைத்து இருக்கின்றனர் என்றும் குறிப்பிடுகிறார்.
ராம்குமார்
***
அன்புடன் ஆசிரியருக்கு
இதை ஏன் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன் எனத் தெரியவில்லை. ஆனால் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. சாதாரண ஒன்றாக கூட இருக்கலாம். முன்பொரு முறை என் அண்ணனையே என்னால் வாசிப்பிற்கு கொண்டு வர முடியவில்லை என்று சொல்லி இருந்தேன். ஒரு வகை சலிப்பு அது.
அவனும் ஒரு முறை முதற்கனலினை சில மணி நேரங்கள் வாசித்தான். அதன் பின்பு அவன் வேறெந்த இலக்கிய பிரதியும் வாசித்து நான் பார்த்ததில்லை. அவன் பள்ளி ஆசிரியர் என்பதால் சனிக்கிழமை விடுமுறை. நேற்று மாலை என்னை அழைப்பதற்காக கமலாபுரம் வந்தான். வீட்டிற்கு போகும் வரை எதுவுமே பேசவில்லை. சென்று சேர்ந்ததும் சோபாவில் சாய்ந்தபடி வெள்ளையானையின் பதினான்காவது அத்தியாயத்தை பார்த்துக் கொண்டிருந்தான். நேற்றும் ஏதோ சிடுசிடுப்பான மனநிலையில் தான் வீட்டுக்கு சென்றிருந்தேன்.
முதலில் ஏதோ புரட்டிக் கொண்டிருந்தான் என்று தான் நினைத்திருந்தேன். “காலைலேர்ந்து ஒரு வேலையும் பாக்காம என்னத்த தான் படிக்கிறானோ” என அம்மா அங்கலாய்த்துக் கொண்ட போது மகிழ்ச்சியாக இருந்தது. பிடித்த ஒருவரின் திடீர் வருகையைப் போல வெகு நாட்கள் படிக்க நினைத்த புத்தகம் எதிர்பாராத தருணத்தில் கையில் கிடைத்தது போல மிகவும் குடைந்து கொண்டிருந்த ஒரு கேள்விக்கு விடை கிடைத்தது போல அவ்வளவு மகிழ்ச்சி. சக வாசகன் ஒருவன் வீட்டிலேயே கிடைத்து விட்டான் என்ற மகிழ்ச்சி போலும். உங்களிடம் உடனே பகிர வேண்டும் எனத் தோன்றியது. ஒரு தயக்கமும் இருந்தது பகிருமளவுக்கு முக்கிய செய்தியா இது என. இருந்தும் தோன்றியதை எழுதி விட்டேன்.
நன்றி
அன்புடன்
சுரேஷ் ப்ரதீப்
***
[அ.சேஷகிரி]
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.
இன்று தங்கள் தளத்தில் வந்துள்ள “பெருமாள்முருகன் தீர்ப்பும் நம் அறிவுஜீவிகளும்” என்ற கட்டுரையை படித்தேன். மேலும் இன்று (09.07.16) “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” பத்திரிகையில் ‘Madhorubagan, satanic verses, polyester prince” என்ற தலைப்பில் திரு.ஜி.குருமூர்த்தி எழுதியுள்ள கட்டுரையையும் தற்போது படித்தேன்.மீண்டும் குழம்பி விட்டேன். சற்று தெளிவுபடுத்தினால் தங்களுக்கு புண்ணியமாகப் போகும்.
நன்றி,
அன்புடன்,
அ. சேஷகிரி.
***
அன்புள்ள சேஷகிரி
அது சம்பிரதாயமான தரப்பின் பார்வை. அவ்வளவுதான்.
ஆனால் என் தரப்பு அதற்கு எதிரானது என்பதனால் அதை பிற்போக்குத்தனம், அபத்தம் என்றெல்லாம் சொல்லமாட்டேன். கருத்துக்களின் முரணியக்கத்தில் அதற்கு ஒரு பங்களிப்பு உண்டு. அதை கடுமையாக எதிர்ப்பவர்கள் தங்கள் சாதி, மதம் குறித்து ஒரு சிறுவிமர்சனத்தையும் கடுமையாக எதிர்கொள்பவர்கள் என நான் அறிந்திருக்கிறேன்
கருத்தியக்கத்தை வெவ்வேறு தரப்புகளின் பஞ்சாயத்துக்கு விடமுடியாது என்பது மட்டுமே அதற்கான பதில் அது இந்தியாவை சவூதி அரேபியா ஆக்கும். கருத்தியக்கம் சுதந்திரமாக நடைபெறவேண்டும். அதில் எதிர்ப்பிருப்பவர்கள் வலுவான எதிர்தரப்பாகச் செயல்படட்டும். நீதிமன்றத்தை அணுகட்டும். வெவ்வேறு நடுவர்மையங்களை அணுகட்டும்.
அந்த எதிரும் புதிருமான இயக்கங்களின் விளைவாக பேச்சுரிமை சமநிலை கொள்ளட்டும்
ஜெ
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
திருமதி. அபர்ணா கிருஷ்ணன் பேஸ்புக்கில் எழுதியுள்ள பதிவு இது. அபர்ணா கிருஷ்ணன் ஆந்திராவின் தலித் கிராமம் ஒன்றில் கடந்த 20 வருடங்களாக தங்கியிருந்து சமூக பணிகளை மேற் கொள்பவர்… நான் இந்துவா எனும் தங்கள் கட்டுரைக்கு அவரின் எதிர்வினை. This has been my own understanding as from my village. The local deities and the larger pan indian gods are seen as the same expression of divinity in the village. They have no intellectual confusions. And their Gangamma is in no danger of being swamped by the Kanipakkam Vinayaka, whom also they revere.
Jeyamohan puts it clearly, thus validating his own rootedness. A rootedness that is sadly lost as intellectualization progresses- அவரின் பேஸ்புக் பதிவு-https://m.facebook.com/story.php?story_fbid=1181407075251928&id=100001479391128&fs=4 அவரின் வலைதளம்- http://paalaguttapalle.blogspot.in/p/village-deeply-cultured-place.html?m=1
சிவக்குமார்
சென்னை
***
அன்புள்ள ஜெமோ,
இப்போதுதான் http://www.jeyamohan.in/88778#.V356V4ZlA0N படித்தேன்.
லாஸ் ஏஞ்சல்சையும் ராமையும் என் வீட்டையும் திருமலையுடன் வந்து தங்கியதையும் மறந்து விட்டீர்கள். பரவாயில்லை! நான் மறக்கவில்லை. எப்போதும் உங்கள் பால் மாறா அன்பும் மரியாதையும்!
என்றென்றும் அன்புடன்,
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
***
அன்புள்ள ராம்
உண்மையிலேயே மறந்துவிட்டேன். உங்கள் கடிதம் கண்டதும்தான் அடடா என நினைத்துக்கொண்டேன். ஆனால் உங்களை மறக்கவில்லை. உங்களை சென்னையில் சந்தித்துப்பேசியதனால், அதிகமும் தமிழ் சினிமா சார்ந்து என்பதனால், உங்களை சென்னையுடன் இணைத்து வைத்திருக்கிறது என் மனம்
மன்னிக்கவும்
ஜெ