நண்பர்களின் நாட்கள்

1

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் தளத்தில் என் கவிதை பற்றிய பதிவை பார்த்தேன்.முதலில் ஏதோ என்னை பயங்கரமாக கிண்டல் செய்து எழுதியிருக்க வேண்டும் என்று நினைத்தேன்.இரண்டு மூன்று முறை படித்த பின் கூட ஏதோ கிண்டல் இருப்பது போலவே தோன்றுகிறது.சென்ற வருடம் எனது திருமணம் குறித்து உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன்.நீங்கள் வாழ்த்தவில்லை.எனக்கு காரணம் புரியவில்லை.ஆனால் அது வருத்தம் அளித்தது.

அபிலாஷ் உங்களுக்கு எழுதிய கடிதத்தை அவரது தளத்தில் வாசித்தேன்.நான் அதிகம் பேசிய எழுத்தாளர் அபிலாஷ் மட்டுமே.அநேகமாக ஆறேழு வருடங்களாக தெரியும்.நாங்கள் சில எழுத்தாளர்களை பற்றி நிறைய பேசியிருக்கிறோம்.முக்கியமாக டால்ஸ்டாய்,தஸ்தாவெய்ஸ்கி,நகுலன்,அசோகமித்திரன்,நீட்ஷே,காம்யூ,சுந்தர ராமசாமி.உங்களை பற்றி அநேகமாக ஒவ்வொரு உரையாடலிலும் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்வார்.சமீபத்தில் கூட பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் வரும் நாகம்மை கதாபாத்திரம் பற்றி சொன்னார்.

எனக்கு சமீபத்தில்தான் ஒரு விஷயம் புரிந்தது.குரு சீட உறவு என்பது காதல் போன்ற ஒரு உக்கிரமான உறவு.அதில் சீண்டல் எப்போதும் பயங்கரமாக இருக்கிறது.அன்பும் உக்கிரமாக இருக்கிறது.அபிலாஷ் உங்களை தன் கல்லூரி பருவத்தில் தினமும் சந்தித்து பேசியதை சொல்லியிருக்கிறார்.நீங்கள் அன்புடனும் கனிவுடனும் அவருடன் உரையாடியதை பற்றி நிறைய பேசியிருக்கிறார்.எப்போதும் காபி,டீ என்று எதையும் கொடுக்க மாட்டீர்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.எனக்கு எழுத்தின் மூலமாக மட்டுமே உங்களை தெரியும்.அபிலாஷ் சொன்னவை உங்களை பற்றிய வேறொரு சித்திரத்தை அளித்தது.

நன்றி

சர்வோத்தமன்  சடகோபன்

 

அன்புள்ள சர்வோத்தமன்,

வெண்முரசு எழுதத்தொடங்கிய நாள்முதலே இத்தகைய சிக்கல்கள் பல பின் தொடர்கின்றன. முக்கியமாக மின்னஞ்சல்கள் பார்ப்பதில், பதில்கள் அளிப்பதில் உள்ள குளறுபடிகள். மிக ஊக்கமாக நாவலை எழுதிக்கொண்டிருக்கையிலும் மின்னஞ்சல் பார்க்க மனம் வருவதில்லை. எழுதமுடியாமல் முட்டிநின்று உலகத்தின்மேல் கடும் கோபம் கொண்டிருக்கையிலும் மின்னஞ்சல்கள் பார்க்க முடிவதில்லை.

பல நாட்களில் மின்னஞ்சல்கள் மிகவும் பின்னால் சென்றுவிடுகின்றன. நெடுங்காலம் கழித்தே பார்க்கப்படாத மின்னஞ்சல்கள் இருப்பது தெரியும். சிலசமயம் பதிலளிக்கவேண்டும் என எண்ணி எடுத்துவைத்ததே சேர்ந்து ஒட்டுமொத்தமாக மறந்துவிடும். எப்போதுமே நான் பேணிவரும் ஒழுங்கை, எவரையும் புறக்கணிக்கலாகாது என்பதை, இப்போது முழுமையாகக் கொண்டுசெல்லமுடியவில்லை. இதனால் உறவுகளில் பெரிய இடைவெளிகள் நிகழ்ந்துவிடுகின்றன. சென்றகாலங்களில் அப்படி விலகிச்சென்ற பலர் இருக்கக்கூடும். சிலர் அதைச் சொல்லி நான் அவர்களிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறேன்.

அதைவிட முக்கியமான மனநிலையை சீராக வைத்திருப்பது மிகமிகக்கடினமானதாக இருக்கிறது. அதுவும் இவ்விரு நிலைகளில்தான். உத்வேகமாக எழுதும்போது ஒர் உலகியல் விஷயம் ஊடே வருவது கடும் எரிச்சலையும் கொந்தளிப்பையும் அளிக்கிறது. எழுத வராதபோது ஏனென்றே தெரியாத கோபம் எல்லாவற்றின்மீதும். ஆகவே மிகையாக எதிர்வினையாற்றிவிடுகிறேன்.  அப்படி எவரிடமெல்லாம் எதிர்வினையாற்றியிருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் பல நண்பர்கள் புண்பட்டு விலகியிருப்பது தெரிகிறது.

உண்மையில் அரங்கசாமி, கிருஷ்ணன், கடலூர் சீனு , ராஜகோபாலன் போல ஒரு சிலரிடம் மட்டுமே கவனங்கள் அற்று உணர்ச்சிகளைக் காட்டவேண்டும் என நினைப்பேன். சீனிவாசன் ,சுதா, எம்.ஏ.சுசீலா போன்றவர்கள் மரியாதைக்குரிய தொலைவு கொண்டவர்கள். குடும்பத்தைக்கூட சற்றுத்தொலைவிலேயே வைக்கவேண்டியிருக்கிறது., நல்லவேளையாக அஜிதன் மிகமிக அணுக்கமானவனாக இருக்கிறான். மிகச்சில தந்தையருக்கே அது அமையும்.

ஆனாலும் நாம் உள்ளூர ஒருவரை எப்படி எண்ணியிருக்கிறோம் என நமக்கே தெரியாது. நாம் மிகையுரிமை எடுத்துக்கொண்டபின்னரே நமக்குத்தெரிகிறது. அவ்வாறு உருவாகும் பிரிவுகள் வருத்தம் அளிப்பவை. பொதுவாக இலக்கியவாசகர்கள் சற்று அகங்காரம் கொண்டவர்கள். இலக்கியவாதிகளைப்போலவே சுயமையநோக்கு உடையவர்கள். சிறிய உதாசீனம், அல்லது உதாசீனம் இருக்கிறதா என்னும் ஐயமே அவர்களை கடுமையான உணர்வுக்கொந்தளிப்புகளை நோக்கிக் கொண்டு செல்கிறது. நான் என் உணர்வுகளைப்பற்றிப் பேசுகிறேன். அவர்களும் அந்த உணர்வுகளின் மறுபக்கம் தானே?

ஆகவே இந்த பிழையான புரிதல்களும் கசப்புகளும் பிரிவுகளும் தொடர்ந்த மனவருத்தங்களும் நீடிக்கின்றன. ஒன்றும் செய்வதற்கில்லை. வருடக்கணக்கில் தொடர்ச்சியாக படைப்பூக்கமனநிலையில், உணர்வுக்கொந்தளிப்புகளுக்கு ஆட்பட்டு, வாழ்வதென்பது ஒரு பெரிய சாகசம். அதை மேற்கொண்டபின் அவ்விழப்புகளுக்கும் வருத்தங்களுக்கும் தயாராகத்தான் இருக்கவேண்டும். ஒட்டுமொத்தமகா ஒரு மன்னிப்பை அத்தனைபேரிடமும் கேட்டுவைப்பது மட்டுமே ஒரே வழி.

உங்கள் அழைப்பிதழ் என் கவனத்துக்கு வரவில்லை. ஒருவர் மேல் கோபம் இருந்தால்,  அல்லது வருத்தம் மேலோங்கினால் அதை சற்று மிகையாக வெளிப்படுத்துவதே என் வழக்கம். மௌனமாக இருப்பதோ புறக்கணிப்பதோ அல்ல. உங்கள் மேல் அப்படி எந்த விலக்கமும் இல்லை

அந்தக்கவிதையின் பகடி எனக்குப்பிடித்திருந்தது. இலக்கியப் பகடி என்பதை சுட்டும் சரியான உதாரணமாக அதை நினைத்தேன். ஆகவேதான் சுட்டிக்காட்டினேன்.

அபிலாஷின் உடல்நிலை முன்னரே நான் அறிந்ததுதான். உடம்பைப்பேணிக்கொள்ளுவது என்பது எழுத்தாளனுக்குக் கடினம். ‘என்னைப் பேணி வளர்ப்பது என் தொழில் அல்ல’என்று ஒருமுறை [self breeding is not my profession] பி.கே.பாலகிருஷ்ணன் இத்தகைய பரிந்துரை ஒன்றுக்குப் பதில் அளித்தார். ஆனால் வேறுவழியே இல்லை, உடல்நிலையை கொஞ்சமேனும் பேணி, வாழ்க்கையில் ஒரு சமநிலையை கொண்டுவந்தே ஆகவேண்டியிருக்கிறது

 

ஜெ

 

 

 

முந்தைய கட்டுரைநிலம்பூத்து மலர்ந்த நாள்
அடுத்த கட்டுரைப்ரெக்ஸிட் முடிவும் கொய்மலர் வர்த்தகமும்