திரு ஜெமோ
தொ.ப சமூக ஆய்வாளரோ வரலாற்றாய்வாளரோ அல்ல என்று அதிரடியாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் நீங்களே அவர் எழுதிய அழகர்கோயில் குறித்த ஆய்வு ஒரு கிளாஸிக் என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்தக்குறிப்பிலும் அதைச் சொல்கிறீர்கள். ஒரு ஆய்வைச்செய்தவர் ஆய்வாளர் அல்லாமல் வேறு யார்? சரி, நீங்கள் என்ன ஆய்வுகளைச் செய்திருக்கிறீர்கள்?
செந்தில்
அன்புள்ள செந்தில்,
ஆய்வாளர்களுக்கு இரு அடிப்படைத்தகுதிகள் தேவை. ஒன்று தன்னுடைய துறைசார்ந்து மட்டுமே ஆய்வுக்கருத்துக்களைச் சொல்வது. தன் எல்லையை அறிந்து வகுத்துக்கொள்வதே ஒருவரை அறிஞராக ஆக்குகிறது. நவீனத்தமிழிலக்கியத்தை முப்பதாண்டுக்காலமாக வாசித்து வருபவர் அ.கா.பெருமாள். வெங்கட் சாமிநாதனின் ‘யாத்ரா’ இதழை வெளியிட்டவர் அவர்தான். நவீன இலக்கிய வரலாற்றையும் எழுதியிருக்கிறார். ஆனால் அவரிடம் இலக்கியக்கோட்பாடு குறித்து அழகியல் குறித்து ‘அதிகாரபூர்வமாக’ ஒரு கேள்வி கேளுங்கள், பதில் சொல்லமாட்டார். தன் ஆய்வுக்களம் நாட்டாரியல் மற்றும் இலக்கியவரலாறு என்றும் அதற்குள் மட்டுமே கருத்துக்களைச் சொல்லமுடியும் என்றும்தான் சொல்வார்.
நானறிந்து முப்பதாண்டுக்காலமாக திருவிதாங்கூர் வரலாற்றை வாசிப்பவர் வேதசகாயகுமார். அ.கா.பெருமாளின் பெரும்பாலான நாட்டாரியல் ஆய்வுகளில் அவரும் ஒத்துழைத்துள்ளார். அவரிடம் நாட்டாரியல் அல்லது வரலாறு சார்ந்து ஒரு கேள்வியை கேளுங்கள். அதிகாரபூர்வமாக சொல்ல மறுப்பார். தன் எல்லை என்பது இலக்கியவரலாறு, இலக்கியக்கோட்பாடு மட்டுமே என்பார்.
ஆய்வாளர்களான செ.இராசுவோ, குடவாயில் பாலசுப்ரமணியமோ தங்கள் துறை எல்லைக்கு வெளியே வந்து இன்றுவரை ஏதும் சொன்னதில்லை. தொ.ப நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு விரிவான ஆய்வுகளைச் செய்தவர்கள் மேலே சொல்லப்பட்டவர்கள். தொ.ப செய்தது ஒரே ஆய்வுதான். மேலே சொன்னவர்கள் வாழ்நாளை அர்ப்பணித்து பல முதன்மையான ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். தொ.பவுக்கு இனவாத சாதியவாத அரசியல் சார்ந்து அவரது சில்லறைச்சீடர்களால் அளிக்கப்பட்டுள்ள எந்தக் கிரீடமும் மேலே சொல்லப்பட்ட ஆய்வாளர்களுக்கில்லை என்பதைக் கவனியுங்கள். அவர்களை பொதுச்சூழலில் அறிந்தவர்களே சிலர்தான்.எல்லைமீறி தூக்கப்பட்டதனால் நிலைமறந்துபோனவர் என்றே தொ.ப பற்றி என் கருத்து.
தொ.பரமசிவத்தின் ஆய்வு நாட்டாரியலின் ஆய்வு எல்லைக்குள் வருவது. அவர் பொதுவாக நாட்டாரியல் சார்ந்தும் குறிப்பாக ஆலயங்களுக்கும் நாட்டார்பண்பாட்டுக்கும் இடையேயான தொடர்புகள் குறித்தும் பேசுவார் என்றால் அது பொருத்தம். வரலாறு, பண்பாட்டு ஆய்வுக்களங்களில் மிகமிகக்குறைவான வாசிப்பு கொண்டவர் அவர். அனேகமாக தமிழ் மேடைப்பாமரர்களின் அளவுக்கே. தான் பேசும் விஷயஙளைப்பற்றியே இங்கே பேசப்பட்ட எதையுமே அவர் அறிந்திருக்கவில்லை என்பதைக் காணலாம்
ஆனால் அவர் திராவிட ஆரிய வரலாறு குறித்தும் மொழிவரலாறுகுறித்தும் எல்லாம் முழுமுற்றான ஆய்வுக்கருத்துக்களைச் சொல்கிறார். அவர் செய்த நாட்டாரியல் ஆய்வுகளைக்கொண்டு அவருக்கு வரலாற்றாய்வாளர், பண்பாட்டாய்வாளர் என்னும் தகுதிகளை அளித்து அவர்கருத்துக்களை கணக்கில்கொள்ளவேண்டியதில்லை என்பதே நான் சொன்னது. அவற்றை வழக்கமான மேடைப்பேச்சு பெரிசுகளின் கருத்துக்களாக மட்டுமே கொண்டால்போதும்.
ஒரு குறிப்பிட்ட தளத்தில் அடைந்த தகுதி என்பது எல்லாவற்றையும் சொல்வதற்கான தகுதி அல்ல. ‘இவர் சிறந்த சிலம்பாட்டக்கலைஞர். ஆகவே இப்போது கர்நாடக சங்கீதம் பற்றி கருத்துச் சொல்வார்’ என்று சொன்னால் எவ்வளவு அபத்தம் அது. மதம், ஆன்மீகம், ஆலயச்சடங்குகள், தமிழ்ப்பண்பாட்டு வரலாறு போன்ற தளங்களில் தொ.பவின் கருத்துக்களை உளறல் என நான் சொல்லமாட்டேன், ஏனென்றால் வயதானவர்களை அப்படிச் சொல்லக்கூடாது.
ஆய்வாளரின் தகுதிகளில் இரண்டாவதாக முக்கியமானது முறைமை [methodology] . எந்தத்துறை சார்ந்து கருத்துச் சொன்னாலும் அக்கருத்துக்கு வந்தடைந்த பாதையை துறைசார்ந்த புறவயமான தருக்கத்துடன் முன்வைக்கவேண்டும். அதுவே அதை மறுப்பதற்கும் வழியாகும். ஒரு கருத்தைச் சொல்லும்போதே என்னென்ன வழிகளில் அதை பொய்யென்று ஆக்கமுடியும் என்பது சொல்லப்பட்டாகவேண்டும். அதற்குத்தான் பொய்ப்பித்தல்முறை என்று பெயர். பொய்ப்பித்தலுக்கான வழியே இல்லாத கருத்து வெறும் அபிப்பிராயம் மட்டுமே.
தொ.ப. உதிர்க்கும் அபிப்பிராயங்களை எவரும் மறுக்கமுடியாது. ஏனென்றால் அவர் எங்கும் எதையும் ஆதாரபூர்வமாகச் சொல்வதில்லை . நிரூபிப்பதில்லை. ஆகவே பொய்ப்பிக்கும் முறைமையும் இல்லை. கூடவே அவற்றை மறுப்பவர்கள் தமிழ்விரோதிகளாக முத்திரையும் குத்தப்படுகிறார்கள். அதாவது அவரை எதிர்த்துவாதாடினால் தமிழ்விரோதியாக நின்றே அதைச்செய்ய்முடியும். தீப்பொறி ஆறுமுகமோ வெற்றிகொண்டானோ பேசும் அதே முறைமைதான் இதுவும்.
ஆகவே , பண்பாட்டு ஆய்வு, வரலாற்றாய்வுக் களங்களில் தொ.ப. முன்வைக்கும் தரப்புக்களையே கூட தன் துறைஎல்லைக்குள் நின்றபடி, புறவயமான தருக்கத்துடன் பேசும் ஓர் அறிஞரை எதிர்கொண்டு விவாதிப்பதே சூழலுக்கு நல்லது, தொ.பவை விட்டுவிடலாம். இதுவே நான் சொன்னது
நான் ஆய்வாளன் அல்ல. ஒவ்வொரு கருத்துக்கு முன்னாலும் இதை நான் சொல்வதுண்டு. புனைவெழுத்தாளனாக எனக்கு ஆர்வமும் வாசிப்பும் உள்ள துறைகள் பல உண்டு. ஆனால் எவற்றிலும் நான் கருத்துச் சொல்வதில்லை. நான் ஈடுபட்டிருக்கும் சினிமா குறித்துக்கூட அறுதிக்கருத்துக்களைச் சொல்வதில்லை
ஆனால் எனக்குரிய துறைகள் சில உள்ளன.முதன்மையாக இலக்கியம். அதில் ஓர் அறுதிக்கருத்தைச் சொல்ல நான் தகுதியானவனே. இந்திய தத்துவம், மதம், ஆன்மிகம் ஆகியவற்றில் எனக்கு முப்பதாண்டுக்கால பயிற்சியும், பெருமைக்குரிய ஆசிரியர்களும் உண்டு. திருவிதாங்கூர் வரலாற்றிலும் அவ்வாறே. ஆயினும் அத்துறைகளில் கூட நான் ஆய்வாளனாக நின்று கருத்துச் சொல்வதில்லை. என் வாசிப்பை அடிப்படையாகக் கொண்டு, பிற ஆய்வாளர்களை முன்னிறுத்தியே கருத்துக்களைச் சொல்வேன். சுயமான கருத்துக்கள் என்றால் அவற்றை ஓர் எழுத்தாளனாக நின்று முன்வைப்பதாக தெளிவுபடுத்தியபின்னரே பேசுவேன்
இங்கே உணரப்படாத ஒன்றுண்டு. அதை மீளமீள எழுதியிருக்கிறேன். எந்தத்துறையானாலும் எழுத்தாளன் தன் உள்ளுணர்வு சார்ந்து சொல்லும் கருத்துக்களுக்கு ஒரு இடமுண்டு. அத்துறையின் முதன்மை அறிஞர்கள் அவற்றை கருத்தில்கொள்வார்கள். அவை ஆய்வுண்மைகள் அல்ல, அதேசமயம் புதிய திறப்புகளாக திகழும் வாய்ப்புள்ளவை. ஆய்வின் கருவி என்பது தருக்கமுறைமை. எழுத்தாளனின் கருவி என்பது கற்பனை. அந்த வேறுபாட்டை கருத்தில்கொண்டு முதன்மையறிஞர்கள் அவற்றை பரிசீலிப்பார்கள். அரைவேக்காடுகளுக்கு இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாதாகையால் அவற்றால் எழுத்தாளனின் தரப்பை புரிந்துகொள்ளமுடியாது
ஜெ
மேற்கண்ட குறிப்பில் நான் குறிப்பிடும் கல்வித்துறைசார்ந்த பண்புகளுக்கு உதாரணமாக நான் அ.ராமசாமியைச் சொல்வேன். சென்ற காலகட்டங்களில் அ.ராவும் நானும் பெரும்பாலும் எல்லா விஷயங்களிலும் முரண்பட்டிருக்கிறோம். அ.ராவுக்கும் தொ.பவுக்கும் கருத்துத்தளத்தில் ஒற்றுமையும் அதிகம்
ஆனால் அ.ரா அவரது துறைசார் எல்லைக்குள் நின்றே எப்போதும் பேசுகிறார். தமிழாய்வு, ஊடக ஆய்வு ஆகியவை அவரது துறை. தான் சொல்வனவற்றுக்கு சீரான முறைமையை அளிக்கிறார். மறுக்க இடமளிக்கிறார். நிதானமான மொழியில் பேசுகிறார். முதலில் இப்பண்புகள் ஆய்வாளருக்குத்தேவை. அதன் பின்னரே விவாதம் தொடங்கமுடியும்.