வெள்ளையானை- சுரேஷ் பிரதீப்

1

அன்புடன் ஆசிரியருக்கு

        வெகு நாட்களாக  பதிவு செய்து காத்திருந்து நண்பனின்  சகோதரன்  வெள்ளையானை  வாங்கித்தந்தான். நான் வாங்க முயற்சித்தப் பல இணைய வணிகத்தளங்களில் “கையிருப்பு  இல்லை” என்றே பதில்  கிடைத்தது.

ஒரு நூலினை கையால்  தொடும்  போதே அதனுடன்  நம் உறவு தொடங்கி விடுகிறது  என்று  எண்ண வைத்தது வெள்ளையானையின் அட்டை வடிவமைப்பு. ராமச்சந்திரன்  அவர்களுக்கு  நன்றி. வே.அலெக்ஸ் அவர்களின்  முன்னுரையும்  கச்சிதம். வரலாற்றினை பகுத்தறிந்து பார்ப்பதற்கான ஆளுமை உங்களுள் உருவாவதற்கு  பி.கே.பாலகிருஷ்ணன் உந்துதலாக  இருந்ததை அவர் குறித்த கட்டுரையில் விளக்கியிருந்தீர்கள். அவருக்கே வெள்ளையானை சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது பொருத்தமானது.

இந்திய  வரலாற்றில்  முதன் முறையாக தலித்துகள்  திருப்பி அடிக்கிறார்கள்  என்பது எத்தகைய  உச்ச தருணம்! நம் பொதுச் சமூகம்  அது குறித்து  பேசாமலே என் போன்றவர்களை வளர்த்தெடுத்துவிட்டதால் வெள்ளையானை ஆழமான  தாக்கங்களையும் உணர்வெழுச்சிகளையும் உண்டாக்கியது. இன்றைய தமிழ்  இளைஞர்கள்  ஏய்டன் பைர்ன் ஆக நின்றே அன்றைய மதராசப்பட்டினத்தை புரிந்து கொள்ள முடியும். அஜிதனாக பிங்கலனாக பிரான்சிஸாக எனக்கு ஏய்டன்  தெரிகிறான். தலையில்  அணிந்திருக்கும்  தொப்பி பறந்து விடாமல்  இருக்க பார்மரும் ஏய்டனுமே முயல்கிறார்கள். மேக்கிற்கு அதை பிடிக்க வேண்டிய  அவசியம்  கூட இல்லை. தலைப்பாகையுடன் அறைக்கு வெளியே ஏய்டனை சந்திக்கும்  பக்கிங்ஹாமும் வழுக்கை தலையுடன்  அறையினுள் அவனை சந்திக்கும்  கவர்னரும்  வேறு வேறானவர்கள். ரம்ஜான்  விடுமுறை  என்பதால்  ஒரே நாளில்  படித்து விட முடிந்தது. இன்னும்  பல “ஒரு நாட்களை” வெள்ளையானை  எடுத்துக்  கொள்ளும்  என நினைக்கிறேன்.

வெள்ளையானை சகஜமாக  நெருங்கி  விடக் கூடியதாக  இருந்தது. ஏழாம்  உலகம்  போல முதல்  அத்தியாயமே வெளியே தூக்கி  எறிவதாக இல்லாமல் இருந்தாலும்  திடீரென  ஒரு கணத்தில்  தோன்றியது. நீலமேகத்தை என்ன செய்தும் சவரிராயனைத் தொட வைக்க ஏய்டனால் முடியாது  என்று  முதல் முறை அவன் சொல்லும்  போதே மனம்  ஊகித்து விட்டிருந்தது. மீண்டும்  மீண்டும்  துரைசாமி நாராயணன்  என நிகழ்ந்தேறுவதும் மிகவும்  பழகியதே. இரண்டு வார்த்தைகள்  பேருந்தில்  சகஜமாகப் பேசி விட்டால் மூன்றாவதாக  வந்து  விழும்  கேள்வியாக  எது இன்றும்  இருக்கிறதோ அது தான்  அங்கும்  நிகழ்கிறது. இன்னும் உக்கிரமாக. கண்ணீர்  மட்டுமே  விட வைக்கும் மௌன வலியுடன். காத்தவராயன்  மட்டும்  நம்பிக்கையளிக்கிறான். விலகி நிற்கிறான்.

வெறும் கொடுமைக்காரர்களாக அல்லது  பெருங்கருணை மிக்க புத்திசாலிகளாக மட்டுமே  “வெள்ளையர்கள்” உருவகப் படுத்தப்பட்டிருக்கும் சூழலில்  அவர்களுக்குள்ளாகவே  ஒரு ஜெர்மானியப் பாதிரியாரும் ஒரு ஐரிஷ்  இளைஞனும்  எப்படி  அணுகப்படுகிறார்கள் என சொல்லிச் செல்கிறது  வெள்ளையானை.

பறை சேரியில்  பனை நுங்கினை உறிஞ்சிய பின் ஏய்டன் அந்தக் கிழவியை தாயென என்னும்  போது நெஞ்சு  ஏனோ விம்மியது. பின் அது தவறோ என்ற குற்றவுணர்வும் மேலிட்டது. ஏகாதிபத்தியமும் அரசு நிர்வாகமும்  செயல்படும் விதத்தை மரிஸாவுக்கு விளக்கும் போது ஏய்டன்  உச்சத்துக்கு  சென்றாலும்  சக மனிதனின்  முதுகில்  கால் வைத்திறங்க கூசியழும் மரிஸா அக்கணமே உயர்ந்தெழுகிறாள். ஏய்டனின் பிம்பம்  அவளுள்  அக்கணம்  உடைகிறது.

பல இடங்கள் உறைந்து நிற்க வைத்துவிட்டன. செங்கல்பட்டில்  பசித்து சாகும்  குழந்தை  கடவுளுக்கு  என்ன கணக்கு? என ஏய்டன்  யோசிக்கும்  தருணம் அப்படியொன்று. பிரண்ணன் அறிந்த நிதானத்துடன்  பேசுகிறார். ஏய்டன்  கொதித்துக்  கொண்டே இருக்கிறான். ஏய்டன் சாலையில்  சந்தித்து  மறையும்  ஆண்ட்ரூ  மனசாட்சியின்  காத்திரமான  குரலாய் செவிகளில்  அறைகிறான்.

“சாவதற்கு  நாங்கள்  எப்போது  வாழ்ந்தோம்?” என காத்தவராயன்  கேட்பது இப்போது  வரை செவிகளில்  ஒலித்துக்  கொண்டே இருக்கிறது. தான்  உட்பட யாரையும்  மிச்சம் வைக்காமல்  குற்றவாளிக் கூண்டில்  ஏற்றுகிறான் காத்தவராயன். ஆனால்  அவனும்  தன் தலைப்பாகையுடனே வருகிறான். அவனுக்கு  தலைப்பாகை சுமையோ குறியீடோ அல்ல. அது அவனுடைய  மீறல்  அறைகூவல். மொழியற்றவர்களாக அவர்களை விட்டிருப்பது  இன்னும்  நிம்மதியிழக்கச் செய்கிறது. “தொர தொர” என்பதைத் தாண்டி  அங்கு தமிழும்  ஒலிக்கவில்லை.

கோடிக்கணக்கில் இந்தியர்கள் பெரும்பாலும்  தலித்துகள்  இறந்த பெரும் பஞ்சம் இந்தியர்களின்  தீவிரமான  சிக்கலான சாதியடுக்கு முறைகள் பஞ்சத்தைப் “போக்க” அரசு மேற்கொள்ளும் “கட்டுமான” நடவடிக்கைகள்  என நடுங்கவும் சோர்வுறவும் செய்யும்  சதுரங்கத்தில் அலைகழிக்கப்பட்டு குழம்புகிறான் ஏய்டன். எதிர்பார்ப்பும்  கசப்பும்  அவநம்பிக்கையுமாக ஏய்டன்  நின்று கொண்டிருக்கும் போது எழும் கருப்பனின்  குரல்  இந்தியாவின்  இருண்ட  மூலைகளிலிருந்து  திரண்டு வரும் முழக்கமாகிறது. உயர் குடிகளை குளிர்விக்க வந்த தொழிற்சாலையிலிருந்து எழுகிறது எரிந்து  கொண்டிருப்பவர்களின் முதல்  குரல். ஏய்டன்  உட்பட அனைவரையும்  அச்சத்தில்  ஆழ்த்துகிறது  அக்குரல். ஆனால்  அதன் பிறகு  நடக்கும்  காய் நகர்த்தல்கள் மனதினை அதிர்வடையச் செய்யாததே அதில்  எவ்வளவு  பழகி விட்டோம் என சோர்வேற்படுத்தியது.

பெரும்  கனவிலிருந்து கைப்பிடி நிஜத்தைக் கூட அள்ளிவிட முடியாத நிலையில்  கதறுகிறான் ஏய்டன். முரஹரி அய்யங்காரிடம் காத்தவராயன் பேசும் வார்த்தைகளை ஏனோ திரும்பப் படிக்கத் தோன்றியது. மரிஸா அவனை திருப்பி அடிக்கிறாள். அவன் அலுவலகம்  அவனை பகைக்கிறது. சாக்கடை நீராக மனிதர்கள்  ஓடும்  தெருவில்  தன் “மீட்பரை” கண்டு கொள்கிறான்  ஏய்டன்.

ஒளி நிறைந்த கண்ணுடன் ஒரு கொடுமையை கண்டு நிற்கும்  முரஹரி  அய்யங்காரைக் கண்டதும்  தன் வைணவ அடையாளத்தை  துறந்து பனை நுங்கு கொடுத்த கிழவியின் “புண்ணியத்தை” சூடிக் கொள்கிறான் காத்தவராயன். விஷ்ணுவை முரஹரி  அய்யங்காருடன் ஒப்பிடுவது சில்லிட வைக்கிறது.

விவாதங்கள் வழியே புரிந்து கொள்ள வேண்டிய பல கூர்மையான வெளிப்பாடுகள்  வெள்ளையானையில் உள்ளன. ஏய்டனைப் போலவே தான் இன்றைய இளைஞர்களாகிய நாங்களும். பேருந்து விரைவாகச் செல்லும்  வரையே நாங்கள்  இந்தியாவைக் கண்டிருக்கிறோம். வெள்ளையானை  ஒற்றைப்  படையாக புரிந்து வகுத்துக் கொள்ளவே முடியாத பல நுண்மையான  உரையாடல்களால் நிறைந்துள்ளது. படைப்பாளியை  குறித்து ஒரு மனச் சித்திரத்தை உருவாக்கிக் கொண்ட பின் அணுகப்படும் படைப்புகள்  மேலு‌ம்  அணுக்கமாகி விடுகின்றன போலும். Jeyamohan.in  வலைதளத்தில்  வெள்ளையானை குறித்தும்  இந்திய  சாதிகள் குறித்தும்  நிகழ்ந்த விவாதங்களை ஓரளவு படித்திருந்ததால் ஒரு  விரிந்த பிண்ணனியோடு வெள்ளையானையை அணுக முடிந்தது. அனைத்திற்கும்  மேலாக  ஒரு கூர்மையான சமரசமற்ற நீதியுணர்ச்சி வெள்ளையானையில் வெளிப்படுகிறது. ஏய்டன்  சுட்டுக் கொள்வதும் பார்மர் கலங்குவதும் காத்தவராயன்  தன் அடையாளத்தை அழிப்பதும்  மரிஸா அழுவதும்  அதனால்தான். அவ்வுணர்ச்சி நீடிக்கும்  வரை நாம் கைவிடப்படவில்லை என நம்ப முடிகிறது.

குளிர்ந்த மத்தகம் தாழ்த்தி முட்ட வருகிறது இந்திரனின்  வாகனமென எண்ணச் செய்கிறது எமர்சனின் சிந்தனையாகவும் ஒளி பெறுகிறது  வெள்ளையானை.

கை நிற்கவில்லை

மறு வாசிப்பிற்கு பின் மீண்டும்  எழுதலாம்  என நிறுத்துகிறேன்.

நன்றி

அன்புடன்

சுரேஷ் ப்ரதீப்

முந்தைய கட்டுரைதொலைத்தொடர்கள் – பொதுநோக்கும் இலக்கியமும்
அடுத்த கட்டுரைபிரபஞ்சமென்னும் சொல்