பெருமாள் முருகனின் எழுத்து சமூகத்தடைக்கு உள்ளான வழக்கில் தீர்ப்பு வந்துள்ள விஷயத்தை நண்பர் ‘இந்து’ கோலப்பன் அழைத்துச்சொன்னார். தீர்ப்பின் குறிப்பிடத்தக்க பகுதிகளை அவரே அனுப்பியிருந்தார். நான் இங்கிலாந்தின் கிராமப்புறங்களில் சுற்றிக்கொண்டிருந்த தருணம். திரும்பி வரும்வழியில் விமானநிலையத்தில் அதை வாசித்தேன். முழுமையாக வாசித்துக் கருத்துச்சொல்லும் சட்டம் அறிந்த நண்பர்கள் பலர் உள்ளனர். அவர்களிடம் பேசவேண்டும். அதற்கு முன் ஒரு உடனடி மனப்பதிவு இது.
இது எல்லாவகையிலும் ஒரு முற்போக்கான தீர்ப்பு. ஆனால் இத்தீர்ப்பு வந்ததுமே பலர் ‘நீதிமன்றத்திடம் சற்றே நம்பிக்கை வருகிறது’ என்ற பாணியில் எழுதியிருந்தனர். இதிலுள்ள முதல்பாவனை என்பது இவர்கள் நேர்மை, அறம் ஆகியவற்றின் உச்சியில் சமரசமின்றி நின்றுகொண்டிருப்பதாகவும் நீதிமன்றம் உட்பட சூழலின் சீரழிவை நோக்கி கொதித்துக்கொண்டிருப்பதாகவும் காட்டிக்கொள்வதுதான். இங்குள்ள ஒவ்வொரு சீரழிவிலும் நாம் பங்குகொள்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள ஒரு முதிர்ச்சி தேவையாகிறது.
இவர்களுக்கு இந்திய நீதிமன்றங்களில் இத்தகைய அடிப்படை விஷயங்களில் இறுதித் தீர்ப்புகள் எப்போதுமே முற்போக்கானவையாகவே உள்ளன என்பது தெரியாது – விதிவிலக்கு மிக அபூர்வம். சூழியல் சார்ந்து, மானுட உரிமைகள் சார்ந்து, அடிப்படை உரிமைகள் சார்ந்து சமரசமில்லாத ஒரு நிலைபாட்டையே எப்போதும் நீதிபதிகள் கொண்டிருக்கிறார்கள் இங்கு. அவ்வகையில் இந்திய நீதித்துறையுடன் ஒப்பிடக்கூடிய தகுதிகொண்ட நீதியமைப்புள்ள நாடுகள் உலக அளவில் மிகச்சிலவே
நான் தொழிற்சங்கச் செயல்பாட்டில் இதைக் கவனித்திருக்கிறேன். எப்போதுமே சரியான ஒரு கோரிக்கைக்கு நீதிமன்றத்தீர்ப்பைப் பெற்று அதை அமல்செய்யும்படிக்கோரித்தான் போராட்டங்கள் நிகழும். நிகரான வேலைக்கு நிகரான ஊதியம் , அடிப்படை வேலைச்சூழல் போன்ற பல கொள்கைகளையே நீதிமன்றம்தான் வகுத்தளித்தது. இந்தியாவின் சூழியல் இயக்கமே நீதிமன்றத்தீர்ப்புகளை நம்பித்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்திய நீதிமன்றத்தின் முற்போக்குத்தீர்ப்புகள் என்றபேரிலேயே ஒரு நூல் வெளிவந்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வாசித்துப்பார்க்கலாம்.
ஏன், எழுத்து வாசிப்பு என்று பார்த்தால்கூட சமீபத்தில் பதிப்புரிமை குறித்து அளிக்கப்பட்ட தீர்ப்பும் சரி, அவதூறு வழக்குகள் பற்றி அளிக்கப்பட்ட தீர்ப்பும்சரி மிகமிக முன்னோடியானவை. இருபாலினத்தோர் உரிமைகள், பெண்களுக்கான உரிமைகள் போன்றவற்றில் மிகமுக்கியமான பல தீர்ப்புகள் இந்த இரண்டாண்டுகளில் வெளிவந்துள்ளன. மிக விரிவான பார்வை கொண்டவை அவை
உண்மையில் உலகமெங்கும் நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புக்கள் அச்சமூகம் தொடர்ந்த பொதுவிவாதம் மூலம் படிப்படியாகத் திரட்டி எடுத்துக்கொண்ட விழுமியங்களைச் சார்ந்தே இருக்கும். அச்சமூகத்தின் பொதுக்குரலாகவே நீதிமன்றம் ஒலிக்கும். அதுவே முறையும்கூட. ஆனால் இந்தியாவில் நீதிமன்றங்கள் பொதுமக்களின் அறநிலைப்பாடுகளைவிட, உலகப்புரிதல்களைவிட மேலும் முற்போக்கான அறமும் புரிதலும் கொண்டவையாகவே இருந்துள்ளன. குடிமைச்சமூகம் மேலும் வளர்ந்துள்ள நாடுகளின் அறநிலைபாடுகளைக் கூர்ந்து கவனித்து அவற்றின் அடிப்படையில் நீதிமன்றம் எடுத்தமுடிவுகளே இங்கே அதிகம். அவை இங்கே அறிவுஜீவிகளால்கூட பேசப்படாதவை. அவ்வகையில் இந்திய நீதிமன்றங்கள் மூன்றாமுலக நாடுகளுக்கே முன்னுதாரணமாகச் சுட்டப்படுகின்றன.
சூழியல், மானுட உரிமை, தொழிலுரிமை சார்ந்த பல முற்போக்குத் தீர்ப்புகள் வந்தபின்னரே இந்திய சமூகம் அவ்விழுமியங்களைப்பற்றிப் பேசத்தொடங்கியது. நீதிமன்றத்தின் அந்த முன்னோக்கிய நகர்வை ‘நீதிமன்ற தடாலடி’ என்றே இங்குள்ள அரசியல்வாதிகள் வசைபாடினர். நம் சமூகத்தின் பொதுமனநிலையை பிரதிபலித்து நீதிமன்றம் ஒரு முடிவை எடுத்தால் அதை வசைபாட இங்குள்ள அறிவுஜீவிகள் எப்போதும் தயங்கியதில்லை.
இந்திய நீதிமன்றம் பொதுவாக நம் சமூகத்தின் முன்னகர்வில் கருத்தியல்ரீதியாகப் பெரும் பங்களிப்பாற்றிய ஒன்று என்பதை சென்ற ஐம்பதாண்டுக்காலத்தின் முக்கியமான தீர்ப்புகளை எடுத்து நோக்கினால் அறியலாம். உண்மையில் அது நீதிமன்றத்தின் பணியே அல்ல. இங்கே அறிவியக்கம் என்பதே சோர்ந்து கிடப்பதனால்தான் நீதிமன்றம் அந்த வெட்டவெளியை நிறைக்கிறது. பொதுவாசகர்களாகிய நமக்கு அவற்றில் அக்கறையும் இல்லை, அறிதலும் இல்லை. ஆனால் ‘பரவாயில்லை, நீதிமன்றம்கூட சுமாரா இருக்கு’ என்று நீதிமன்றத்துக்குத் தீர்ப்பளிக்கும் அற்பத்தனத்தை சாதாரணமாக வெளிப்படுத்துகிறோம்.
நடைமுறையில் நீதிமன்றம் ஒரு நெறியமைப்புதான். அதற்கு நேரடி அதிகாரம் இல்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசை நிர்ப்பந்திப்பதும், அதை வாழ்க்கைமுறையாக ஏற்றுக்கொள்வதும் மக்களின் கைகளில் உள்ளன. ஆனால் நம் மக்கள், மக்களமைப்புக்கள், அரசியல்கட்சிகளின் அறமும் சரி, ஒழுக்கமும் சரி, உலகப்புரிதலும் சரி, நம் நீதிமன்றங்களைவிட மிகமிகப் பிற்பட்டவை. நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகள் அளிக்கும் வாய்ப்புளை நாம் பெரும்பாலும் தவறவிடுகிறோம் என்பதே உண்மை. சூழியல் சார்ந்த பல தீர்ப்புகளை மக்களின் பொறுப்பின்மை செல்லாமலாக்குவது இந்திய யதார்த்தம்
அத்தனைக்கும் மேலாக அரசியல்கட்சிகள். நீதிமன்றத்தால் திரும்பத்திரும்ப கண்டிக்கப்படுபவர்கள் நம் தலைவர்கள். நீதிமன்றத்துக்கு எதிரான சக்திகளாகவே பலசமயம் நம் கட்சிகள் இருக்கின்றன. நம் சுயநலம் சார்ந்த நிலைபாடுகளுக்காக அத்தகைய அரசியல்கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நாத்தெறிக்க கோஷமிடுகிறோம். நீதிமன்றத்தையும் குறை சொல்கிறோம்.
*
உண்மையில் நாம் நினைப்பதைவிடச் சிக்கலான ஒரு விஷயம் இது. ஒரு அரசின், நீதிமன்றத்தின் உடனடித்தெரிவுகள் எவை என்பது எப்போதுமே குழப்பமானதுதான். சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதும், மக்களின் அன்றாட வாழ்க்கையை சீராக நிகழச்செய்வதும்தான் அதன் முதல்கடமைகள். அரசு அதிகாரிகளிடம் எப்போதுமே அதுவே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நூலையோ இது முன்வைக்கும் உள்ளடக்கத்தின் அறப்பிரச்சினைகளையோ முற்றிலும் அறிந்திராத பல்லாயிரம் எளிய மக்களின் பிழைப்பே இப்பிரச்சினையால் பாதிக்கப்படுமென்றால் அரசின் தேர்வு என்பது அதைச் சீராக நடத்திச்செ ல்ல உதவுவதாகவே இருக்கும்.
அரசும் சரி அரசு அதிகாரிகளும் சரி , தங்கள் அன்றாடக்கடமை என்னும் நோக்கிலேயே அனைத்தையும் அணுகுவார்கள். பண்பாட்டுப்பிரச்சினைகளோ தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையோ அவர்களுக்கு முக்கியமாகப் படாது. அரசு என்பது எப்போதுமே ஒரு மாறாஇயக்கம் என்பதைப்புரிந்துகொள்வதே அரசியலைப்புரிந்துகொள்வதன் அடிப்படை. அதை அறியாத வெற்றுக்கொந்தளிப்புகள் முதிரா இளமைக்குரியவை. ஆனால் நம்மூரில் எழுத்தாளர்களும் பத்தி எழுத்தாளர்களும் அந்நிலையைக் கடப்பதேயில்லை.
பெருமாள் முருகன் விவகாரத்தில் கொந்தளித்த திருச்செங்கோட்டுக்காரர்களுக்கு அவர்களுக்குரிய நியாயங்கள் உள்ளன. அவர்களை அயோக்கியர்கள், மூடர்கள் என்றெல்லாம் வசைபாடுவதில் பொருளில்லை. அவர்கள் கொந்தளித்தனர். எதிர்ப்புக்கூட்டம் நிகழ்த்தினர். ஆனால் பெரும்பாலான நாட்கள் பெருமாள் முருகன் அங்கேதான் இருந்தார். அவரிடம் அவர்கள் பேசிக்கொண்டும் இருந்தனர். அவர் தலையை வெட்ட எந்த மதகுருவும் ஃபத்வா விதிக்கவில்லை.
திருச்செங்கோட்டுக்காரர்களின் நிலைப்பாடு பழைமையானது. அதை நான் எதிர்க்கிறேன். இலக்கியத்தின் செயல்முறையையும், அதன் சமூகப்பங்களிப்பையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவ்வாறு அறிந்திருக்காததும் இந்தியச்சூழலில் இயல்பானதே. அது ஒரு கருத்துத் தரப்பு.
அதைப்போலவே எந்நிலையிலும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடக்கூடாது என்று எண்ணி ஆட்சியாளர்கள் எடுத்த சமரசநடவடிக்கையும் சரி, அதற்காக அவர்களிட்ட ஆணைகளும் சரி சட்டவிரோதமானவை அல்ல. அவர்களின் கடமைசார்ந்தவை அவை. அதற்குரிய நியாயங்கள் கொண்டவை. இப்பிரச்சினையில் இரண்டு கொலை விழுந்திருந்தால் நாமே இதை சட்டம் ஒழுங்குப்பிரச்சினையாகக் கண்டு ஆட்சியாளர்கள் என்ன செய்திருப்பார்கள் என்றுதான் கேட்டிருப்போம்.
நீதிமன்றம் அந்தத்தரப்புகளின் நியாயங்களை கருத்தில்கொண்டபின் மேலே சென்று நவீன அறம் சார்ந்த ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. ஒரு சமூகக்குழுவின் உளநிலைகளைவிட, சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தைவிட, கருத்துச்செயல்பாடு ஒருபடி மேலானதே என தீர்ப்பளித்து அதற்கான வழிகாட்டுநெறிகளையும் அளித்துள்ளது. மிகநிதானமான ஆனால் மிகக்கறாரான தீர்ப்பு இது. நீதிமன்றம் அறிவுசெயல்பாட்டின் சுதந்திரத்தை முழுமையாக அங்கீகரிக்கிறது, அதைப்பாதுகாப்பதே அரசின் முதற்கடமை என வலியுறுத்துகிறது, கருத்துச்செயல்பாடுகளுக்கு எதிரான சமூக உணர்வுகளை நிராகரிக்கிறது. அதை சட்ட ஒழுங்குப்பிரச்சினையாக மட்டுமே பார்க்கும் அதிகாரிகளின் போக்கை கண்டிக்கிறது. எதிர்காலத்தில் எவ்வாறு இப்பிரச்சினை கையாளப்படவேண்டும் என உறுதியான வழிகாட்டலை அளிக்கிறது
உண்மையில் இந்த இடைவெளி என்பது மிகச்சன்னமானது. பதினைந்தாண்டுகளுக்கு முன்னர் என்றால் நீதிமன்றம் சமூக அமைதிக்கே முன்னுரிமை கொடுத்திருக்கும். இன்று கல்வி, பொருளியல் வளர்ச்சியின் பின்னணியில் இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா போன்ற பல்வேறுவகையான பண்பாடுகள் மோதியும் முயங்கியும் செயல்படும் ஒரு தேசத்தில், பூசல்கள் எப்போது வேண்டுமானாலும் வெடித்துப்பெருகும் வாய்ப்புள்ள சூழலில், கல்வியறிவும் அடிப்படை வாழ்க்கைவசதியும் ஏற்ற இறக்கங்கள் மிக்கதாக இருக்கும் நிலையில் மிகக்கவனமாகவே முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கிறது ஆகவே இவ்விஷயத்தில் இதுவரை தேசிய அளவில் ஒரு கொள்கை இருக்கவில்லை. அந்தந்தச் சூழலுக்கு உகந்தவகையில் பொதுவான சட்ட வழிகாட்டுதல்களை ஒட்டியே முடிவுகள் எடுக்கப்பட்டன
இந்நீதிமன்றத்தீர்ப்பு இவ்விஷயத்தில் தேசிய அளவில் ஒரு உறுதியான பார்வையை வகுத்து அளித்துள்ளது. இது இன்னும் விவாதிக்கப்படலாம். மேலும் மேலும் மேம்படுத்தப்படலாம். அதைச்செய்யவேண்டிய பொறுப்புதான் நம் முன் உள்ளது. அவ்வாறுதான் ஜனநாயகம்செயல்படமுடியும். சமநிலையற்ற வெற்றுக்கூச்சல்களும் பிம்ப உற்பத்திக்கான எம்பித்தாவல்களும் அதற்கு எதிரானவை