உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு பெருமாள் முருகன் அறிக்கை.
நண்பர்களே,
வணக்கம்.
தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. உள்ளொடுங்கிப் புகைந்த மனத்திற்குப் பெரும் ஆறுதலாக இருக்கிறது.
‘எழுத்தாளர் உயிர்த்தெழுந்து மீண்டும் எழுதட்டும்’ என்னும் இறுதி வாசகத்தின் ஒளியைப் பற்றிப் பிடித்தெழ முயல்கிறேன். எழுந்துவிடுவேன். ஒன்றுமில்லை, மகிழ்ச்சிப் பரவசம் காரணமாக இன்னும் கொஞ்சம் அவகாசம் கேட்கிறது மனம்.
துணைநின்ற நண்பர்களுக்கு நன்றி. எதிர்நின்ற நண்பர்களுக்கும் நன்றி.
பூ
பெருவெடிப்புக்குப் பின்
ஒரு பூ மலர்கிறது
கூர்மணம்
நறுந்தோற்றம்
மின்பொலிவு
எல்லாவற்றையும்
எடுத்து நிறுத்துவிடும்
பூ