குமுதம் கடிதங்கள்

1

 

அன்புள்ள ஜெ.,

குமுதம் கட்டுரை.

என் விடலைப் பருவத்தைக் குமுதத்தில் இருந்து பிரிக்க முடியாது… இப்போது திரும்பிப் பார்க்கையில், குமுதம் வாசிப்பு என் வாழ்வின் இனிய தருணங்களில் ஒன்றாகவே மனதில் இருக்கிறது.. அதைவிட ஒரு வணிகப் பத்திரிக்கை வேறு என்ன பங்களிப்பை செய்திட  முடியும்…

பழைய குமுதம் எல்லாவற்றையும் எள்ளி நகையாடியது – மிக முக்கியமாகத் தன்னையும்… “குமுதம் ஒரு குப்பை” என்று ஒரு பத்திரிக்கை எழுதிய விமர்சனத்தை முழுதும் வெளியிட்டது.. அடுத்த பக்கத்தில் ‘குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பது’ குறித்த கட்டுரையும்… தற்போதைய தமிழ் இதழ்களில் துக்ளக் தவிர வேறு எந்தப் பத்திரிகையும் எதிர் விமர்சனத்தையும், தன் மீதான கிண்டலையும் எதிர்கொள்ளத் தயாரகயில்லை – குமுதம் உட்பட…

பேபி ஷாலினியைப் பத்திரிகை ஆசிரியராக்கி, ஒட்டுமொத்த தமிழ் வணிக இதழ்களையும் உச்சியில் இருந்து உருட்டிவிட்டதே குமுதத்தின் உச்சகட்ட சாதனை..

நன்றி,
ரத்தன்

 

அன்புள்ள ஜெ

குமுதம் பற்றிய கட்டுரை கூர்மையானது. குமுதத்தின் வழியாக நவீன இலக்கியத்திற்கு வந்தவர்கள் பலர். சுஜாதா எல்லா இதழ்களிலும் எழுதினாலும் குமுதத்திற்கே அவர் சரியாக செட் ஆனார். ஏனெறால் குமுதம் நவீன மொழிநடையைக்கொண்டது. நவீனப்பார்வை கொண்டது. சம்பிரதாயமான தயிர்சாத எழுத்துக்கள் மத்தியில் அது உருவாக்கிய அந்த நடையும் பார்வையும் முக்கியமானதுதான். அது இலக்கிய இதழ் இல்லை. இலக்கியப்படைப்புகளை அது வெளியிட்டிருக்கிறது. ஆனாலும் அது வணிக இதழ்தான். வணிக இதழாகவே அதற்கு ஒரு பங்களிப்பு உண்டு.

வணிக எழுத்து இலக்கியத்துக்குப்போட்டியோ அல்லது அதை மறைக்கும் திரையோ அல்ல. அது வேறு. அதை எல்லா வாசகர்களும் அறிவார்கள். குமுதத்தை ஒழுக்க நோக்கில் வசைபாடுபவர்கள் பழமைவாதிகள். அவர்கள் தப்பு செய்யவில்லை. அவர்கள் தரப்பு அது. ஆனால் இலக்கியவாதி அந்த ஒழுக்க நோக்கை முன்வைக்கக்கூடாது. மொழியின் அடிப்படையில் பண்பாட்டு அடிப்படையில் குமுதத்தை மதிப்பிடவேண்டும் அதைச்செய்திருக்கிறீர்கள்

ஜெயராமன்

அன்புள்ள ஜெ

குமுதம் பற்றிய உங்கள் கட்டுரை அதிர்ச்சியும் மனக்கசப்பும் அளித்தது. தமிழில் குமுதம் மிகப்பெரிய நசிவுசக்தி. அது உருவாக்கிய சீரழிவுகளுக்கு அளவே இல்லை. அக்குள் படங்களை கூட அது வெளியிட்டது. தமிழ்ச்சமூகம் காலாகாலமாக கொண்டிருந்த சில நாசூக்குகளையும் தயக்கங்களையும் இல்லாமலாக்கியதில் குமுதமே பெரும்பங்கு வகித்தது என்பார் சுந்தர ராமசாமி. அது உண்மை

என்ன ஆயிற்று உங்களுக்கு? ஆச்சரியமாக இருக்கிறது? இனி குமுதம்தானா?

மகேஷ்

முந்தைய கட்டுரைதொ.ப – ஒரு வினா
அடுத்த கட்டுரைநீச்சலும் பறத்தலும்