ஜெ,
நான் உங்கள் இணையத்தள பதிவுகளை படித்து வருகின்றேன். மேலும் நான் உங்களின் ஒரு நாவல் கூட படித்ததில்லை உங்கள் நாவல் மட்டுமின்றி அவ்வளவாகப் புத்தக வாசிப்பு இல்லாதவன் .இணையத்தின் மூலமாகவே பல தகவல்களை தெரிந்து கொள்கின்றேன். ரத்தினச் சுருக்கமாக எனது கேள்வி இது தான் நான் வரலாற்றை படித்து அறிந்துகொள்ளும் போது ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டேன் அது என்னவெனில் நாம் வரலாற்றில் இருந்து எதுவும் கற்றுக்கொள்வதில்லை என்பது தான். இந்த முரண்பாட்டை கொஞ்சம் விளக்கி கூறுங்கள்
ஐ.எஸ்.சுந்தரேசன்
அன்புள்ள சுந்தரேசன்,
நேற்று பொதுப்புத்தி சார்ந்த அறிதல்- பேச்சு பற்றி ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். இது அதன் நீட்சி
பொதுவாக சிலவரிகள் நம் சூழலில் புழங்குகின்றன. அவை பெரும்பாலும் ஏதாவது சிந்தனையாளர், பேச்சாளர்களின் வரிகளில் இருந்து நினைவில் நின்றவையாக இருக்கும். அவர் ஒரு சொற்சூழலில் , ஒரு கருத்துவிவாதத்தின் நீட்சியாக அதைச் சொல்லியிருப்பார். அல்லது பகடியாகச் சொல்லியிருப்பார். நாம் அதை ஒரு நிறுவப்பட்ட உண்மையாக எடுத்துக்கொள்வோம். ‘வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்வது ஒன்றே, வரலாற்றிலிருந்து எதையும் நாம் கற்றுக்கொள்வதில்லை என்று’ என்பது அத்தகைய ஒரு பகடிச்சொல்லாடல் மட்டுமே
இப்படி சில பொதுப்புரிதல்களை நாம் அடைந்ததும் அதை உற்சாகமாகச் சொல்லத்தொடங்குகிறோம். ஆராய்வதில்லை. வரலாற்றில் இருந்து மனிதர்கள் எதையும் கற்றுக்கொள்வதில்லை என்று சொல்லவேண்டுமென்றால் நம் சொந்த ஊரின் இருநூறாண்டுகால வரலாற்றை நாம் அறிந்திருக்கவேண்டும். அப்படி ஆராய்ந்துபாருங்கள். நீங்கள் சொன்னது உண்மையா?
இருநூறாண்டுகளுக்கு முன்புகூட இங்கே மனிதர்களில் பெரும்பாலானவர்கள் உழைப்பு அன்றி வேறேதும் அறியாதவர்களாக இருந்தனர். நிலத்துடன் நிரந்தரமாகக் கட்டப்பட்ட அடிமைகளே சமூகத்தின் பெரும்பகுதியினர். குலம்,சாதி, ஊர் என பல்வேறுவகைகளில் தளைக்கப்பட்ட வாழ்க்கையே அனைவருக்குமிருந்தது. மனிதர்கள் நிகரானவர்கள் என்னும் எண்ணமே எங்குமிருக்கவில்லை. வன்முறை அன்றாட நிகழ்வாக இருந்தது. போர்கள் பஞ்சங்களை உருவாக்கின.
நீங்கள் இன்றுவாழும் வாழ்க்கை என்பது சென்ற இருநூறாண்டுகளில் உருவாகிவந்த சமத்துவம், தனிமனித உரிமை, ஜனநாயக அரசு போன்ற பலவகையான விழுமியங்களால் கட்டமைக்கப்பட்டது. கையில் வாள் இல்லாமல் நீங்கள் வெளியே செல்வது அதனால்தான். உங்களுக்கு கல்வியும், உரிமைகளும் கிடைப்பது அதனால்தான். உரிமைகளில் ஏதேனும் பறிக்கப்பட்டால் நீங்கள் கொதிப்பதும் அதனால்தான்
வரலாற்றில் இருந்து மானுடர் கற்றுக்கொண்டவை இவ்விழுமியங்கள். இவற்றை எளிதாகக் கற்றுக்கொள்ளவுமில்லை. போராடியும் இழந்தும் முன்னகர்ந்தும் பின்னடைவைச் சந்தித்தும் மெல்லமெல்லவே பெற்றார்கள். சிந்தனையாளர்களும், கலைஞர்களும், போராளிகளும் செய்த தியாகங்களின் விளைவுகள் இவை.அவற்றை அனுபவித்தபடி வரலாற்றிலிருந்து மனிதர்கள் ஒன்றையும் கற்றுக்கொள்வதில்லை என்று சொல்வதில் உள்ளது ஒருவகை நன்றியின்மை அல்லவா? மேலும் அது ‘நான் பெற்றுக்கொள்வேனே ஒழிய எதையும் இழக்கவோ கொடுக்கவோ மாட்டேன்’ என்ற நிலைபாட்டுக்குரிய ஒரு சாக்குபோக்கும் கூட
ஆம், அடிப்படை மானுட இயல்புகளை வரலாறு எளிதில் மாற்றிவிடாது. வாழ்வதற்கான போராட்டத்தின் விதிகளும் சுலபமாக மாறுவதில்லை. ஆனால் பண்பாடு என்பது கருத்துக்களால் கட்டமைக்கப்படுவது. வரலாற்றை அவதானிப்பதன்மூலம் கருத்துக்கள் உருவாகின்றன. அவை பண்பாட்டை மாற்றியமைக்கின்றன. பண்பாட்டுக்குள் பிறந்து வளரும் மனிதனின் இயல்புகளையும் அவை மெல்ல வடிவமைக்கின்றன.. அவ்வாறுதான் நாம் நேற்றைய மனிதனில் இருந்து இன்றைய நவீன மனிதனாக மாறியிருக்கிறோம்.
ஜெ