வெண்முரசு வரிசையின் அடுத்த நாவலுக்கான மனநிலை மெல்ல இன்றுதான் தொடங்கியிருக்கிறது. இங்கிலாந்தில் கான்வால் என்னும் பகுதியில் இருந்து இன்றுதான் திரும்பி வந்தேன். இன்று ஓய்வு. நாளை நாகர்கோயில் திரும்புகிறேன்
ஒன்றும் தோன்றவில்லை. ஒரு வகையான நிலையழிதல் மட்டுமே. ஒருவழியாக சொல்நிரை தொடங்கி வருவதற்குள் ஒரு கொந்தளிப்பு நிகழ்ந்து முடிந்துவிடுமென நினைக்கிறேன். இன்று தலைப்பு மட்டும்தான். ‘சொல்வளர்காடு’
வேதங்களுக்கான உரைகளே பிராம்மணங்களும் ஆரண்யகங்களும். அவை வேதங்கள் அடுத்தகட்டம் நோக்கி நகர்ந்து வேதாந்தமாகக் கனியும் காலகட்டத்தில் உருவானவை. ஆரண்யகம் என்றால் காட்டிலுருவானது என்று பொருள். வேதச்சடங்குகளை தத்துவார்த்தமாகப் புரிந்துகொள்ளும் முயற்சியை ஆரண்யகங்கள் காட்டுகின்றன
சிலநூற்றாண்டுக்காலம் காடுகள் மெய்ஞான விவாதத்தால் கொந்தளித்திருக்கின்றன. வேதாந்தம் திரண்டுவந்தது அக்காடுகளைக் கடைந்தமையால்தான். வெண்முரசில் அடுத்த கதைநீட்சி கான்புகுதல். அவர்கள் நுழைவது மெய்மையின் சொல் பெருகும் காட்டுக்குள்
ஆறாம்தேதி இரவு பார்வதிபுரத்துக்கு வந்துவிடுவேன். அதன்பின்னர் நாவலை எழுதத்தொடங்குவேன் என நினைக்கிறேன். பதினைந்தாம் தேதிக்குள் எழுதமுடிந்தால் நல்லது. பார்ப்போம்
ஜெ
லண்டன்
4-07-2016