இந்திய இலக்கியம் – கடிதம்

4

அன்புடன் ஆசிரியருக்கு

வாசல் காவலனைக் கேளாது உட்புகும்படி பறவைக்குச் சொல்லும் கவிஞனின்  மனதில்  உள்ளது  வாசல்கள்  தோறும் கூசி நிற்கும்  அன்பின்  ஏக்கமல்லவா?”  – விண்ணளக்கும் பறவை(நூல்:சங்கச் சித்திரங்கள்)

இந்த மண்ணில் ரத்தத்தைச் சிந்தி உயிர் துறந்த மாவீரர்களே  இன்று நீங்கள்  நட்பு  நாட்டில்  கிடக்கிறீர்கள். ஆகவே அமைதியாக  உறங்குங்கள். நமது நாட்டில்  அருகருகே  துயிலும் ஜானிக்களுக்கும் மஹ்மூதுக்களுக்கும் நடுவே எந்த பேதமும்  இல்லை. தங்கள்  மைந்தர்களை  தொலைதூர நாட்டில் போர் புரிய  அனுப்பிய  அன்னையரே கண்ணீரை துடைத்துக்  கொள்ளுங்கள். உங்கள்  மைந்தர்கள்  இப்போது  பேரமைதியின்  மார்பில்  துயில்  கொள்கிறார்கள். அவர்கள்  எங்களுக்கும்  மைந்தர்கள்  தான்.”  – கலிபொலி(நூல்: புல்வெளி தேசம்துருக்கிய தளபதி ஆட்டாதுர்க் முஸ்தபா கமால் பாஷா ஆற்றிய  உரையின்  சில வரிகள்)

என்னை நடுக்கம் கொள்ளச் செய்த வரிகள் இவை.

http://www.jeyamohan.in/29#.V3jCn8tX7qD

இந்தப் பதிவினில் பிரேமசந்தின்லட்டுசிறுகதை குறித்து கூறியிருந்தீர்கள். வேறொரு தருணத்தில் நான் இப்படி அழுதிருப்பேனா என எனக்குத் தெரியவில்லை. மீண்டும் படிக்கக் நினைத்தாலே நெஞ்சு நடுங்குகிறது. துயரில்லை  வலியில்லை. மனம் கனிந்தும் அழ முடியும் என்பதை உணர்கிறேன்.

அசோகமித்திரன் கரைந்த நிழல்கள் நாவலின் முன்னுரையில்தமிழர் இலக்கிய உத்திகளை கையாள்வதில் உலகில் எந்த எழுத்தாளருக்கும் குறைந்தவரில்லை என நிரூபிப்பது என் நோக்கமாக இருந்தது. ஆனால் நாவலில் உள்ள பாத்திரங்கள் உத்திகளை மீறி தசையும் ரத்தமுமாக இருந்தார்கள்என்று குறிப்பிட்டிருந்தார். நவீனத்துவ உத்திகளை கையாண்ட ஒரு பெரும் படைப்பாளி இப்படி சொல்வதற்கான அர்த்தத்தைலட்டுகதை சொல்லலே உணர்த்தி விட்டது. நீங்கள் சொன்னபோது அரங்கில் யாரேனும் அழுதார்களா எனத் தெரியவில்லை. ஆனால் லட்டுடன் அந்த முதிர்ந்த குழந்தை சிரிக்கும் கணம் உருவாகும் கலக்கத்தையும் அமைதியின்மையையும் வார்த்தைகளாக மாற்ற முடியவில்லை. விரும்பவும் இல்லை.

போரும் வாழ்வும் நாவலில் இலியா ராஸ்டோவ் குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய பின் ஒரு பணிப் பெண் மட்டும் அங்கிருப்பாள். ராஸ்டோவ்களின் முகச் சாயல் கொண்ட ஒரு இளைஞன் அவர்களிடம் ஏதோ உதவி எதிர்பார்த்து தயங்ககத் தயங்கி வருவான். அந்த பணிப்பெண் அதை உணர்கிறாள். தன்னிடம் இருக்கும் சில ரூபிள்களை கொடுத்தனுப்பிய பின் அவனுக்கு சரிவர உதவ முடியவில்லையே என நினைத்து அழுகிறாள். போகிற போக்கில்  கடந்து செல்லும்  அந்த சிறு அத்தியாயத்தின்  வலிமை இப்போது விளங்குகிறது.ஆரோனிடம் அழுத சிறுவனையும் அந்த பணிப்பெண்ணையும் பொறுத்திப் பார்க்க முடிகிறது.

மகத்தான  ஏதோவொன்று  இலக்கியத்தில் உள்ளது. அதை உணர முடிகிறது.

அன்புடன்

சுரேஷ் ப்ரதீப்

 

முந்தைய கட்டுரைகுமுதம்
அடுத்த கட்டுரைகங்காஸ்நானம்- ஜானகிராமன்