Respected Jeyamohan,
When I read a letter from Mr.Jeyapandiyan in your website. The words used by him on Gandhiji is really hurting. I have heard same kind of hatred towards Gandhi from others too but all of them are having little knowledge of the Modern Indian History I think.
Many are still thinking that the war is the only solution against any kind of imperialism.
Thanks,
B.Karthik.
அன்புள்ள கார்த்திக்,
அவரது கடிதத்துக்கு நான் எழுதிய கடிதத்தில் உள்ள முக்கியமான கேள்வியையே நான் பலரிடம் கேட்பது. நீங்கள் காந்திக்கு வைக்கும் அளவுகோல்களை, அவரைப்பற்றி பேச நீங்கள் பயன்படுத்தும் மொழியை நீங்கள் மதிக்கும் பிறரை பற்றிச் சொல்ல பயன்படுத்துவீர்களா?
அங்கே அவர்களிடம் ஒரு முள் தைக்கும். அதில் இருந்து தொடங்கினால் அவர் சில சமயம் முன்னே செல்ல முடியும்
ஜெ
Dear jemo sir,
ஜெயபாண்டியன் கருப்பன் ஐயாவ நான் நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் என்னுடைய ஆரம்பகாலம். காந்தி மேல் முரட்டு தனமான கோபம் இல்லாமல் அவரை புரிந்துகொள்வது கடினம். சத்தியமாக சொல்றேன் நான் காந்திய இதே கோவத்தோட தான் படிக்க ஆரம்பித்தேன் (திட்ட கூட வரலாறு தெரியணுமே). நான் என் நண்பரிடம் இந்திய வரலாறு பற்றியோ அல்லது காந்திக்கு பின் இந்தியா பற்றியோ பேசும்போது நான் பெரும்பாலும் காந்தியை மையமாக வைத்தே பேசுவேன். அதலால் அவர் காந்திமேல் பிரியம் கொண்டு காந்தி சம்மந்தமான புத்தகங்களை பரிதுரைக்க சொன்னார். ஆனால், நான் அவரை அம்பேத்கர், பகத் சிங் மற்றும் நேதாஜியை பற்றி படிக்கச் சொனேன்.
எனது அபிப்ராயம் காந்திமேல் உண்மையான (கடும்) கோபம் இல்லாமல் அவரை புரிந்து கொள்வது கடினம். அதலால் ஜெயபாண்டியன் சார் இதோட நீங்க நின்றுவிட கூடாது அவரை (காந்தியை) பற்றி நீங்க இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும்,முன்னால் சொன்னதுபோல் திட்ட கூட வரலாறு தெரியணுமே. ஊங்களது கோவம் சமுக அக்கறையால் வருவது அதலால் ஜெமோ சார் கட்டுரைகளை படிங்கள் அல்லது இன்றைய காந்திய படியுங்கள்.
போனவாரம் ஒருநாள் நான் இரயிலில் பயணம் செய்யும்போது எனது எதிர் இருக்கையில் இருவர் சினிமா பற்றிபேசிகொண்டு இருந்தனர் அவர்கள் பேச்சு அப்படியே ஹே ராம் படம் பக்கம் சாய்ந்தது அப்போது அவர்களில் ஒருவர் காந்தியை கோட்சே ஏன் கொன்றான் என்ற ஒரு அறியகருத்தை சொன்னார். அதை அவர் கோட்சே பற்றிய புத்தகத்தில் படித்ததாகவும் சொன்னார். சின்ன பொண்ணுக தோலுள கைய போடுகிட்டுத்தான் காந்தி நடபாறு, அந்த பெண்களுடைய வாழ்க்கைய காக்கவே கோட்சே காந்திய சுட்டார் என்றார் (like our cinema hero).
இந்த அளவுக்குத்தான் காந்தி பற்றிய அறிதலும் இந்தியா பற்றிய வரலாறும் தெரிந்து இருக்கு. இப்படி கூட ஒரு செய்திய சொல்லமுடியும் அல்லது திரிக்க முடியும் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்.
With Love
Parthiban
அன்புள்ள பார்த்திபன்
நான் எப்போதுமே இந்த ரயில் விவாதங்களை கவனிக்கிறேன். ரயிலுக்கு பதில் இப்போது இணையம். செவியால் கேட்டு வாயால்பேசி போய்க்கொண்டே இருப்பார்கள். நம்மவர்களில் ஒரு தகவலை உறுதிசெய்துகொள்ள முயல்பவர்கள் மிகமிகச்சிலரே
ஜெ
அன்புள்ள ஜெ சார்!
வணக்கம் & வாழ்த்துக்கள்.
ஜெயபாண்டியன் கருப்பனின் கடிதத்தை பிரசுரித்து அதற்கு தக்க பதில் அளித்தது என்னை நிறைவு செய்கிறது. பொதுத்தளத்தில் இது போன்ற பலரின் எதிர்மறை கருத்துக்களை பதிவு செய்து – அது பல்லிலிக்க வேண்டும்.
நன்றி
காமராஜ் ம
வணக்கம் ஜெ !!
எனக்கு உள்ள சில சந்தேகங்களை கேட்டு தெளிவு கொள்ளவும் கருத்தை பகிர்ந்து கொள்ளவும் இக்கடிதம் ..
மனிதன் தோன்றியது ஆப்பிரிக்காவில் என்று சொல்கிறார்கள். ஆனால் அங்கே குறிப்பிடத்தக்க நாகரீகம் ஏதேனும் தோன்றியுள்ளதா(எகிப்தை தவிர்த்து ) ? சிறு குழுக்களுக்கு மேல் அவர்கள் வளர்ச்சி அடையாததற்கு காரணங்கள் என்னவாக இருக்கும்?. அவர்களின் வரலாறு தான் என்ன?.அங்கயும் முரண் இயக்கமும், தேவையும் வளர்ச்சியையும் இருந்திருக்க வேண்டும் அல்லவா?
(நாம் உயர்ந்தவர்கள் அவர்கள் தாழ்ந்தவர்கள் என்று சொல்லவில்லை. ஆர்வம் மட்டுமே இக்கேள்விகளுக்கு காரணம் )
பாடப் புத்தகங்களில் ஏன் பிரிவினை பற்றியும், அவற்றின் விளைவாக ஏற்பட்ட அழிவுகள் பற்றியும் ஒன்றும் குறிப்பிடப்படுவதில்லை? அவை சிறுபான்மை மக்களை பாதிக்கும் என்று தவிர்த்திருப்பார்கள் என்பதை ஏற்க முடியவில்லை. வரலாறு முக்கியம் பெறுவதே அது செய்த தவறுகளை அலசுவதற்கும் அதிலிருந்து பாடம் பெறுவதற்கும் தானே. ஒரு வேளை பிரிவினை பற்றிய தகவல்கள் மக்களுக்கு நினைவூட்டப் பட்டுக்கொண்டே இருந்திருந்தால் பல கலவரங்கள் தவிர்க்கப் பட்டும் இருக்கலாம்.
ஹே ராம் திரைப்படம் பார்த்து விட்டீர்களா ?. அந்தபடத்தின் தோல்விக்கு காரணமே அந்த படத்தில் வரும் ஒரு வசனம் போல “நீ ஒரு மதராசி உனக்கு , இதபத்தி ஒன்னும் தெரியாது ” என்பதுதான்
நமக்கு ஒன்றும் தெரியாததுதான் காரணம் என நினைக்கிறேன். சமீபத்தில் தான் “நள்ளிரவில் சுதந்திரம்” வாசித்தேன். அந்த புத்தகத்தில் இருந்து பல சம்பவங்கள் அதே விதமாக படமாகப் பட்டுள்ளன . முன்னரே அந்த படத்தை பார்த்திருந்தாலும் இப்பொழுது ஒரு வரலாற்று பின்புலத்துடன் அதை புரிந்து கொள்ள முடிந்தது.
காந்தியை பற்றி இன்னும் தெரிந்துகொள்ள முடிந்தது.ஒரு நிறைவான சித்திரத்தை அளித்தது. இன்றைய சூழ்நிலையில், அரசியல் நேர்மையை பற்றி நண்பர்களிடையே விவாதித்து ஓய்ந்ததுதான் மிச்சம் நான் உள்பட எல்லாரும் நல்ல தலைவருக்காகத்தான் காத்திருக்கிறோம் யாரும் செயல்பட விரும்பவில்லை, எதையும் இழக்க தயாராக இல்லை. இந்நிலையில் காந்தியின் வெளிப்படை அரசியல் மிக உன்னதமானதாக படுகிறது. அவர் மனிதன் என்பதானால் அவருக்கு ஏற்பட்ட, மக்களால் அவருக்கு ஏற்பட்ட தோல்விகளை தவிர்த்தால்!.
ஆனால் அவரை பற்றி படிக்கும் தோறும் நான் மற்றும் என் மக்களின் இயலாமை அன்றைய பொழுதையே எனக்கு சோகமானதாக மாற்றிவிடுகிறது.
-தமிழ்
அன்புள்ள தமிழ்
ஆப்ரிக்காவின் மாபெரும் பண்பாடுகள் இரண்டு. அவை உலகுக்கு ஆப்ரிக்காவின் கொடை. ஒன்று எகிப்து. அடுத்தது, எதியோப்பிய நாகரீகம். எதியோப்பியா- எரித்ரியாவை உள்ளடக்கிய பெரும் நாகரீக தேசம் அக்காலத்தில் அபிசீனியா என்று அழைக்கப்பட்டது. உலகின் மிகத்தொன்மையான நாகரீகங்களில் ஒன்று அது. சங்ககாலத்தில் இங்கே வந்து வணிகம் செய்தார்கள் இங்கே அவர்கள் காப்பிரிகள் எனப்பட்டார்கள்.
ஆப்ரிக்காவின் தேக்கநிலைக்குக் காரணமாக பல ஊகங்கள் சொல்லப்படுகின்றன. ஜாரேட் டயமண்ட் அவரது Guns, Germs, and Steel நூலில் சொல்லும் காரணங்கள் ஓரளவுசரியாக படுகின்றன. பெரும்பாலைநிலத்தில் பல ஆப்ரிக்க நாடுகள் அமைந்துள்ளன. ஆசியாவின் மையநிலத்தை அந்த பாலைவனம் தென்னாப்ரிக்காவில் இருந்து பிரிக்கிறது. பொதுவாக வளார்ச்சி என்பது தொடர்ச்சியாக பிற பண்பாடுகளுடன் உரையாடுவதனால் உருவாகிறது. படையெடுப்பும் உரையாடலுக்கு வழியே. அது தென்னாப்ரிக்க நாடுகளுக்கு நிகழவில்லை. ஆகவே வணிகம் வளரவில்லை. புது வளார்ப்புமிருகங்களும் புதிய உற்பத்தி முறைகளும் வந்துசேரவில்லை.
ஆனால் இதுகூட சரியான பார்வைதானா என ஐயமாக இருக்கிறது. பொருளியல் வளர்ச்சியும் பெரிய சமூகக் கட்டுமானமும் மட்டும்தான் வளர்ச்சியா? ஆன்மீகமான வளர்ச்சி பண்பாட்டு வளர்ச்சி வளர்ச்சி அல்லவா? நாம் ஆப்ரிக்கர்கள், செவ்விந்தியர்கள் போன்றவர்களின் நாகரீங்களை வேறுவகையான நாகரீங்கள் என்று கண்டு அவற்றை மானுடத்தின் வேறு சாத்தியங்கள் என்று ஆராய்வதே பொருத்தம் என்று படுகிறது
என் மகன் அஜிதன் இந்த கோணத்தை முன்வைக்கிறான். அவன் சமீபத்தில் படித்த பல நூல்கள் இந்த அணுகுமுறை கொண்டவை என்கிறான்.
இந்திய தேசப்பிரிவினை ஒரு கசப்பான நினைவு. அதை நினைவிலிருந்து அழிப்பதை அன்றைய நிர்வாகிகள் தேர்வுசெய்ததில் பிழை இல்லை. அது சாதாரணமான கல்வியின் பகுதியாக கொடுக்கப்படவேண்டியதில்லை. சாதாரண தளத்தில் விவாதிக்கப்படுவதும் தேவையற்றது என்றே நினைக்கிறேன். தேவையற்ற கசப்பையே வளர்க்கும்
ஆனால் உயராய்வு தளத்தில் வழக்கமான அரசியல் சால்ஜாப்புகள் இல்லாமல் அது ஆராயப்படவேண்டும். உண்மைகள் ஆய்வாளார்களுக்கும் அரசியல் சிந்தனையாளர்களுக்கும் தெரிந்திருக்கவேண்டும். அது இங்கே நிகழவதில்லை என்பதே சிக்கல். ஒரு வரலாற்று மாணவர் வாசிக்கும்படியான தரமான வரலாற்று நூல்கள் தமிழில் இல்லை.
இந்தப்[போதாமையில் இருந்தே இங்கே அபத்தமான அரசியல் பேச்சுகள் உருவாகின்றன. இப்போது பல நல்ல நூல்கள் தமிழில் வர ஆரம்பித்திருக்கின்றன
ஜெ
Dear Jeyamohan,
This is in response to your reply on the angry letter by people on Gandhi. My respect for your and your views have gone up immensely. Few could have put it better…defenders of Gandhi dont go up-in-arms when people criticize him. Gandhi is an incomprehensible giant from whom all of us have a life time of learning.
In the past there are other topics where i didnt necessarily agree with your views. This single post makes me respect your views and read more.
Thanks,
Murali
அன்புள்ள ஜெ
சமீபத்தில் இந்த இணையதளத்தில் காந்தியைப்பற்றிய விவாதங்களை வாசித்தேன். இவற்றின் பின்னூட்டங்களில் முன்வைக்கப்படும் எளிமையான வாதகதிகளுக்கு நீங்கள் மிகமிக விரிவாகப் பதிலளித்துவிட்டீர்கள். ஆனால் அதே வரிகளை அதே போலிக்கோபத்துடன் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். வாசித்தபோது மனச்சோர்வு ஏற்பட்டது. அவர்களிடம் எப்படித்தான் பேசுவது?
http://masivakumar.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
சந்திரபோஸ்
அன்புள்ள சந்திரபோஸ்
நான் மேலோட்டமாக பார்த்தேன். ஒன்றும் சொல்வதற்கில்லை. அவர்கள் என்னுடைய கட்டுரைகளை வாசிப்பவர்களாக இருந்தால் ஏற்கனவே வாசிப்புப் பழக்கம் இருந்திருக்கும். அவர்கள் பேசும் விஷயங்களைப்பற்றி ஏற்கனவே இங்கே விரிவாக விளக்கப்பட்டமை அவர்களின் கவனத்துக்கும் வந்திருக்கும். அவர்கள் தமிழகத்தின் பொதுப்புத்தித்தளத்தில் மட்டுமே நிற்பவர்கள். இங்கே மேலோட்டமான மேடைப்பேச்சாளர்களே சிந்தனைகளை உருவாக்குகிறார்கள்.
என்ன செய்வது? நம் குரலை எழுப்பிக்கொண்டே இருப்பதுதான் வழி. இந்த தேசம் மீளவேண்டும் என வரலாற்றில் இருந்தால் இது சிந்தனைகளை நோக்கி நகரட்டும்
ஜெ