அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இந்த மாத விகடன் தடம் இதழில், பேராசிரியர் தொ.பரமசிவன் பேட்டியில் சொல்லியிருந்த இரு விஷயங்கள் குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன். தெளிவு பெறுவதற்காக உங்களுக்கு எழுதலாம் என்று தோன்றியது.
- “இந்து என்ற சொல்லே ஒரு மிஸ்நாமினல். அப்படி ஒரு மதமே கிடையாது. இந்த நிலத்தின் எந்தப் பழைய நூல்களிலும் அந்தச் சொல் கிடையாது” என்று பேராசிரியர் தொ.பரமசிவன் இப்பேட்டியில் சொல்லியிருக்கிறார். இதற்கு முன் நான் பணி செய்த இடத்தில் இருந்த என்னுடைய மேலதிகாரியும் கிட்டத்தட்ட இதே கருத்தைச் சொல்லி, “இந்து” என்ற பெயரை உங்களுக்கெல்லாம் வழங்கியதே எங்கிருந்தோ வந்த வெள்ளையன்தான் என்று சொல்லுவார். அவரும் ஒரு பெரியாரியர்தான். பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்”, “வானம் வசப்படும்” நாவல்களிலும் இந்துக்களைக் குறிக்க “தமிழர்” என்ற வார்த்தையைத்தான் பிரெஞ்சுக்காரர்கள் உபயோகப்படுத்துகின்றனர். இந்தப் பேட்டியில் பேராசிரியர் சொல்லியிருப்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில், உங்கள் பார்வையில் “இந்து” என்ற சொல்லின் வரலாறு பற்றி விவரிக்க முடியுமா?
- “சமணர்களைக் கழுவில் ஏற்றிய கதை எல்லாம் உண்மைதான்” என்றும் இப்பேட்டியில் சொல்கிறார். சமணர்களைக் கழுவேற்றிய சம்பவத்தைப் பற்றி பல மாறுபட்ட கருத்துகள் காணக்கிடைக்கின்றன. ஒருமுறை நேர்ப்பேச்சில் நீங்கள் சொன்னதை நினைவுகூர்கிறேன். “ஒரு வரலாற்று சம்பவத்தின் உண்மையை அக்காலத்தில் இருந்த கல்வெட்டுகள் மூலமோ, இலக்கிய ஆதாரங்களின் மூலமோதான் நிறுவவேண்டுமேயன்றி தனிப்பட்டவர்களின் வாய்மொழிப் பேச்சுகளை வைத்து அதன் உண்மையைக் கணிக்க முடியாது”. ஒரு ஆய்வாளர் இந்தக் கருத்தைச் சொல்லும்போது நம்புவதா என்று தெரியவில்லை.
மிக்க அன்புடன்,
கணேஷ் பாபு
சிங்கப்பூர்
அன்புள்ள கணேஷ்பாபு,
தொ.பரமசிவன் ஓரு வரலாற்றாய்வாளரோ சமூகவியல் ஆய்வாளரோ அல்ல. இத்தளங்களில் ஏதேனும் ஆய்வுமுடிவைச்சொல்லும் தகுதி ஏதும் இல்லாதவர். மிகமேலோட்டமான வாசிப்பும் ஆய்வுமுறைமைகளை முற்றாகவே அறியாமலிருப்பதும் அவரது அனைத்து நூல்களிலும் தெரிந்துகொண்டிருக்கும்.
விதிவிலக்கு அழகர்கோயில் குறித்த அவரது ஆய்வு. அவரது சொந்தப்பின்புலம் சார்ந்த ஆய்வு அது. கள ஆய்வின் பின்புலமும் அதற்குண்டு. அந்தத்தகுதியில் இருந்து பெரும்பாலும் செவிவழிச்செய்திகளைக்கொண்டு கிராமப்புறப் பெரிசுகளின் தோரணையில் பேசிக்கொண்டிருக்கிறார் .எவ்வகையிலும் ஒரு விவாதத்திற்கான கருத்துக்கள் அல்ல அவர் உரைப்பவை.
அவர் சொல்லும் அத்தரப்பை விவாதிப்பதென்றால்கூட உண்மையான வாசிப்பும் தர்க்கபூர்வ அணுகுமுறையும் கொண்டவர்களிடம் விவாதிப்பதே நல்லது
தொ ப குறித்தும் அவர் பேசியிருக்கும் இவ்விஷயங்களைப்பற்றியும் நான் மிக விரிவாகவே பேசியிருக்கிறேன்
ஜெ