என்னை பப்பரபாவென்று போட்டுக் கொடுத்துவிட்டீர்கள். யாருக்கும் தெரியாமல் ஓர் ஓரமாக எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தேன். இனிமேல் பச்சைத்தண்ணீரை பக்கோடாவாக மென்றாக வேண்டிய நெருக்கடிக்கு நானும் உள்ளாகிவிட்டேன் :(
எனினும், குமுதத்தின் தொடர்ச்சி என்று நீங்கள் கூறியிருப்பது நெகிழ்ச்சியாக இருந்தது. பள்ளிப் பருவத்தில் என் பாடப்புத்தகங்களுக்கு இடையே ’குமுதம்’ எப்போதும் இருக்கும். அந்த இதழில் பணியாற்றிய ப்ரியா கல்யாணராமன், கிருஷ்ணா டாவின்ஸி, ரஞ்சன் ஆகியோரை என்னுடைய முன்னோடிகளாக கருதுகிறேன். குமுதம் நிறுவன ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்களை கடவுள் ஸ்தானத்தில் மனதில் வைத்திருக்கிறேன். நடிகை ஷகிலா உச்சத்தில் இருந்தபோது, குமுதம் இதழின் கதைகளில் ஒன்றின் தலைப்பு ‘ஷகிலா இட்லி’. குமுதம் இதழின் வாசகர்களே இம்மாதிரி போக்கினை மனசுக்குள் ரசித்துக்கொண்டே கிண்டலடிப்பார்கள் என்றாலும், அவ்விதழின் பணி தமிழ் வெகுஜனப் பரப்பில் முக்கியமானது என்று தோன்றுகிறது. அத்தகைய stress relief இருந்திருக்காவிட்டால் வரலாற்றின் மிகக்குழப்பான காலக்கட்டத்தில் வாழும் நம்மில் பலரும் மனநோய்களுக்கு உள்ளாகியிருப்போம். மீண்டும் நன்றி.
அன்புடன்
யுவகிருஷ்ணா
***
அன்புள்ள யுவகிருஷ்ணா,
குமுதத்தின் பங்களிப்பு பற்றி எனக்கு எப்போதுமே சிக்கலான ஒரு புரிதல் உண்டு. நான் மிக இளமையில் அதை வாசித்தவன். ஆனால் ஒருகட்டத்தில் தீவிரஇலக்கியத்திற்குள் நுழைந்தபோது அதன்மேல் கடுமையான விமர்சனத்தை வளர்த்துக்கொண்டேன். குமுதத்திற்கு எதிராகவே இலக்கியம் இருக்கமுடியும் என்ற எண்ணம் .சுந்தர ராமசாமியின் சொற்களில் சொல்லப்போனால் ’மாயக்காம உறுப்புக்களை மாட்டிக்கொண்டு நம்மீது சதா உரசிக்கொண்டிருக்கும் ஜென்மங்களின் இதழ்’ அது. ‘வணிக இலக்கியம்’ அல்லது ‘நசிவிலக்கியம்’
பின்னர் அதைக்குறித்த எண்ணங்கள் மீண்டும் மாறத்தொடங்கின. நான் அசோகமித்திரனின் ’இலாரியா’ ‘நானும் ராமகிருஷ்ணராஜுவும் சேர்ந்து எடுத்த சினிமாப்படம்’ முதலிய கதைகளை குமுதத்தில்தான் வாசித்திருந்தேன். அன்றே அவை என்னை கவர்ந்திருந்தன. அதைவிட குமுதத்தின் அலட்டிக்கொள்ளாத மொழி என்னை பாதித்திருந்தது. குமுதத்தில் ஏன் அசோகமித்திரன் எழுதமுடிந்தது என்பதற்கான விடையும் அதுவே. குமுதம் அன்றைய வார இதழ்களின் சமையலறைமொழிக்கு மாறாக ஒரு நவீன நடையையே கையாண்டது. அது ‘அறிவ்ஜீவி வக்கிரம்’ கொண்டது எனச் சொல்லப்பட்டது அதனால்தான்.
குமுதத்தின் உள்ளடக்கம் என்பது காமமும் கிண்டலும்தான். எஸ்.ஏ.பி, ரா.கி.ரங்கராஜன் ஜ.ரா.சுந்தரேசன் மூவருமே நுட்பமான கிண்டல் கொண்டவர்கள்.மூவருகே நல்ல இலக்கிய வாசகர்கள்.அவர்களுக்கு நம் வாசிப்பைத்தீர்மானித்ததில் பெரும்பங்கு உண்டு.
குமுதம் மீதான கடும் விமர்சனங்களை இரு கோணத்தில் பார்க்கலாம். ஒன்று ஒழுக்கவியல் நோக்கில். அது காமத்தை முன்வைக்கிறது, ஆகவே நசிவுப்போக்கு கொண்டது என்பது. அதை இன்று என்னால் பெரிதாக நினைக்கமுடியவில்லை. காமம் என்பது எந்தச்சமூகத்திலும் எப்போதும் முக்கியமான பேசுபொருளே. அதன்பொருட்டு எதையும் நிராகரிப்பதில் அர்த்தமில்லை. பண்பாட்டுச்செயல்பாடுகளில் ஒழுக்கவியல் நோக்கை நான் ஏற்பதில்லை.
இன்னொரு கோணம், அது தீவிரத்துக்கு எதிரானது, அனைத்தையும் கிண்டல்செய்கிறது , பிற்போக்குக்கோணம் கொண்டது என்பது. அதைச்சொல்ல நான் முற்போக்கு அல்ல. நான் கொண்டுள்ள இலக்கிய நோக்கு அனைத்தையும் உள்ளடக்கி அனைத்துக்கும் அதற்கான இடத்தைக்கொடுத்தபடி முன்னகர்வது மட்டுமே.
குமுதத்தை ‘உற்சாகமான நவீன வணிக எழுத்து’ என வகைப்படுத்துவேன். அந்த நவீனத்தன்மையே அசோகமித்திரன், சுஜாதா என நவீன உரைநடையாளர்களுக்கு உள்ளே இடமளித்தது. அவ்வப்போது முக்கியமான இலக்கியப்படைப்புகளையும் வெளியிடச்செய்தது. அதேசமயம் அனைதையும் வேடிக்கையாக ஆக்கும் அந்த மனநிலை இலக்கியத்தின் தீவிரநிலைக்கு எதிரானது. அது இலக்கியத்தின் களம் அல்ல.
ஆனால் அந்த நக்கலும் கிண்டலும் சூழலுக்குத்தேவையாகவும் இருக்கிறது. அதன் வெற்றி அதனால்தான். தமிழகம் போன்ற சம்பிரதாயமான ஒரு சமூகத்தில் குமுதம் ஏன் அத்தனை வெற்றிகண்டது என்பதை சமூகவியல் ஆய்வாளர்கள்தான் சொல்லவேண்டும் – அவர்களுக்குச் சினிமாவிமர்சனம் எழுதி குறியீட்டுக்கொட்டை உடைப்பதற்கு மேலாக நேரமிருந்தால்.
உதாரணம், தமிழியக்கம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் குமுதம் தீர்க்கசுமங்கலி படத்தின் விமர்சனத்தை திருக்குறளார் முனுசாமியின் மொழியில் வெளியிட்டது. ‘க.இரா.விசயா அம்மையார் நடித்த’ அப்படத்தை அவர் அணுகிய முறையை வாசித்து நாங்கள் குடும்பத்துடன் சிரித்துவிழுந்ததை நினைவுகூர்கிறேன். அன்றைய சூழலில் இருந்த பழமைமீட்புவாதம், ஒழுக்கவாதம் ஆகியவற்றுக்கு எதிராக சமூகத்தில் இருந்த எதிர்ப்பையே குமுதம் கிண்டல்வழியாக எதிர்கொண்டது என நினைக்கிறேன்.
குமுதம் வாசகர்களும் அதே மனநிலையில் இருந்தனர். ஸ்ரீதரின் சிவந்த மண் படத்தின் விமர்சனத்தில் ‘ஸ்ரீதரிடம் இன்னும் அதிகமாக எதிர்பார்த்தோம்’ என எழுதியிருந்தனர். வாசகர் கடிதம் ‘நீங்கள் என்ன எதிர்பார்த்தீர்கள், அவர்கள் என்ன கொடுத்தார்கள்?’ என்று கேட்டிருந்தது. அந்த மனநிலையை அன்றைய பழமைவாதத்துக்கும் மறுபக்கமாக இருந்த அரசியல் கொந்தளிப்புக்கும் எதிராக குமுதம் முன்வைத்தது. அதன் பங்களிப்பு முக்கியமானது என இப்போது நினைக்கிறேன்.
ஜெ