எழுத்தும் உடலும் – கடிதம்

body

 

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களின் எழுத்தும் உடலும், எழுதும் அனைவருக்கும் இன்றியமையாத, பயனுள்ள யோசனை. கடந்த ஆறு மாதங்களாக வாசிப்பிலும் எழுத்திலும் ஈடுபடாமலிருந்து, மீண்டு வந்த எனக்கு தங்களின் கட்டுரை ஒரு பாடமாக அமைந்து, உடலுக்கு தெம்பையும், உள்ளத்திற்கு உற்சாகத்தையும் தருவதாக இருந்தது.

தற்போதுதான் தங்களின் இந்திர நீலம் முடித்தேன். விரைவில் அது பற்றி எழுதப்போகிறேன்.

அன்புடன்,

கேசவமணி.

***

அன்புள்ள கேசவமணி,

மீண்டும் எழுதவந்தமைக்கு வாழ்த்துக்கள். எழுத்து என்பது நம்முடைய ஆளுமையின் ஒருபகுதி. ஒரு பறவை பாடுவதைப்போல. பாடாமலிருக்க அதனால் முடியாது. எழுதாத எழுத்தாளன் என்பவன் தன்னளவில் தோல்வியடைந்தவன். ஆகவே எழுதுங்கள். எழுத்தினால் வரும் பிரச்சினைகள் உட்பட அனைத்துக்கும் அதுவே மருந்து

ஜெ

***

அன்புள்ள ஜெ

எழுத்தும் உடலும் முக்கியமான கட்டுரை. தனிப்பட்ட கடிதமாயினும் அதை பதிவிட்டிருப்பது பிறருக்கும் உதவியானது. எழுத்திற்கு மட்டும் அல்ல. நான் பாடகன். எனக்கு கச்சேரி பாடும் வாய்ப்பு இன்று இல்லை. அப்படியென்றால் எதற்காகச் சாதகம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். நானே அப்படி நினைத்து பலவருடம் பாடுவதை விட்டிருந்தேன். ஆனால் அப்போதெல்லாம் மன அழுத்தம் மிக்கவனாகவும் பாக்கு பீடா போடுபவனாகவும் இருந்தேன். மிகமோசமான பலவகையான மனச்சிக்கல்கள். எரிந்துவிழுவது. குடும்பத்திலும் பிரச்சினைகள். கிருஷ்ணார்ப்பணம் என்று நினைத்துப்பாடவேண்டும் என்பார்கள். நான் ராமார்ப்பணம் என எனக்கே அர்ப்பணம் செய்துகொண்டு பாடினேன். மீண்டு வந்துவிட்டேன். என் எண்ணங்களையே சொல்வதுபோலிருந்தது அந்தக்குறிப்பு.

அதில் சொல்லப்பட்டிருப்பதுபோல சமநிலையைப்பேணுவது கடினம்தான். காரணம் கலையில் சமநிலையின்மை முக்கியமான அடிப்படை. பாட்டிலும் அப்படித்தான். ஆகவேதான் பாடகர்கள் பலர் குடிக்கிறார்கள். ஆனால் சமநிலையைப்பேணாமல் அதில் சாதிக்கவும் முடியாது. உடல் தேவை. இது ஒரு சிக்கலான விஷயம். ஆனால் நுணுக்கமாகப்புரிந்துகொள்ளப்பட வேண்டியது.

ராமகிருஷ்ணன்

***

அன்புள்ள ஜெ,

எழுத்தும் உடலும் குறிப்பிடத்தக்க கட்டுரை. கலைகளில் ஈடுபடுபவர்களுக்கு மட்டும் அல்ல. வியாபாரம் போன்றவற்றில் மூழ்கிவிடுபவர்களுக்கும் முக்கியமானது. நான் மார்வாடிகளைப்பார்த்திருக்கிறேன். குடும்பத்துடன் இருக்கும்போது  ஃபோனே எடுக்கமாட்டார்கள். ஆபீஸே எரிந்தாலும் சரி, நாளை வந்து பார்க்கிறேன் என்பார்கள். குடும்பம் வேலை மதம் மூன்றையும் தனித்தனியாகப்பிரித்து வைத்திருப்பார்கள். ஆகவேதான் அவர்களால் பொதுவாக நிதானமாக இருக்கமுடிகிறது.

நீங்கள் அப்படி கச்சிதமாகப்பிரித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆகவேதான் பயணம்செய்ய முடிகிறது. வணிகசினிமாவில் இருக்கமுடிகிறது. எழுதவும் முடிகிறது. அத்துடன் ஒன்றும் உள்ளது. தனிப்பட்ட சண்டைகள் கோபங்களையும் இலக்கியத்தையும் பிரித்துவைத்திருக்கிறீர்கள். மிகமுக்கியமான வழிமுறை இது. நன்றி

சாமிநாதன்

முந்தைய கட்டுரைஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?
அடுத்த கட்டுரைவெய்யோனொளியில்…