சமணம்,பிரமிள்: கடிதங்கள்

இனிய ஜெ..

நீலகேசி என்ற கவிதை நூலை படித்தேன் . ஞானசபை விவாதங்கள், இந்து மரபில் ஆறு தரிசனங்கள் ஆகியவற்றை படித்ததில் இருந்து , ஒவ்வொருவரும் என்ன தத்துவங்களை முன் வைக்கிறார்கள் என பார்க்கும் ஆவல் ஏற்பட்டது..

நீலகேசி சமண தத்துவத்தை வலியுறுத்தும் நூல்..அதை படித்ததும் எனக்கு தோன்றியது, நீங்கள் புத்த மதத்தை பற்றி பேசிய அளவு சமண மத ததுவத்தை பேசவில்லை என்பதுதான்..
புத்த மத தத்துவம், சமண தத்துவம் எப்படி ஒப்பிடுகிறீர்கள்.. ஒப்பீட்டளவில் சமண மத ததுவம் உங்களை அதிக ஈர்க்கவில்லை என தோன்றுகிறது

அன்புடன்
பிச்சைக்காரன்

அன்புள்ள பிச்சைக்காரன்,

சமணம் பற்றி நான் விரிவாக எழுதவில்லை. விஷ்ணுபுர ஞானசபை விவாதங்களில் சமணத்தின் அடிப்படையான சில தரிசனங்கள் பேசப்படுகின்றன. சியாத்வாதம் போன்றவை.

பௌத்தம் பற்றிய தனிப்பட்ட ஆர்வத்துக்குக் காரணம் அதன் தத்துவ தளம் மதநம்பிக்கையின் எல்லைகளை கவிந்து வெளியே வளர்கிறது என்பதனாலேயே. அத்வைதமும் அப்படித்தான். அந்த அம்சம் சமணத்தில் இல்லை

ஜெ

ஜெ,

நீங்கள் பிரமிளை, தமிழ்க்கவிதைகளின் முன்னோடிகளில் ஒருவர் என்று கருதுகிறீர்கள் என்று தெரியும். ஆனால் நேற்று முழுவது உங்கள் வலைப்பதிவில் பிரமிள் பற்றித் தேடிக் கொண்டிருந்தேன், அங்காங்கே பார்த்த இரண்டு வரிகள் தவிர்த்து அவர் கவிதை ஆளுமை பற்றிய ஒரு கட்டுரை உங்கள் தளத்தில் இல்லையே? நீங்கள் உள்ளுணர்வின் தடத்தில் நூலில் பிரமிள் பற்றிய கட்டுரை எழுதியிருப்பதாக நேற்று தேடும் பொழுது படித்தேன். அந்தக் கட்டுரை உங்களிடம் இருந்தால் வெளிவிட முடியுமா?

மோகன்தாஸ்

அன்புள்ள மோகன்தாஸ்,

நான் நவீன தமிழ்க்கவிதையின் உச்ச சாதனையாளர் என பிரமிளையே நினைக்கிறேன். அதன் பின்னர் அடுத்த தலைமுறையில் தேவதேவனைச் சொல்வேன். ஈழத்தில் சு.வில்வரத்தினம்.

பிரமிள் உத்வேகத்துடன் கவிதையில்செயல்பட்டது வெறும் பத்து வருடங்கள் மட்டுமே. அதன்பின் அவரது மனம் வம்புகளை நோக்கி திரும்பிவிட்டது. சுரா மீதான ‘அப்ஸெஷன்’ அவரது படைப்பூக்கத்தை அழித்துவிட்டது. அதை ஒரு அசட்டுக்கும்பல் பேணி வளர்த்தது.

ஆனால் ஒருவகையில் அதுவும் இயல்பே. உலக அளவில் உத்வேகத்தை மட்டுமே நம்பி இயங்கும் கவிஞர்கள் விரைவிலேயே அடங்கிவிடுவதைக் காண்கிறோம்

நான் எழுதிய கட்டுரை மிகமிக நீளம். குட்டி புத்தகம் எனலாம். 60 பக்கம். அதை நானே மீண்டும் அமர்ந்து தட்டச்சிடுவது முடியாது. என்னால் சிந்தனை- படைப்பூக்கம் இல்லாமல் வெறுமே தட்டச்சு மட்டும் செய்ய இயலாது

பார்ப்போம்

ஜெ

ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களுடைய பழைய பேட்டி வாசித்தேன். கீழ்க்கண்ட வரிகளை படித்த போது ஏதேதா தோன்றியது.

ஒரு குமிழி மாதிரி லேசில் எப்போது வேண்டுமானாலும் உடைந்து போவோம். அவ்வளவுதான் என்று மனசில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.

இதைப்பற்றி யோசித்த போது இரண்டு பிரமிள் கவிதைகளும் நினைவுக்கு வந்தன.

வழி

வயிற்றுப் பசிதீர்க்க
வராதா என்றேங்கி
மழைக்கு அண்ணாந்த
கண்கள்
கண்டு கொண்டன
வானம் எல்லையில்லாதது.

குமிழிகள்

இன்னும்
உடையாத ஒரு
நீர்க் குமிழி
நதியில் ஜீவிக்க
நழுவுகிறது.
கைப்பிடியளவு
கடலாய் இதழ்விரிய
உடைகிறது
மலர் மொக்கு.

வழியென்ற முதல் கவிதை வாசித்ததிலிருந்து ஏதோ மந்திரம் போல மனதில் இருந்துகொண்டே இருக்கிறது.

நன்றி,
சர்வோத்தமன்.

அன்புள்ள சர்வோத்தமன்

நலம்தானே?

எனக்கு எப்போதுமே நீர்க்குமிழி என்ற உணர்வு இருந்ததில்லை. இது மிகமிக தற்காலிகமானது என இளவயதிலேயே உணர்ந்த இடத்தில் இருந்தே என் தொடக்கம்

ஆனால் இப்பிரபஞ்சமே ஒரு சிறு நீர்க்குமிழிதான்

ஜெ

முந்தைய கட்டுரைதஞ்சை தரிசனம் – 5
அடுத்த கட்டுரைதஞ்சை தரிசனம் – 6