அன்புள்ள ஜெ
நீங்கள் சுட்டி கொடுத்த கட்டுரை வாசித்தேன்.
ஒருவர் எழுத்தில் சற்றளவு சாதிவெறி தொனிப்பது போல தோன்றினாலும் தொடர்பை துண்டித்துக்கொள்பவர் நீங்கள். ஆனால் சிலருக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து ரொம்ப விலகிப்போகாமல் தொடர்பில் வைத்துக்கொள்கிறீர்கள்.
‘சுட்டித்தனம் கொண்ட பொறுப்பற்ற நகைச்சுவை’ என்று நீங்கள் ரசிக்கும் நபர் தினமும் பேஸ்புக்கில் ஒரு குறிப்பிட்ட சாதி மீது வெறியை உமிழ்கிறார். அதெல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. இலக்கியப்பகடி, ஏடிஎம் செக்யூரிடிக்கு நூறு ருபாய் தந்தது என்று அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இவர்களை எல்லாம் ரசித்து ஒரு பதிவு போட்டுவிடுகிறீர்கள். மிஞ்சிப்போனால் ‘முட்டாள்தனம்’ என்று வாஞ்சையோடு தலையில் தடவி மயிலிறகால் ஒரு அடி.
அப்படி என்ன செய்துவிட்டார்கள் இவர்கள் – இலக்கியப்பங்களிப்பா இல்லை சமூக சிந்தனைப்பங்களிப்பா ? எதனால் இந்த சலுகை ? உங்கள் கறார்த்தனம் எல்லாம் ஆளையும் முகத்தையும் பார்த்துதானா ?
மதுசூதனன் சம்பத்
***
அன்புள்ள மதுசூதன் சம்பத்,
இந்த கோபத்தைப்புரிந்துகொள்கிறேன். யுவகிருஷ்ணா எழுதிய சாதிவெறிக்குறிப்புகள் எவை என தெரியவில்லை. பொதுவாகவே ஃபேஸ்புக் எழுத்துக்கள் பேசிப்பேசி எல்லா தரப்புமே உச்சகட்ட நிலையில் நின்றிருக்கையில் எழுதப்படுபவை என தெரிந்திருக்கிறேன். அங்கே தமிழகத்தின் அனைத்துக்கசப்புகளும் வெளிப்படுகின்றன. எதிர்வினைக்கு எதிர்வினை என வளர்கின்றன.
சாதிவெறி, சாதிக்காழ்ப்பை கொண்டிராத மிகமிகச்சிலரே தமிழ் அறிவுலகில் செயல்படுகிறார்கள். மொழிப்பற்று, சமூகநீதி என்றெல்லாம் பலபெயர்களில் இங்கு வழங்கப்படுவது சாதிப்பற்றே. அவற்றை நான் சுட்டிக்காட்டியபடியே வருகிறேன். கூடவே அதேயளவுக்கு சாதிவெறி கொண்ட பிராமணர்களும் பிற உயர்சாதியினரும் இங்கே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
ஆனால் அவர்கள் எழுதும் இலக்கியப்படைப்புகளைச் சுட்டிக்காட்டிக்கொண்டும்இருக்கிறேன். என் தனிப்பட்ட நட்புவட்டத்தில் ஒருவரை வைத்துக்கொள்வதற்கும் ஒருவரின் கருத்துநிலையை விமர்சிப்பதற்கும் இலக்கியப்படைப்பைச் சுட்டிக்காட்டுவதற்கும் பெரும் வேறுபாடுண்டு. சாதி, மதக்காழ்ப்பை உள்ளடக்கமாக கொண்ட எழுத்தை முழுமையாகப்புறக்கணிப்பதே என் வழக்கம்.
ஆனால் எழுத்து என்பது எப்போதுமே எழுதுபவனிலிருந்து வேறுபட்டதே. என்மேல் காழ்ப்பைக்கொட்டுபவராக இருந்தாலும் நல்ல எழுத்து என்றால் சுட்டிக்காட்டவேண்டும் என்பதே எனக்கு நான் போட்டுக்கொண்ட நெறி. அதற்கு இந்தத்தளத்திலேயே பல உதாரணங்கள் உள்ளன.
யுவகிருஷ்ணாவின் அக்கட்டுரை சிறந்த பகடி. அவ்வகை எழுத்துக்கள் ஒரு சூழலை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. எந்த மொழியிலும் அவை முக்கியமானவைதான். ஆகவே அதைச் சுட்டிக்காட்டினேன். பொதுவாக நான் ‘நல்ல’ எழுத்து எனச் சுட்டிக்காட்டுவதில்லை. எந்தவகை, ஏன் முக்கியமானது எனச் சொல்லியே சுட்டிக்காட்டுவேன்.
ஒருவகையில் நன்றி. நான் பிராமணச் சாதிவெறிகொண்டவர்களை தூக்கிப்பிடித்து , பிராமணர்களுக்கு ஆதரவாகப்பேசும் ‘அடிவருடி’ என்றுதான் ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். நீங்கள் இரு தரப்பும் ஃபேஸ்புக்கில் அமர்ந்து சண்டைபோட்டு ஒரு முடிவுக்கு வரலாமே
ஜெ