உங்கள் கடிதம் எனக்கு மேலும் எரிச்சலை அளித்தது. நம்மவர்களின் இந்த உளச்சிக்கல்கள் எப்போது சீராகும் , எப்போது கொஞ்சமேனும் நிதானமாக எதையாவது சிந்திக்க ஆரம்பிப்பார்கள் என்ற கசப்புதான் ஏற்பட்டது.
எந்த செய்தி என்றாலும் அதில் ஒற்றைப்படையான ஒரு நிலைப்பாடு எடுத்து செயற்கையான மிகையான கொந்தளிப்புகளை அடைவதே நமது வழக்கமாக ஆகிவிட்டது. அதில் சம்பிரதாயமான ஒரு கோணத்தில் ‘அதிதுயர பாவனை’ ‘அதிபுரட்சி எழுச்சி’ -க்கு அப்பால் எவரும் எதையும் சொல்லிவிடக்கூடாது. உடனே மனிதாம்பிமான, பெண்ணிய , லொட்டு லோடுக்கு உணர்வெழுச்சிகளுடன் கடிதங்கள் வந்து குவிந்துவிடும். .
உங்கள் கடிதத்தில் உங்கள் செயற்கைப்பாவனைகளுக்கு அப்பால் ஏதுமில்லை. நீங்கள் அதை ஃபேஸ்புக்கில் எழுதினால் சமான இதயங்களின் ஹிட்டுகளை அள்ளலாம். மற்றபடி வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலிருந்தும் சாத்தியமான எல்லாவற்றையும் சிந்திப்பதே சிந்தனையாளர்களின் இயல்பாக இருக்கும். ஒருவர் தன் மனம் ஏற்கனவே எதை சிந்தித்துக்கொண்டிருக்கிறதோ அதையே காண்பவற்றிலும் நீட்டித்துக்கொள்வார். துட்டிகேட்கும் சொற்றொடர்கள் மட்டுமே சொல்லப்படவேண்டும் என்னும் உங்கள் பிடிவாதங்களை இலக்கியத்திலும் சிந்தனையிலும் கொண்டுவந்து போடவேண்டியதில்லை.
அக்கடிதம் ஓர் ஆசிரியர் இன்றைய இளைஞர்களின் மொழித்திறனை கல்விமுறை எப்படி அழித்துவிட்டது என்பதைப்பற்றி எழுதியது. அதற்கு உறுதியான ஒரு சான்று கிடைக்கும்போது அதைச் சுட்டிக்காட்டுக்கிறார். அவரது தரப்பை முன்வைக்கிறார். அதைப்பற்றிய ஒரு கவனத்தைக்கோருகிறார். அவர் அந்த தற்கொலை பற்றி நேராகவும் எதிராகவும் எதுவுமே சொல்லவில்லை.
அக்கடிதம் மிகுந்த பரிவுடனேயே எழுதப்பட்டுள்ளது. அது அந்தப்பெண்ணை மட்டும் அல்ல எந்தப்பெண்ணையும் உடல்சார்ந்து குறுக்கவில்லை. எந்தப்பெண்ணையும் குற்றம்சாட்டவில்லை. எந்தப்பெண்ணையும் எதிர்நிலையில் வைக்கவுமில்லை. கல்வி ஒருவருக்கு நிதானத்தையும் துணிவையும் நம்பிக்கையையும் அளிக்கும் என்று அவர் சொல்கிறார். ஓர் ஆசிரியர் அவ்வாறுதான் சொல்லமுடியும். அவ்வாறு சொல்லாமல் உங்கள் பெண்ணியச் சோர்வுவாதத்தைச் சொன்னால் அவரது தொழிலை அவர் சொல்லமுடியாது.
எங்கும் எதிலும் இப்படி இருட்டைக்காணும் இந்த பெண்ணிய மனநிலையை – அதை ஒருவகை நரம்புத்தளர்ச்சி என்றே சொல்வேன் – பொதுச்சொல்லாடலில் இருந்து அதட்டி விலக்காமல் இங்கே எதையுமே பேசமுடியாதுபோலும்.
ஜெயமோகன்