மதுக்கரை மகராஜ் என்னும் பெயரை நீங்கள் வெளிநாட்டில் இருப்பதனால் கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள். சமீபத்தில் நாம் கொண்ட யானைப்பலிகளில் ஒன்று. இது தொடர்ந்து நடக்கிறது. காடு யானைக்கு உரிய நிலம் என உங்கள் எழுத்துக்களில் தொடர்ந்து வாசித்துவருகிறேன். யானையைக்கொலைசெய்வதென்பது நம்முடைய மனநிலை எந்த அளவுக்குக் குரூரமாகிவிட்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. தொடர்ச்சியாக யானை டாக்டர், மத்தகம், வாரிக்குழி போன்ற யானைக்கதைகளையாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். நெஞ்சு தாளவில்லை. இதற்கு மாற்றுவழியே இல்லையா?
செல்வராசன்
***
அன்புள்ள செல்வராஜன்
யானைகளின் வாழ்விடம் தொடர்ந்து அழிக்கப்படுகிறது. சட்டவிலக்குகள் உள்ளன. ஆனால் டெல்லி சென்று விலக்கு பெற்று கட்டிடங்களைக் கட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தக்கட்டுமானங்களுக்கு எதிராக பொதுநலவழக்குகள் தொடுத்து நீதிமன்றத்தடை வாங்க நாடெங்கும் மக்கள் அமைப்புக்கள் தேவை. இங்கு இன்றுள்ளவை பல தன்னார்வ அமைப்புக்கள். அவை ஓர் அளவுக்குமேல் அரசை எதிர்க்கமுடியாது. அவற்றின் கட்டாயங்கள் பல. மக்கள் மன்றங்கள் உருவானால் மட்டுமே ஏதாவது செய்யமுடியும். உண்மையில் நீதிமன்றங்கள் இதில் முற்போக்கான மனநிலையையே கொண்டிருக்கின்றன. வழக்குகள் மூலம் இம்முயற்சிகளை லாபகரமானவையாக அல்லாமல் ஆக்கினாலே போதும்.
இரண்டாவதாக யானைகள் ஊருக்குள் புகாமல் தடுப்பதற்கான அகழிகள் வெட்டுவது. அகழிகள் மிக உதவியானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை முறையாகவெட்டப்படுவதில்லை. அவற்றில் பெரும் ஊழல். அவை சிலகாலம் கழித்தது பராமரிப்பில்லாமல் தூர்ந்துவிடுகின்றன. அகழிகளைக் கண்காணிக்கவும் பராமரிப்பதற்கும் மக்கள் சார்ந்த அமைப்புக்கள் தேவை.
கடைசியாக, யானைகளுக்கு நீர் அருந்த காட்டுக்குள் செயற்கைச் சுனைகளை அமைப்பதும், அவை உண்ண உணவை ஓரளவு செயற்கையாக உருவாக்குவதும் தேவை. கேரளக்காடுகளில் இவை வெற்றிகரமாகவே செய்யப்படுகின்றன என்பதைக் கவனித்திருக்கிறேன். ஆகவே அங்கே ஊருக்குள் யானைகள் வருவதும் பெரும்பாலும் இல்லாமலாகிவிட்டிருக்கிறது. இங்கும் அவை செய்யப்படுகின்றன, முறையாக பராமரிப்பதில்லை. ஊழல். விளைவாகவே இவை நிகழ்கின்றன
நம் சூழலில் எங்கும் எதிலும் உள்ள ஊழலும் பொறுப்பின்மையுமே இதற்குக்காரணம். அதை நியாயப்படுத்திவிட்டு உணர்ச்சிவேகம் கொள்வதில் பொருள் இல்லை.
ஜெ