மியூனிச்சில் இருக்கிறேன். கிடைத்த சின்ன இடைவெளியில் தமிழ் ஹிந்து நாளிதழில் வெளிவந்த இந்தக்கட்டுரையை வாசித்தேன்
அனேகமாக ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கலாம். தெளிவற்ற உரைநடையில் கோவையாக அமையாத சொற்றொடர்களுடன் எழுதப்பட்டுள்ளது. மிகச்சாதாரணமான செய்தி. ஆனால் ஒரு சட்டச்சூத்திரத்தை வாசிப்பதுபோல வாசிக்கவேண்டியிருக்கிறது.
இது தமிழின் தலையெழுத்தாகவே மாறிவிட்டிருக்கிறது. இந்தியா டுடே தமிழில் மிக முக்கியமான இதழியல்வருகை. தமிழில் அதன் அறிவுத்தளப் பங்களிப்பும் முக்கியமானது. ஆனால் பொறுப்பற்ற மொழியாக்கத்தால் அது வாசகர்களை இழ்ந்து நின்றுவிட்டது. இன்று அதன் வெற்றிடத்தை உணர முடிகிறது.
ஆங்கிலச் சொற்றொடர்களை மொழியாக்கம் செய்யும்போது அவற்றுக்கு தமிழின் ஓசையொழுங்கையும், சொற்றொடர்க்கட்டுமானத்தையும் அளிக்கவேண்டியிருக்கிறது. நேரடியாக வார்த்தைக்கு வார்த்தை செய்யப்படும் மொழியாக்கமானது பொருத்தமில்லாத சொற்றொடர்களை உருவாக்கி வாசகனை எரிச்சலூட்டும்.
தமிழில் மொழியாக்க நூல்கள் பெரும்பாலும் வாங்கப்படுவதில்லை. மொழியாக்கத்தின் விளைவான சப்பை உரைநடைதான் காரணம். மிக அபூர்வமாகவே படிக்கத்தக்க மொழியாக்கங்கள் தமிழில் வெளிவருகின்றன. பெரும்பாலும் அவை காலச்சுவடு வெளியீடுகள்.
இந்தக்கட்டுரையின் வரிகளைப்பாருங்கள்
ஏற்கெனவே அமெரிக்காவைக் காட்டிலும் சீன முதலீட்டாளர்கள் ஐரோப்பாவையே தங்களை வரவேற்கும் பகுதியாகக் கண்டடைந்துள்ளது.
ஏற்கனவே சீனமுதலீட்டாளர்கள் அமெரிக்காவைவிட ஐரோப்பாவையே தங்களை வரவேற்கும் பகுதியாகக் கண்டடைந்திருக்கிறார்கள் – என்று இருந்திருக்கவேண்டும். அதுவே கூட சப்பையான ,ஆங்கிலநிழல் விழுந்த சொற்றொடர்தான். இலக்கணக்குழப்பமும் சேரும்போது வாசகனுக்கு ஏற்படுவது ஒருவகை கடுப்புதான்.
ஐரோப்பாவில் சீனா ஏற்றுமதிக்கு பலவீனமான தேவைகளே இருந்து வருகிறது
இதை ‘ஐரோப்பாவில் சீனாவின் ஏற்றுமதிக்கு குறைவான தேவையே இருந்துவருகிறது’ என இருந்திருக்கவேண்டும். இந்த சின்னச்செய்தியில் பதினெட்டுச் சொற்றொடர்கள் இலக்கணப்பிழை கொண்டவை.
மேலும் பிரெக்ஸிட் என்பது ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன்வெளியேறும் நடவடிக்கை அல்ல. பிரிட்டிஷ் எக்ஸிட் போல் என்பதன் சுருக்கம். அது அங்கே நிகழ்ந்த வாக்கெடுப்பைச் சுட்டும் சொல்.
தமிழ் ஹிந்து உண்மையில் தமிழில் சமீபத்தில் நிகழ்ந்திருக்கும் ஒரு அறிவியக்கம். அதன் செல்வாக்கை இன்று விகடன், குமுதம், தினமலர் என அனைத்துப் பிரசுரங்களிலும் காணமுடிகிறது. இத்தகைய மொண்ணைத்தனமான மொழியால் அவ்வியக்கம் அழிந்துவிடலாகாது
இதை ஓர் முதிராத்திறனாளர் மொழியாக்கம் செய்து எழுதியிருக்கலாம். ஆனால் ஆசிரியர்கள் அதை மேலதிகக் கவனத்துடன் சரிபார்த்திருக்கவேண்டும். இதில் காட்டும் கவனக்குறைவு மொத்த நாளிதழையே இழுத்து கீழே விட்டுவிடும்
மேலும், இந்தக்கட்டுரை செய்தியா அல்லது கட்டுரையா? கட்டுரை என்றால் அதை எழுதியவர் எவர், அவரது தகுதி என்ன என்பது வாசகனுக்கு முக்கியமானது. செய்தி என்றால் அது கருத்தாக இருக்கக்கூடாது. தகவலாகவே இருக்கவேண்டும். தகவலின் மூலமும் சொல்லப்பட்டிருக்கவேண்டும்.