அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம். என் பெயர் சரவணன். இது என் முதல் கடிதம்.
சென்னையின் வெள்ளத்துக்குப்பின்பான ஜனவரியில் உங்களை வாசிக்கத் தொடங்கினேன். சில நாட்களிலேயே உங்களை எனக்கான எழுத்தாளராகக் கண்டுகொண்டேன். தூர தேசத்தில் தனிமையில் தற்செயலாய் ஒரு திருப்பத்தில் உற்ற நண்பனைக் கண்டதாய் உணர்ந்தேன். நீண்ட நாட்களாய் கேட்கப்பட ஆள் இல்லாமல் எனக்குள் கிடந்த கேள்விகளை இனி கேட்கத் துணிவேன்.
யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி யின் கருத்துக்கள் குறித்த உங்கள் பார்வை என்ன. நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட பிரம்மாண்டமான உருண்டு திரண்ட உலக ஞான மரபின் முன்பு அந்தத் தனி மனிதனின் கலகக்குரலுக்கு என்ன பொருள். ஜே.கிருஷ்ணமூர்த்தி அல்லது ராமணருடனான உரையாடல்கள் அவருக்கு உவப்பானதாக இல்லை. அவர் சொல்லும் Calamity கும் ஞானமடைதலுக்கும் உள்ள தொடர்பு அல்லது வேறுபாடு என்ன. தனிப்பட்ட முறையில்
அவரது கருத்துக்கள் வாழ்க்கை மீது அவநம்பிக்கை கொள்ளச் செய்கின்றன என்ற போதிலும் கூட என்னை வசீகரிக்கின்றன. புரிந்து கொள்ளப்பட முடியாத ஏதோ ஒன்றை அவர் விளக்க முயல்கிறார் என்றே தோன்றுகிறது.
அன்புடன்
சரவணன்
***
அன்புள்ள சரவணன்,
தத்துவம் என்பது வேறு மெய்யியல் என்பது வேறு. தத்துவம் என்பது அறிதலை தர்க்கபூர்வமாக வகுக்கும் ஓர் அறிவுத்துறை. மெய்யியல் என்பது முழுமையறிதலை மொழியில் விளக்க முயல்வது. மெய்யியலுக்கு தத்துவம் ஒரு கருவிமட்டுமே. மெய்யியல் தத்துவத்தைக் கடந்தது. எனவே மெய்யியலை தத்துவம் என மயங்கலாகாது. மெய்யியலாளர்களை தத்துவஞானிகள் என குறைத்தலும் கூடாது.
தத்துவம் அதற்கென தர்க்கமுறைகள் கொண்டது. விளக்க, மறுக்க இருபக்கமும் உதவும் மொழியமைப்பு கொண்டது. எதிர்த்து மறுக்கக்கூடிய வாய்ப்பை அளிப்பதே அதன் முதல் இயல்பு. மெய்யியல் என்பது தருக்கம் கடந்த ஒரு முழுமையறிதலை சொல்லிவிடும் முயற்சி. கற்பனைக்கான படிமங்களை, தியானத்துக்கான குறியீடுகளை, கவித்துவச் சாத்தியங்களை, தருக்கத்தை அது பயன்படுத்தும்.
தத்துவம் ஓர் அறிவுத்துறை என்பதனால் பயில்பவர் அனைவருக்குமானது. மெய்யியல் அந்த தளத்திற்குள் தன் நுண்ணுணர்வால், தனித்தன்மையால் நுழையக்கூடியவர்களுக்கு மட்டுமே உரியது. தத்துவம் எப்போதும் புறவயமானது. மெய்யியலின் ஒருபகுதி எப்போதும் அகவயமானது.
யூஜியை எப்படி வகுத்துக்கொள்வது? அவர் தத்துவஞானி அல்ல. அவருடன் எவரும் உரையாட முடியாது. அவரது சொல்லாடல்கள் வெறும் தர்க்கவிளையாட்டுக்கள். தத்துவத்திற்குரிய புறவயத்தன்மை அறவே இல்லாதவை
சரி, அவர் பேசுவது மெய்யியலா? அவர் ஞானி அல்ல. எதையும் அடைந்து ஆகி அமர்ந்தவர் அல்ல. வெறும் அறிவுஜீவி. ஆகவே மெய்யியல் வெளிப்பாடுகளின் பாணியில் புகைமூட்டத்துடன் அவர் உருவாக்கும் சொல்லாடல்களால் எந்தப்பயனும் இல்லை.
அவர் இந்தியமெய்யியலின் பூடகமொழியையும் உள்வயமான தருக்கத்தையும் புறவயமான விவாதங்களுக்குள் புகுத்தி ஒரு சொற்சுழியை உருவாக்கியவர் மட்டுமே. இந்தியாவில் ஆன்மீகமான விஷயங்களைப்பற்றிப் பேசியவர்களில் முற்றிலும் பயனற்றவர் என்றால் யூஜி கிருஷ்ணமூர்த்திதான்.
யூஜி கிருஷ்ணமூர்த்தியின் ‘செய்தி’ என்றால் ‘எதையும் தேடாமல், எதையும் புரிந்துகொள்ள முயலாமல், எதையும் அடையாமல் வெறுமே வாழ்வது’தான்.பறவைகளைப்போல. இயற்கையின் ஒருபகுதியாக, எண்ணங்களற்று இருப்பதே முழுமையானநிலை. இதைத்தான் அவர் சொல்லிக்கொண்டே இருந்தார். அப்படி தான் இருப்பதாகவும் ஆகவே தனக்கு ஒரு நினைவுச்சின்னம்கூட அமைக்கக்கூடாது என்றும், தான் நினைவுகூரப்படவேண்டியதில்லை என்றும் சொன்னார்
அப்படியென்றால் ஏன் அவர் உலகம் முழுக்கப் பறந்து பேசிக்கொண்டே இருந்தார்? ஏன் பேச்சுக்கு அவ்வளவு கட்ட்ணம் வசூலித்தார். ஏன் எதிர்த்து வாதிட்டார்? அவர் பறவையாக வாழ்ந்தவரா என்ன? அவர் ஒருவகை மேற்கத்திய அறிவுஜீவியாகவே தன்னைக் காட்டிக்கொண்டவர் அவ்வளவுதான். இந்த முரண்பாட்டிலிருந்து ஆரம்பித்தால் அவர் பேசியதும் வாழ்ந்ததும் எல்லாம் பெரிய பாவலாக்கள் என்றே தோன்றும்
சர்தார்ஜி கீதை உரை கேட்டதைப்பற்றி ஒரு வேடிக்கைக்கதை உண்டு. அவருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ஆனால் கர்மஜா என்று ஒருசொல் காதில் விழுந்தது “வாஹ் வாஹ் அச்சா கீதை ஹை!” என்று சொல்லிவிட்டார். அவருக்கு என்ன புரிந்தது என மற்றவர்கள் கேட்டனர். “அச்சா கீதை!” என்றார் .என்னதான் புரிந்தது என்றார்கள் மற்றவர்கள்
“கர் மஜா என்று கீதை சொல்கிறது. மஜா செய் என்று பொருள். நான் அதைத்தான் ஏற்கனவே செய்கிறேன்” என்றார் சர்தார்ஜி. அதைத்தான் யூஜியின் மாணவர்களும் செய்கிறார்கள். ஒன்றும் செய்யாதே, தெரிந்துகொள்ளாதே, ஜாலியாக இரு என்று சொல்ல இத்தனை உபன்னியாசமா?
ஜே.கிருஷ்ணமூர்த்தி பெரும்புகழ்பெற்றபோது அவரைப்போலவே ஆங்கிலத்தில் sweet nonsense என்று சொல்லத்தக்க சொல்லாடல்களை உருவாக்கிய சிலர் உருவாகி வந்தனர். அவர்களை நட்சத்திர ஓட்டல்களில் இசைவாசிப்பவர்களுடன் ஒப்பிடலாம். உயர்குடியினர் விருந்துக்கு நடுவே கேட்டு மகிழத்தக்கவர்கள். மாயைகள் தேவையில்லை. புறக்கணியுங்கள். ஒன்று திட்டவட்டமான தத்துவம். அல்லது உண்மையாகவே ஆன்மீகமலர்வுக்குக் கொண்டுசெல்லும் மெய்யியல் வெளிப்பாடு. மிச்சமெல்லாம் வீண்
ஜெ