கடைநிலை பொருளாதாரம் – அறுந்த நூல்கள்

1

 

அன்புள்ள திரு ஜெயமோகன்,

வணக்கம். ஒரு சம்பவம் அதை தொடர்ந்து சில நினைவுகள், நினைவுகள் எழுப்பிய கேள்விகள் பகிர்ந்துகொள்கிறேன்.

ஒரு மாதம் முன்பு, குடும்ப சுற்றுலாவிற்காக கேரளா பயணமானோம். ஊரிலிருந்து காரில் சென்றவர்கள் போக மீதம் ஐந்து நபர்கள் பேருந்தில் பயணம் மதுரை இரயில் நிலையம் வரை. தேனி பேருந்து, மதுரை மாட்டுத்தாவணி நுழைவாயில் வந்து இறங்கினோம். நுழைவாயில் கோபுரத்தினுள் நுழைந்ததும், சுண்டி இழுக்கும் மணம்(!) நாலாபுறமும் கண்களை இழுக்கிறது வகை வகையான பழங்கள் பூக்கள். இரயில் நிலையம் செல்ல வேண்டும், வேலை மதியம் ஆகையால் சரி பழம் வாங்கி கொண்டு சொல்வோம் போகும் வழியில் கொறிக்கலாம் என்று முடிவு செய்தோம். உடன் வந்த ஊர் பெரியவர் நான், என் அக்கா, என் தங்கை நால்வரும் சென்றோம். பெரியவர், அறுபதை தாண்டியிருக்கும் பாட்டியிடம், ”கொய்யா என்ன விலை?”  “கிலோ 50 ரூவா..”

”அடேயப்பா, எவ்வளோனு தரலாம்?”

”எடுங்க..எடுங்க..”

”40 னு வாங்கிக்கங்க.” அக்காவிடம் ”எடுங்க” என்றார்

முக்கால் கிலோவிற்கு மேலிருக்கும், மூன்று பழங்கள் போதும் என்று சொல்லி, ”இந்தாங்க 30 ரூவா”..னு கொடுத்தோம்.

பாட்டி ஒன்றும் சொல்லாமல் வாங்கிக்கொண்டாள். நாங்கள் நகர்ந்தோம்..

பாட்டி ”எங்களை அழைத்து நாலு பேராயிருக்கீங்க சின்ன பிள்ளைகயிருக்கு (எங்களை ;)) இந்தாங்க இன்னும் ஒரு பழம்” என்றாள்!

பெரியவர் புன்னகையுடன் அருகில் சென்று ”நல்ல பழமா கொடுங்க” என்றார்.

அவள் எடுத்துக்கொண்டிருக்கையிலே.. ”ஏன் இவ்வளோ சின்னதா எடுக்குறிங்க பெருசா தான் பாக்குறது” என்று சொல்லிவிட்டு பெரிதாக ஒன்று எடுத்தார்

பாட்டி ”இன்னும் இரண்டா எடுத்துகிட்டு 50தா கொடுங்க” என்றாள்

அனைவரிடமும் புன்னகை.. நாங்களும் கொடுத்து வாங்கினோம்.

பேசிய விலை, கடைசியில் சொன்ன விலை இரண்டையும் விட அதிகம் (கூட இரண்டு பழம் தேவையை விட அதிகமாக) ஆனாலும் அனைவருக்கும் மகிழ்ச்சி. பின் சிந்திக்கையில் அங்கே பரிமாறப்பட்ட அக்கரை பாசம் (பகட்டு – பகட்டு இல்லை என்பதை தாண்டி இந்த முறையான) பண்புகள் தான் இந்த பேரம் அனைவருக்கும் மகிழ்ச்சியளித்திருக்கிறது என்று தோன்றுகிறது.

என்னளவில் மதுரையைப் பொறுத்தவரை இன்றும் தொடரும் சித்திரம் இது தான், இன்று குறைந்துள்ளது என்றுவேண்டுமானால் சொல்லலாம். ஆம், என்ன இடைநிலை பள்ளி படிப்பின் போது (அத்தை அப்பத்தா விட்டில் இருந்து பயின்றேன்), அருகாமையில் இருந்த வண்டியில் துணி தேய்ப்பவர், தினமும் மாலையில் வரும் சிற்றுண்டி வண்டிக்காரர், மாதம் ஒரு முறையேனும் வந்து கண்டிப்பாக விற்றுவிட்டு போகும் பாத்திரங்கள் விற்பவர், வீட்டில் ஆள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெள்ளிக்கிழமைதோறும் மாடியேறி வந்து வாசலில் பூ வைத்துவிட்டு போகும் பூக்கார அக்கா, பழம் விற்கும் அக்கா.. அவர்களை சந்திக்கும் நாட்களில் அங்கே வியாபாரம் பாதி மீதி அக்கறை தகவல் பரிமாற்றம் இப்படி. இத்தோடு வாங்குபவருக்கு நாலில் ஒன்று என்று தேர்வு செய்தால் போதும் (இன்று நாற்பது நானூறு என்று காட்டி குழப்பாமல்) இரண்டாவதாக அவர்களே பார்த்து பொறுக்கிவருவது (மொத்தம் என்ற பெயரில் அப்படியே அள்ளிவராமல்) ஆக கண்டிப்பாக ஒரளவேனும் நன்றாகயிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். கூடுதலாக இந்த வகை உறவுகள், துணி தேய்ப்பவர் மகன் வீடுகளுக்கு வண்ணம் பூசுபவர், சமீபமாக (இடை வயது) தவறும் வரை எங்கள் சொந்தங்களுக்கு வேலை பார்த்தார். பாத்திரம் விற்பவர் வந்து விற்பது கட்டுபடியாகவில்லை என்று வீட்டிற்கு வந்து சொல்லி சென்றார் என்று நினைவு.

இப்போது சிந்தித்தால் இந்த சூழல் இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் குறைந்துவிட்டது. இதன் மூலம் இழந்திருப்பது பலவாகயிருப்பினும் அதிக இழப்பு அங்கே நிலவிய பொருளாதாரத்தில் பரிமாறப்பட்ட அக்கரை, நிலவிய நம்பிக்கை தன்மைகள் என்று தோன்றுகிறது. இன்று வளர்ந்துவிட்ட பொருளாதாரத்தில் இது உயிரற்ற பரிமாற்றம் மட்டுமே.

நன்றி

நாராயணன் மெய்யப்பன்

முந்தைய கட்டுரைபாரதமாதா : சொல்லும் மறுசொல்லும்
அடுத்த கட்டுரைஎனது கல்லூரி