யட்சி -கடிதம்

8be2a9c7-b064-49f2-818e-9a1b282bbed2

அன்புள்ள ஜெயமோகன்,

மூன்று அல்லது நான்கு முறை படித்தும் “யட்சி” வெறும் கதையாகக் கிடந்தது பல வருடங்களாக. என்னவோ நேற்று சட்டென அதில் வரும் யட்சியை அடையாளம் கண்டுகொண்டேன்….அல்லது அதில் என் யட்சியை அதில் புகுத்திக்கொண்டேன்.

யட்சி என்பது ஒரு உயிரின் ஒட்டுமொத்த இச்சைதானே? இல்லை இல்லை அப்படி சொல்வதை விட வேறு எதுவும்அதை எளிமை படுத்திவிட முடியாது! அது இச்சைகளால் ஆன ஒரு உயிரின் மாய வடிவம் என்றுதான் சொல்ல  வேண்டும். அதிலும் எதோ வெறும் உயிர் அல்ல. தணியாத வேட்கை   கொண்ட, தன் மீது அளவு கடந்த தன்னம்பிக்கை கொண்ட, தனது ஆசைகளின் மீது எந்த குற்ற உணர்ச்சியும் கொள்ளாத, தன்னை நாள்தோறும் முன்னெடுத்து செல்லும் ஒரு உன்னத ஆத்மா ஒன்றின் இச்சை தான் அந்த யட்சியல்லவா?

தொடர்ந்து அழகை கண்காணித்து வருவது பெண்களின் மனம். அதிலும் குறிப்பாக தன் அழகையே. அதில் நிறைந்து நிறைந்த மனதுக்கு அதைவிட அழகாய் தோணும் பிறிதொன்று இருப்பதில்லை; ஒன்றை தவிர. அது தன்  மனதின் ஆழத்தில் இருந்து எழுந்து வரும் ஆசைகள், விளைவுகளின் தொகுப்பு ஒரு பிரமாண்டமாய் அவளின் முழு ஆற்றலையும், ஆத்மாவையும், இருப்பையும் உறிஞ்சி எழுந்து வரும் யட்சியின்  அழகாய்தான் இருக்கவேண்டும்.

“அம்மாவின்” ஒட்டு மொத்த விழைவுதான் இந்த கதையின் யட்சி அல்லவா?. அதில் இருக்கும் நேர்மையை, தீர்க்கத்தை அல்லவா யட்சியாய் கண்டு  அவளின் அப்பா பயந்து செல்கிறார். அவளை அந்த காட்டில் கிழங்கு தோப்பிற்கு இரவில் வழிகாட்டி சென்றதும், அவளின் உச்ச அழகின் தருணத்திற்கு மறுநாள் அதிகாலையில்  இட்டு சென்றதும் அவளின் விழைவுதான் அல்லவா. காலையில் அவளை கண்டு மீட்டு வந்தவர்கள் அவளின் கனவை கலைத்து யட்சியை துரத்தி விட்டல்லவா மீட்டிருக்க வேண்டும்.

கண்கள் வெறுமனே நிகழ் நாடகத்தை நோக்கி நிற்க ஆசைமனம் யட்சியாய் இன்னும் உயர அமர்ந்து இன்னொரு நாடகத்தை நிகழ்த்தியும், பார்த்தும், களித்தும் கிடக்கிறது. அந்த நாடகத்தில் கானப்படுவை எல்லாம் சமூக நெறிகள் தாண்டி, பிரபஞ்ச விதிகள் தாண்டி நிற்பவை. அது அந்த ஆத்மாவின் படைப்பின் களம். அங்கு படைப்பதுவும், படைக்கபடுவதும் பார்ப்பதுவும் ஒன்றே. அம்மாவின் உடல் அந்த வீடு, கிரமம் தாண்டாமல் இருக்க விழைவோ அண்ட பெருவெளிஎங்கும் சென்று கண்டு வந்திருக்கிறது.

உள்ளுக்குள் யட்சி இல்லாதவர் இங்கு எவர்? அவளை கண்டு கொண்டவர்கள், அவள் சுட்டிய திசையில் நடந்தவர்கள் சிலரே!!

 

அன்புடன்

கௌதமன்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 86
அடுத்த கட்டுரைஆன்மீகம் தேவையா?