[ 21 ]
மரத்தரையில் காலடிகள் உரசி ஒலிக்க மாயை பன்னிரு பகடைக்களத்திற்குள் புகுந்தாள். அரசியை நோக்கி கைவிரித்தபடி ஓடிவந்து அவளருகே நின்ற அசலையை பிடித்துத்தள்ளிவிட்டு அள்ளி அணைத்துக்கொண்டாள். அவள் ஆடையை திருத்திய பின்பு நெய்பட்ட நெருப்பெனச் சீறி எழுந்து கூந்தலைச் சுழற்றிமுடிந்து துரியோதனனை நோக்கி “இங்கே அரசன் என அமர்ந்த சிறியோன் எவன்? நானில்லாதபோது அரசியை இழுத்துவந்து அவைநிறுத்திய பேதை எவன்? அறிக, உங்கள் வாழ்க்கையை முடிவுசெய்துவிட்டீர்கள்! உங்கள் குலங்களின் வேரில் நச்சுபெய்துவிட்டீர்கள்” என்றாள்.
துரியோதனன் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது பெருவஞ்சம் நீர் என நிறைந்த கிருஷ்ணையின் விழிகளை சந்தித்தான். அஞ்சி அதிர்ந்து தலைதிருப்பினான். அவன் கண்களை நோக்கிய கர்ணனும் பதற்றமாக கைகளை கோத்தான். அவையமர்ந்த கௌரவர் துரியோதனனின் நிலையழிவைக் கண்டு ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். அவை நிறைத்திருந்த அஸ்தினபுரியின் குடிகள் மெல்ல மண்ணில் வந்து விழுந்தனர். அதுவரை இருந்த கனவுநிலையின் அத்தனை கீழ்மைகளையும் உளநடுக்குடன் உணர்ந்தனர். தங்கள் உள்ளத்தை எண்ணி நாணி பிறிதெவரையும் நோக்காது விழிசரித்தனர்.
சினந்த நாகங்கள் விழியொளிரச் சுருண்டு அமைந்தன. தெய்வங்கள் படைக்கலங்களுடன் வண்ணங்களில் படிந்து மறைந்தன. விழிகளில் இளிப்புடன் அசுரர் கைகள் பெருக நிறைந்தனர். படைக்களத்தைச் சூழ்ந்த அவை மெல்ல இயல்படைந்தது. எங்கும் நீள்மூச்சுக்கள் எழுந்தன. பலர் மாயையை நோக்காது விழிதிருப்பிக்கொண்டனர். சிலர் கண்களை ஆடைகளால் மூடிக்கொண்டனர். சிலர் விழிநீர் வார நெஞ்சைப் பற்றிக்கொண்டு அமர்ந்தனர்.
பெருங்குரலில் மாயை சொன்னாள் “என்னவென்று எண்ணினீர்கள், இழிதிரளே? அன்னையின் கனிவே அவள் பணிவு. அன்பினால் ஆற்றலிழப்பவள் அவள். நீங்கள் வென்றுதருக்கியது உங்களுக்கு ஊட்டப்பட்ட முலைப்பாலை. கொன்று உண்டது கொல்லையில் நின்றிருந்த காமதேனுவை… நன்று, இனி நிகழ்பவை யாவும் நீங்கள் இயற்றியதே. அவ்வாறே ஆகுக!”
துரியோதனன் மீண்டும் கையெடுத்து ஏதோ சொல்ல முயல அவன் இதழ்கள் மட்டும் அசைந்தன. கிருஷ்ணை திரௌபதியை தோள்பற்றிச் சரிந்து கண்ணீருடன் அவள் மடியில் தலைசாய்த்தாள். அசலை அரசியின் கைகளைப்பிடித்து தூக்கி உள்ளே கொண்டுசெல்ல முயன்றாள். திரௌபதி இரும்புச்சிலை என எடைகொண்டிருந்தாள். கௌரவர்களின் பிற அரசியர் அவளைத் தூக்கி எடுத்து அழைத்துச்சென்றனர். அவர்கள் நடுவே பலவண்ண ஆடைகளால் உடல் மூடி திரௌபதி தலைநிமிர்ந்து நடந்துசென்றாள். அவள் நீள்குழல் அவிழ்ந்து அலையலையென இறங்கி நெளிந்தது.
அவையில் மங்கலஇசைக்கென நின்ற சூதன் ஒருவன் வெறியாட்டெழுந்தவன்போல “நகருலா செல்லும் கொற்றவை! ஆலயம் அமைந்த கரியதிருமுகம். அனல்நாவென செம்பஞ்சுப் பாதங்கள். அழல் உண்ட கரியென நீள்குழல் அலை. அன்னையே, இதோ அடிபணிந்து நின்றிருக்கின்றன ஆயிரம் தலைகள்” என்று கூவினான். தன் நெஞ்சையே முழவாக்கி அறைந்து “தலைமேல் நடந்து செல்கின்றாய்! தாயே, ஆணவங்கள் மேல் நடக்கின்றாய்! ஆறாவஞ்சங்கள் மேல் நடக்கின்றாய்! காளீ, கருங்காளீ, கூளீ, கூத்திடும் தேவீ, எங்கள் விழைவுகள் மேல் நடக்கின்றாய்! வினைப்பெருக்குமேல் நடக்கின்றாய்!” என்றான். உடல் சிலிர்க்க அங்கிருந்தோர் கைகூப்பினர். விகர்ணன் கண்ணீர் உதிர “அன்னையே!” என்றான்.
பன்னிரு பகடைக்களம் திடுக்கிட்டு அதிர பீமன் தன் பெருங்கைகளை ஓங்கியறைந்தபடி முன்வந்தான். “வீணர்களே, வெற்றுசோல்லில் ஆடித்திளைக்கும் கீழ்மைக்களமே!” என்று கூவினான் “என் மூதாதையர் அமர்ந்த அரியணை இது என்று இக்கணம் வரை பணிந்தேன். அரசென்றும் நெறியென்றும் குலமென்றும் எண்ணித்தயங்கி வீண்தசைக்குவை என இங்கு நின்றிருந்தேன். இனியும் என்னால் இயலாது” என்று ஓசையிட்டபடி அவைநடுவே வந்தான்.
“நான் எவருக்கும் குடியல்ல. எந்தக் குலத்திற்கும் மைந்தனல்ல. எவருக்கும் குருதிமுறையும் அல்ல. நான் காட்டாளன். பிடியன்னை ஆளும் பெருங்காட்டிலிருந்து என் நெறிகளை கற்றவன்… ஆம், இங்குள்ள ஒவ்வொருவரைவிடவும் அறமும் அளியும் கொண்டவன் நான்…”
“இது தொல்புகழ் அஸ்தினபுரி. யயாதியின் ஹஸ்தியின் குருவின் நகரம்…” என அவன் குரலெழுப்பினான். “எங்கே உங்கள் குலம்? தேவர்களுக்கு அவியளிக்கிறீர்கள். மூடர்களே, மூதாதையருக்கு அன்னமும் நீரும் அளிக்கிறீர்கள். உங்களில் எளியோருக்கு அளிக்க உங்களிடம் ஒன்றுமில்லையா? உங்கள் முன் விழிநீருடன் நின்றிருப்பவர்களுக்குச் சொல்ல அறம் ஒன்றும் இல்லையா? உங்கள் தெய்வங்களை கல்லில் இருந்து எழுப்பும் கனல் எங்கே?”
கைசுருட்டி தூக்கி ஓங்கி துப்பினான். “இதோ, காறி உமிழ்கிறேன். இங்கு அமர்ந்த அரசனை, இந்த அவையை, இங்கு சூழ்ந்த மூத்தோரை, இயலாது அமர்ந்திருந்த சான்றோரை, இக்காற்றில் நிறைந்த மூதாதையரை, இவ்வானில் எழுந்த தெய்வங்களை என் இடக்காலால் உதைத்துத் தள்ளுகிறேன். இவர்கள் பேணும் அவ்வேதத்தின் முதல் எதிரி நான்!”
“இதோ, பீஷ்மபிதாமகர் முகத்தில், துரோணரின் கிருபரின் விதுரரின் முகத்தில், வழியட்டும் என் மிச்சில்!” ஓங்கி நாற்புறமும் உமிழ்ந்தான். காலால் நிலத்தை ஓங்கி மிதித்தான். அவையிலிருந்து ஊமைமுழக்கமென ஓர் ஒலி எழுந்தது. “ஆம், இதோ நின்றிருக்கிறேன். ஆண்மையிருந்தால் ஆணையிட்டு என் தலைகொய்யுங்கள். உங்கள் கீழ்மைமண்டிய அரசவையில் சொல்லறியா காட்டாளனாக குருதிபெருக்கி மடிந்துவிழுகிறேன். அதுவே என் மீட்பு” என்றான் பீமன்.
துரியோதனனை நோக்கி திரும்பி “அரியணை அமர்ந்த சிறுமதியனே, உன் அவைக்கு வந்த ஒற்றை ஒருபெண்ணின் மதிப்பைக் காக்க உன்னால் முடியாதென்றால் உன் கோலுக்கு என்ன பொருள்? அதற்கும் இடுகாடு காப்பவனின் தடிக்கும் என்ன வேறுபாடு?” என்றான். “இவ்வவையில் இழிவுகொண்டு நின்றவள் உன் குடியின் ஒவ்வொரு பெண்ணும்தான். அவள் சிறுமைசூடி நின்றது உன் குடியின் ஒவ்வொரு ஆணும்தான். இழிந்தாய். மண்கிழித்து இருள் கடந்து சென்று அழிந்தாய். இதற்குமேல் என மானுடன் அடைவதற்கொன்றுமில்லை கீழ்மகனே!”
“அறனே தெய்வமென்கின்றன உங்கள் வேதங்கள் என்றால் இன்று இத்தருணத்தில் அவை பொருளழிந்தன” என்றான். “இது தெய்வத்தருணம். பெருங்கதவமொன்றின் தாழ்குடுமி உரசி அனல்பறக்கக் கண்டோம். திறந்தது புதுயுகம்!”
இருகைகளும் தசைதிமிறி அசைய விரித்து ஆட்டி வெறிகொண்ட முகத்தில் நரம்புகள் புடைத்து நெளிய அவன் முழங்கினான் “இதோ அறைகூவுகிறேன்! இனி நீங்கள் சொல்லும் எச்சொல்லின்பொருட்டும் நான் கட்டுப்படப்போவதில்லை. உங்கள் எந்த நூலும் எவ்வறமும் எனக்கொரு பொருட்டல்ல. எங்கும் காட்டாளனாக குருதிசூடி நின்றிருக்கவே முனைவேன். ஊன்கிழித்துண்ணும் விலங்கென ஆனாலும் உங்கள் ஒவ்வொருவரை விடவும் மேலானவன் நான்.”
அவை நோக்கி திரும்பி பீமன் சொன்னான் “அவை கூடியமர்ந்து நீங்கள் கொண்ட கீழ்மைக்காக எரிக இந்நகரம்! உங்கள் உட்கரந்த இருளுக்காக இதன் குலக்கொழுந்துகள் குருதி பெருகி மண்தழுவுக! உங்களைப் பெற்றமைக்காக இதன் குலமகள்களும் அன்னையரும் மங்கலமிழந்து சுருள்க! இழிசினரே, இப்பெரும்பழியை நூறாண்டுகாலம் விழிவெந்நீர் கொண்டு அழிப்பீர்கள் நீங்கள்!” தெய்வக்குரல் என அவன் ஓசை அவைசூழ்ந்தது. “அறிக, மானுடனின் பிழைகளை பொறுக்கின்றன காட்டுதெய்வங்கள். அவன் சிறுமையை அவை ஏற்பதேயில்லை.”
நெஞ்சு விம்ம அவன் குரல்தளர்ந்தான். “ஆம், நெட்டைமரங்களென நின்றோம் நானும் என் உடன்குருதியினரும். அதன்பொருட்டு நாங்களும் சிறுமைகொள்க. பெண்ணுக்குப் பிழைஇழைத்தோர் பிள்ளைத்துயர் கொண்டழியவேண்டும் என்பதே முறை. விண்ணமர்ந்த தெய்வங்களே, இதோ எளிய காட்டாளனின் ஆணை! எங்கள் தலைமேல் பொழியட்டும் இத்தருணத்தின் பழி! கண்ணீர் அனலென எரிய எஞ்சும் நாளெல்லாம் நீறிப்புகைந்து நாங்கள் இதை ஈடுகட்டுகிறோம். எங்கள் குலம் இதன்பொருட்டு விழிநீர்பெய்து வீணென்றாகி அழிக!” நெஞ்சை ஓங்கி ஓங்கி அறைந்தான் பீமன். அவ்வோசையில் அவைச்சுவர்கள் அதிர்ந்தன. “ஆணை! இது ஆணை! அழிக! அழிக! அழிக!”
நடுங்கிய குரலில் “மூத்தவரே…” என்று நகுலன் அழைத்தான். அக்குரல் கேட்டு வெறியுடன் தருமனை நோக்கி திரும்பினான் பீமன். “எங்கே இந்திரப்பிரஸ்தத்தின் அரசன் என்றாகி நின்ற அப்பேதை? சொல்லாய்ந்து பொருளாய்ந்து அவன் கற்ற நெறிநூல்கள் அளித்தது இதுதானா? இருளில் விளக்கும், போரில் வாளும், தனிமையில் காவலும் என்றாகவில்லை என்றால் கற்றவற்றுக்கு என்ன பொருள்? அது உணவென உட்புகுந்து வெளியேறாது தங்கிய மலம் அன்றி வேறென்ன?”
அர்ஜுனன் “மூத்தவரே, நாம் அவருக்கு முற்றிலும் கட்டுப்பட்ட இளையோர். நம் வாழ்க்கைப்பொருள் அது” என்றான். “மூடா! மண்ணிலெழுந்த எந்தச் சொல் விண்ணை தளையிடும்? இங்கு நிகழும் வாழ்க்கையின் நெறிகளனைத்தும் விண்ணில் உறைகின்றன என்றறியாதவனா நீ? குலம், வஞ்சம், விழைவு, தெய்வம் என எதன்பொருட்டும் மாறுவதில்லை இவ்வனைத்தின் மையமென நின்றிருக்கும் பெருநெறி என்று உணராததா உன் மெய்மை? வாழ்வையும் விழைவையும் சொல்லிச்சொல்லி வேதம் சென்றடைந்த உச்சம் அது என்றறியாமலா நூல்கற்றாய்?”
நரம்புகள் புடைத்து அதிர கொடிபின்னிய அடிமரம் போன்ற உடல் நின்று துடிக்க பீமன் கூவினான் “எப்படி என் குலமகளை சூதில் வைத்தாடினான்? இழிமகன். கல்லாக் களிமகனும் இழைக்கத் துணியாத கீழ்மைசெய்த வீணன்!” அவன் பற்கள் அரவையாழியில் சிக்கிய கூழாங்கற்கள் என உரசி ஓசையிட்டன. “சூதர்மனைகளில் தொண்டு மகளிருண்டு. சூதில் பணயமென்று அவர்களை வைப்பதில்லை . எப்படி குலமகளை வைத்தாடினான் முழுமூடன்?”
அவனில் இருந்து தெய்வங்கள் என சொற்களெழுந்தன. “இங்குள அனைத்தும் ஒன்றே என்றறியாது எதைக் கற்றான்? அனைத்திலும் கரந்துள்ள ஒன்றே தான் என்று அறியாது எதைத் தெளிந்தான்? எனவே மண்ணில் எவ்வுயிரும் எதற்கும் அடிமையல்ல என்று உணராது எதைச் சென்றடைந்தான்? ஒவ்வொன்றின் நெறியையும், மீளும் வழியையும் வகுத்தளித்து நின்றாடுவதை நோக்கி நீயே நான் என்று சொல்லத்தெரியாதவன் அறிந்ததுதான் என்ன?”
தருணங்களைத் தொட்டு தான் கனிந்து மொழியென்றாகிச் சொட்டும் முடிவிலியை அவன் சொற்களில் கேட்டனர் அவையோர். “மானுடர் எவருக்கும் மானுடர் உரிமையல்ல என்றறியாதவன் தன்னுள் நிறைந்துள்ள ஒன்றின் கட்டின்மையை எப்போதேனும் உணர்ந்திருப்பானா? விடுதலை விடுதலை என ஏங்கும் அதன் குரலை ஒருகணமேனும் கேட்டிருப்பானா?”
பீமன் தன் உடலில் இருந்து எழுந்து வளர்ந்தபடியே செல்வதுபோல் தெரிந்தது. அவன் உடலில் இருந்து நூறுநூறு கைகள் எழுந்து விரிந்தன. அவன் மேல் தழலென ஒளி சிவந்து எழுந்தது. “பெண்ணை உரிமைகொள்ள ஆணுக்கென்ன தகுதி? அறிவிலியே, அவள் கருவில் உறைகின்றது எதிர்காலம். எவரைப் பணயம் வைத்தான் இவன்? அவள் கருவில் பிருதுவும் பரதனும் யயாதியும் ராகவராமனும் மீண்டும் எழவிருக்கிறார்கள் என்றால் அவர்களும் கருவிலேயே அடிமைகள்தானா? அவர்களை இந்தப் பகடைக்களத்தில் வைத்தாட இவனுக்கு உரிமையளித்தது எந்த தெய்வம்? பிரம்மனிடம் படைப்பாடும் பெருந்தெய்வமா இவன்? பேதை! பெரும்பேதை!” கைகளை ஓங்கி அறைந்தான். “அட, காட்டுப்புலி அறியும் இதை. கன்னிவிலங்கையும் அன்னைவிலங்கையும் அது அணுகாது அகலும். எந்த அறிவின்மை மேலெழுந்து தருக்கி நின்றிருக்கிறான் இவன்?”
கொந்தளிப்புடன் கைசுருட்டி அவன் கூவினான் “அவன் ஆடியது எதை என்று நான் நன்கறிவேன். தன் ஆணவத்தை வைத்தாடினான். தன் ஆழத்து நஞ்சைத் திரட்டி அவைமுன் வைத்து ஆடினான்.” மூச்சிரைக்க பீமன் தருமனை நோக்கி சென்றான். “உள்ளம் கரந்த நஞ்சை வெல்லவில்லை சித்தம் சுரந்த அமுது என்றால் இவன் எவ்வகையில் அறமறிந்தவன்? எந்தக் கையால் என் குலமகளை அவைமுன் வைத்தான்? அந்தக் கையை வந்து பற்றவில்லையா இவன் அறிந்த நூலோரும் நெறியோரும் முனிவரும் தவத்தோரும்?”
அனைத்துக் கட்டுகளையும் அறுத்து மதவேழமென உடல் ஆட தருமனை நோக்கி கைநீட்டியபடி பீமன் சென்றான். “அவியிட்டு அனல்புரக்கும் கை தூயதென்றால் அதே நெறிப்படி இந்தக்கை இழிந்ததிலும் இழிந்தது. இதை இன்றே எரித்தழிப்பதே முறை. இளையோனே, அனல்கொண்டு வா! இது என் ஆணை!”
தருமன் அச்சொற்கள் எதையும் அறியாதவர்போல நின்றார். அறியாது நகுலனும் சகதேவனும் வந்து அவன் இருபக்கமும் நிற்க அர்ஜுனனின் கை நீண்டு பீமனை தடுத்தது. “மூத்தவரே…” என அவன் கண்ணீருடன் அழைத்தான். “வேண்டாம்! சிறுமைக்குமுன் என்றும் எழுந்து பேருருக்கொள்பவராகவே உங்களை அறிந்துள்ளேன். என் நெஞ்சில் நிகரிலா மாவீரனாக அமர்ந்த தெய்வம் நீங்கள். நீங்களும் பீடம் விட்டிறங்கிவிடாதீர்கள்! தந்தையே, உங்கள் காலடியில் சிறுவனாக நின்று கோருகிறேன். அருளுங்கள்!”
பீமனின் உடற்தசைகள் தளர்ந்தன. உறுமியபடி அவன் திரும்பிக்கொண்டான். “உங்கள் பெருமையால் அனைத்தையும் அளவிடுகிறீர்கள், மூத்தவரே. நானோ என் சிறுமையால் இவற்றை புரிந்துகொள்கிறேன்” என்றான் அர்ஜுனன். “இங்கு அவைநின்று இழிவுகொண்டவள் நம் குலக்கொடி மட்டுமல்ல. முலைசூடி கருவறைசுமந்து வந்து நின்றிருக்கும் பெண்ணெனும் தெய்வமும்தான்… சிறுமைசெய்து சிறுமைசூடியவர்கள் அவனோ இந்த அவையோ மட்டுமல்ல. நானும்தான். மூத்தவரே, எத்தனை மஞ்சங்களில் இழிமகன் என தருக்கி நின்றிருப்பேன்! எத்தனை பெண்டிரின் விழிநீரைக் கடந்து வந்திருப்பேன்! எத்தனை சொற்கள்! எத்தனை இழிபாவனைகள்! ஆணென்று உணர்வதே ஓர் இழிவு, மூத்தவரே. அமுதமுலைசூடும் பெற்றி இல்லாத கீழ்பிறப்பின் வஞ்சம் அது.”
அர்ஜுனன் ஒருகண் கலங்கி வழிய தலையை அசைத்தான். “இச்சிறுமை அனைத்தையும் சூடி நின்றிருக்கும் பழி படைத்தவன் நான். இன்று சிறுத்தது காண்டீபம். இழிந்தன என் தோள்கள். இனி நூறு களங்களில் நான் வெல்லலாம். ஆயிரம் நாடுகளில் என் வேள்விப்புரவி கடந்துசெல்லலாம். ஆயினும் நான் கோழையே. அறம் காத்து நின்றிருக்கும் ஆண்மை அற்ற பேடியே. ஆம், இச்சொல் நிற்கட்டும் என் தலைமுறைகளில். வென்று வென்று இனி நான் செல்வதெல்லாம் வெல்லமுடியாத இத்தோல்வியையே என சூதர் பாடட்டும்!”
“ஆம்” என்றான் பீமன். தலையசைத்து “இன்று ஆணென நின்ற அனைவரும் பழிசூடியுள்ளோம்” என்றான். அர்ஜுனன் பெண்டிர் நின்றிருந்த உப்பரிகைகளை நிமிர்ந்து நோக்கினான். “இன்றறிந்தேன், புதுவேதம் வகுக்கவந்த யாதவன் யார் என்று. அவன் சொல்லில் எழும் வேதமுடிவின் பொருள் என்ன என்று. இனி நான் மண்ணுக்கென எழும் ஷத்ரியன் அல்ல. அவன் சொல்காக்க வில்லெடுக்கும் எளிய வீரன் மட்டுமே. எய்தவும் ஆகவும் அமையவும் இனி ஏதுமில்லை எனக்கு” என்றான்.
தன் கையைத் தூக்கி அர்ஜுனன் உரத்த குரலில் சொன்னான் “அன்னையின் மைந்தர் என நாம் ஆற்றுவதொன்றுள்ளது, உடன்பிறந்தோரே. இனியொரு முறை இப்புவியில் இது நிகழலாகாது. நூறாயிரம் முறை குருதியால் ஆணையிடப்படட்டும் இச்சொல்! நூறுநூறாயிரம் தலைகள் உருள நிலைநிறுத்தப்படட்டும் இத்தருணம்!” என்றான். “இத்தருணத்தை அறிக அஸ்தினபுரியின் துறைமுகப்பில் கொற்றவை என நின்றிருக்கும் அன்னை அம்பை. மூண்டெழுக முதற்கனல்! ஆற்றாது அழுத ஒருதுளி கண்ணீர் ஒருநூறுமுறை உலகழிக்க வல்லமை கொள்ளட்டும்! ஆம், அவ்வாறே ஆகுக!”
தன் கையைத் தூக்கியபடி அவன் அவைமுன் வந்து நின்றான். “அறிக! அவையும் ஆன்றோரும் மூதாதையரும் மூன்றுதெய்வங்களும் சான்றாகுக! எவனில் இருந்து இச்சிறுமையின் முதல்விதை முளைத்ததோ அவனை, இச்சூதன்மகன் கர்ணனை, நெஞ்சுபிளந்து செருகளத்தில் கொல்வேன். அறம் மறந்து இந்த அவையிலமர்ந்த மூத்தோர் ஒவ்வொருவரையும் குருதிக்களத்தில் சாய்ப்பேன். பீஷ்மரை, துரோணரை கொன்று நின்று விழிநீருடன் என் வில்தூக்கி கடன்முடிப்பேன்… ஆணை! ஆணை! ஆணை!”
“ஆம்!” என்று தன் தோளைத் தட்டியபடி பீமன் கூவினான். “இதோ என் வஞ்சினம்! பெண்பழிகொண்ட இச்சிறுமகனை, அஸ்தினபுரியின் அரசனென அமர்ந்த துரியோதனனை கதையால் அடித்து சிதைப்பேன். அவன் திமிர்கொண்ட நெஞ்சைப் பிளந்து குருதியள்ளி என் தோளிலும் முகத்திலும் அணிவேன். என் குலமகள் ஆடைதொட்ட அவன் தம்பியை, துச்சாதனன் என்னும் இழிபிறவியை, நெஞ்சுபிளந்து அங்கே நின்று துடிக்கும் செங்குலையை என் காலால் மிதிப்பேன். அவன் குருதி அள்ளிக்குடித்து என் நெஞ்சக்கனல் அவிப்பேன்.”
கடுங்குளிரில் நின்றிருக்கும் காளை போல அவ்வப்போது உடல் சிலிர்த்து விழியுருட்டி அசைவற்றிருந்தது பன்னிரு பகடைக்களம். அதன் மூச்சு சீறியது. “கௌரவர் அனைவரையும் களத்தில் கொல்வேன். அவர் மைந்தர் அனைவரையும் கொன்றழிப்பேன். என்னை ஆளும் காட்டுத்தெய்வங்கள் என் தோளில் எழுக! அறமென்றும் உறவென்றும் அளியென்றும் ஒருகணமும் அவை தயக்கம் கொள்ளாதிருக்கட்டும்! எரிந்தழிந்து தளிர்க்கும் இக்காட்டின்மேல் இளமழை என வந்தமையும் பேரறத்தின் பொருட்டு அவை புடைத்தெழட்டும்! ஆம், அவ்வாறே ஆகுக!”
உடல்நடுங்கி குறுகி நின்றிருந்த தருமன் கால்தளர்ந்து விழப்போக நகுலனும் சகதேவனும் அவரை பற்றிக்கொண்டனர். துரியோதனன் உயிரற்றவன் போல அரியணையில் அமர்ந்திருந்தான். கிருபர் எழுந்து ஏதோ சொல்லப்போனபோது அணியறைவாயிலில் புலிக்குரல் என ஓசை எழுந்தது. அவிழ்த்த கூந்தல் உடலெங்கும் விழுந்திருக்க விழிநீர் நிறைந்த கண்களுடன் மாயை தோன்றினாள். “அவையோர் அறிக! இது பாஞ்சாலமண்ணை ஆளும் ஐங்குழல்கொற்றவையின் வஞ்சினம்! ஐந்து தேவியரின் அழியாச்சொல் இது.”
“இன்று அவிழ்ந்தது அன்னையின் ஐங்குழல். இனி அது அவையமர்ந்த அரசன் துரியோதனனின் ஆக்கைக்குருதியும் அவன் இளையோன் துச்சாதனனின் நெஞ்சத்து நிணமும் கலந்து பூசப்பட்டபின்னரே அது சுருள்முடியப்படும். பாஞ்சாலத்து ஐந்தன்னையர் ஆலயத்து மூதன்னையர் வந்து குருதிதொட்டு எடுத்துக்கொடுக்க பின்னி அமைக்கப்படும். கௌரவ நூற்றுவரும் மண்மறைந்தபின்னரே அதில் மலர்சூட்டப்படும். ஆம், அவ்வாறே ஆகுக!”
அவள் நடுங்கிக்கொண்டிருந்தாள். அச்சொற்களை அவளே அறியவில்லை என்று தோன்றியது. சொல்லி முடித்ததும் விழப்போனவள்போல கதவை பற்றிக்கொண்டாள். உள்ளிருந்து அசலையும் லட்சுமணையும் வந்து அவளை பிடித்துக்கொண்டனர். மெல்ல அவை புயல்காற்று நின்றபின் குறுங்காடு போல நிலைமீண்டது.