[ 14 ]
தென்மேற்கு மூலையிலிருந்து ஒளிரும் விழிகளுடன் கரிய கன்னியொருத்தி எழுவதை வடமேற்கு மூலையில் அமர்ந்த அனலோன் முதலில் பார்த்தான். வெருண்டு அவன் சீறியபோது தேவர்கள் அனைவரும் அத்திசை நோக்கி திரும்பினர். நாகங்கள் சினந்து உடல் சுருட்டி பத்தி விரித்து விழி கனன்றன. ஐம்புரிக்குழலும் வலக்கையில் தாமரையும் இடக்கையில் மின்கதிர்படையும் கொண்டிருந்தாள். அவள் குழல் நீரலையென பறந்தது. கால்களில் செந்தழல் வளையங்களென கழல்கள் ஒளிவிட்டன.
அவள் இடப்பக்கத்திலிருந்து கோரைப்பற்களும் உகிரெழுந்த பதினெட்டு கைகளும் கொண்ட பெருந்தெய்வமொன்று தோன்றியது. வலப்பக்கம் செந்தழல் உடலுடன் புகைச்சுருள்குவை என குழல்பறக்கும் தெய்வம் எழுந்தது. ஒன்று பலவாக அவர்கள் பெருகிக்கொண்டே இருந்தார்கள். தேவர்கள் ஒருவரை ஒருவர் கைபற்றிக் கொண்டனர். அரக்கர்கள் மெல்ல ஒருவரை ஒருவர் அணுகி ஒற்றை கரிய படலமென மாறினர். நாகங்கள் ஒன்றுடன் ஒன்று உடல் சுருங்கி ஒரு வடமென்றாகி வளைந்து இறுகி வட்டாயின. நீர்ப்பரப்பில் ஊறிக்கலக்கும் வண்ணப்பெருக்கு போல அத்தேவியர் முழுவானின் வளைவையும் நிரப்பினர். முகிலென மாறி கீழிறங்கி சூழ்ந்தமைந்தனர். அவர்களின் விழிகள் விண்மீன்களென மின்னிக்கொண்டிருந்தன.
சகுனி “ஆடலை இங்கு முடிக்கலாம் என்று எண்ணுகிறேன், அரசே. இனி ஆட தங்களிடம் எதுவுமில்லை” என்றார். தருமன் தன் இருகைகளிலும் நகங்கள் உள்ளே பதிந்து இறுக, இதழ்களை கிழிக்கும்படி பற்களைக் கடித்து அசைவிழந்து அமர்ந்திருந்தார். பன்னிரு பகடைக்களம் கடுங்குளிரால் இறுகியதுபோல் இருந்தது. “இனியொன்றும் இயற்றுவதற்கில்லை. இங்கு முடியட்டும் இந்த ஆடல்” என்று விதுரர் உரக்க கூறினார். சீற்றத்துடன் திரும்பி அவரைப் பார்த்த தருமன் “நிறுத்துங்கள்! ஆட வந்தவன் நான். எதுவரை ஆடுவேன் என்று முடிவு செய்யவும் நானறிவேன்” என்றார். விதுரர் “மைந்தா…” என்று உரக்க அழைத்தார்.
குருதி படிந்த விழிகளுடன் “விலகிச் செல்லுங்கள்! எவர் சொற்களும் எனக்குத் தேவையில்லை. இனியும் ஆட விழைகிறேன்” என்றார் தருமன். சகுனி இதழ்கோட நகைத்து “எதை வைத்து ஆடுவீர்? எஞ்சுவதென்ன? நீங்கள் உட்பட பாண்டவர் ஐவரும் தங்கள் மைந்தர்களுடன் அஸ்தினபுரிக்கு தொழும்பர்களென்று ஆகிவீட்டீர். தொழும்பர்களிடம் செல்வமென ஏதும் எஞ்சமுடியாது” என்றார். உரத்த குரலில் “தொழும்பர்களுக்கும் துணைவியர் உண்டு, மூடா” என்று தருமன் கூவினார். “என் துணைவியை இங்கு பந்தயம் வைக்கிறேன்.”
“துருபதன் மகளை, அனலில் எழுந்த அணங்கை, இந்திரப்பிரஸ்தத்தின் அரசியை பந்தயம் வைக்கிறேன்” என்றார் தருமன். உளவிசை உந்த எழுந்தார். கைகளை விரித்து “ஆம், இதோ என் தேவியை வைத்து ஆடுகிறேன்” என்றார். பித்தனைப்போல சிரித்து கைகளை ஆட்டியபடி அரங்கை சுற்றிநோக்கினார். “இனி ஒன்றும் இல்லை. இறுதியை பந்தயம் வைக்கிறேன். அவ்வுலகை பந்தயம் வைக்கிறேன். மூதாதையர் ஈட்டிய அனைத்தையும் பந்தயம் வைக்கிறேன்.” சிரித்துக்கொண்டே திரும்பி “சொல்லும்! எதிர் பந்தயம் என எதை வைக்கிறீர்?” என்றார்.
சகுனி ஆழ்ந்த மென்குரலில் “அரசே, நீங்கள் இழந்த அனைத்தையும் பந்தயமென வைக்கிறோம். உடன் அஸ்தினபுரி நகரை, அரசை, அதிலமைந்த அரியணையை, அதிலமர்ந்த அரசரை, அவ்வரசரின் உடன்பிறந்தோர் அனைவரை, அவர்களின் மைந்தர்கள் ஆயிரவரை, அக்குலத்து மகளிர் அனைவரை, மூதாதையர் ஈட்டிய புகழை, நல்லூழை, தெய்வங்கள் அருளிய அனைத்தையும் பந்தயம் வைக்கிறேன்” என்றார்.
தருமன் பால்நுரை குளிர்நீர் பட்டதென அடங்கினார். கண்களில் நீர்மை மின்ன பெருமூச்செறிந்தார். “ஆம், அனைத்தும் தேவை. இவ்வுலகே தேவை, என் தேவிக்கு நிகராக. இங்கு எழுக மானுடரை எண்ணி நகைக்கும் தெய்வங்கள் அனைத்தும். இவ்வாடல் எங்கு சென்று முடிகிறதென்று பார்ப்போம். வென்றால் இப்பீடத்திலிருந்து தேவனென எழுவேன். வீழ்ந்தால் நெளியும் இழிபுழுவென ஏழுபிறவிக்காலம் கீழ்மைகொள்வேன். அவ்வண்ணமே ஆகுக!” என்றார்.
சகுனி தன் பகடைகளை எடுத்து நெஞ்சோடு சேர்த்து ஒருகணம் ஒருங்கமைந்து பின் உருட்டினார். “ஒன்று!” என அறிவித்தான் நிமித்திகன். அங்கிருந்தோர் விழிகளால் செவிகளால் அவ்வாடலை காணவில்லை. அப்பகடைக்களத்திற்குள் தாங்களும் வீரர்களென அமர்ந்து அதில் ஆடிக்கொண்டிருந்தனர். “பன்னிரண்டு!” என்று தருமனுக்கு அறிவித்தான் நிமித்திகன். “ஏழு!” என்றது சகுனியின் பகடை.
இருபடைகளும் பெருவஞ்சத்தின் மாளா ஆற்றலுடன் களம்நின்றன. மழைமுகில் சூல் கொண்டு ததும்புவதுபோல் விண்ணில் உருபெருத்து பழுத்தனர் பெருந்தேவியர். பகடை உருளும் ஓசையன்றி பிறிதொன்றும் எழவில்லை.
பன்னிரண்டு என விழுந்தது சகுனியின் தெய்வம். தன் படைகளை விரித்து நாகமொன்றை அமைத்தார். நடுவே பதுங்கி பின்னகர்ந்தது தருமனின் படை. பன்னிரண்டுகள் என உருண்டு விழ விழ நாகங்கள் சீறிப்பெருத்தன. நச்சுப்பற்கள் முனைகொள்ள சினத்துடன் வால்வளைத்து உடல் சொடுக்கி எழுந்தன. சிம்மம் அஞ்சி காலெடுத்து வைத்து தன் அளைக்குள் சென்று உடல் வளைத்தொடுங்கியது. அணுகி வந்த நாகங்கள் அதைச்சூழ்ந்து வலையென்றாயின. வெருண்டு உறுமிய சிம்மத்தின் உடலில் மயிர்க்கால்கள் சிலிர்த்தெழுந்தன. எங்கோ எண்ணித் தொட்டளிக்கப்பட்ட கணம் ஒன்றில் முதல் நாகம் சிம்மத்தின் காலை கவ்வியது. மறுகணம் நாகங்களால் முற்றிலும் பொதியப்பட்டு சிம்மம் மறைந்தது.
அவையோர் ஒவ்வொருவராக விண்ணில் இருந்து உதிர்வதுபோல பகடைக்களத்தில் பீடங்களில் வந்தமைந்தனர். பல்லாயிரம் நாகச் சீறல்களென மூச்சுகள் எழுந்தன. பின்பு தொலைதூரத்துத் திரையசைவொன்று பெருநெருப்பின் ஒலியென கேட்கும் அளவுக்கு பன்னிரு பகடைக்களத்தில் முற்றமைதி சூழ்ந்திருந்தது.
தருமன் ஒவ்வொரு மயிர்க்காலும் குத்திட்டு நிற்க இரு சுட்டுவிரல்களால் நெற்றிப்பொட்டை அழுத்தி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவையமர்ந்த முதற்கணத்திலிருந்த அதே போன்று சகுனி அமர்ந்திருந்தார். கணிகர் அங்கிலாதவர் போல் கண்மூடி கனவு நிறைந்த முகத்துடன் கிடந்தார். பீஷ்மர் துயிலிலென அப்பால் இருக்க துரோணரும் கிருபரும் திகைத்து ஒருவரை ஒருவர் நோக்கி அவை நிரையை விழிசுழற்றி சொல் எழாது நின்றனர்.
பெண்டிரவையில் வளைகள் உதிர கைகள் தாழும் ஒலி கேட்டது. மெல்லிய விம்மலொன்று வாள்வீச்சென கூடத்தை கடந்துசென்றது. இடியோசையென அங்கிருந்த அனைத்து உடல்களையும் விதிர்க்கச் செய்தபடி தன் தொடையை ஓங்கி அறைந்து துரியோதனன் எழுந்தான். “ஆம், இனியொன்றும் எஞ்சுவதற்கில்லை. இதோ, இந்திரப்பிரஸ்தத்தின் இறுதித்துளியும் அஸ்தினபுரிக்கு அடிமையென்று ஆயிற்று. ஆ!” என்று கூவினான். “எங்கே ஏவலர்கள்? எங்கே படைவீரர்கள்?” என்றான்.
படைவீரர்கள் நால்வர் அவனை நோக்கி ஓடிவந்து வணங்கினர். “சென்று இழுத்து வாருங்கள் அந்தத் தொழும்பியை. இவ்வவை முன் நிறுத்துங்கள் அவளை! இனி அவள் ஆற்றவேண்டிய பணி என்ன என்று அறிவிக்கிறேன்” என்றான் துரியோதனன்.
மாபெரும் நீர்ச்சுழியென பன்னிரு பகடைக்களத்தைச் சூழ்ந்திருந்த அனைவரும் துரியோதனனின் ஆணையை கேட்டனர். தங்கள் ஆழத்தில் எப்போதும் திறந்திருக்கும் பிறிதொரு செவியால் அதை சொல்எழாது உள்வாங்கினர். தீயவை எதையும் தவறவிடாத செவி, மலரிதழ் மேல் ஊசி விழுவதை தவறவிடாத பேராற்றல் கொண்டது அது. விழியும் செவியும் நாசியும் ஒன்றேயான நாகத்தின் புலன்.
அசைவிழந்து அமர்ந்திருந்த அவை நோக்கி இருகைகளையும் ஓங்கித் தட்டி வெடிப்பொலி எழுப்பி எழுந்து நின்று ஆர்ப்பரித்தான் துரியோதனன். “சென்று அழைத்துவாருங்கள். இன்று அவள் அரசியல்ல. அஸ்தினபுரியின் தொழும்பியென்று அவள் அறியட்டும்.”
தருமன் தன் கால்கள் உடலுடன் தொடர்பின்றி துடித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தார். அவர் உடலிலிருந்து சீற்றத்துடன் எழுந்த ஓர் ஆண்மகன் உடைவாளை உருவி துரியோதனனை நோக்கி பாய்ந்தான். திகைத்து நின்று அவ்வுடைவாளைத் திருப்பி தன் கழுத்தை வெட்டிக்கொண்டு குருதி கொப்பளிக்க அக்களமேடையில் விழுந்து துடித்தான். பிறிதொருவன் குளிர்ந்த குருதியுடன் எடைமிக்க பாதங்களை எடுத்து வைத்து பின்னோக்கி நடந்து அவனுக்குள்ளேயே புகுந்து இருண்ட அறைகளுக்குள் நுழைந்து ஒவ்வொரு வாயிலாக மூடிக்கொண்டே போனான்.
குளிர்ந்துறைந்த பனித்துளிகள் போன்ற கண்களுடன் சகுனி கைகளை கட்டிக்கொண்டு தன் பீடத்தில் சாய்ந்து அசைவற்றிருந்தார். பாண்டவர் நால்வரும் ஒருவர் கைகளை ஒருவர் பற்றியபடி கடுங்குளிரில் நின்றிருக்கும் கன்றுகளைப்போல உடல் விதிர்த்துச் சிலிர்க்க நின்றிருந்தனர். துரியோதனன் தருமனை நோக்கி கைசுட்டி “அடேய்! இந்தத் தொழும்பனை அவனுக்குரிய இடத்தில் நிற்க வை!” என்றான். தலைவணங்கி இருவீரர் யுதிஷ்டிரரை அணுகி குனிந்து நோக்கினர். அதன் பொருள் உணர்ந்தவர் போல தன் தலையணியைக் கழற்றி கீழே வைத்தார். அணிகலன்களை உருவி அதனருகே போட்டார். காலணிகளையும் மேலாடையையும் கழற்றிவிட்டு இடையாடையுடனும் வெற்றுமார்புடனும் நடந்து சென்று பீமனின் அருகே நின்றார்.
அவையிலிருந்து துரோணர் எழுந்து தயங்கிய குரலில் “அரசே, இது ஒரு குலக்களியாட்டு. இவ்வுணர்வுகள் அவ்வெல்லையை கடக்கின்றன என்று சொல்ல விழைகிறேன்” என்றார். “தாங்கள் உத்தரபாஞ்சாலத்தின் அரசனின் தந்தை. அஸ்தினபுரியின் அரசியலுக்குள் தங்கள் சொல் நுழையவேண்டியதில்லை” என்று துரியோதனன் கூரியகுரலில் சொன்னான். “ஆம், ஆனால்…” என்று அவர் சொல்லத்தொடங்க “இதற்குமேல் ஒருசொல்லும் இங்கு தாங்கள் சொல்ல வேண்டியதில்லை, ஆசிரியரே. எல்லை கடந்தால் வெளியேற்றப்படுவீர்கள்!” என்றான்.
கிருபர் “பெண்களை அவைமுகப்புக்குக் கொண்டுவரும் வழக்கமே இங்கில்லை, சுயோதனா” என்றார். “அந்தணர் வில்லேந்தும் வழக்கம் மட்டும் இங்கு உண்டா? உங்கள் சொல் இங்கு விழையப்படவில்லை” என்றான் துரியோதனன். “அடே சூதா, காளிகா!” என்றான். மூத்த பணியாள் “அரசே” என்றான். “சென்று அழைத்துவா அவளை” என்றான் துரியோதனன். “இங்கு நிகழ்ந்தவற்றை அவளிடம் சொல். எனது சொற்களை சொல். தொழும்பியை பணி செய்ய அரசன் அழைக்கிறான் என்று கூறி கூட்டிவா!”
[ 15 ]
பீடம் உரசி ஒலிக்க விகர்ணன் எழுந்தான். “நில்லுங்கள்!” என்றான். அவை திகைத்து யாரென நோக்கியது. அனைவரும் அது கர்ணனின் குரலென எண்ணினர். பின்னர்தான் விகர்ணனை அடையாளம் கண்டனர். “யாரவன்?” என்றது ஒரு குரல். “கௌரவர்களில் ஒருவன்” என்றது பிறிதொரு குரல். திகைப்புடன் அவனை நோக்கிய துரியோதனன் “அடேய்! அமர்! ஒருசொல் சொன்னால் இக்கணமே உன் தலையை வெட்டி இந்த அவையில் வைப்பேன்” என்றான்.
பணிவுமாறாத குரலில் “தலைக்கென அஞ்சவில்லை. நான் தங்கள் இளையோன்” என்றான் விகர்ணன். “மூத்தவரே, இதுநாள்வரை நானறிந்த அஸ்தினபுரியின் அரசரின் இயல்பல்ல இது. தாங்கள் பெருவிழைவு கொண்டவர். அணையா சினம் கொண்டவர். ஆனால் ஒருபோதும் சிறுமை வந்து ஒட்டியதில்லை என்றே உணர்ந்திருக்கிறேன். குருவின் கொடிவழி வந்தவருக்கு, தார்த்தராஷ்டிரருக்கு ஏற்புடையதல்ல இது. குலப்பெண்ணை அவைக்குக் கொண்டுவருவதென்பது நம் குடிக்கும் மூத்தாருக்கும் அழியாப்பழி என அமைவது” என்றான்.
“அவள் குலப்பெண்ணல்ல, மூடா! சற்றுமுன் இப்பகடைக்களத்தில் பணயமென வைக்கப்பட்ட தொழும்பி” என்றான் துரியோதனன். “ஆம், ஆனால் அது வெறும் ஒரு குலக்களியாட்டென்றே இங்கு சொல்லப்பட்டது. எக்களியாட்டின் பொருட்டும் குலநெறிகள் இல்லாமல் ஆவதில்லை” என்றான் விகர்ணன். வெறுப்புடன் முகம் சுளித்து “அக்குலநெறியை அறியாமலா அவள் கணவன் இங்கே அவளை வைத்து ஆடினான்?” என்றான் துரியோதனன். “கேட்பதென்றால் அவனை கேள், மூடா!”
“அது அவரது பிழை. அஸ்தினபுரியின் அரசன் என அப்பிழைக்கு அவரை தண்டியுங்கள். அதை வைத்து மேலும் சிறுமையை நீங்கள் சூடிக்கொள்ள வேண்டியதில்லை. உயர்ந்த பெண்ணின் கருவில் உதித்தோர் ஒவ்வொரு பெண்ணையும் மதிக்கக் கற்றிருப்பார்கள் என்பது நூல்கூற்று. இங்கு இந்திரப்பிரஸ்தத்தின் அரசி இழிவு செய்யப்படுவார்கள் என்றால் இழிவடைபவர் நூற்றுவரைப் பெற்று பேரன்னையென அரியணை அமர்ந்திருக்கும் நமது அன்னை, பாரதவர்ஷத்தின் பேரரசி காந்தாரி. இங்கு நான் குரல் எழுப்புவது என் அன்னையின் பொருட்டே” என்றான்.
கர்ணன் சினத்தை அடக்கி எழுந்து அவனிடம் கைநீட்டி “இளையவனே, அரசு சூழ்தலில் குரலெழுப்புமளவுக்கு இன்றுவரை நீ முதிர்ந்ததில்லை. உன் குரலை இன்று எவரும் கேட்கப்போவதுமில்லை” என்றான். பணிவுடன் “நூற்றுவரில் ஒரு குரலேனும் எழுந்தாக வேண்டும், அங்கரே. இல்லையேல் எந்தையும் தாயும் பழிசூடுவார்கள். இறப்பென்றாலும் சரி, நான் இதை ஒப்பமாட்டேன்” என்றான் விகர்ணன். அப்பாலிருந்து குண்டாசி எழுந்து “ஆம், இது அறமல்ல. அன்னை வயிற்றில் பிறந்தோர் ஏற்கும் செயலுமல்ல” என்றான்.
துச்சாதனன் தன் இரு கைகளை ஒங்கித்தட்டி ஓசையெழுப்பியபடி எழுந்து அவர்களை நோக்கி உரத்தகுரலில் “அவையோர் அறிக! இதோ என் சொல்!” என்று கூவினான். “அஸ்தினபுரியின் அரசர்! குருகுலமூத்தவர்! கௌரவர்களின் முதல்வர்! அவரது சொல்லுக்கும் எண்ணத்திற்கும் மாற்றென நூற்றுவரில் ஒரு மூச்சேனும் இதுவரை எழுந்ததில்லை. அவ்வண்ணம் ஒன்று எழுமாயின் அதற்கு கொலைப்படைக்கருவி என எழுவது என் கைகள். விகர்ணா, உனது சொற்கள் என் தமையனுக்கெதிரானவை. பிறிதொரு சொல் நீ எடுப்பாயென்றால் இந்த அவையிலேயே உன் தலை உடைந்து இறந்து விழுவாய். குண்டாசி, உன்னை ஒரு நீர்த்துளியை சுண்டி எறிவதுபோல உடைத்து இங்கு வீசத்தயங்க மாட்டேன்.”
விகர்ணன் தலைகுனிந்து “பொறுத்தருள்க, மூத்தவரே! இச்சொல்லை இங்கு சொல்லாமலிருக்க என்னால் முடியவில்லை” என்றான். “நூற்றுவருக்கெதிராக உன் குரல் எழுகிறதா? அதை மட்டும் சொல்! மூத்தவரை அவையில் அறைகூவுகிறாயா?” என்றான் துச்சாதனன். “நான் அறைகூவவில்லை. அவரது கால்களில் என் தலையை வைத்து மன்றாடுகிறேன். இன்று நிலைமறந்து செய்யும் இச்செயல் வழியாக என்றும் சான்றோர் நாவில் இழிமகனென அவர் குடியேற வேண்டாம் என்று கோருகிறேன்” என்றான் விகர்ணன். குண்டாசி கசப்புடன் உரக்க நகைத்து “ஆம், அவர் ஏற்கெனவே பெற்றுள்ள இடத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றே நானும் கூறுகிறேன்” என்றான்.
கர்ணன் சினம் எல்லைகடக்க கைகளைத் தட்டி ஓசையிட்டு “இரு கௌரவரும் தங்கள் பீடத்தில் இக்கணமே அமரவேண்டுமென்று நான் ஆணையிடுகிறேன். இனி ஒரு சொல்லும் அவர்கள் உரைக்கலாகாது” என்றான். விகர்ணன் தலைதாழ்த்தி “ஆம், என் சொற்கள் முற்றிலும் பொருளிழந்து போவதை நான் உணர்கிறேன்” என்றான். இருகைகளையும் விரித்து தன் உடன்பிறந்தோரை நோக்கி திரும்பி “தமையர்களே, இளையோரே, நீங்கள் கேளுங்கள். உங்கள் உள்ளங்களுக்குள் என் சொற்களில் ஒன்றேனும் ஒளியேற்றட்டும். இப்பெரும்பழி நம் குலத்தின்மேல் படிய நாம் ஒப்பலாமா? நம் அன்னையின் பொருட்டு உங்கள் அகம் எழுக! தொல்புகழ் யயாதியின் அவையில் தேவயானி சூடியிருந்த மணிமுடியின் பேரால் கேட்கிறேன். இப்பழியை நாம் ஏற்கலாமா?” என்றான்.
பெரும் சினத்துடன் சுபாகு எழுந்து “வாயை மூடு, அறிவிலியே! என்னவென்று எண்ணினாய்? மூத்தவருக்கும் அங்கருக்கும் மேலாக நெறியறிந்தவனா நீ? இனி இந்நாட்டை அறமுரைத்து வழிநடத்தப்போகிறாயா? அல்லது செங்கோலேந்தி அஸ்தினபுரியின் அரியணை அமர்ந்து ஆளலாம் என்று எண்ணுகிறாயா?” என்றான். துர்மதன் “நீயுரைத்த ஒவ்வொரு சொல்லுக்காகவும் மும்முறை உன்னை கொல்லவேண்டும். குக்கல் சொல் கேட்டு களிறு வழிநடக்க வேண்டுமென்று விழைகிறாயா? அமர்ந்துகொள்! இல்லையேல் உன்னை இக்கணமே கிழித்துப்போடுவேன்” என்றான். துச்சலன் குண்டாசியிடம் “உடன்பிறந்தார் என்பதற்காக மட்டுமே இச்சொல் வரை உன்னை பொறுத்தேன். இனி இல்லை” என்றபடி வெறியுடன் அருகே வந்தான்.
ஒவ்வொருவராக கௌரவ நூற்றுவர் எழுந்து விகர்ணனையும் குண்டாசியையும் நோக்கி கைநீட்டி கூச்சலிடத்தொடங்கினர். “கொல்! அவனை இக்கணமே கொல்!” என்றான் சுபாகு. “வெறும் கைகளால் அவனை கிழித்துப்போடுவேன்” என்றான் துர்மதன். துரியோதனனின் உடலிலிருந்து உதிர்ந்து நூறு துரியோதனர்களாக எழுந்து அவனைச் சூழ்ந்தவர்கள் போலிருந்தனர். மேலும் மேலும் பெருகிக்கொண்டிருந்தனர்.
விகர்ணன் திகைப்புடன் திரும்பி நோக்க அங்கிருந்த ஒவ்வொருவரும் துரியோதனனென உருமாறுவதை கண்டான். ஒவ்வொரு படைவீரனும் ஒவ்வொரு குடித்தலைவரும் ஒவ்வொரு பெருவணிகரும் துரியோதனனின் விழியும் முகமும் கொண்டனர். அஸ்தினபுரியின் குடிமக்கள் அனைவரும் துரியோதனன் என்றே ஆயினர். ஊற்றுக்கண் உடைந்து வழிந்து பெருகி சுழித்து சுழன்று சுழலென்றாகி பெரும் வட்டமென தன்னைச் சூழ்ந்த துரியோதனனின் பல்லாயிரம் முகங்களைக் கண்டு விகர்ணன் திகைத்தான்.
“மூத்தவரே, என்னால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. பொறுத்தருளுங்கள்” என்றான். யார் கர்ணன், யார் துச்சாதனன், யார் துர்மதன், யார் துச்சலன், யார் சுபாகு, யார் சுஜாதன் என்றே அவனால் கண்டறிய முடியவில்லை. கால்தளர விழிமயங்க வறண்ட இதழ்களை நாவால் தீட்டியபடி துரோணரையும் விதுரரையும் பார்த்தான். அவர்கள் விழிகளும் துரியோதனன் விழிகளென ஆகிவிட்டனவா என்று தோன்றியது. பீஷ்மரை நோக்கினான். விழிமூடி உடல் குறுக்கி அவர் அமர்ந்திருந்தார்.
அச்சுழியிலிருந்து இரு கைகள் நீண்டெழுந்து வந்து அவனை பற்றின. “இல்லை! நானில்லை!” என்று அவன் கூவினான். ஒலி எழாது உதடுகள் அசைய “விட்டுவிடுங்கள்! என்னை விட்டுவிடுங்கள்!” என்று அலறினான். சுழியின் விசை அவனை இழுத்தது. பேருருக்கொண்ட கருநாகத்தின் ஆற்றல் எழுந்த சுழற்சி. அவன் அதில் விழுந்தான். கணத்திற்குள் மூழ்கி உள்கரைந்தான். பெருவிசையுடன் சுழற்றிச் செல்லப்பட்டான். அவனைச் சூழ்ந்து அவன் உடலே நின்றிருந்தது. கரிய பேருடல். அதன் பரப்பெங்கும் ஒளிவிடும் நாகமணிக்கண்கள் நிறைந்திருந்தன. அவை வஞ்சத்துடன் விழைவுடன் புன்னகைத்து சிமிட்டிக் கொண்டிருந்தன.
தோள் தட்டி ஆர்ப்பரித்தனர் துரியோதனர்கள். கைநீட்டிக் கூச்சலிட்டனர். வெடித்து நகைத்து கொப்பளித்தனர். வெறிகொண்டு ஒருவரை ஒருவர் நோக்கி நகையாடினர். சிலர் பெருந்தோள் புடைக்க கைதூக்கி போர்க்குரல் எழுப்பினர். சிலர் நெஞ்சில் ஓங்கி அறைந்து மல்லுக்கு அழைத்தனர். பன்னிரு பகடைக்கள மாளிகைக்குள் நுரைவிளிம்பை மீறும் மதுக்கிண்ணம் போல் துரியோதனனே நுரைத்து குமிழியிட்டுக் கொண்டிருந்தான்.