குறுங்கதைகள், ஜாக்கி, கடிதம்

அன்புள்ளஜெயமோகன்

குறுங்கதைகள் தொடர்பாக உங்களுக்கு வந்த மெயில்களைப் பார்த்தேன். ஃபேஸ்புக்கிலும் இது தொடர்பாக சில பதிவுகளைப் பார்த்தேன். அப்படி என்ன நடக்கக்கூடாத தப்புநடந்துவிட்டது? ஏன் சிலர் இப்படி பதறுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இந்தவிஷயத்தில் நீண்ட அனுபவம் இருப்பதால் உங்களுக்குப் புரிந்திருக்கும்!

என்னாப்பா குறுங்கதை எழுதும் நீயே (இதற்கும் கடுப்பாவார்கள்:-)) ஜெயமோகனுக்கு லெட்டர் போட்டா பெருசா நீட்டமா போட்டுடற என பலரும் அலுத்துக் கொண்டதால், பாயிண்டுகளாக நம்பர் போட்டு எழுதிவிடுகிறேன்.

1) தடம் இதழில் நீங்கள் எழுதிய கட்டுரை தலைப்பே, தமிழ்சிறுகதை100 ஆண்டுகள். அதை ஒட்டி நான் ஒரு கடிதம் போட்டேன். உடனே குறுங்கதை ஸ்பானிஷில் எழுதி இருக்கிறார்கள், லத்தீனில் அல்ரெடி எழுதி இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். பபிள்கம் மாம், ஷட் புட் பூம் என்று பல விநோதமான பெயர்களையும் உதிர்க்கிறார்கள்.

2) நான்தான் உலகிலேயே குறுங்கதைகளை முதலில் எழுதினேன் என நானோ, தமிழில் தான் குறுங்கதை முதலில் எழுதப்பட்டது என நீங்களோ குறிப்பிடவில்லை. நீங்கள் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளீர்கள். //ஆகவே இன்று உலகளாவிய தளத்தில் வந்துகொண்டிருக்கும் குறுஞ்சித்தரிப்பு [மைக்ரோநெரேஷன்] தமிழில் எவ்வகையில் உள்ளது என்று பார்த்தேன்.//

3) ஒரு ஆர்வலர் உங்கள் பேஜில் “குறுங்கதைகள்” என்பதை காப்பி செய்து கூகிளில் பேஸ்ட் செய்து பார்த்த அடுத்தகணம் உங்களுக்கு கடிதம் எழுதுகிறார்.

4) உங்களை கிண்டல் செய்தேன் என உளவு கூற பலர். தற்கொலை குறுங்கதைகள் விழாவிற்கு கவுதம்மேனனை அழைத்தேன். உடனே அவர் படத்தை நான் கிண்டல் செய்து எழுதி இருந்ததை அவருக்கு மெயில் அனுப்புகிறார்கள். அவர் ஃபேஸ்புக் பேஜில் போடுகிறார்கள். நான் என்ன கிண்டல் செய்து எழுதி என் பர்ஸுக்குள்ளா வைத்துக்கொள்கிறேன்? பொதுவில்தானே போடுகிறேன். இவர்கள் ஏன் பாவம் பலருக்கும் பர்ஸனல் ஆன்லைன் குரியர்பாய் வேலை பார்க்கிறார்கள்:-)

5) //எந்த ஒரு வடிவமும் அடிப்படையில் பிற வடிவங்களால் ஆகாத ஒன்றை தொட்டு எடுத்து ஒரு வாழ்க்கையைக் காட்டும்போதே பொருள்படுகிறது. வாழ்த்துக்கள்// உண்மைதான். வாழ்வில் சின்ன சின்ன அபத்தங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு சின்ன அபத்தத்தை தொட்டுக்காட்ட, நீட்டி முழக்கி சிறுகதை எழுதி பெரும்பாவம் செய்ய மனம் ஒப்பவில்லை. ஆனாலும் சின்ன அபத்தங்களாக இருப்பினும் சில வீரியம் மிக்கவைகளாக இருக்கின்றன. அதை வேடிக்கையாக சொல்ல குறுங்கதை வடிவம் ஏதுவானதாக இருக்கிறது. உங்கள் தளத்துக்காக இப்படி சிரமப்பட்டு எழுதுகிறேன். சோம்பலானவர்களுக்கு குறுங்கதை வசதியானது என்பது முதற்காரணம்:-)

6) சாரு அடிக்கடி சொல்வார், ஃபேஸ்புக், ட்விட்டர் இல்லையென்றால் நீங்கள்ளாம் எழுதியே இருக்கமாட்டீர்கள் என்று. அது சரியான கணிப்பு. ஃபேஸ்புக்கை தொறந்தமா, நாலுலைன் எழுதி போஸ்ட் போட்டமா என்ற வசதியும் குறுங்கதைகள் செழிக்க காரணம். சில பாலுணார்வு சார்ந்த காமடிகளை சொல்ல இந்த வடிவம் சிறப்பானதாக இருக்கிறது.

7) குறுங்கதைகள் என்பது ஒரு பொது வடிவமாக உலக அளவில் பார்க்கப்பட்டாலும், தற்கொலை குறுங்கதைகள், விளையாட்டாக எழுதப்பட்டு இருப்பினும் அது தன்னளவில் ஒரு தனித்துவமான வடிவத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது என்றே நினைக்கிறேன். (இந்த கடிதத்தை தொடர்ந்து சண்டை போட தீனி கொடுக்க வேண்டாமா:-))

8) நீங்கள் போலி பிராண்டுகளைப் பற்றி எழுதப்போக, அதற்கும் உங்களுக்கு ஒருவர் கடிதம் போட்டு, நான் ஜாக்கி ஜட்டி போடறேன், அது மும்மடங்கு நல்லா உழைக்குது என நீங்கள் உரத்து சொல்லும்படி ஆகிவிட்டது. சாரு ரெமிமார்டினுக்கு இலவச விளம்பரம் அளித்தார். உங்கள் பிளாகும் உலக அளவில் படிக்கப்படுவதால், ஜாக்கியிடம் ராயல்டீ… ச்சிச்சீ…. பிராண்ட் அம்பாஸிடர் தொகை கிடைக்க வழிவகை உள்ளதா என அரங்கசாமியிடம் கேட்கச் சொல்ல வேண்டும்.

9) இந்த சம்பவத்தை (!) வைத்து ஒரு ஜாலியாக ஒரு போஸ்ட் போட்டேன். அதை எப்படியும் ஆன்லைன் கூரியர் பாய்ஸ் உங்களிடம் நான் டைப் செய்து கொண்டிருக்கும் போதே கொண்டு வந்து சேர்த்திருப்பார்கள்!

10) எனக்கு மட்டும் படம் வரைய தெரிந்து இருந்தால், சாருவை கால்வின்க்ளெயின் ஜட்டியோடு பப்பில் ஆடுவது போலவும். உங்களை ஜாக்கி ஜட்டியோடு, கடற்கரை ஓரம் உள்ள புத்தர் சிலைக்கு அருகில் நின்று கொண்டு இருப்பது போலவும் கார்டூன் வரைந்து இருப்பேன்.

குறுங்கதை

நீங்கள்வெளியிட்டு இருந்த மலையாள குறுங்கதை படித்தேன். மிகச் சிறப்பாக இருந்தது. இதைத்தான் ஃபேஸ்புக்கில் “செம” என்று சுருக்கமாக கூறுகிறார்கள். இந்த கதையை நீங்கள் வெளியிட்டதற்கு ஏதும் விமர்சனம் வரவில்லையா? ஆச்சர்யமாகத்தான் உள்ளது. அது சம்மந்தமாக ஒரு ரகசியம் சொல்லிவிடுகிறேன். சில ஆண்கள், இதற்காகவே பெண்கள் போல நடிக்கிறார்கள்:-)

எப்படியோ கஷ்டப்பட்டு இந்தக் கடிதத்தை உங்களுக்கு பணிவு மற்றும் போலி பணிவு இல்லாமல் எழுதிவிட்டதாக நம்புகிறேன்.

பணிவன்புடன்

அராத்து.

 

அன்புள்ளஅராத்து

இலக்கிய விவாதம் என்பது இங்கெல்லாம் இப்படித்தான் நடக்கும். சாருநிவேதிதாவின் இலட்சிய இலக்கியபுரியான லத்தீன் அமெரிக்காவில்தான் அடுத்தகட்டமாக பப்பில் கட்டிப் புரள்வார்கள்

வர வர காந்தியவாதி என்றே என்னை நம்பி ஜாக்கி ஜட்டி கூட போட விடமாட்டேன் என்கிறார்கள். லங்கோட்டில் பிராண்ட் உள்ளது என கடிதம் வந்துவிடுமோ என்றே பயந்தேன்

ஜெ

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 84
அடுத்த கட்டுரைஆன்மீகம்,கடவுள், மதம்